தீம்தரிகிட: ஓங்கி ஒலித்த ஒற்றைக் குரல்

By செல்வ புவியரசன்

நா

டகம், திரைப்படம், ஓவியம் என்று பல துறைகளில் இயங்கியவர் என்றாலும் ஞாநியின் முதன்மை அடையாளம் இதழியலாளர் என்பதுதான். தமிழின் முன்னணி இதழ்கள் பெரும்பாலானவற்றில் அவர் பணியாற்றியும் இருக்கிறார், பங்காற்றியும் இருக்கிறார். அவரது நாற்பதாண்டு கால இதழியல் பயணத்தில் அவரின் கனவாக ஒலித்துக்கொண்டிருந்த தாளலயம் ‘தீம்தரிகிட’. 1982-லிருந்து 2006 வரை வெளிவந்த ‘தீம்தரிகிட’ இதழ்களின் தொகுப்பை ஏறக்குறைய 2000 பக்கங்களில் ஏழு தொகுதிகளாக வெளியிட்டிருக்கிறது ஞானபாநு பதிப்பகம்.

இந்திரா காந்தியின் நெருக்கடி நிலை ஆட்சிக்காலத்தில், கருத்துச் சுதந்திரத்தில் சமரசம் செய்துகொள்ளாமல் இயங்கிய ஆங்கிலப் பத்திரிகைகளை முன்மாதிரியாகக் கொண்டு தமிழிலும் அப்படியொரு செய்தி விமர்சனப் பத்திரிகையைக் கொண்டுவர வேண்டும் என்ற கனவு, ஞாநியின் 28-வது வயதில் முகிழ்த்திருக்கிறது. அது பாரதியின் நூற்றாண்டு. பாரதியின் ‘மழை’ கவிதையில் இடம்பெற்றிருந்த ‘தீம்தரிகிட’ என்ற தாளக்குறிப்பே அந்தப் பெருங்கனவின் தலைப்பாக மாறியது. ரௌத்ரம் பொங்கும் பாரதி, அதன் அடையாளச் சின்னமாகவும் ஆனார். கனவையும் உழைப்பையும் தவிர, ஒரு பத்திரிகையை நடத்துவதற்கான பொருளாதார பின்புலம் எதுவும் இல்லாத நிலையில், அந்தக் கனவு 1982-ல் மூன்று இதழ்களோடு நின்றுபோனது. சிறு இடைவெளிக்குப் பிறகு, 1985-ல் ஐந்து இதழ்கள், 17 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் 2002-ல் தொடங்கி 2006 வரை அந்தக் கனவின் பயணம் தொடர்ந்து, தடைப்பட்டுவிட்டது.

ஏறக்குறைய இந்தக் கால் நூற்றாண்டு காலத்தில் வார இதழ், மாதம் இருமுறை, மாத இதழ் என்று கால மாற்றங்களையும், ஏ4, ஏ3, 1/8 டெமி என்று வடிவ மாற்றங்களையும் கண்டிருக்கிறது ‘தீம்தரிகிட’. செய்தி விமர்சனப் பத்திரிகை என்ற நிலையில் பெரிய மாற்றங்கள் இல்லையென்றாலும் முதலாமாண்டு இதழ்களில் இடம்பெற்றிருந்த நேரடிக் களச் செய்திகளை, கடைசியாக வெளிவந்த இதழ்களில் பார்க்க முடியவில்லை. கலை இலக்கியங்களுக்கான பக்கங்கள் கூடிக்கொண்டே வந்திருக்கின்றன. பலவண்ண அட்டைப் படங்கள் முதலாண்டிலேயே முடிவுக்கு வந்து, கருப்பு-வெள்ளையில் தனது தனித்துவத்தை வெளிப்படுத்தியிருக்கின்றன. எனினும், தீவிரமான விஷயங்களை இயன்றவரை எளிமையாகச் சொல்லவேண்டும் என்ற ஞாநியின் நோக்கமும் பிடிவாதமும் நிறைவேறியிருக்கின்றன.

