நூல் நயம்: ‘நீலச்சட்டைக் கலைஞர்’ முதல் ‘திரைப் பாடம்’ வரை

By செய்திப்பிரிவு

மு.கருணாநிதி என்கிற ஓர் ஆளுமை ஆட்சியியல் சட்டகத்திற்கு உட்பட்டு ஆளுங்கட்சியாக இருந்தபோதும் எதிர்க்கட்சியாக இருந்தபோதும் தலித் மக்களின் முன்னேற்றத்திற்காகச் சிந்தித்து, சமத்துவத்தை நிலைநாட்டும் அரசியல் நகர்வுகளை முன்னெடுத்தும் அதன் எதிர்விளைவுகளைச் சந்தித்தும் வந்துள்ளார் என்பதை இந்நூல் விளக்குகிறது. அடித்தட்டு மக்களின் கல்வி, தொழில், பொருளாதாரம் உயர, குரலாக, செயலாகக் கலைஞர் எவ்வாறு விரைந்து பங்காற்றியுள்ளார் என்பதை ஆழமாக, தெளிவாக, தக்க சான்றுகளுடன் ஆசிரியர் எடுத்துரைக்கிறார். நீதிக்கட்சி ஆட்சியில் தொழிலாளர் நலத் துறைக்குள் இருந்த ஹரிஜன நலத் துறையைக் கருணாநிதி தன்னுடைய ஆட்சிக் காலத்தில் தனித் துறையாக உருவாக்கி, வரலாற்று ஓர்மையுடன் அதற்கு ஆதிதிராவிடர் நலத் துறை என்று பெயர் மாற்றமும் செய்திருக்கிறார்.

நீலச்சட்டைக் கலைஞர்
மணிகோ.பன்னீர்செல்வம்
அய்யுறு வெளியீடு
விலை: ரூ. 250
தொடர்புக்கு: 94440 01479

இந்த முன்னெடுப்பிற்குப் பின்னால் அவருக்கு இருக்கிற புரிதலையும் இந்நூல் விளக்குகிறது. இதுவரை உரையாடலுக்கு வராத கருணாநிதியின் தலித்தியப் பார்வை இந்நூலில் நன்கு புலனாகிறது. ஏனெனில், கருணாநிதி ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தன்னுடைய குரலை ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் கொடுத்துக்கொண்டே இருந்திருக்கிறார். இந்நூலாசிரியர் கருணாநிதியின் மூலப் படைப்புகளையும் முரசொலிக் கட்டுரைகளையும் ஆராய்ந்து ‘நீலச்சட்டைக் கலைஞர்’ என்பதைத் தத்துவார்த்த நிலையில் விளக்க முற்பட்டிருக்கிறார். நீலம் என்பது வானத்தின் நிறம், இது பரந்த தன்மையைக் காட்டுகிறது என்பது அம்பேத்கரின் பார்வை. இவ்வழியில் கருணாநிதியின் பரந்த தன்மை, எத்தகையது என்பதை இந்த நூல் மிகத்தெளிவாக எடுத்துரைக்கிறது. - ஜெ.ராஜா

வாரி வழங்கிய உள்ளம்: அருளாளர் அருணகிரிநாதர் அவதரித்த திருவண்ணாமலையில் கடந்த 70 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது அருணகிரிநாதர் திருவிழா. 1957இல் தொடங்கி 1993 வரை தொடர்ந்து 36 ஆண்டுக் காலம் அருணகிரிநாதர் திருவிழாவில் பங்கேற்று, அருணகிரி நாதரின் ஆன்மிகச் சிறப்புகளைப் பரப்பிய பெருமைக்குரியவர் கிருபானந்த வாரியார். நகைச்சுவை இழையோட வாரியார் சொல்லும் ஆன்மிகக் கருத்துகளுக்குக் கடல்கடந்த நாடு
களிலும் ஏராளமான ரசிகர்கள் இருந்தார்கள். ‘வள்ளல் – வாரியார்’ எனும் தலைப்பிலான முதல் கட்டுரை தொடங்கி, ‘நீதிமன்றத்தில் வழக்கு’ எனும் கட்டுரை வரை 51 கட்டுரைகளில் வாரியாரின் பல்வகைப்பட்ட திறன்கள் சுருக்கமாகவும் சுவையாகவும் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. - மு.முருகேஷ்

