மரணம் ஒரு கலை -7: மது கோப்பையில் அஸ்தமித்த சூரியன்

By அ.வெண்ணிலா

சாதத் ஹசன் மண்ட்டோ

பசுந்தளிரை நெருப்பில் கருகவிடுவதுபோல், மண்டோ தன்னை மதுவில் கருகவிட்டார். மதுப் பழக்கத்தை எப்போது வேண்டுமானாலும் தன்னால் நிறுத்திவிட முடியும் என்று சவால் விட்டுக்கொண்டிருந்த மண்ட்டோவின் நாக்கு, மரணத்துக்கு முந்தைய விநாடி வரையில் ஒரு சொட்டு மதுவுக்காகத் தவித்துக் கிடந்தது.

சாதத் ஹசனா, மண்ட்டோவா, இரு ஆளுமைகளாகப் பிரிந்திருந்த மண்ட்டோவுக்குள் யார், யாரை அழிப்பது என்ற போராட்டம் நீடித்துக்கொண்டிருந்தது. மண்ட்டோ எழுத்தாளராக அவருக்குள் இருந்த சாதத் ஹசன்தான் காரணம். சாதத் ஹசன் முரண்பாடுகளால் ஆன மூட்டை. நீரும் நெருப்பும், மென்மையும் கடினமும் கலந்த கலவையான இருவேறு மனநிலைகளால் ஆட்கொள்ளப்பட்ட மண்ட்டோவை மதுவே அமைதி கொள்ளச் செய்தது. அல்லது மண்ட்டோ அப்படி நினைத்துக் கொண்டார்.

மண்ட்டோ உருது இலக்கியத்தின் விடிவெள்ளி. இந்தியப் பிரிவினையின் ரத்த சாட்சியமாக மண்ட்டோவின் படைப்புகள் இன்னும் சூடு தணியாமல் தகிக்கின்றன. ‘‘பிரிந்த நிலப்பரப்புக்கு இப்போது புதுப்பெயர் உண்டு என்றாலும், அந்தப் பெயர் அந்த நிலப்பரப்புக்கு என்ன செய்துவிட்டது?’’ என்பதை மண்ட்டோவால் உணர முடியவில்லை.

‘‘தான் பாகிஸ்தானியா? இந்துஸ்தானியா? இந்த அடையாளத்துக்காக தினம் தினம் சிந்தப்பட்ட ரத்தத்துக்கு யார் பொறுப்பாளி?’’ போன்ற கேள்விகள் மண்ட்டோவை நிலைகுலைய வைத்தன. பஞ்சாபில் பிறந்து வளர்ந்த அவர், ஒரு பாகிஸ்தானியாக லாகூருக்குச் செல்ல நேர்ந்த துயரம் அவரை வீழ்த்தியது.

உயிர் வாழும் கதைகள்

ஆபாசமாக எழுதுகிறார் என்பதற்காக, நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டார். லாகூரின் கீழ் நீதிமன்றத்தால் மூன்று மாதம் சிறைத் தண்டனையும், 300 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்ட மண்ட்டோ, மேல்முறையீட்டில் நீதிபதியின் புரிதலால் வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டு விடுதலையானார். படைப்புகளுக்காக நீதிமன்ற வாசலை மிதித்த முன்னோடியானார் மண்ட்டோ.

மனிதகுல துயரங்களைத் தாங்க முடியாமல்தான் மண்ட்டோ தன்னைத் தானே மதுவில் எரித்துக் கொண்டார். பாவப்பட்டவர்களின் துயரம் அவரை மனரீதியாகத் தாக்கத் தொடங்கிவிடும். தாக்குதலில் இருந்து தப்பிக்க மண்ட்டோ குடிக்கத் தொடங்கிவிடுவார். குடித்துவிட்டு மண்ட்டோவால் எழுத முடியாது. குடிக்காத நேரங்களில்தான் அவர் நிறைய எழுதினார். மண்ட்டோ எழுதிய கதைகள் இன்னும் நம்முடன் உயிர் வாழ்ந்துகொண்டிருக்க, மண்ட்டோ விடைபெற்றுக் கொண்டார். (‘மண்ட்டோ படைப்புகள்’ என்கிற தொகுப்பை ராமாநுஜம் தமிழாக்கம் செய்துள்ளார்.)

