1963-ம் ஆண்டு பிப்ரவரி 11-ம் நாள், விடியற்காலை 4 மணி. சில்வியா தட்டச்சு இயந்திரத்தில் தன்னுடைய இறுதிக் கவிதையை எழுதிக் கொண்டிருந்தார். ஒவ்வொரு சொற்களும் 30 ஆண்டுகால வாழ்வின் துயரத்தில் இருந்து அவரை விடுவித்துக் கொண்டிருந்தன. அவரின் மனநிலை நிதானமாக செயல்பட்டுக் கொண்டிருந்தது. இனி, தனக்கு எந்த வலியும் நிராகரிப்பும் துயரமும் இல்லையென்ற நிறைவில், அந்த விடியலை மிக அமைதியாக எதிர்கொண்டார். தன்னுடைய 8 வயதில் இறந்துபோன தந்தையுடன் உரையாடினார். மிகவும் பாதுகாப்பற்றவளாக உணரத் தொடங்கிய அந்த நாளினை மீண்டும் கண்முன் நிறுத்தினார். தந்தையின் இடத்துக்கே தானும் செல்லப்போகும் குதூகலம் சில்வியாவிடம் துளிர்த்தது. கவிதையை முடிக்காமல் தட்டச்சு இயந்திரத்தை மூடி வைத்தார். (சில்வியா முடிக்காமல் விட்ட கவிதையின் முடிவை 50 ஆண்டுகளாக வாசகர்கள் எழுதிப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.) முடிக்கப்படாத கவிதையைப் போலவே வாழ்வையும் விட்டுச் செல்ல முடிவெடுத்திருந்த சில்வியா, தன்னுடைய இரு குழந்தைகளும் உறங்கும் அறைக்கு வந்தார்.
குழந்தைகள் விழித்தால் குடிக்கப் பாலும் ரொட்டியும் கொண்டுவந்து அருகில் வைத்தார். ஆறிவிடாமல் இருக்க பால் குவளைகளை மூடிவைத்தார். குழந்தைகளின் நெற்றி யில் தாய்மையின் கனிவு பொங்க முத்தமிட்டார். பின் அறைக் கதவை அடைத்து ஈரத் துணியால் கதவுகளின் இடை வெளியை மூடினார். ஜன்னல்களையும் அதைப் போலவே. தன் குழந்தைகளுக்காக சில்வியா கொடுத்த கடைசி முத்தத்தின் சில்லிப்பை வெளிக்காற்று கொண்டு செல்லாமல் ஈரத் துணி இறுகிக் காத்தது.
சுவாசம் திணறும் நேரம்
சில்வியா சமையலறைக்கு வந்தார். வாழ்நாளின் ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் முயற்சித்துத் தோற்றுப் போனதை வெற்றிகரமாக நிறைவேற்ற துணிந்தார். சமையலறையின் கதவுகளை மூடினார். பின் எரிவாயுவினைத் திறந்துவிட்டார். எரிவாயு வெளிவரும் அடுப்பில் தன்னுடைய முகத்தை அழுத்தி வைத்துக்கொண்டார். நிதானமாக எரிவாயுவை நுரையீரல் முழுக்க நிரப்பினார். தன்னுடைய அன்புக் கணவனின் நிராகரிப்பை சுவாசம் திணறும் நேரத்தில் நினைத்துப் பார்த்திருப்பாரோ என்னவோ, அவர் இம்முறை தன்னுடைய முயற்சியில் தோற்கவில்லை.
‘‘இனி ஒருபோதும் கடவுளுடன் பேச மாட்டேன்’’ என்ற சில்வியா பிளாத் தற்கொலை செய்துகொண்டார்.
‘‘மரணம் ஒரு கலை. மற்ற அனைத்தையும் போலவே நான் அதை மிகச் சிறப்பாகச் செய்கிறேன்’’ என்றவர் கவிதையின் காட்சியாகத் தன்னை மாய்த்துக் கொண்டார். சில்வியா தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற முடிவை உணர்ச்சிவசப்பட்ட ஒரு கணத்தில் எடுக்கவில்லை. தன்னையே தாங்கிக்கொள்ள முடியாத அவரின் சுயம் அவரைத் தற்கொலைக்கு ஏவிக்கொண்டே இருந்தது.
அஞ்சல் வில்லைகளைச் சேமிப்பவர் தன்னுடைய சேமிப்பின் ஒவ்வொரு வில்லைகளையும் நேசிப்பதுபோல், ஒவ்வொரு மனிதர்களையும் நேசிக்க விரும்பிய சில்வியா உண்மையான நேசத்தைத் தேடியே மரணத்தைத் தழுவினார். ஓர் ஊர்வனவாக, இறந்து கொண்டிருக்கும் ஒரு மனிதனாக, உலகில் உள்ள எல்லோராகவும் எல்லாமாகவும் வாழ்ந்து பார்க்க விரும்பிய சில்வியாவின் வாழ்க்கை, யாருடைய வாழ்க்கையாகவும் இல்லாமல் முடிந்துபோனது. தன்னிடமிருக்கும் ஒரே ஒரு வாழ்க்கையை, ஒருபோதும் மீண்டு வராத வாழ்க்கையை வாழ விரும்பிய சில்வியாவை வாழ்வின் நெருக்கடிகள், 30 வயதில் தற்கொலை செய்துகொள்ளத் தூண்டிவிட்டன.
