‘‘இவர் வெறுக்கத்தக்க ராஜதுரோகி. இவருடைய எலும்புகள்கூட, சாவுக்குப் பின் ராஜதுவேஷத்தையூட்டும்...’’ வ.உ.சி. மீதான அரச நிந்தனைக் குற்றசாட்டில் ஆங்கிலேய அரசின் நீதிபதி பின்ஹே தன்னுடைய தீர்ப்பில் இவ்வாறு குறிப்பிட்டார். `இறந்தவரின் எலும்புகள்கூட தேசபக்தியை ஊட்டும் வல்லமை பெற்றவை’ என்ற அச்சத்தை ஆங்கிலேயரிடம் ஊன்றிய தென்னிந்தியாவின் மாபெரும் தலைவர் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை.அந்நிய ஆட்சிக்கு எதிராகப் பேசினால் சிறை, துணை நின்றால் தீவாந்திரம், எதிர்த்துப் போராடினால் தூக்கு. மக்கள் எழுச்சியின் போதெல்லாம் வன்முறையைக் கட்டவிழ்த்துவிடுவதுதானே அரசுகளின் வாடிக்கை. ஆங்கிலேய அரசும் 1800-களில் தென் தமிழகத்தில் சுடர்விட்ட எதிர்ப்பை, தூக்குக் கயிற்றால் அணைத்தது.பாஞ்சாலங்குறிச்சிக்கு அருகில்... போராளிகள் புதைக்கப்பட்ட மண்ணிலேயே பிறந்தார்கள். நூறாண்டுகளுக்குப் பிறகு தென்தமிழகத்தில் மீண்டும் ஒரு போராட்டக் கனல் உருவானது. வீழ்த்தப்பட்ட பாஞ்சாலங்குறிச்சிக்கு அருகில் இருந்த ஒட்டப்பிடாரத்தில், 73 ஆண்டுகளுக்குப் பிறகு வ.உ.சி. பிறந்தார்.
பரம்பரையாகச் செல்வந்தர்கள். தமிழ்ப் புலமையும் கல்வி யும் மேலோங்கிய குடும்பம். செல்வமும் கொஞ்சம் சுதந்திரமும் தந்த வழக்கறிஞர் பணியை மேற்கொண்டார்கள் குடும்பத்தினர். திண்ணைப் பள்ளியில் கல்வி கற்ற வ.உ.சி-க்கு உயர்கல்வி தரவேண்டும் என்பதற்காக ஒட்டப்பிடாரத்தில் அவரின் தந்தை உலகநாதன் புதிதாக நடுநிலைப் பள்ளி ஒன்றைத் தொடங்குகிறார். வைதீகமான குடும்பத்தின் பின்னணியில் பிறந்து வளர்ந்த வ.உ.சி-க்கு கல்வி, திருமணம், குழந்தை பிறப்பெல்லாம் காலப்படி நடந்தது. வ.உ.சி-க்கு மெய்ஞானத்திலும், தமிழிலக்கியத்திலும் ஆழ்ந்த ஈடுபாடு.
வங்கத்தில் பேரெழுச்சியாக உருவான சுதேசி இயக்கம் தமிழகத்திலும் பரவுகிறது. ஆங்கிலேயர்கள் விடுதலைப் போராட்ட வீரர்களை ஏளனமாக `சுதேசி’ என்றழைத்தார்கள். அச்சொல்லே மக்களை ஓரணியில் திரட்டுவதற்கான மந்திரச் சொல்லாகவும் மாறிய நேரம் அது. பாலகங்காதர திலகர், லாலா லஜபதிராய், விபின் சந்திர பாலர் போன்ற தலைவர்கள் ‘சுதேசி’ இயக்கத்தின் முன்னோடிகளானார்கள். வ.உ.சி. தென்னிந்தியாவின் போராட்டத்துக்குத் தலைமையேற்கிறார். சுப்பிரமணிய சிவாவும், பாரதியும் சுதேசி இயக்கத்தின் தளகர்த்தர்கள்.