எந்தவொரு நிகழ்வையும் சரி, தவறு என்று ஒற்றை முடிவில் நிறுத்திவிடாமல் நியாயத்தின் பின்னாலிருக்கும் தவறுகளையும் அவர் சுட்டிக்காட்டத் தவறவில்லை. எனவே, ஒரு குறிப்பிட்ட சூழலில் அவரால் கடுமையான வார்த்தைகளால் விமர்சனத்துக்கு ஆளான தலைவர்கள், பின்பு வேறோரு சூழலில் வேறொரு காரணத்துக்காகப் பாராட்டுக்குரியவர்களாக மாறியிருக்கிறார்கள். நிச்சயமாக, எந்தவொரு கட்சி சார்ந்த அரசியல் நிலைபாட்டையும் அவர் சார்ந்து நிற்கவில்லை. அவரது விமர்சனக் குரல், நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த சாமானிய மனிதனின் குரலாகவே இருந்திருக்கிறது. அவரும் அப்படித்தான் அடையாளப்படுத்திக்கொண்டிருக்கிறார்.

‘தீம்தரிகிட’ இதழ்களைத் தொகுத்திருக்கும் மூத்த இதழியலாளர் பொன்.தனசேகரனின் முன்னுரை குறிப்பிடத்தக்க ஒன்று. இதழ்களின் உள்ளடக்கம் பற்றிய சுருக்கமான அறிமுகமாக மட்டுமில்லாமல், ‘தீம்தரிகிட’ தொடங்கப்பட்ட காலகட்டத்தின் தமிழ் இதழியல் போக்கையும் அவர் பதிவுசெய்திருக்கிறார். அதிலிருந்து ஞாநி முன்னெடுத்த முயற்சியின் பின்னாலிருந்த ஆவேசத்தையும் அவசியத்தையும் உணர்ந்துகொள்ள முடியும். முதலாம் ஆண்டிலேயே, வாசகர் சந்திப்புகளை நடத்திய ஞாநிக்கு அப்படி தொடர்ந்து நடத்துவதற்கு வாய்ப்பில்லாமல் போயிருக்கலாம். ஆனாலும், தொடர்ந்து ‘மனி தன்’ பதில்களின் வழியாகவும் ‘மக்கள் மன்றம்’ வழியாகவும் அவர் தொடர்ந்து வாசகர்களோடு உரையாடிக்கொண்டுதான் இருந்திருக்கிறார். வாசகருக்கு புத்திமதி சொல்லும் அறிவுஜீவியாகவோ, அவர்களது கேள்விகளை நகைச்சுவைத் துணுக்குகளால் எதிர்கொள்ளும் சாமர்த்தியசாலியாகவோ அவர் இல்லை. வாசகரை தமக்குச் சமமான நிலையில் நிறுத்தி, உரையாடுபவராகவே இருந்திருக்கிறார். சமூக அக்கறை கொண்ட இளம் பத்திரிகையாளராக ஞாநி கண்ட கனவு நிறைவேறியிருக்கிறதா? முன்னணி இதழ்களில் எழுதும்போது கருத்தியல்ரீதியாக சமரசம் செய்துகொள்ள முடியாத நிலைதான் 2002-ல் மீண்டும் ‘தீம்தரிகிட’ இதழைத் தொடங்குவதற்குக் காரணம் என்று அவர் கூறியிருக்கிறார். ‘தீம்தரிகிட’ இதழ் நின்ற பிறகு, முன்னணி தமிழ் இதழ்கள் பலவற்றிலும் அவரது எழுத்துகள் தொடர்ந்து வெளிவந்தன. ‘தீம்தரிகிட’வில் எந்ததெந்த இதழ்களையெல்லாம் குறிவைத்து தாக்கினாரோ, அந்த இதழ்களும் அதில் உள்ளடக்கம். ஞாநியின் சமரசமற்ற குரல், முழுமையாக இல்லாவிட்டாலும் தவிர்க்கப்பட முடியாமல் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது என்றுதான் அதற்கு அர்த்தம்.

ஞாநி, தனது இதழியல் இயக்கத்தில் தன்னை மட்டுமே முன்னிறுத்திக்கொண்டவர் அல்ல. கூட்டுச் செயல்பாடாகவே அதை அடையாளப்படுத்திக்கொண்டார், அவரே அதன் வழிகாட்டி என்றபோதும். ஞாநியால் சகாக்களாக ஆகர்ஷிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள் எல்லோர் மனதிலும் பாரதியின் ‘தீம்தரிகிட’ லயம் அதிர்ந்துகொண்டே இருக்கும். அதற்கு தற்போது வெளிவந்திருக்கும் இதழ்த் தொகுப்பு ஒரு வழிகாட்டியாக துணைநிற்கும்.

