‘புரட்சியாளர்களைக் கொன்றால் புரட்சியைக் கொன்றுவிட முடியும்’ என்று ஆதிக்க சக்திகள் நம்புகின்றன. கொல்லப்பட்ட புரட்சியாளர்கள் ஒவ்வொரு நாளும் நம்மைப் புரட்சியை நோக்கி ஈர்க்கிறார்கள். புரட்சியாளர்களின் உடல் மண்ணில் விழும்போதெல்லாம், அவர்களின் சித்தாந்தங்கள் வலுப்பெறுகின்றன.இருண்ட பழமைவாதத்துக்கும், நெகிழ்வற்ற மத குருமார்களுக்கும், பிற்போக்குவாதிகளுக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருந்த மார்க்சிய சிந்தனையாளர் ரோசா லுக்ஸம்பர்க் ஜெர்மனியில் அடித்துக் கொல்லப்பட்டார். மரணம் தன்னை நோக்கி வந்துகொண்டிருக்கிறது என்பதை உணர்ந்திருந்த நிலையிலும், ‘‘தொடர்ச்சியான தோல்விகளே இறுதி வெற்றிக்கு இட்டுச் செல்லும்’’ என்று கூறி, ரோசா முன்பைவிட வேகமாக புரட்சி நடவடிக்கைகளை ஒன்றிணைத்தார். ரஷ்ய மேல்தட்டு வர்க்கத்தால் உருவாக்கப்பட்ட ‘போல்விஷ்க் விரோதக் குழு’-வின் பாட்டாளி வர்க்கத் தலைவர் என குற்றம்சாட்டி, ஜெர்மனியில் இருந்த எல்லா ஏஜென்ட்களும் முழு நேர வேலையாக, ஒரு படுகொலைக்குத் தயாராகிக் கொண்டிருந்தார்கள். ரோசாவின் தலைக்கு ஒரு லட்சம் மார்க் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது. போராட்டங்களும் புரட்சியும் பெரும்பாலும் துரோகத்தால்தான் வீழ்த்தப்பட்டிருக்கின்றன.
ரோசாவின் இருப்பிடத்தையும் துரோகத்தின்மூலம் கண்டறிந்து ஜெர்மன் ராணுவக் குழு ரோசாவைக் கைது செய்தது.
தெருச் சண்டையில் மரணம்
கொஞ்சமும் தாமதிக்காமல் துப்பாக்கியின் பின்புறத்தால் ரோசாவின் தலையில் ஓங்கி இரண்டு அடிகளைக் கொடுத்தான் ராணுவ வீரன் ஒருவன். ‘ ‘நான் என் கடமையைச் செய்து கொண்டிருக்கும்போது ஒரு தெருச் சண்டையிலோ அல்லது சிறையிலோ மரணமடைய வேண்டும்’’ என்று முன்பொருமுறை ரோசா சிறையில் இருந்து எழுதிய கடிதத்தின் வரிகள் இப்போது காட்சியாக அரங்கேறிக் கொண்டிருந்தன.
உயிரற்றுக் கீழே விழுந்த ரோசாவின் உடலை காரில் ஏற்றிக்கொண்டு லீச்டென்ஸ்டீன் பாலம் நோக்கிப் பறந்தது ராணுவம். உயிர் பிரிந்த உடலைப் பார்த்தும் அவர்களுக்கு வெறி அடங்கவில்லை. ராணுவ வீரன், மீண்டும் துப்பாக்கி யின் பின்புறத்தால் ரோசாவின் மண்டையில் ஓங்கி அடித்தான். கபாலம் சிதறியது. பாலத்தின் அருகில் வந்தவுடன் உடலைக் கீழே இறக்கிப்போட்டுத் துப்பாக்கியால் சுட்டார்கள். பெரிய கல்லைக் கட்டி பாலத்தின் கீழிருந்த பெரிய கால்வாயில் உடலைத் தூக்கி எறிந்தார்கள். புரட்சிக்காரர்களின் உயிரற்ற உடல்கூட ஆதிக்க சக்திக்கு தரும் அச்ச உணர்வினை விவரிக்க இயலாது.
1919-ம் ஆண்டு ஜனவரி மாதம் 15-ம் நாள் இரவு 9 மணிக்குப் படுகொலை செய்யப்பட்டு, கால்வாயில் தூக்கியெறிப்பட்ட ரோசாவின் உடல், மே 31-ம் தேதி வரை கரை ஒதுங்கவில்லை.
லுக்ஸம்பர்க்கைப் படுகொலை செய்த ஜெர்மானிய ராணுவம், அவரின் உடைமைகளைச் சூறையாடியது. அவருடைய கையெழுத்துப் பிரதிகள் கிழித்தெறியப்பட்டன. தீயிலிட்டுக் கொளுத்தப்பட்டன.
