முற்பிறப்பின் வினைப்பயனால் இப்பிறப்பில் துன்பங்கள் தாக்குகின்றன என்கிற கோட்பாடு மெதுமெதுவாக வளர்ந்து, சிலப்பதிகாரக் காலத்தில் ‘ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும்’ என்கிற எண்ணப்பாடு மேலோங்கி நின்றது. தமிழ்ச் சமூகத்தில் சிறுகச் சிறுக விதைக்கப்பட்ட கோட்பாடுகளை ஒதுக்கி, தம் காலத்துக்கும் முற்பட்ட தொல்தமிழர் உயர்சிந்தனைகளை நினைவூட்டிக் கொண்டேயிருந்தனர் சங்கப் புலவர்கள். இந்த நினைவூட்டல் இந்தக் காலத்திலும் தொடரவேண்டியிருப்பதுதான் தமிழ்ச் சமூகத்தின் வருத்தமிகு உண்மை.
‘இம்மை மாறி மறுமை ஆயினும் நீயாகியர் என்கணவனை; யானாகியர் நின்நெஞ்சு நேர்பவளே’ என்று குறுந்தொகையும் (49), ‘கொல் ஏற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆயமகள்’ என்று கலித்தொகையும் (103), அடுத்த பிறவியில் பெண்கள் கைபிடிக்க விரும்பும் கணவன்மாரைப் பற்றிப் பாடுகின்றன. காதல் சொல்லும் அகப்பாடல்கள் மட்டுமல்லாமல், வீரம் சொல்லும் புறப்பாடல்களும் மறுமை வாழ்வு பற்றிப் பேசுகின்றன.
முற்போக்குச் சிந்தனையாளர்கள்: சங்க இலக்கியம் நமக்குக் காட்டும் பழந்தமிழர் வாழ்வியலையும் பண்பாட்டையும் இன்றும் பலர் தவறாகப் புரிந்துகொண்டிருப்பது வேதனையானது. தாய்மொழிவழிக்கல்வி நம்மைவிட்டுப் போனபோதே, நம் பண்பாட்டின் ஒரு பகுதி கிழித்தெறியப்பட்டுவிட்டது. தாய்மொழி ஒரு பாடமாகக்கூடத் தேவைதானா என்று பட்டிமன்றம் வைக்கும் இன்றைய சூழலில், மறுபாதியும் கரைந்தே போனது.
‘தமிழன் என்றோர் இனமுண்டு; தனியே அவருக்கோர் குணமுண்டு’ என்று நாமக்கல் கவிஞர் சொன்னதன் உண்மையான பொருள் சங்கப் பாடல்களில்தான் பொதிந்துள்ளது. நம் மண்ணுக்குரிய அடிப்படைப் பண்பாடு என்ன? நம் முன்னோர் எப்படிப்பட்ட அறநெறிகளைப் போற்றினர்? சமூகங்களைக் குறுகிய வட்டத்துள் பிணைத்துக் கட்டிவைக்கும் மூடநம்பிக்கைகள் அறிவியலறிவு செழித்திருக்கும் இந்த நூற்றாண்டிலும் பெருகிக் கிடக்க, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே முற்போக்குச் சிந்தனையாளர்களாக விளங்கிய தமிழர்கள் என்னென்ன சொல்லிச் சென்றார்கள்? இந்தக் கேள்விகளுக்கு விடையிருப்பது நம் பண்டைய இலக்கியங்களில்தான்.
இந்த உலகம் இயங்குவது எதனால் என்பதற்குக் கீழ்வரும் பட்டியலைத் தருகிறார் பாண்டிய மன்னன் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி (புறம் 182).
1. இந்திரனுடைய அமிழ்தமே கிடைத்தாலும் தான் மட்டும் உண்டு மகிழாமல் அனைவரோடும் பகிர்ந்து உண்பவர்கள்
2. மற்றவர்கள்மேல் வெறுப்பு கொள்ளாதவர்கள்
3. சோம்பலின்றி உழைப்பவர்கள்
4. பிறர் அஞ்சுவதற்கு அஞ்சி, கெடுதல் செய்யாதவர்கள்
5. நற்புகழுக்காக/நன்மதிப்புக்காக உயிரையும் தருபவர்கள்
6. பழி வருமென்றால், உலகையே தந்தாலும் ஏற்க மறுப்பவர்கள்
7. தமக்காக அல்லாமல் பிறருக்காக நற்செயல்கள் புரிபவர்கள்
இருப்பதாலேயே உலகம் இயங்குகிறதாம்.