தற்புகழ்ச்சிக்காரன், பொய்க்காரன், ஏமாற்றுக்காரன் போன்ற சுயவிமர்சனங்களை மண்ட்டோ சொல்லிக்கொண்டாலும், மண்ட்டோவால் பொய்களுக்கு நடுவில் வாழ முடிந்ததில்லை. ஒரு நள்ளிரவில் தன்னை ஒரு இஸ்லாமியனாகவும், பாகிஸ்தானியாகவும் உணரச்செய்த நாட்டின் அரசியலால் தவித்துப்போனார். பம்பாய்க்குத் திரும்பி வந்துவிட வேண்டும் என்ற ஏக்கம் மண்ட்டோவுக்குள் இறுதி மூச்சுவரை இருந்தது. இந்தியப் பிரிவினை ஏற்படுத்திய இழப்புகளில் மண்ட்டோ என்ற மாபெரும் கலைஞனின் இழப்பு ஈடுசெய்ய இயலாதது.

மண்ட்டோ பலமுறை மரணத்தின் விளிம்பைத் தொட்டுத் திரும்பியவர். ‘‘எப்போது அவரின் கஷ்டமும், தங்களின் கஷ்டமும் முடிவுக்கு வரும்’’ என அவரின் குடும்பத்தினர் காத்திருக்கத் தொடங்கினார்கள். கோழிக் குஞ்சைபோல், கவ்விச் செல்ல அவரின் தலைக்குமேல், மரணக் கழுகு வட்டமிட்டது. ‘‘எப்போது வேண்டுமானாலும் அகப்பட்டுக் கொள்வேன்’’ என்று அவர் கழுகுக்குப் போக்குக் காட்டிக் கொண்டிருந்தார்.

நினைவற்ற நினைவில்...

பிழைக்கவே முடியாத சிரோஸிஸ் எனும் கல்லீரல் பாதிப்பு நோயாலும் மஞ்சள் காமாலையாலும் பாதிக்கப்பட்டு மண்ட்டோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இன்னும் 2 மணிநேரத்துக்குமேல் தாங்கமாட்டார் என மருத்துவர்கள் நேரம் குறித்தனர். பரிசோதனை முடிவுகள் அவரின் மரணத்தை உறுதிபடுத்தியதால், மருத்துவர்கள் அவருக்கு விதித்த கட்டுப்பாடுகளைத் தளர்த்திக் கொண்டார்கள். எலும்புக்கூடாய், மஞ்சள் காமாலை நோயினால் கண்கள் மஞ்சளேறி உள்அமிழ்ந்து கிடந்த நிலையிலும் மருத்துவமனை சவரத் தொழிலாளியை அழைத்து, தனக்கு சவரம் செய்துவிட சொல்கிறார். நினைவற்ற நினைவில் தொழிலாளிக்கு வாகாகத் தன்னுடைய முகத்தைத் திருப்பிக் காட்டு கிறார். பேசுவதற்குத் தெம்பு இல்லாத நிலையில், சைகைகளால் சரியாகச் செய்யவில்லை என்பதை சவரத் தொழிலாளிக்கு உணர்த்துகிறார். துயர நாடகத்தின் அவலச் சுவை நிரம்பிய காட்சியின் கதாபாத்திரங்களாக மண்ட்டோவும் சவரத் தொழிலாளியும் விரிகிறார்கள்.