மதவாதமும், சர்வாதிகாரமும் கூட்டணி சேர்ந்துகொண்டு பாட்டாளி வர்க்கத்தை அடக்கி ஒடுக்கிக் கொண்டிருந்த காலகட்டத்தில், புரட்சியின் பேரொளியாகத் தோன்றிய மார்க்சிய சிந்தனையாளர்தான் ரோசா லுக்ஸம்பர்க். உலக அளவில் புகழ்பெற்ற முதல் பெண் மார்க்சிஸ்ட்.
வரலாற்றில் வாழ்பவர்
போலந்து - ரஷ்ய எல்லைக்கு அருகில் உள்ள லூப்லின் மாவட்டத்தில் சமோஸ்க் என்ற சிறு நகரத்தில் பிறந்தவர் ரோசா. ரஷ்யப் பேரரசின்கீழ் இருந்த போலந்தின் நிலை பரிதாபத்துக்குரியது. போலந்து மக்களைவிட அங்குக் கணிச மாக வாழ்ந்திருந்த யூதர்களின் நிலை மிகவும் கவலைக்குரியது. அடிமைகளுக்கும் அடிமைகளாய் இருந்தனர். கிரிமியப் போரின் தோல்விக்குப் பிறகு, ரஷ்யாவில் மாற்றங்கள் வந்தன. நிலச் சீர்திருத்தம் வந்தது. பண்ணை அடிமை முறை ஒழிந்தது. போலந்தில் யூதர்களின்மீது சுமத்தப்பட்டிருந்த தனிச் சட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
போலந்தில் யூதர்கள் கொஞ்சமாக சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் தொடங்கிய நேரத்தில்தான் ரோசா பிறந்தார். ஓரளவுக்கு செல்வநிலையில் இருந்தது குடும்பம். பிறப்பிலேயே அறிவுக்கூர்மை அதிகம். எலும்புக் காசநோய்க்காக செய்யப்பட்ட வைத்தியத்தில் குணப்படுத்த முடியாதபடி ஊனமானார்.
வீட்டில் நிலவிய இலக்கிய தாக்கம் ரோசாவை இளம் வயதிலேயே புரட்சிகர சிந்தனையை நோக்கித் திசை திருப்பியது. வார்ஸாவின் பள்ளிகளில் யூதக் குழந்தைகளைச் சேர்த்துக் கொள்வதே அபூர்வம். சேர்த்துக் கொண்டாலும், மாணவர்கள் தங்களின் போலீஷ் மொழியில் பேசுவதை ரஷ்ய அரசு தடை செய்தது. புரட்சியை, கிளர்ச்சியை அடக்குமுறைதான் தீர்மானிக்கிறது. ரோசாவும் தன்னுடைய சூழலில் இருந்த அடக்குமுறைகளில் இருந்தே புரட்சிக்காரராக மாறினார். பள்ளி இறுதி வகுப்பை முடிப்பதற்குள்ளேயே ரஷ்யாவின் புரட்சிகர இயக்கங்களுடன் ரோசாவுக்குத் தொடர்பு உண்டாகியிருந்தது. அதனால், பள்ளியின் சிறந்த மாணவிக்காக வழங்கப்பட இருந்த தங்கப்பதக்கம் ரோசாவுக்கு வழங்கப் படவில்லை.
போலந்து தொழிலாளர் கழகம்
19-ம் நூற்றாண்டின் இறுதியில் ரஷ்யாவின் ஆதிக்கத்தால் நிலவிய மூன்று பிரச்சினைகளைத் தீர்க்கும் வரலாற்றுப் பொறுப்பை ஏற்க ரோசா முன்வந்தார். ஜாரிசத்தின் ஒடுக்குமுறையில் இருந்து ரஷ்ய மக்களை விடுவிப்பது, போலந்து மக்களை அந்நிய ஆட்சியின் ஒடுக்குமுறையில் இருந்து விடுவித்தல், சிறுபான்மையினரான யூத மக்களைக் கொடுமையான ஒடுக்குமுறையில் இருந்து விடுவித்தல் - இப்பொறுப்புகளையேற்ற ரோசா, தன் போராட்டங்களுக்கான புரட்சிகர இயக்கங்களைக் கட்டினார். ‘போலந்து தொழிலாளர் கழகம்’ என்னும் புதிய அமைப்பை உருவாக்குவதில் பங்கெடுத்துக் கொண்டார். ரோசாவின் தீவிரமான நடவடிக்கைகளைக் கண்காணித்த போலீஸாரால் அவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற நிலையில், ரோசா மேல்படிப்புக்காக சுவிட்சர்லாந்தின் ஜூரிக் நகரத்துக்குச் சென்றார்.
தன்னெழுச்சியான சிந்தனையாளராகவும், தீவிரமான செயல்பாட்டாளராகவும் விளங்கிய ரோசாவின் புரட்சிகர வாழ்க்கை அவர் காலத்திலேயே கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தது. இருவேறு முரண்பட்ட குணாதிசயங்களைக் கொண்டவராகப் புரிந்து கொள்ளப்பட்டார். யாருக்காகவும் தன்னுடைய கருத்துகளைச் சமாதானம் செய்துகொள்ள விரும்பாததால் ‘ரோசா முரண்பாடுகளின் உச்ச மென’ மிகைப்படுத்தப்பட்ட விமர்சனங்கள் எழுந்தன.
