சு
ந்தர ராமசாமி 1977-78 வாக்கில் எழுதத் தொடங்கியிருந்த ‘ஜே.ஜே: சில குறிப்புகள்’ நாவல், பாலுவின் உலகம் என்ற நாவலிலிருந்து கிளைத்துத் தனிப் படைப்பாக உருவானது. பாலுவின் உலகம் நாவல் பற்றி ஒருமுறை, “இரண்டு பகுதிகளைக் கொண்ட இந்நாவலின் முதல் பகுதி பாலுவின் வாழ்வனுபவங்களின் பதிவாகவும், இரண்டாம் பகுதி அந்த அனுபவங்களின் பரிசீலனைகளாக டயரி வடிவிலும் அமையும்” என்றார். பின்னர், ஜே.ஜே. எழுதத் தொடங்கியபோது, “பாலுவின் உலகம் எழுதிக்கொண்டிருந்தபோது சம்பத் என்ற பாத்திரம் உள்ளே வந்தது. தொடர்ந்து சம்பத்தின் நண்பனாக ஜோசப் ஜேம்ஸ். பின்னர், ஜோசப் ஜேம்ஸ் மெல்லமெல்ல வளர்ந்து ஆக்கிரமிக்கத் தொடங்கியதில் அதைத் தனி நாவலாக எழுத முடிவெடுத்தேன்” என்றார்.
இக்காலகட்டத்தில்தான் அவர் தன் கடிதங்களையும் எழுத்துகளையும் தட்டச்சில் பதிவுசெய்யத் தொடங்கினார். தட்டச்சுசெய்யப்பட்ட ஜே.ஜே. நாவல் 1+1 என்பதாக 2 பிரதிகள் எடுக்கப்பட்டு, ஒரு பிரதியை அச்சுக்காக ‘க்ரியா’வுக்கு அனுப்பினார். இன்னொரு பிரதியை எனக்கு அனுப்பியிருந்தார். அதன் இணைப்புக் கடிதத்தில் 2 பிரதிகளையும் அனுப்பிவைத்துவிட்ட அன்றைய மனநிலை பற்றி, ‘நாவலைப் பிரிந்திருப்பது, செளந்திராவை (மூத்த மகள்) மணமுடித்துக் கொடுத்து அனுப்பிய நாளன்று இருந்ததுபோல நிராதரவாக இருக்கிறது’ என்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.
நாவல் வாசிப்பு பெரும் எக்களிப்பையும் பரவசத்தையும் தந்தது. பெரும் பொக்கிஷத்தை அடைந்துவிட்டதுபோல் மனம் குதூகலித்தது. கொஞ்சம் நிதானித்தபோது, இரண்டு அம்சங்கள் நெருடலாகப்பட்டன. ஒன்று, நாவல் முடியாதது போன்ற உணர்வு. இரண்டாவது, சம்பத், தான் கண்ட ஒரு அற்புதமான சூரியோதயத்தைப் பற்றி ஜே.ஜே.யுடன் பகிர்ந்துகொள்ள, பரவச மனநிலையுடன் ஜே.ஜே.யின் வீட்டுக்கு வரும் நிகழ்வில் காலம் பிசகியிருந்தது. சம்பத் வரும்போது, ஜே.ஜே.யின் மனைவி சாரம்மாள், வீட்டின் பின்பக்கம் கோழிகளுக்குத் தீவனம் கொடுத்துக்கொண்டிருப்பார். ஆக, இச்சம்பவத்தின்போது ஜே.ஜே.க்குத் திருமணம் ஆகிவிட்டது. ஆனால், முன்னதாக சம்பத் கண்ட அந்தக் காட்சியை ஜே.ஜே. ஓவியமாக வரையும் நிகழ்வில் ஜே.ஜே.க்கு 18 வயதுதான் இருக்கும்.
