எமதுள்ளம் சுடர் விடுக 39: ஆராய்ச்சி உலகில் ஓர் அரிய மனிதர்!

By பிரபஞ்சன்

யிலை சீனி.வேங்கடசாமி (1900 - 1980) முப்பது ஆராய்ச்சி நூல்களின் படைப்பாளர். இருநூறுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் ஆசிரியர். ஆராய்ச்சிப் பேரறிஞர் என்று தமிழ் உலகம் கொண்டாடும், தமிழ் வரலாறு, பண்பாட்டுச் சமய ஆய்வுகளில் தனி இடம் பெற்றவர். ஆராய்ந்து மீண்டும் ஆராய்ந்து தன் மனத்தின் குரலை வெளியிட்டுப் பணி செய்தார் மயிலையார்.

பவுத்தமும் தமிழும், கிறித்துவமும் தமிழும், சமணமும் தமிழும், சமயங்கள் வளர்ந்த தமிழ் என்று அவர் எழுதிய நூல்கள் தனித்தன்மை கொண்டவை. அதில் ‘சமணமும் தமிழும்’ புத்தகத்தை எடுத்துக்கொள்வோம். எந்தச் சமயத்தையும், நேர்மையான கண்ணோட்டத்தில் பார்த்துப் பேசுபவர் மயிலை யார்.

தனிக் கடவுள் இல்லை

சமணம், கடவுள் பற்றிப் பேசவில்லை. பந்தம் என்கிற கட்டுகளில் இருந்து விடுபட்டு, மோட்ச நிலையை அடைந்த உயிரே கடவுள் என்பது சமணக் கருத்து. சைவம், வைணவம் போன்ற சமயங்களின் கடவுள்கள், உயிர்களுக்கு அப்பாற்பட்ட ஒரு தனிக் கடவுள் எனக் கூறப்படுவதுபோல சமண சமயத்தில் தனிப்பட்ட ஒரு கடவுள் கூறப்படவில்லை.

சமண சமயத்தில் கொள்கையைப் பரவச் செய்வதன் பொருட்டு, தீர்த்தங்கரர்கள் எனும் பெரியார்கள் அவ்வவ்போது தோன்றுகிறார்கள். இதுவரை 24 தீர்த்தங்கரர்கள் தோன்றியுள்ளார்கள் என்பதும், இனியும் தோன்றுவார்கள் என்றும் சமணம் கருதுகிறது. தீர்த்தங்கரர்களையே கடவுளர் என்று சமணம் வழங்குகிறது.

சமண சமயக் கொள்கைகளை விருஷப தேவர் முதன்முதலில் கொண்டு வந்தார். வரலாற்று ஆசிரியர்கள் வேறு மாதிரிச் சொல்கிறார்கள். பார்சுவ நாதர் சமண சமயத்தை உருவாக்கினார் என்றும் வர்த்த மான மகாவீரர் இந்த மதத்தைச் சீர்திருத்தி அமைத்தார் என்றும் கூறுவார்கள். சமணர்களுக்கும் ராமாயணம், மகாபாரதங்கள் இருக்கின்றன. பாண்டவர் காலத்துக் கண் ணபிரான் நேமிநாதரின் உறவினர் மட்டுமல்ல; அடுத்த தீர்த்தங்கரர் கண்ணபிரான் என்றும் சமணர்கள் கருதுகிறார்கள்.

அஹிம்சையே மக்கள் இயக்கம்

அஹிம்சையை மக்கள் இயக்கமாகக் கொள்ளும் சமணம், சமண முனிவர்களுக்கு அஹிம்சையைக் கட்டாயம் ஆக்கியது. இந்திய அறிவுலகில் அஹிம்சை பற்றி அதிகமாகப் பேசியவர்கள் சமணர்கள். இன்னா செய்யாமை, அருளுடமை, கொல்லாமை, புலால் மறுத்தல் ஆகியவை இணைந்ததே அஹிம்சை. பொய் சொல்லாமை, பிறர் பொருளுக்கு ஆசைப்படாமை, புணர்ச்சி விழையாமை, முற்றும் துறத்தல் இவை முனிவர்களுக்கான இலக்கணமாகும். ஆடைகூட இந்த உடம்புக்குக் கூடிய சுமை என்று அதையும் விடுதல். நீராடாமலும் முனிவர் இருப்பர். தரையில் படுத்தல், பல் தேய்க்காமை, நின்றே உண்பது என்பவை அவர்கள் மேற்கொள்ளும் வழக்கங்கள்.