அந்துவன் கீரன் என்கிற தலைவனுக்காக எழுதப்பட்ட காவிட்டனாரின் பாடலோ (புறம் 359), நிலையில்லாத உலக வாழ்வின் பேருண்மையை முன்வைக்கிறது. ‘அதாவது நாட்டை ஆள்பவரும் ஒருநாள் இடுகாட்டுக்குத்தான் செல்லவேண்டும் அந்த நாளில் மிஞ்சப்போவது இசையும் வசையும்தான். அதனால் அவப்பெயர் இல்லாமல் புகழெய்தும் வகையில் நல்ல சொற்களையே உரைத்து நடுநிலையாக நின்று இல்லாதவர்களுக்கு வாரி வழங்கு. இந்த உலகைவிட்டு நீ அகன்றபின்னும், நீ எய்திய புகழ் என்றும் நீடித்து நிற்கும்’ என்று அறிவுறுத்துகிறார் புலவர்.
இந்த இரண்டு பாடல்களிலும் முந்தைய பிறப்பின் பழியோ இந்தப் பிறப்பின் செயல்கள் அடுத்த பிறப்பின் நலனுக்காக என்று கணக்கிட்டு வாழும் குறுகிய மனப்பாங்கோ துளியும் தென்படவில்லை.
இன்றைக்கே நல்லது செய்துவிடுங்கள்: சங்க இலக்கியங்களில் காலத்தால் பிற்பட்டது புறநானூறு. புறநானூற்றுக் காலத்தில், இப்பிறவியின் நல்வினை-தீவினைப் பயன்களைச் சார்ந்ததே மறுபிறவியில் கிட்டப்போகும் வாழ்க்கை என்கிற உணர்வு நன்கு பரவிவிட்டதை அறியலாம். ஆனாலும், உயர்ந்த நற்பண்புகளை வரையறையாகக் கொண்டிருந்த தமிழகத்தில், சென்ற பிறப்பின் நல்வினையும் தீவினையும் இப்பிறப்பின் மகிழ்வுக்கும் துயருக்கும் காரணமாக இருப்பதுபோல, இந்தப் பிறவியில் செய்யும் நன்மையும் தீமையும் அடுத்த பிறவிக்குக் கொண்டுசெல்லப்படுமென்ற கருத்தை எதிர்த்திருக்கிறார்கள் புலவர்கள். நமக்குக் கிடைக்கும் பாடல்களே அதற்குச் சான்று.
நரிவெரூ உத்தலையார் எனும் புலவர் (புறம் 195), கல்வியில் சிறந்த சான்றோர்களைப் பார்த்துச் சொல்கிறார்: ‘பல் சான்றீரே! பல் சான்றீரே! யமன் வந்து உங்களை அழைத்துச் செல்லும் வேளையில் மிகவும் வருந்துவீர்கள். எனவே அதற்குமுன் ‘நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும், அல்லது செய்தல் ஓம்புமின்,’. இதிலென்ன புதுமை என்கிறீர்களா? அடுத்த வரிகளில், நல்லது செய்யவில்லையென்றாலும் கெட்டது செய்யாமல் இருப்பதன் பயன் என்னவென்று சொல்கிறார். நல்லது செய்யவில்லையென்றாலும் கெட்டது செய்யாமலிருப்பது, மறுபிறவியில் பெறக்கூடிய உயர்வுக்காக அல்ல; அனைவரையும் மகிழ்விக்கும் என்பதாலும், அது நம்மை நல்வழியில் கொண்டு செல்லும் என்பதாலும்தானாம். மிக எளிதாகச் சொல்லப்பட்ட உயர்வான கோட்பாடு. மக்கள் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் தன்னலமற்றதாகத் தமிழ்ச் சமூகம் இருந்ததைக் காட்டும் பாடலிது.
மறுமையின் நன்மைக்காக அல்ல: மயிலுக்குப் போர்வை தந்த கடையெழு வள்ளல்களில் ஒருவரான பேகனைப் பாடும் பரணரின் பாடல், பேகனிடம் குதிரை பூட்டிய தேரும் பொற்றாமரையும் அணிகளும் வாங்கிவந்த பாணன் மற்றொரு பாணனிடம் மன்னரின் வள்ளல்தன்மையைச் சொல்லி ஆற்றுப்படுத்துவதாக அமைகிறது. பேகன் என்கிற பெரும் வள்ளல் மற்றவர்களுக்கு இல்லையெனாது கொடுத்த காரணத்தைச் சொல்வதில்தான் விழிப்புணர்வுக் கருத்தை விதைக்கிறார் புலவர் (புறம் 141).
‘ஈதல் நன்று என அவர் அளவின்றிப் பிறருக்குக் கொடுக்கிறார். அது, மறுபிறப்பில் தமக்கு நன்மையும் சிறந்த வாழ்வையும் தரும் என்பதற்காக அல்ல; வறுமையில் இருக்கும் பிறருக்குத் தந்து உதவுதல் மட்டுமே அவர் நோக்கம்’ என்கிறார் பரணர். பழந்தமிழ்ப் பகுத்தறிவாளர்களின் இந்தத் தெளிவைப் புரிந்துகொள்ள இலக்கியங்களை வாசிக்கும் தலைமுறை நமக்குத் தேவை.