நாவல் விளைவித்த பரவசத்தை வியந்துவிட்டு, அந்த இரண்டு விஷயங்களையும் குறிப்பிட்டுக் கடிதம் எழுதினேன். அவரிடமிருந்து பதில் வருவதற்குள் மீண்டும் ஒருமுறை நாவலை முழுமையாகவும், பகுதிகளாகவும் மிகுந்த கிளர்ச்சியோடு வாசித்தேன். கிறங்கடிக்கும் படைப்பு மொழியின் விந்தையில் லயித்திருந்தேன். பதில் வந்தது. அதோடு முற்றுப்பெறாத ஒரு புதிய அத்தியாயமும் இருந்தது. கடிதம் இப்படியாக அமைந்திருந்தது: நாவல் முடிவு பற்றி எனக்கும் முதலில் அப்படி ஒரு எண்ணம் இருந்தது. அதனாலேயே இந்த அத்தியாயத்தைத் தொடங்கினேன். ஆனால், டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் தின இரவில், நாவல் இப்போது முடிக்கப்பட்டிருக்கும் இடத்திலேயே முடிந்துவிட்டது என்று தீர்மானமாகத் தோன்றியது. எனவே, மேற்கொண்டு தொடர்வதை விட்டுவிட்டேன். இருந்தாலும், தொடர்ந்து எழுதிய பகுதியை உங்களுக்கு அனுப்பியிருக்கிறேன். இது உங்கள் பார்வைக்காக மட்டும் என்பதாக இருந்தது. இரண்டாவதாகத் தெரிவித்திருந்த பிரச்சனை பற்றி, தான் யோசிப்பதாகவும், அதைச் சரிசெய்து விடலாம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
அடுத்த சில தினங்களில் அவரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. முதல்முறையாக சு.ரா.வின் பதற்றம் அதில் வெளிப்பட்டிருந்தது. ‘சம்பத், ஜே.ஜே.யிடம் தான் கண்ட அற்புதமான சூரியோதயக் காட்சியைத் தெரிவிக்க வரும் நாள் பற்றி நீங்கள் குறிப்பிட்டிருந்த பிரச்சனையை சுலபமாகத் தீர்த்துவிடலாம் என்றுதான் முதலில் நினத்திருந்தேன். ஆனால், யோசிக்கயோசிக்க மனம் சிடுக்காகிக்கொண்டே போகிறது. ‘ஸ்டாப் ப்ரிண்டிங்’ என்று ராமகிருஷ்ணனுக்குத் தந்தி கொடுத்துவிட்டேன். உங்களால் இங்கு வர முடியுமா?’ என்பதாக அந்தக் கடிதம் இருந்தது.
இம்முறை, ‘சுந்தர விலாஸ்’ வீட்டு மாடி அறையில் ஒரு வாரத்துக்கும் மேல் தங்கியிருந்தேன். அந்த நாட்களில் சு.ரா. தன் ஜவுளிக் கடைக்குப் போகவில்லை. போகும்போதே பிரச்சனைக்கான தீர்வு ஒன்று மனதில் இருந்தது. அவரும் ஏற்றுக்கொண்டார். அதேசமயம், முன்னதாக அந்த அத்தியாயம், ஒரு அழகான வாக்கியத்துடன் முடிந்திருக்கும். புதிய மாற்றத்தில் அப்படியாக அந்த அத்தியாயம் முடியாமல் போனதில் அவருக்கு வருத்தம். அந்த அளவு வடிவமைப்பின் நேர்த்தியில் அவருக்கு லயிப்பு இருந்தது. ஒரு குறிப்பிட்ட சம்பவத்தில் ஏற்பட்டிருந்த காலப் பிசகு, இயல்பாகவே, ஜே.ஜே.யின் டயரிக் குறிப்புகளில் குறிப்பிடப்பட்டிருந்த தேதிகள் பற்றியும் பரிசீலிக்க வைத்தது. அவற்றிலும் மாற்றங்கள் செய்ய நேரிட்டது. தொலைபேசி உரையாடல்கள் மூலமாகவும், கடிதங்கள் மூலமாகவும் க்ரியா ராமகிருஷ்ணனும் எங்களோடு இருந்துகொண்டிருந்தார்.