அடி மேலை கடல் முழுதும்...
‘‘சுதேசி சுதேசி... என தெருக்களில் கோஷமிட்டுக் கொண்டிருந்தால் நம்மால் அந்நியர்களை விரட்ட முடியாது. அந்நியர்கள் ஆதிக்கம் மேலோங்கி இருக்கும் தொழில்களில் நம்ம வர்களும் ஈடுபட வேண்டும்’’ என்ற தீர்க்க தரிசனம் வ.உ.சி-க்கு இருந்தது. ‘சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி’ என்ற பெயரில் சுதேசிக் கப்பல் கம்பெனியை நண்பர்களுடன் சேர்ந்து தொடங்குகிறார். பாண்டித்துரை தேவர் தலைவர். இரண்டு செயலர்களில் வ.உ.சி. ஒருவர். ரூ.10 லட்சம் முதலீட்டில் ரூ.25-க்கு ஒரு பங்கு வீதம் 40 ஆயிரம் பங்குகள் திரட்டப்பட்டு, இரண்டு சுதேசிக் கப்பல்கள் வங்கக் கடலில் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையில் இயக்கப்பட்டன. இந்திய அரசியல் வரலாற்றிலேயே முன்னோடியான முயற்சி இது.
வ.உ.சி. தென்தமிழகத்தில் பெரும் எழுச்சியை உண்டாக்கினார். நெல்லை மக்களுக்கு வ.உ.சி.யின் சொற்களே ஆணை. அவருடைய கை அசைவை மக்கள் செயலாக்கினார்கள். தூத்துக்குடி கோரல் மில் பிரச்சினைக்காகத் தொழிலாளர்களை ஒன்றிணைத்தார். போராட்ட வெற்றிக்காக தொழிலாளர்கள் பணிக்குச் செல்லவில்லை. நாவிதர்கள் சுதேசி எதிர்ப்பாளர்களுக்குச் சவரம் செய்ய மறுத்தனர்.
குதிரை வண்டி ஓட்டுபவர்கள், குதிரைகளை அவிழ்த்துவிட்டு அமைதியாக நின்றார்கள். துப்புரவு பணியாளர்கள் பணிக்கு வரவில்லை. சமையற்காரர்கள் சமைக்கவில்லை. மொத்த நகரமும் ஸ்தம்பித்தது. கோஷம் போட்டாலும், கொடி பிடித்தாலும் பொங்கி எழும் அந்நிய அரசு, கப்பல் விடுவதையும் தொழிலாளர்களிடம் ஒற்றுமையை உண்டாக்குவதையும் பொறுத்துக் கொள்ளுமா? நெல்லை கலெக்டர் விஞ்சு துரை, இனியும் விட்டு வைக்கக்கூடாது என்று வ.உ.சி-யை கைது செய்தான்.
தலை சாயுதல் செய்யோம்
அரச நிந்தனைக் குற்றத்துக்காகப் 10 ஆண்டுகளும், சுப்பிரமணிய சிவாவுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக 10 ஆண்டுகளும் ஆக, 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. இரண்டு தண்டனைகளையும் ஒன்றன்பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவு. தீர்ப்பைக் கேட்ட வ.உ.சி-யின் சகோதரர் மீனாட்சிப் பிள்ளை, மனநிலை திரிந்து, இறக்கும்வரை பித்தராகவே திரிந்தார். மனைவியும் 3 குழந்தைகளும் பெற்றோர்களும் உறைந்து நிற்க, வ.உ.சி-யும் நண்பர்களும் சிரித்த முகத்துடன்தான் சிறைக்குச் சென்றார்கள். கோவை சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவருக்கு ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் இருந்த மக்களின் எழுச்சி பேருவகையாக அமைந்தது. இவ்வெழுச்சி நாட்டுக்கு விடுதலைப் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையோடு சிறை சென்றார்.