குன்றின்மேலிட்ட விளக்குபோல், இந்த எண்ணங்களுக்கெல்லாம் தலையாயதாக ஒன்றைச் சொல்கிறார் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார். கடையெழு வள்ளல்களில் மற்றொருவரான ஆய் அண்டிரனைப் பாடும் பாடலில் (புறம் 134), ‘
தடையின்றி மற்றவர்களுக்கு வாரி வாரி வழங்குபவர் அவர். அந்தக் கொடையை, இந்தப் பிறவியில் செய்தது மறுபிறவியில் பயன் தரும் என்று நினைத்துக் கொடுக்கிறாரா? இல்லவே இல்லை. தமக்கு முந்தைய பெரியோர் கைகொண்ட சீரிய நெறியைப் பின்பற்றியே அவர் நற்பணிகளைச் செய்தார்’ எனக் குறிப்பிடுகிறார்.
அறத்தை விலைபேசுவோர்: இங்கே நாம் கவனிக்க வேண்டிய ஒன்றுண்டு. பிறருக்கு வழங்குவது மறுபிறவியின் பயனுக்காக என்று நினைப்பவர்களை யாரென்று பழிக்கிறார் புலவர்? ‘அறவிலை வணிகன்’ என்கிற சொல்லைப் பயன்படுத்துகிறார். இப்பிறவியில் மற்றவர்களுக்கு நன்மை செய்வதை அடுத்த பிறவியின் பலனுக்கான பேரமாகப் பார்ப்பவர்களை, அறத்தை விலைபேசும் வணிகர்களாகச் சமூகம் பார்த்த நிலையைப் பாடல் படம்பிடித்துக் காட்டுகிறது. எவ்வளவு அழுத்தமான சொல்லாடல்! எவ்வளவு உயர்வான எண்ணவோட்டம்! பிற்போக்குச் சிந்தனையாளர்கள்மீது இதைவிட வேகமாகச் சாட்டையைச் சுழற்றியிருக்க முடியாது.
இப்பிறப்பில் செய்த நற்செயலுக்கான பரிசும் இங்கு செய்த தீமைக்கான தண்டனையும் இவ்வுலகில் கிடைக்கும்போதுதான், தீமையின்றி வாழவும் நன்மையைப் பெருக்கவும் இளைய தலைமுறை நம்பிக்கை கொள்ளும். அந்த அறிவுரையையும் சோழன் நலங்கிள்ளிக்கு வழங்குகிறார் உறையூர் முதுகண்ணன் சாத்தனார் (புறம் 29).
‘கொடியவர்களுக்குத் தக்க தண்டனையும் நல்லவர்களுக்குச் சிறந்த பரிசும் சோர்வின்றி வழங்கி, நீ தொடர்ந்து நீதியை நிலைநாட்ட வேண்டும்; நல்லது செய்வதனால் எந்த நன்மையும் வரப்போவதுமில்லை; தீமை செய்தால் தண்டனை எதுவும் கிட்டப்போவதுமில்லை என்று சொல்பவர்களுள் நீயும் ஒருவனாகிவிடாதே’ என்று எச்சரிக்கிறார் புலவர்.
இன்றைய வாழ்வின் வலி முன்வினையின் பயன் என்பதும் இம்மை செய்தது மறுமைக்கு என்பதும் பண்டைத் தமிழர் சாடிய கருத்தென்பதை இப்பாடல்கள் உணர்த்துகின்றன. பேச்சுரிமையும் எழுத்துரிமையும் பரந்துபட்ட சிந்தனையும் செழித்த பண்பட்ட நாகரிகத்தின் சான்றுகள் இவை. தமிழரின் பண்பாட்டைப் புரிந்துகொள்ள, தமிழிலக்கியங்களைத் தமிழர்கள்தான் முதலில் வாசிக்க வேண்டும். இன்றும் பொருந்தும் வாழ்வியலைக் காட்டும் தமிழ் இலக்கியங்களை வாசித்து மகிழும் வாய்ப்பு, அவரவர் செய்த முன்வினைப் பயன் என்று சொல்வதைவிட நாம் பெற்ற பேறு என்று சொல்வதுதானே சரி?
- மு. சுப்புலட்சுமி, கட்டுரையாளர், வரலாற்று ஆய்வாளர் | தொடர்புக்கு: attraithingal.valai@gmail.com
முக்கிய செய்திகள்
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
3 days ago
இலக்கியம்
3 days ago
இலக்கியம்
3 days ago
இலக்கியம்
4 days ago
இலக்கியம்
4 days ago
இலக்கியம்
4 days ago
இலக்கியம்
5 days ago