நாடக உலா: இரண்டு ரமணர்கள்

By வியெஸ்வீ

பகவான் ரமண மகரிஷியின் வாழ்க்கை சரிதமும், நான் யார் என்பதை மையப்படுத்தும் அவர்தம் தத்துவ விசாரங்களும் பலரால் தொகுத்து எழுதப்பட்டிருக்கின்றன. மகானைப் பற்றி பேருரைகளும் நிகழ்ந்திருக்கின்றன. இப்போது தமிழ் நாடக மேடைக்கு வருகைபுரிந்திருக்கிறார் ரமணர்.

ஒரே சமயத்தில் இரண்டு நாடகக் குழுக்கள் ரமணரை அழைத்து வந்திருப்பதுதான் வியப்பு. இருவருக்கும் ஏககாலத்தில் யோசனை உதயமாகி இருக்கிறதா என்பது தெரியவில்லை. ஆனால், இருவருமே தங்கள் படைப்பை சில மாதங்களுக்குத் தள்ளிப்போடத் தயாராக இல்லை என்பது மட்டும் தெளிவு. அதுசரி, ராமாயணக் கதையை ஒரே நேரத்தில் இருவர் வெவ்வேறு இடங்களில் உபன்யாசிப்பது இல்லையா!

பகவான் ஸ்ரீரமணர்

பாம்பே ஞானத்தின் மகாலட்சுமி லேடீஸ் நாடகக்குழு மேடையேற்றி வரும் நாடகம். சமீப காலமாக ஆன்மிக மகான்களின் வரலாறுகளுக்கு வெற்றிகரமாக நாடக வடிவம் கொடுத்து வரும் பாம்பே ஞானத்தின் அடுத்த முயற்சி ரமணர் குழுவில் நடிப்பவர்கள் முழுக்க முழுக்க பெண்கள்தான் என்பதால் ரமணரை நம் மன பிம்பத்தில் அமர்ந்திருக்கும் கோவணாண்டியாகக் காட்ட முடியவில்லை. வயதான ரமணராக நடிப்பவர், காலைத் தூக்கி கட்டில் மீது வைத்துக் கொள்ளும்போது அதிகக் கவனத்துடன் இருக்க வேண்டியிருக்கிறது. இன்னொன்று, வசனங்களை ஆண்களைப் பேசவைத்து பதிவுசெய்து, மேடையில் பெண்கள் அதற்கேற்ப உதடு அசைப்பது இந்தக் குழுவின் வழக்கம். இந்த நாடகத்தில் ஏனோ வசனங்கள் தொலைக்காட்சித் தொடர்கள் மாதிரி ஏக இரைச்சலாக காதில் விழுகின்றன.

கண்மூடித் திறப்பதற்குள் இடைவேளை. பாலகன் வேங்கடராமனின் விளையாட்டு ஆர்வமும், பெரியவர் ஒருவர் வந்து ‘அருணாசலம்’ என்று சொல்ல கேட்ட மாத்திரத்தில் மின்னல் வெட்டுவது போல் வேங்கடராமனுக்குள்  ஏற்படுகிற விழிப்புணர்வும்... என செம்மையாகக் கொண்டுவந்திருக்கிறார்கள்.

 ‘நான் இப்போது இறந்துவிட்டேன். எது சாகிறது? இந்த உடல்தானே. இதைக் கொண்டுபோய் கொளுத்தி சாம்பலாக்கி விடுவார்கள். ஆனால், இந்த உடல் மறைந்ததும் ‘நான்’ மறைந்து விடுவேனா? ‘நான் இறக்கவில்லை. அது பிறப்பதும் இல்லை அழிவதுமில்லை. உடலுக்கும் வேறுபட்ட ஒரு வஸ்து நான். உடலைத் தீண்டும் மரணம் அதைத் தொடமுடியாது...’ அருணாசலத்தின் அருளால் வேங்கடராமனுக்கு ஞானம் பிறக்கிறது.

நாடகம் நகர்கிறது

வீட்டில் இருப்புக் கொள்ளவில்லை. சரியான ஒரு சந்தர்ப்பத்தில் கடிதம் எழுதி வைத்துவிட்டு கையில் மூன்று ரூபாயுடன் வெளியேறுகிறார்.