வடநாட்டில் தோன்றிய சமயமே சமணம். அது தென்னாடு வந்த வரலாறு, இந்த நூலின் முக்கியமான அம்சம். மகா வீரர்க்குப் பின்பு வந்த பரம்பரையில் வந்தவர் பத்திரபாகு முனிவர். இவர் காலத்தில் கி.மு 317 - கி.மு 397 வரை சமணம் தமிழ்நாட்டுக்கு வந்திருக்கலாம். பத்திரபாகு முனிவர், மவுரிய அரசன் சந்திரகுப்தன் ஆகியோரும்கூட. ஒரு பஞ்ச காலத்தை முன்னிட்டுத் தம்மைச் சார்ந்த பனிரெண்டாயிரம் முனிவர்களோடு மைசூர் வந்தார். தன் சீடர் விசாக முனிவரை சோழ - பாண்டிய நாட்டுக்குச் சமணக் கொள்கையைப் பரப்ப அனுப்பினார். பின் பத்திரபாகு கி.மு.297-ல் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்தார். ஆக, கி.மு 3-ம் நூற்றாண்டில் பத்திரபாகு முனிவரால் தமிழ்நாட்டுக்கு அனுப்பப்பட்ட விசாக முனிவ ரால் சமணம் பரப்பப்பட்டது.

இனி, சமணம் தமிழ்நாட்டில் வேர்விட்டுத் தழைத்து வளர்ந்த வரலாற்றை மயிலையார் மிக அழகாகக் குறிப்பிட்டுச் சொல்கிறார்.

பிறப்பினால் உயர்வு, தாழ்வு கருதாத மதம் சமணமாக இருந்தது. எக்குலத்தினரானாலும், ‘சமணர்’ ஆன பிறகு, அவர் சமண ராக மட்டுமே கருதப்படுகிறார். இழிகுலம் என்று சொல்லப்பட்ட ஒருவர் ஜைன ஞானம் பெற்றார் என்றால் அவரை இறைவன் என்று போற்றுவோம் என்று சமணம் சொல்கிறது.

அஞ்சினான் புகலிடம்

மிக முக்கியமாக அன்னதானத்தை முன் நிறுத்தினார்கள் சமணர்கள். பசித்தவர்கள் கடவுள் உணவு என்பதை அவர்கள் மிக முதலில் உணர்ந்தார்கள்.

இரண்டாவதாக அவர்கள் மேற்கொண்ட தர்மம், அடைக்கலத் தானம். ஏதோ காரணங்களுக்காக ‘அடைக்கலம்’ என்று கூறிக்கொண்டு அச்சம் கொண்டு வந்தவர்கள் உயிரையும் உடமையையும் காப்பாற்றுவது எத்தனை பெரிய அறம். சமணக் கோயில்களை அடுத்த இடம், ‘அஞ்சினான் புகலிடம்’ என்று அழைக்கப்படும் இல்லத்தில் ‘அடைக்கலம்’ என்று வந்தோரைத் தங்க வைத்து, உணவு கொடுத்து பாதுகாப்பும் கொடுத்துக் காப்பாற்றுவார்கள். தமிழர்களால் இந்த அறம் போற்றிப் பாராட்டப்படுகிறது அந்தக் காலத்தில்.

அடுத்த பேரறம் சமணர் செய்தது, ஒளடத தானம். அதாவது நோயாளிகளுக்கு மருத்துவம், உணவும் இட்டுத் தங்க வைத்துக் காப்பாற்றியது. மருத்துவ உதவியின் மகத்துவம், நோயாளிகளே நன்கு அறிவார்கள்.

பள்ளிக்கூடம் வந்தது

அடுத்த மகத்தான அறம். சமணம் செய்தது, வித்யா தானம். அதாவது கல்வியில் மனம் இசைந்த குழந்தைகளைத் தம் இடத்துக்கே, மலைக் குகை, தங்குமிடத்துக்கே அழைத்து இலவசமாகக் கல்வி அளித்தது. தமழினத்தின் வளர்ச்சிக்குத் தமிழரைக் கற்றவராக்குவது எத்தனை பெரிய தானம் என்பதை வரலாறு அறியும். சமணர் வாழ்ந்த பள்ளியில் மாணவர் பயின்றதால், கல்விக் கூடங்களுக்குப் பள்ளிக்கூடம் என்பதே பெயராயிற்று.

சமண சமயம் வளர்ந்தமைக்கு முக்கிய காரணம் அவர்களில் தாய் மொழிப் பிரச்சாரம் ஆகும். சமணர்கள் எந்த நாட்டுக்குச் சென்றார்களோ அந்த நாட்டின் மொழியைப் பயின்று அதில் இலக்கியமும், இலக்கணமும் செய்தார்கள். புத்த சமயமும் இதைச் செய்தது. பிராமணர், தம் வைதீக மத நூல்களை மக்களுக்கு விளங்காத மொழியில் எழுதிவைத்துக் கொண்டனர். அவற்றை ‘மற்றவர்’ படிக்கவும் கூடாது, படிக்கக் கேட்கவும் கூடாது எனவும் கட்டுப்பாடு கொண்டிருந்தார்கள். சமணர்கள், தாங்கள் எந்த நாட்டில் இருந்தார்களோ, அந்த நாட்டு மொழியிலேயே தமது சமண சமய விளக்கத்தை எழுதி அளித்தார்கள்.