வானத்தின் உயரத்தில்...
ஆட்சியாளர்கள் அவரை ‘கொடிய ரோசா’ என்ற பயங்கரவாதியாக சித்தரித்தனர். நண்பர்களுக்கோ தன் கருத்துகளைத் தனக்குள்ளேயே ஆய்வுக்குட்படுத்துகிற தயக்க சுபாவம் கொண்ட ‘மென்மையான ரோசா’வாக இருந்திருக் கிறார். கம்யூனிஸ்ட்களால் அவர் லெனினிய விரோதியாக சித்தரிக்கப்பட்டார். ஆனால், லெனின் அவரை, ‘வானத்தில் உயர உயரப் பறந்து செல்லும் கழுகு’ என்று புகழ்ந்துள்ளார்.
1905-ம் ஆண்டின் ரஷ்யப் புரட்சியில் தொடங்கி 15 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகைகளில் தன் எழுத்துகளால் சிந்தனை மாற்றங்களைக் கொண்டுவந்தவர். பாட்டாளி வர்க்கத்தின் மாபெரும் போராட்ட ஆயுதமாக இருக்கிற ‘பொது வேலைநிறுத்தம்’ ரோசாவின் சிந்தனையில் உதித்ததே. ரோசாவின் காலத்தில் ‘வெகுஜன வேலைநிறுத்தத்தில் இருந்து தொழிற்சங்கங்களைக் காப்பாற்ற’ விரும்பினர் ஜெர்மானியக் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள். காலத்தின் அற்புதம், இன்று தொழிற்சங்கங்களின் கையில் உள்ள ஒரே ஜனநாயகப் போராட்ட வடிவம், பொது வேலைநிறுத்தமே. பாட்டாளி வர்க்கத்தின் நலனுக்காக சோஷசிஸ்ட்கள் முன்வைத்த அரசியல், சட்டபூர்வமான சீர்திருத்தங்களை ரோசா ஏற்கவில்லை. சீர்திருத்தம் எப்போதுமே தனக்கான குறுகிய எல்லைகளைக் கொண்டது, புரட்சியே நிரந்தரத் தீர்வு என்ற கொள்கையைக் கொண்டிருந்தார். கட்சி அமைப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தவர் லெனின். ரோசாவோ, இறுதிவரை கட்சியையும் அதன் தலைமையையும்விட பாட்டாளி மக்களையே நம்பியிருந்தார்.
ரோசாவின் ‘ஜூனியஸ் பிரசுரம்’, ‘மூலதனக் குவியல்’, ‘சீர்திருத்தமா அல்லது புரட்சியா?’, ‘சோஷலிசமும் மதபீடங்களும்’ ஆகிய பிரசுரங்கள், இன்றைய உலகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளைக் கொண்டவையாக உள்ளன.
லெனின் சொன்னார்
15 வயதுக்குள்ளேயே தீவிரமான மார்க்சிய சிந்தனையாளராகவும், போராளியாகவும் உருவாகிவிட்ட ரோசாவுக்குத் தனிப்பட்ட வாழ்க்கை என்பது ஒரு கனவாகவே போய்விட்டது. சிறைவாழ்க்கையும், தலைமறைவு நாட்களும் ரோசாவின் உடல்நிலையை மோசமாக்கியிருந்தன. சிறை வாழ்க்கை முடிந்து வெளியில் வந்தபோது, செம்பழுப்பு நிறத்தில் வெளுத்திருந்த ரோசாவின் முடியையும் வயதான தோற்றத்தையும் நோயாளியாகியிருந்த நிலையையும் பார்த்து நண்பர்கள் வருந்தினார்கள்.
சிறை வாழ்க்கை அவரின் உடல்நலத்தை முற்றிலும் அழித்திருந்தாலும் அவரின் புரட்சிகர ஆன்மா அவரின் உடலை இயக்கியது. வலிப்பு நோய் அவரின் உடலை மேலும் பலவீனப்படுத்தினாலும் ரோசா மரணம் வரை சோர்ந்திருந்த தில்லை.
‘உலகம் முழுக்க இருக்கும் கம்யூனிஸ்ட்களின் நினைவில் ரோசா நேசத்துக்குரியவராகவும் சிறந்த பாடமாகவும் இருப்பார்’ என்று லெனின் கூறியது உண்மையாகியிருக் கிறது.
- வருவார்கள்...
எண்ணங்களைப் பகிர: vandhainila@gmail.com
முக்கிய செய்திகள்
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
11 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
16 days ago
இலக்கியம்
16 days ago
இலக்கியம்
19 days ago
இலக்கியம்
19 days ago
இலக்கியம்
19 days ago
இலக்கியம்
23 days ago
இலக்கியம்
23 days ago