‘நான் என் தகப்பனாரைத் தேடிக் கொண்டு அவருடைய உத்தரவின்படி இவ்விடத்தைவிட்டு கிளம்பிவிட்டேன். இது நல்ல காரியத்தில்தான் பிரவேசித்திருக்கிறது. ஆகவே ஒருவரும் விசனப்பட வேண்டாம். இதைப் (என்னை) பார்ப்பதற்காக பணமும் செலவு செய்யய வேண்டாம்’ என்று எழுதி கையொப்பமிடாமல் ‘இப்படிக்கு’ என்பதோடு முடியும் கடிதத்தை வேங்கடராமன் எழுதியது, 1896-ம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் 29-ம் தேதி.அது மேடையில் தெளிவாகவே பதிவாகிறது.

மலையும், மடியடிவாரமும், குகையும், குன்றும் என்று மேடையில் செட் அபாரம். 16 வயதில் ஆடை, தலைமுடி, ஊண், உறக்கம் என்று சகலத்தையும் துறந்து பேசுவதையும் நிறுத்திக் கொண்டு மௌனச் சாமியாக பிராமண சுவாமியாக, மகரிஷியாக ரமணரின் பரிணாம வளர்ச்சியைக் கண்முன் நிறுத்துகிறது நாடகம்.

ரமணரின் தத்துவங்களை விளக்க, அண்ணாமலை- பாக்கியம் என்று இரு கற்பனைக் கதாப் பாத்திரங்களை கதையில் நுழைத்திருக்கிறார் பாம்பே ஞானம். ஒரு கட்டத்தில், இந்த அண்ணாமலை வில்லன் மாதிரியாகத் தோற்றமளித்துவிட... பாத்திரம் தோல்வியைத் தழுவ நேரிடும் பரிதாபம்.

காஞ்சி முனிவரின் அன்புக் கட்டளையின் பேரில்தான் பால்பிரண்டன் ரமண தரிசனத்துக்கு வந்தார் என்பது உலகமறிந்த உண்மை. இதை ஒரு வரி வசனத்தில் புரிய வைத்திருக்கலாம். மாறாக மாமுனிவரின் வேடமிட்டு ஒருவரை மேடையில் உட்கார வைத்துக்காட்சிப் படுத்தியிருப்பதும், நசிகேதன் கதையை அவரை சொல்ல வைத்ததுடன்  இன்னொருப் பக்கத்தில் எமதர்மன் வேடத்தில் வரங்கள் கொடுப்பதும் நேரவிரயம்!

இறுதியில், பகவான் ரமணர் முக்தியடைவதையும், ஜோதி ஒன்று தோன்றி மறைவதையும் உணர்ச்சிப் பூர்வமாகக் காண்பித்து நாடகத்தை நிறைவு செய்கிறார்கள்.

பின்குறிப்பு: பாம்பே ஞானத்தின் அடுத்தப் படைப்பு சீரடி சாய்பாபா.

மஹரிஷி

இந்த ரமணரை பாம்பே சாணக்யாவின் கலாமந்திர் குழு மேடையேற்றியிருக்கிறது. இரண்டு நாடகங்களிலும் பேசு பொருள் ஒருவராக இருப்பதால் மீண்டும் ஒரு முறை கதைச் சுருக்கம் தேவை இல்லை!

திரை விலகியதும், வெவ்வேறு வயதில் நான்கு ரமணர்களை ஒருவர்பின் ஒருவராக உட்காரவைத்து பகவானின் பருவங்கள் நான்கினை தாம் காண்பிக்கப்போவதை உறுதி செய்து விடுகிறார் சாணக்யா. அதேபோல் முடியும்போது இதே நால்வரின் அணிவகுப்பு! மதுரை கண்ணனின் மேடை அமைப்பு  நாடக டைரக்டருக்கு உதவிக்கரம்!

ரமணரின் வாழைக்கைச் சம்பவங்களை விவரித்துச் செல்கிறது நாடகம். கூடவே அவரின் வேதாந்த சாரங்களையும் விளக்கிச் சொல்ல முயற்சி செய்கிறது.