மக்கள் அறியவும், படிக்கவும் மதக் கொள்கையை எழுதி வெளிப்படுத்த வேண்டும் என்பதும், அப்படி எழுதி அளிப்பது புண்ணியம் என்பதும், மக்கள் அறியாத மொழியில் எழுதி வைத்துக்கொண்டு மதக் கொள்கைகளை மறைப்பது பாவம் என்றும் கருதினார்கள் சமணர்கள்.

ரு வரலாறு

உச்சயினி தேசத்தில் வடமொழிவாணர் சித்தசேன திவாகரர் மன்னர் அவையில் பெருமையுடன் இருந்தார். அதே காலத்தில் விருந்தாதி முனிவரும் வாழ்ந்திருந்தார். சித்தசேன திவாகரர் விருந்தாதி முனிவருடன் வாதப் போர் செய்ய ஆர்வம் கொண்டிருந்தார். வாய்ப்பு நேர்ந்தது. திவாகரர் வடமொழியில் பேசி வாதம் செய்தார். விருந்தாதி முனிவர், வடமொழி அறிந்தாலும் நாட்டு மொழியிலேயே பேசி வாதம் செய்தார். இறுதியில் திவாகரர் தோற்றார். விதிப்படி திவாகரர் அடிமை ஆனார். பின்னர் அந்த நாட்டில் சமணத் தத்துவம் அர்த்தமாகதி எனும் மொழியில் எழுதப்பட்டது கண்டு திவாகரர் அவற்றை வடமொழியில் ஆக்க ஆரம்பித்தார். இது அறிந்த விருந்தாதி முனிவர் அந்த முயற்சிக்குத் தடை செய்தார். உயர் தத்துவம், சமய தத்துவம் போன்றவை மக்களின், நாட்டின் தாய்மொழியிலேயே எழுதப்பட வேண்டும் வடமொழியில் எழுதப்படக் கூடாது என்று முனிவர் தீர்ப்பளித்தார்.

தமிழ்நாட்டில் சமண சமயம், பரவ இன்னும் ஒரு முக்கிய காரணமும் இருந்தது.

சாமானிய மக்களின் உயிர்க் கொலைத் தொழிலை சமணம் விரும்பவில்லை. விவசாயமாகிய பயிர்த் தொழிலை இழிவுபடுத்தியது பிராமண மதம் எனப்பட்ட வைதீக மதம். சமணம் உயர்த்தியது. மக்களின் உயிர் ஆதாரமாக விளங்கும் விவசாயத்தைப் புறக்கணிக்கும் எந்த அரசும், தத்துவமும், நிறுவனமும் நிலைக்க முடியாது. மூளையும் வயிறும் முரண்படக் கூடாது. வயிற்றின் செயல்பாடு குன்றினால் மூளையும் செயல்படாது.

பெண் குறித்த சமணர்ப் பார்வை

பெண் பிறவி தாழ்ந்த பிறவி என்பது பெண்ணாகப் பிறந்தவர் பாவம் செய்து அவ்வாறு பிறக்கிறார்கள் என்பது சமணத்தின் பார்வை. தமிழ்நாட்டுக்கு வந்தது திகம்வர சமணம். அவர்கள் பெண்களுக்கு வீடுபேறு இல்லை என்றே சொன் னார்கள். ஒருவன், ஒருவனை வஞ்சகம் செய்தால் அவன் அடுத்த பிறவியில் பெண்ணாகவே பிறப்பான்.

இலக்கியத்தில் சிந்தாமணி இதை மேலும் அழுத்திக் கூறுகிறது. சீவகன் துறவு பூண்டபோது அவன் தேவியர் சிலரும் துறவு பூண்டனர். சீவகன் வீடு பேற்றுக்குத் தவம் செய்கிறான். அவன் தேவியர் பெண் பிறப்பு நீங்கும்படித் தவம் செய்கிறார்கள். அதனால், அவர்கள் மறுபிறப்பில் தேவலோகத்தில் இந்திரர்களாக (ஆண் பிறவிகளாக) பிறந்தார்கள் என்று கூறப்படுகிறது. சமணம் பற்றிய முழுமையான இந்த நூலை டிஸ்கவரி புக் பேலஸ் அழகுற வெளியிட்டிருக்கிறது.

- இன்னும் சுடரும்...

எண்ணங்களைப் பகிர: writerprapanchan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

16 hours ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

2 days ago

இலக்கியம்

2 days ago

இலக்கியம்

2 days ago

இலக்கியம்

3 days ago

இலக்கியம்

3 days ago

இலக்கியம்

3 days ago

இலக்கியம்

4 days ago

இலக்கியம்

4 days ago

இலக்கியம்

4 days ago

இலக்கியம்

5 days ago

மேலும்