சிறையில் வ.உ.சி-க்கு சகிக்கமுடியாத கொடுமைகள். சணல் திரிக்கும் இயந்திரத்தில் வேலை. கைகளில் சதைகள் பிய்ந்து ரத்தம் கசிவதைப் பார்த்த சிறை அதிகாரி, மேலும் தண்டிக்க மாடுகளுக்குப் பதிலாக செக்கிழுக்கச் சொன்னான். கொதிக்கும் வெயிலில் சுடும் கால்களுடன் செக்கிழுத்தார். மிருகத்தைப் போல் ஒரு தலைவரை நடத்திய கொடுமை வ.உ. சி-க்குத்தான் நேர்ந்தது.
முறையீடு, மேல் முறையீடு என்று அடுத்தடுத்த மனுக்களால் வ.உ.சி-யின் தண்டனைக் காலம் 6 ஆண்டு காலமானது. தண்டனைக் குறைப்புகளால் 4 ஆண்டுகள் 3 மாத சிறை வாசத்துக்குப் பிறகு விடுதலைப் பெற்ற வ.உ.சி-யை சிறை வாசலில் வரவேற்க காத்திருந்தவர் சுப்பிரமணிய சிவா. சிறைவாசம் தந்த பரிசான தொழுநோயுடன் தளர்ந்துபோன உடம்புடன் சிவா நின்றிருந்தார்.
சென்னை வாழ்க்கை
சிறைக்குச் செல்லும்போது சுதேசி எழுச்சியினால் நிறைந்திருந்த வீதிகள் அடக்குமுறையின் அமைதியில் இருந்தன. மக்கள் மௌனிகளாக இருந்தார்கள். பெருங்கனவுடன் வாங்கப்பட்டிருந்த கப்பல் கம்பெனியை உடன் இருந்தவர்கள் அரசாங்கத்திடமே விற்றிருந்தார்கள்.
வழக்கறிஞர் உரிமம் பறிக்கப்பட்டிருந்தது. நான்காண்டு கால சிறை வாழ்க்கையில் எல்லாம் மாறிப்போயிருந்தது. நெல்லைக்குத் திரும்புவதற்கும் கட்டுப்பாடு. வ.உ.சி. சென்னையில் குடியேறினார்.
சிறையில் இருந்த காலத்தில் உறுதுணையாக இருந்தவர்கள் நண்பர்கள்தான். வ.உ.சி.யை ‘மாமா’ என்று அன்பொழுக அழைக்கும் பாரதி, வ.உ.சி. சிறையில் படும் துன்பங்களைத் தன் எழுத்தின் வாயிலாக மக்களிடம் கொண்டுசென்றார். காங்கிரஸ்காரர்கள் யாரும் உதவவில்லை. தென்னாப்பிரிக்கா, இலங்கை, மலேயாவில் இருந்த தமிழர்கள்தான் உதவினார்கள்.
வ.உ.சி-யின் சென்னை வாழ்க்கைப் பல சிரமங்களுக்கிடையில் நடந்தது. பெரும் செல்வந்தரான வ.உ.சி. குடும்பத்தைக் காக்க அரிசிக் கடை, மண்ணெண்ணெய் வியாபாரம் போன்ற தொழில்கள் செய்தார். கூட்டுறவு இயக்கம், தொழிலாளர் இயக்கம், சுதேசி இயக்கம் மூன்றிலும் தீவிரமாக செயல்படத் தொடங்கினார்.
திரு.வி.க. உள்ளிட்ட தலைவர்களுடன் இணைந்து சென்னையில் பல்வேறு தொழிற்சங்கங்களை அமைத்தார். அவரின் அடிப்படை கொள்கை சுயராஜ்ஜியமும், மக்கள் நலனும்தான். அதற்கு ஆதரவான எல்லா இயக்கங்களிலும் பங்கெடுத்தார். காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் உடன்பாடு இல்லையென்று மாநாட்டிலேயே கூறிவிட்டு வெளியேறியவர்.
காங்கிரஸின் கொள்கைகளோடு முரண்பட்டு, காங்கிரஸை விட்டு வெளியேறுகிறேன் என்றுகூட அறிவித்திருக்கிறார். ஆனால், ஒருபோதும் வெளியேறியதில்லை.