ஆந்திராவில் சிறு கிராமம் ஒன்றில் 1902-ம் ஆண்டு பிறந்தவர் சூரி நாகம்மா. பதினொறு வயதில் இவருக்குத் திருமணமாகி, ஓரிரு வருடங்களில் கணவரை இழந்து விடுகிறார். 1941-ல் திருவண்ணாலைக்கு வருகிறார். ஆசிரமத்திலேயே தங்கி விடுகிறார். வங்கி அதிகாரியும் ரமண பக்தருமான தன் மூத்த சகோதரருக்கு தினமும் ஒரு கடிதம் எழுதுகிறார் நாகம்மா. பக்தர்களுடன் மஹரிஷி நிகழ்த்திய விவாதங்கள்... ஆசிரமத்தின் அன்றாட நடவடிக்கைகள் மாதிரியானவை இந்தக் கடிதங்களில் பதிவு செய்து அனுப்பியிருக்கிறார் இவர்.

நாகம்மாவை சூத்திரதாரி மாதிரியாகக் கொண்டு நாடகத்தை நகர்த்திச் செல்கிறார் சாணக்யா. சில சம்பவங்களை நாகம்மாவிடம் பகவான் விவரிப்பது போலவும் காட்சிப் படுத்தியிருக்கிறார். ‘அப்படித்தான் ஒரு தடவை என்ன ஆச்சுன்னா...’ என்று பகவான் ஆரம்பித்து வைப்பார். ஃப்ளாஷ் பேக் மாதிரியாக காட்சி விரியும்! பகவானுடன் தினமும் அருகில்  இருந்த காவ்யகந்த கணபதி முனியும், குஞ்சு சுவாமியும், பழனிசாமியும் நமக்கு அறிமுகமாவது இப்படித்தான். க்ளைமாக்ஸ் காட்சியில் டைரக்டருக்குத் துணை நிற்பதும் நாகம்மாதான். ரமணரின் இறுதி நாள் நெருங்கிவிட்டது என்பது அறிந்ததும், பகவானின் பிரிவு தாங்க முடியாது என உணர்ந்து ஒரு பத்து நிமிடங்களுக்கு குரலெழுப்பிக் கதறி, பகவான்... பகவான்... என்றபடி அவர் காலடியில் விழுந்து நாகம்மா அழுது முடிக்கும்போது பகவானின் ஸ்தூல உயிர் பிரியும் முக்கியமானக் கட்டம் பின்னுக்குத் தள்ளப்பட்டு விடுகிறது! நாகம்மாவாக வரும் கவிதா சுரேஷின் ‘எமோஷனல்’ நடிப்பு மேலோங்கி நிற்கிறது.

அதேபோல் வீட்டை விட்டு ‘எதையோ’ தேடிச் சென்று விட்ட மகனைத் தேடி திருவண்ணாமலை வரும் ரமணரின் தாய் அழகம்மாள் பத்து நிமிடங்களுக்கு மேலாகவே மேடையை ஆக்கிரமித்துக் கொண்டு விடுகிறார். தாயின் பரிவாற்றாமை வேதனை, ஏக்கம், ஏமாற்றம் என்று அத்தனை உணர்வுகளையும் வெளிப்படுத்தும் பாடகி அனுராதா ஸ்ரீராமிடம் இத்தனை நடிப்புத் திறனா? முத்தாய்ப்பாக, ‘அன்பே ஒளியாகினாய் ரமணேசா...? என்று அவர் பாடுவது உருக்கக் குவியல்!

 பகவான் ரமணர் பிரியத்துடன் வளர்த்த பசு, லட்சுமி. அந்தச் சம்பவம் வரும்போது மேடைக்கு ஒரு பசுவை ஓட்டி வந்துவிடுகிறார் டைரக்டர்! நெற்றியில் குங்குமம் இட்டுக்கொண்டு தேஜஸாக இருக்கிறாள் மேடைப் பசு. பாக்கெட் பாலையே பார்த்துப் பழக்கப்பட்ட சென்னை வாசிகள், பசுவைப் பார்த்ததும் கைத்தட்டி வரவேற்கிறார்கள்! அது மாதிரியே, பெண்ணுக்கு வேடமிடாமல், நிஜ மயில் ஒன்றை மேடையில் தோகை விரித்தாட வைத்திருக்கலாம்!