மனித மனங்களோடு பேசும் பூக்கள்: ஓரிரு நிமிடங்கள் மட்டுமே நிற்கும் பேருந்தின் ஜன்னலோரமாய் வந்து கூவிக்கூவிப் பூ விற்கும் சிறுவனிடம் கேட்டால், “பூ விற்ற இந்தக் காசில் வாங்கும் அரிசியில்தான் என்னையும் சேர்த்து வீட்டிலுள்ள நான்கு ஜீவன்களும் பசியாற வேண்டும்” என்று சொல்லக்கூடும். பூக்கள் என்பவை வெறும் அழகியல் சார்ந்ததாக மட்டுமில்லாமல், மனித வாழ்வோடும் இணைந்ததாகப் பின்னிப் பிணைந்திருப்பதையே ‘எருக்கம்பூக்களைப் பாடுபவன்’ என்கிற நூலில் தொகுத்துத் தந்திருக்கிறார் கவிஞர் அகவி. பூக்களின் சிரிப்பின் மீதும் மனிதனின் ரசனை மீதும் நம்பிக்கை வைத்திருக்கும் கவிஞருக்கு, பூக்களின் சிரிப்பைத் தவிர்த்துவிட்டும் வாழ்க்கை பலரைக் கடத்துகிறது என்கிற யதார்த்த நிலையும் புரிந்தேயிருக்கிறது.

அதேநேரத்தில், பூக்களின் மலர்ச்சியை அனைவரும் புன்னகையோடு ரசிக்க வேண்டும் என்கிற ஆசையே, ‘கடக்கவும் கூடாது’ என்று எழுத வைத்திருக்கிறது. எல்லாக் கவிதைகளுமே பூக்களைப் பற்றியதாகவே எழுதப்பட்டிருப்பது இந்நூலின் தனிச்சிறப்பு. ஏதோவொரு கற்பனைப் பொழுதில் ஈக்வடார் நாட்டிற்குப் போகும் கவிஞர், நடைப்பயிற்சிக்கான இடம் எங்கிருக்கிறது என்று இணையத்தில் தேடிக் கண்டடைகிறார். வழியில் பூத்திருந்த ஒரு பூவைப் பார்க்கிறார். அதைப் பற்றிக் கவிதையில் பகிர்ந்திருக்கிறார். ஊமத்தைப் பூ குறித்த கவிதை வெறும் பூ குறித்த கவிதையையும் தாண்டி உள்ளே பாய்கிறது. பூக்களைப் பற்றிய இக்கவிதைகளில் கவித்துவ மணம் மட்டுமின்றி, நாட்டு மருத்துவம், இணையப் பயன்பாடு, அழகியல், அரசியல், மதச்சார்பின்மை எனப் பலவும் இருக்கின்றன. - இரா.எட்வின்

வாழ்க்கை மீது பெருங்காதல்: திரைப்பட இயக்கத்துடன், கவிதை எழுதுவதையும் இறுகப் பற்றிக்கொண்டிருப்பவர் சீனு ராமசாமி. அவர் அண்மையில் எழுதியுள்ள ஒரு தொகுப்பு ‘நினைவில் ஒளிரும் ஜிமிக்கிக் கம்மல்’. பசி, துயரம், துரோகம், காதல், பிரிவு, குழந்தைப் பருவம், இயற்கை குறித்த களிப்பு, பிறந்த மண், மதுரை வாழ்க்கை உள்படப் பல்வேறு பொருள்களில் இக்கவிதைகள் எழுதப்பட்டுள்ளன. தொகுப்பின் குரலாக வாழ்க்கை மீதான பெருங்காதலை வாசகர்கள் உணர முடியும். வழக்கமான சட்டகத்துக்கு வெளியே உள்ள பின்புலங்களைச் சார்ந்து எழுதும் கவிதைகளில் சீனு ராமசாமியின் காட்சி ஊடக ரசனை வெளிப்படுகிறது.