‘தீம்தரிகிட’ இதழ்கள் முழுவதிலும் ஞாநியே நிறைந்திருக்கிறார். கட்டுரைகள் மட்டுமின்றி, எழுத்து வடிவமைப்பு, பக்க வடிவமைப்பு, கட்டுரை செம்மையாக்கம் என்று ஒவ்வொன்றிலும் அவரது முத்திரைகள் இருக்கின்றன. நக்சல்பாரி இயக்கம் ஐம்பதாண்டுகள் நிறைவடைந்திருக்கும் நிலையில், 1982-ல் வெளிவந்த வள்ளுவனின் நேர்காணல் இன்றைக்கும் பொருத்தமாக இருக்கிறது. நக்சலைட் இயக்கம் எதிர்த்தாக்குதலால் அல்ல, தனது சொந்த பலவீனங்களாலேயே தோல்வியைத் தழுவியது என்ற சுயவிமர்சனம், ஓர் அனுபவப் பாடம். பரோலில் வெளிவந்த வள்ளுவனை சென்னையிலிருந்த எஸ்.வி.ராஜதுரையின் இல்லத்தில் சந்தித்து எடுக்கப்பட்ட விரிவான பேட்டியின் சுருக்கம் இது. இலங்கையில் சிறைக்குச் சென்ற முதல் பெண் அரசியல் கைதி நிர்மலா நித்தியானந்தன், கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன், சமூகவியல் ஆய்வறிஞர் ரஜ்னி கோத்தாரி என்று முக்கியமான பேட்டிகள் இவ்விதழ்களில் இடம்பெற்றிருக்கின்றன. தொடர்களாக வெளிவந்த ச.தமிழ்ச்செல்வனின் ‘அறிவொளி’ மற்றும் தொழிற்சங்க அனுபவங்கள் அவருக்கே உரிய நகைச்சுவை உணர்வுடன், அக்காலகட்டத்தின் வரலாற்றுப் பதிவுகளாக மாறியிருக்கின்றன. மா (ஏ.எஸ்.பத்மாவதி), பாஸ்கர் சக்தி, அ.ராமசாமி ஆகியோரின் தொடர்களும் முக்கியமானவை.

சமகால அரசியல் விமர்சனங்களாக வெளிவந்த கட்டுரைகள் பலவும், தற்போதையை அரசியல் சூழலைப் புரிந்துகொள்ளவும் உதவியாக நிற்கும். உதாரணத்துக்கு, ரஜினியைப் பின்னாலிருந்து இயக்கும் சக்திகளைப் பற்றி ஞாநி அவ்வப்போது சுட்டிக்காட்டியவை. நவீனத் தமிழ் இலக்கிய முன்னோடி எழுத்தாளர்களின் படைப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவந்திருக்கும் ‘தீம்தரிகிட’ இளம் எழுத்தாளர்களின் படைப்புகளுக்கும் ஒரு வெளியை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. அவ்வப்போது வடிவ மாற்றங்களைச் சந்தித்துவந்த இதழ்களைத் தொகுத்து வெளியிடும்போது, அவற்றை ஒரே வடிவில் கொண்டுவர முயன்றிருக்கலாம். நூலகச் சேகரிப்பில் அடுக்கிவைக்க வாகாக இருந்திருக்கும்.

- செல்வ புவியரசன்,

தொடர்புக்கு: puviyarasan.s@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

2 days ago

இலக்கியம்

2 days ago

இலக்கியம்

2 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

9 days ago

இலக்கியம்

9 days ago

இலக்கியம்

9 days ago

இலக்கியம்

9 days ago

இலக்கியம்

13 days ago

இலக்கியம்

13 days ago

இலக்கியம்

16 days ago

இலக்கியம்

16 days ago

இலக்கியம்

16 days ago

இலக்கியம்

20 days ago

இலக்கியம்

20 days ago

மேலும்