தனிமையின் பெருந்துயர்
விழித்தால் குழந்தைகள் பசியில் அல்லலுறக்கூட கூடாது என்று பாலும் ரொட்டியும் எடுத்து வைத்துவிட்டு, மாய்த்துக்கொள்ளத் துணிந்த சில்வியாவுக்கு, பசி தீர்ந்த பிறகு தன்னைத் தேடும் குழந்தைகள் என்ன செய்வார்கள் என்ற எண்ணம் வந்திருக்காதோ? 8 வயதில் தன்னை விட்டுச் சென்ற தந்தையின் மரணத்தினால்தான் கடைசிவரை சில்வியா பெரும் தனிமையில் இருந்தார்.
‘Daddy’ என்ற கவிதை அவருடைய குரலிலேயே இப்போதும் யூ- டியூபில் கேட்பதற்குக் கிடைக்கிறது. அக்குரலில் மிகும் துயரம், கேட்பவரை அலைக்கழிக்கிறது. ‘அந்தக் கருப்பு ஷூவில் பாதத்தைப் போல் 30 ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறேன்’ என்ற வரி தந்தையின் அன்பே அவரை கைதியாக்கி வைத்திருந்ததைக் கூறுகிறது. ஆனால், சில்வியாவும் அதே தனிமையைத் தன்னுடைய குழந்தைகளுக்கும் கொடுத்துச் சென்றதுதான் பெரும் துயரம்.
தற்கொலை ஒரு தீர்வல்ல என்றாலும் பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் மரணத்தை ஆயுதமாக்க நினைக்கிறார்கள். சமூகம் பெண்ணின் மீது ஏற்றும் உணர்வழுத்தங்களைத் தாங்க முடியாமல் சுயபலி கொடுத்துக் கொள்ளும் பெண்களுக்கு சில்வியா குறியீடானார். துயர் நிரம்பிய வாழ்வை என்ன செய்வது என்று தெரியாமல் மாய்ந்துபோன பெண்.
உண்மையின் நாட்குறிப்பு
சில்வியா அமெரிக்காவின் மஸசுஸெட்ஸ் மாகாணத்தில் அக்டோபர் 27, 1932-ல் பிறந்தவர்.20-ம் நூற்றாண்டின் உன்னதமான கவி. தந்தை ஒட்டோ பிளாத். தாய் ஆரலியா. எழுதுவதில் எப்போதுமே தீவிரம் கொண்ட சில்வியா, 11 வயதிலேயே நாட்குறிப்புகள் எழுதும் பழக்கத்தைத் தொடங்கிவிட்டார். சில்வியாவின் தற்கொலைக்கு முந்தைய முக்கியமான நாட்குறிப்புகளை கணவர் டெட் ஹியூஸ் தீயிட்டுக் கொளுத்திவிட்டார். அச்சில் வராமல் பார்த்துக்கொண்ட சில நாட்குறிப்பு கள், 1998-ல் டெட் ஹியூஸின் மரணத்துக்குப் பிறகு வெளியாகின.
20-ம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் உலகம் முழுக்க சிந்தனை மாற்றங்களும், மரபான பார்வையில் இருந்து வெளியேறுதலும் நிகழ்ந்துகொண்டிருந்தன. இரண்டாம் உலகப்போரின் முடிவு, போரினால் நிகழ்ந்த படுகொலைகள், சித்ர வதைகள், தொழில்துறை வளர்ச்சி எல்லாம் கலைஞர்களின் சிந்தனையில் மாற்றங்களைக் கொண்டுவந்தன. சுயம் என்பதற்குப் புதிதான பொருள் உருவானது. படைப்பாளிகள் தங்களின் அக வெளிப்பாடு சார்ந்த படைப்புகளை உருவாக்கினார்கள். தனக்கும் தன்னுடைய சுயத்துக்கும் இடையில் எழும் முரண்களைப் பேசினார்கள். தனிப்பட்ட தோல்விகள், துயரங்கள், சுயத்தின் வீழ்ச்சி போன்றவை அக வெளிப்பாட்டுப் படைப்பின் கருப்பொருளாயின.
காதல் மலர்ந்தது
சில்வியாவும் அக வெளிப்பாட்டுப் படைப்புகளின் முன்னோடியானார். பெண்ணாக அவர் உணர்ந்த பாதுகாப்பின்மையும், சுயத்தைப் பகிர்ந்துகொள்ள முடியா துயரமும் அவர் கவிதைகளில் இருந்தன. அமெரிக்காவிலும் பால் சார்ந்த வேலைப் பிரிவினைகளில் மாற்றம் வராத காலம். சில்வியாவுக்குத் ‘தன்னுடைய பராமரிப்பின்கீழ் ஒரு குடும்பம்’ என்ற உணர்வு பெரும் அச்சுறுத்தலாகவே இருந்தது. குடும்பம், குழந்தை, மூன்றுவேளை உணவு தயாரித்தல் என்றுதான் வாழ்க்கை இருக்குமோ என்ற அச்ச உணர்வு அவருக்கு 20 வயதிலேயே வந்துவிட்டது. அந்த அச்சவுணர்வை மீறி அவருக்குள் காதலும் மலர்ந்தது.