‘என் பசியைக் கொண்டு வந்தேன்/ ஒரு ரயிலில்/’ எனத் தொடங்கும் கவிதை, பயணங்களின் ஊடாகக் காலங்காலமாக நிகழ்ந்தவண்ணம் இருக்கும் பிழைப்புத் தேடலைச் சித்திரிக்கிறது. நகரத்தில் பெய்யும் மழையின் தாண்டவத்தைக் கூறும் ‘நீரின் சமன்பாடு’ என்னும் கவிதை ‘இவ்வுலகில் பசியோடு/ஒரு பிள்ளை இருப்பதைச் சொல்ல பள்ளிக்கூட/மதிய உணவுத் தட்டொன்று/மிதந்து நகரின் மையத்தில் போகிறது’ என முடிந்து, வாசக மனங்களில் தவிப்பை ஏற்றுகிறது. கவிஞர்கள் லஷ்மி மணிவண்ணன், குட்டி ரேவதி ஆகியோர் இக்கவிதைகள் தங்களுக்கு ஏற்படுத்திய அனுபவங்களை நூலில் பகிர்ந்துள்ளனர். - ஆனந்தன் செல்லையா

திரைப் பாடம்: இன்று உலக சினிமாவாகவே இருந்தாலும் அதற்கான வணிகமும் அதன் தரத்தை முடிவுசெய்வதாக இருக்கிறது. இந்த இடத்தில் பல படைப்பாளிகள், சமரசம் என்கிற சிறைக்குள் சிக்கிவிடாமல், சுயாதீனமாகப் படங்களை எடுத்து வாழ்வைக் கற்றுக்கொடுக்கும் சிறந்த படைப்புகளைக் கொடுத்துவிடுகிறார்கள். இன்னும் சிலர் வணிகக் கட்டமைப்புக்குள் இருந்துகொண்டே சிறந்த படங்களைத் தந்துவிடுகிறார்கள். எப்படியிருப்பினும் ஒரு திரைப்படம் திரைப் பாடம் ஆகும்போதுதான், அதன் மேன்மை காலம் கடந்தும் வாழ்க்கைக்கு உதவுகிறது. அப்படிப்பட்ட சிறந்த படங்களை நூலாசிரியர் புதிய பார்வையுடன் அறிமுகப்படுத்துகிறார்.

டாக்டர் ஆர்.கார்த்திகேயனை மனித வள மேம்பாட்டுப் பயிற்சித் துறையில் அறியாதவர்கள் குறைவு. பன்முக ஆளுமையான இவர், சிறந்த எழுத்தாளரும்கூட. ‘இந்து தமிழ் திசை’ இணைப்பிதழ்களில் வரவேற்பைப் பெற்ற பல தொடர்களை எழுதியவர். தனது பயிற்சிப் பட்டறைகளில் சிறந்த திரைப் படைப்புகளை எடுத்துக்காட்டாகப் பயன்படுத்துபவர். ‘இந்து தமிழ் நாளிதழின்’ சினிமா இணைப்பிதழான ‘இந்து டாக்கீஸில்’ இவர் எழுதிய ‘திரைப் பாடம்’ என்கிற தொடர், பெரும் வரவேற்பைப் பெற்ற ஒன்று. இத்தொடரில், ஆங்கிலம், இத்தாலி, ஜப்பானியம் என பல அந்நிய மொழிகளிலும் தமிழ், மலையாளம், இந்தி என இந்திய மொழிகளிலும் வெளியான 31 சிறந்த திரைப்படங்களைக் குறித்த தனது ஆழமான பார்வையைச் சுவைபடப் பரிமாறியிருக்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

7 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

12 days ago

இலக்கியம்

12 days ago

இலக்கியம்

15 days ago

இலக்கியம்

15 days ago

இலக்கியம்

15 days ago

இலக்கியம்

19 days ago

இலக்கியம்

19 days ago

மேலும்