எடிட்டிங் என்பதில் ஈடுபட்டுவிட்டதால், மீள்வாசிப்புகளில் அந்நாவலின் பலவீனமான பகுதியாக எனக்கு உறுத்திக்கொண்டிருந்த, ஜே.ஜே. தொழுநோயாளிக்கு உதவ முடிவெடுக்கும் சம்பவம் பற்றி ஒருநாள் அவரிடம் பேசினேன். இந்தப் பகுதியில் ஜே.ஜே. அப்படி என்னதான் யோசித்தான் என்பதைக் கொஞ்சம் விரிவாக எழுதினால் நன்றாக இருக்குமே என்றேன். சிறு புன்முறுவலுடன் என்னைப் பார்த்துவிட்டுச் சொன்னார்: “நான் முயன்றிருக்க மாட்டேன் என்றா நினைக்கிறீர்கள்? என்னால் முடியவில்லை. நான் அதற்குள் போயிருந்தால் அடி வாங்கியிருப்பேன். இருப்பதையும் இழக்க வேண்டியதாகியிருக்கும். முடியாது என்றில்லை. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் தாஸ்தாயெவ்ஸ்கியால் வெகு சரளமாக உள்ளே நுழைய முடிகிறது. நான் ஒருமாதிரி சமாளித்து தப்பியிருக்கிறேன். அவ்வளவுதான். மார்ச் மாதம் இன்கம் டாக்ஸ்க்கு கணக்கு கொடுக்கும்போது மனம் எப்படி வேலைபார்க்குமோ, அப்படித்தான் இந்தப் புகுதியை எழுதும்போது வேலைபார்த்தது.” அவர் இப்படிச் சொன்னபோது பிரமித்துப்போனேன். அவ்வளவு வெளிப்படையாகச் சொன்னது அவர் மீதான மதிப்பை வெகுவாக உயர்த்தியது.
சுந்தர ராமசாமியின் கலை இலக்கிய வாழ்வு, ஜே.ஜே. சில குறிப்புகள் நாவல் எழுதி முடிக்கப்பட்ட சமயத்திலிருந்தே பிரகாசிக்கத் தொடங்கிவிட்டது. தன் இலக்கிய வாழ்வில் ஒரு உச்சத்தைத் தொட்டுவிட்டதான ஒரு பெருமிதத்தை அவர் உணரத் தொடங்கியிருந்தார். அது வெளிவந்து பரவலான வரவேற்பைப் பெறுவதற்கு முன்னரே, அப்படைப்பு அவருக்குள் ஒரு அலாதியான உத்வேகத்தையும், அவருடைய ஆளுமையில் ஒரு அபாரமான எழுச்சியையும் விளைவித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக, தமிழ் நவீனத்துவத்தின் கனவு வடிவத்தை அடையத் தொடங்கினார். பார்வையில் தீட்சண்யமும் தீர்க்கமும் தனித்துவமும் மிளிரத் தொடங்கியது. கலை நம்பிக்கையில் ஆழ்ந்த பிடிமானம், அறங்களின் மீது தீர்க்கமான நம்பிக்கை, லட்சிய வேட்கை, அழகியல் ஞானம், வெளிப்பாடும் மொழியும் லயப்படுதல், தெளிந்த நடவடிக்கை, தீராத கனவுகள் என இவர் ஓர் ஆதர்ச நிலையை எட்டினார். எழுத்திலும் வாசிப்பிலும் நம்பிக்கை கொண்ட இளம் தலைமுறையினரின் ஆதர்சமாக நிலைபெற்றார்.
- சி.மோகன், எழுத்தாளர்.
தொடர்புக்கு: kaalamkalaimohan@gmail.com
முக்கிய செய்திகள்
இலக்கியம்
4 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
1 month ago
இலக்கியம்
2 months ago
இலக்கியம்
2 months ago
இலக்கியம்
2 months ago
இலக்கியம்
3 months ago
இலக்கியம்
4 months ago
இலக்கியம்
4 months ago