கடிதம் எழுதி வைத்துவிட்டு மதுரையில் ரயிலேறுகிறார் ரமணர். விழுப்புரத்தில் இறங்கி, இன்னொரு ரயில் பிடித்து மாம்பழப்பட்டு வந்து அங்கிருந்து கால்நடையாக அருணாசலத்துக்கு சென்றதாக வரலாறு. இதை வசனம் மூலமாகவே புரியவைத்திருக்க முடியும். மாறாக, அட்டை ரயிலை மேடைக்கு மூன்று தடவை தள்ளி வருவது ஏன்? (இரண்டாவது காட்சியில் ஒரு தடவையோடு ரயிலை நிறுத்திக் கொண்டு விட்டார்களாம். அதுவும்கூட தேவையற்றதுதான்!)

வயதான ரமணராக ரமணன் என்ற நடிகர் நடித்திருக்கிறார். அச்சு அசலக பகவான் சாயல் இவருக்கு!

’’ஹரஹர சங்கர...’ பின்னணியில் ஒலிக்க, சாணயக்யாவும் காஞ்சி முனிவராக ஒருவரை நடிக்க வைத்திருக்கிறார். பால் பிரண்டன் சந்திப்பு தவிர, ரமணர்-முனிவர் சந்திப்பதையும் காட்சிப்படுத்தியிருக்கிறார். இருவரும் கண்களாலேயே பேசிக் கொள்கிறார்கள். டைரக்டர் எதிர்பார்க்கும் effect  கிடைக்காமல் போனது சோகம்.

மிடில் ஏஜ் ரமணராக ராகவ் ரங்கநாதன், பகவானின் உபதேசங்களை தெளிவான உச்சரிப்பில் பேசி பிரமாதப்படுத்துகிறார். ’நான்’ ’நான்’ என்பது எங்கிருந்து புறப்படுகிறது என்பதை உன்னிபாகக் கவனித்தால், அந்த இடத்தில் மனம் லயித்துவிடு. அதுதான் தபஸ். ஒரு மந்திரத்தை உச்சரிக்கும்போது, அந்த மந்திரத்தின் ஒலி எங்கிருந்து புறப்படுகிறது என்பதை உன்னிப்பாகக் கவனித்தால், அந்த இடத்தில் நம் மனம் லயித்துவிடும் அதுதான் தபஸ்’ என்ற ஞான குருவின் அருளுரையை ராகவ் குரலில் கேட்டது இன்னமும் காதுகளில்!

இரண்டு குழுக்களின் ரமண நாடகமும் முடிவுக்கு வரும்போது பார்வையாளர்கள் எழுந்து நின்று கைத்தட்டிப் பாராட்டுகிறார்கள். குரு வந்தனம்!

 

பின்குறிப்பு: மகரிஷி நாடகத்தின் ஆங்கில வடிவத்தை ஆகஸ்டு 24 அன்று மேடையேற்றத் திட்டமிட்டிருக்கிறார் பாம்பே சாணக்யா. நடிக, நடிகைகளில் மாற்றம் கிடையாது - பசுமாடு உள்பட!

மகரிஷியின் தொடர்ச்சியாக இரண்டாவது பாகத்தை மேடையேற்றவும் சாணக்யா ‘ஒன்லைன்’ எழுதிக் கொண்டிருக்கிறார். இப்போது விட்டுப்போன சம்பவங்களை அப்போது காட்சிப்படுத்துவார்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

16 hours ago

இலக்கியம்

16 hours ago

இலக்கியம்

16 hours ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

2 days ago

இலக்கியம்

2 days ago

இலக்கியம்

2 days ago

இலக்கியம்

2 days ago

இலக்கியம்

2 days ago

இலக்கியம்

3 days ago

இலக்கியம்

3 days ago

இலக்கியம்

3 days ago

இலக்கியம்

5 days ago

மேலும்