ஒரு படைப்பாளியாக...
நீதிபதி வாலேஸ் என்பவரால் மீண்டும் வழக்கறிஞர் பணிபுரிய சன்னத் கிடைக்கப்பெற்று தன்னுடைய ஊருக்குத் திரும்பினார் வ.உ.சி. ஆனாலும் தொழிலிலும் கட்சியிலும் பழைய நிலைக்கு வரமுடியவில்லை. நெருக்கடியான காலத்திலும் எழுதுவதை நிறுத்தவில்லை. சுயசரிதை நூலொன்றுடன் 8 நூல்களும், 4 மொழிபெயர்ப்பு நூல்களும், திருக்குறள் மற்றும் தொல்காப்பிய உரைகளும் வ.உ.சி-யின் இலக்கியப் பங்களிப்புகள்.
சுதந்திர இந்தியாவைத் தன் வாழ்நாளில் தரிசித்துவிடும் ஆவலோடு வ.உ.சி-யின் கடைசி நாட்கள் கடந்தன. உலக யுத்தம் வந்தால்தான் இந்தியாவுக்கு விடுதலை கிடைக்கும் என யுத்தத்தை எதிர்பார்த்து படுக்கையில் கிடந்தார். தன்னைச் சிறையில் அடைத்துத் துன்புறுத்தியவர்கள் முன்னால் சுதந்திர நாட்டில் வாழ்ந்து காட்ட முடியவில்லையே என்ற ஏக்கம் அவர் உடலை மேலும் வருத்தியது.
நாளுக்கு நாள் பலவீனமடைந்த வ.உ.சி. முடிவு நெருங்கிவிட்டதை உணர்ந்தார். தன்னுடைய உயிர் காங்கிரஸ் அலுவலகத்தில்தான் போக வேண்டும் என்று காங்கிரஸ் அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லச் சொன்னார். வ.உ.சி-யின் விருப்பத்துக்காக தூத்துக்குடி காங்கிரஸ் அலுவலகத்துக்குக் கூட்டிச் சென்றார்கள்.
சில நாட்களுக்குப் பிறகு, மீண்டும் இல்லத்துக்கு அழைத்து வரப்பட்ட வ.உ.சி., பாரதியின் சுதேச பாடல்களைக் கேட்க விரும்பினார். தொண்டர்கள் பாரதியின், ‘பாரத சமுதாயம் வாழ்கவே’, ‘பறையருக்கும் இங்குத் தீயர் புலையருக்கும் விடுதலை’ போன்ற பாடல்களைப் பாடினர்.
காங்கிரஸ் தொண்டர் சிவகுருநாதனை, ‘என்று தணியும் இந்த சுதந்திரத் தாகம்’ என்ற பாடலைப் பாடச் சொல்லிக் கேட்டவாறே தன்னுடைய இறுதி மூச்சை நிறுத்திக்கொண்டார் வ.உ.சி.
காங்கிரஸினுடைய தென்னிந்தியத் தலைவராக இருந்த வ.உ.சி-க்கு காங்கிரஸ் அலுவலகத்தில் சிலை வைக்க சத்தியமூர்த்தி காங்கிரஸ் நிதியில் இருந்து பணம் தர மறுத்துவிட்டார். ம.பொ.சி. உள்ளிட்ட தலைவர்களின் முயற்சியில்தான் அவருக்கு சிலை வைக்கப்பட்டது. போதிய பணம் வசூல் ஆகாததால் ஆளுயர சிலை முக உருவ சிலையானது.
சிலைகளில் இல்லை வ.உ.சி. இன்றும் அம்மண்ணில் மக்கள் எழுச்சியாக நடந்து கொண்டிருக்கும் போராட்டங்களின் வெற்றிகளில்தான் இருக்கிறார்.
- வருவார்கள்...
எண்ணங்களைப் பகிர: vandhainila@gmail.com
ஓவியம்: வெங்கி
முக்கிய செய்திகள்
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
14 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
15 days ago