அமெரிக்காவில் கல்லூரிப் படிப்பை முடித்து, இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கு மேற்படிப்புக்குச் சென்ற சில்வியா, அங்கு டெட் ஹியூஸ் எனும் கவிஞர் மேல் காதல் கொண்டார்.
சில்வியாவுக்கு எல்லாம் தீவிரம்தான். எழுத்து, காதல், அன்பு, படிப்பு... எல்லாம். சில்வியா டெட் ஹியூஸை மிகத் தீவிரமாக நேசித்து, திருமணம் செய்துகொண்டார். இரண்டு குழந்தைகளுக்குத் தாயானார். கல்லூரி யில் பயிற்றுவிப்பாளராகவும் பணி செய்தார்.
ஈரமும், பனியும், மழையும், வெயிலுமாக கடந்துபோகும் பருவங்களின் சாயலுடன் சில்வியாவின் நாட்கள் கடந்திருக்கின்றன. உண்மையையும் தீவிரத்தையும் விரும்பிய சில்வியா, அன்பின் சிறு பிறழ்வுகளில்கூட மனம் உடைந்திருக் கிறார். தன்னுடைய அன்புக்குரிய கணவனுக்குப் பிற பெண் களுடனும் காதல் இருக்கிறது என்று தெரிந்தவுடன் சில்வியா உடைந்து போனார்.
இரண்டு குழந்தைகளுடன் தன்னுடைய உலகத்தைச் சுருக்கிக் கொண்டார். ஹியூஸிடம் இருந்து விலகிய சில்வியாவுக்கு, குழந்தைகளைப் பராமரிப்பதும், எழுதுவதும், பணிக்குச் செல்வதும் பெரும் போராட்டமாக இருந்தது. ஹியூஸ் வேறொரு பெண்ணுடன் வாழத் தொடங்கினார். சில்வியாவின் கவிதைகளுக்குக் கிடைத்த வரவேற்பும் ஹியூஸுக்குப் பொறாமையைக் கொடுத்தது.
‘‘ஓய்வெடுத்தால், ஆழ்ந்த சிந்தனைக்குள் மூழ்கினால் நான் பைத்தியமாகி விடுவேன்” என்று பயந்த சில்வியாவுக்கு வாழ்க்கைப் பெரும்பகுதி நேரம் தனிமையைத்தான் பரிசாக வழங்கியது. கவிதைகளிலும் வாழ்வில் இருந்து விடுபடும் தவிப்புகளாக அவரின் கவிதைகள். ‘தற்கொலையின் அபகீர்த்தியை சுமந்தலையும் ஆவி நானே’ என்றும், ‘உதிரும் இலையைப் போல் என் வாழ்வு, ஓ கடவுளே, விரைவாக்கு என் முடிவை’ போன்ற வரிகளும் சில்வியாவின் மன அழுத்தத்தைச் சொல்கின்றன.
பெரும் நெருக்கடிகளுக்கு இடையில் ‘மாபெரும் சிலையும் மற்ற கவிதைகளும்’ என்ற முதல் கவிதை நூலை 1960-ம் ஆண்டு வெளியிட்டார். அவர் உயிருடன் இருந்தபோது வெளியான ஒரே தொகுப்பு இதுதான். 3 ஆண்டுகள் கழித்து ‘விக்டோரியா லூகாஸ்’ என்ற புனைபெயரில் ‘மணி ஜாடி’ என்ற நாவலை வெளியிட்டார்.
சில்வியா மரணித்து, ஏறக்குறைய 20 ஆண்டுகள் கழித்து, டெட் ஹியூஸ் தொகுத்து வெளியிட்ட ‘சில்வியா பிளாத்தின் கவிதைத் திரட்டு’ என்ற கவிதை நூலுக்கு ‘புலிட்சர்’ விருது வழங்கப்பட்டது. சில்வியாவின் ‘பிறந்த நாள் கவிதைகள்’ வரிசையும், ‘ஏரியல்’ கவிதைத் தொகுப்பும் அவரை இன்றும் நம் கண்முன் நிறுத்துகின்றன. ‘சில்வியா’ என்ற பெயரில் அவரின் வாழ்க்கைப் திரைப்படமாகி இருக்கிறது.
சில்வியா வாழும்போது மரணத்தைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தார். இப்போதும் வாசகர்கள் சில்வியாவின் வாழ்க்கையைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
- வருவார்கள்...
எண்ணங்களைப் பகிர: vandhainila@gmail.com
முக்கிய செய்திகள்
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
11 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
16 days ago
இலக்கியம்
16 days ago
இலக்கியம்
19 days ago
இலக்கியம்
19 days ago
இலக்கியம்
19 days ago
இலக்கியம்
23 days ago
இலக்கியம்
23 days ago