மருத்துவர்கள் தளர்த்திய கட்டுப்பாட்டினால், மண்ட்டோவுக்குச் சில சொட்டுக்கள் மது கொடுக்கப்படுகிறது. மதுவின் மீது இருந்த தீரா மோகம், மண்ட்டோவை உயிர்ப் பிழைக்க வைக்கிறது. மண்ட்டோ தன்னுடைய நோய்க்கு எதிராகப் போராடி மீண்டுவர வேண்டும் என விரும்பவில்லை. மதுவிடம் போராடித் தோற்றுப்போக மீண்டும் பிழைத்து வருகிறார்.

மாலை நேரங்களில் மட்டும் குடித்துக் கொண்டிருந்த மண்ட்டோ, பிரிவினைக்குப் பின்னால், லாகூர் சென்றவுடன் முழு நேரமும் குடிக்கத் தொடங்கினார். சிரோஸிஸ் நோயிலில் இருந்து மீண்டுவந்த பிறகு மறுபடியும் குடித்தால் கடுமையான பாதிப்புகள் ஏற்படும் என்ற எச்சரிக்கைகள் அவரை அச்சுறுத்தவில்லை.

குடியினால் அவருக்குள் இருந்த சாதத் ஹசனும், மண்ட்டோவும் காணாமல் போனார்கள். எழுத்தின் நுட்பங்களை அறிந்த அவரால், தன்னுடைய மனத்தைத் தேற்றும் நுட்பம் அறிய முடியவில்லை.

மூத்த மகள் கடுமையான டைபாய்ட் காய்ச்சலால் தாக்கப்பட்டிருந்தாள். மதுப் பழக்கமும், தொடர்ந்து எழுத முடியாத சூழலும், திரைப்படங்களில் வேலை பார்ப்பதை விட்டுவிட்டதாலும் மண்ட்டோ பணத்துக்கு மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். நண்பர்களிடம், மகளின் காய்ச்சலை குணப்படுத்த மருந்து வாங்க வேண்டும் என்று பணம் வாங்கினார். தன்னுடைய மகளின்மேல் உயிரான மண்ட்டோ, மருந்துகளை வாங்குவதற்கு பதில் மது பாட்டிலோடு வீட்டுக்குத் திரும்பியிருக்கிறார்.

உயரிய குணங்களின் மனிதர்

இச்சம்பவத்தால் உண்டான குற்றவுணர்ச்சியில் இருந்து மீள்வதற்காக, குடிப்பதில்லை என்ற விரதம் கொண்டார். குடிக்கு அடிமையானவர்கள் விஷயத்தில், குடியே எப்போதும் வென்றிருக்கிறது. மண்ட்டோவின் உறுதிகளை, ஒவ்வொரு முறையும் குடி, மிக மோசமாக வீழ்த்தியிருக்கிறது.

புகழ்பெற்ற எழுத்தாளர், வெற்றிபெற்ற திரைக்கதையாசிரியர், குடும்பத்தை அதிகம் நேசித்தவர், குழந்தைகளின்மேல் பேரன்பு கொண்டவர், பிறரின் சிறு துயரம்கூட ஆழமாக பாதித்துவிடக்கூடிய மென்மையான மனதுடையவர்... எல்லா உயரிய குணங்களையும் அவரின் மோசமான மதுப் பழக்கம் பின்னுக்குத் தள்ளிவிட்டு, அவரை மனநோய் மருத்துவ மனைக்கு அனுப்பியது.

மண்ட்டோ தூய்மையை நேசித்தார். எளிதில் திருப்திகொள்ள முடியாத அளவுக்குத் தூய்மையை நேசித்ததால், எப்போதும் அவர் தன்னைச் சுத்தப்படுத்திக்கொண்டே இருந்தார். கசங்கிய தாள்களில் எழுதுவதை மண்ட்டோ ஒருபோதும் விரும்ப மாட்டார். தான் எழுத உட்காரும்போது, தட்டச்சு இயந்திரத்தின் தூசியைக்கூட துடைத்துவிட்டு எழுத உட்காருபவர், கால்களை மிகத் தூய்மையாக வைத்திருப்பவர், கழிப்பறையின் ‘காம்மோடு’க்குப் பின்னால், மது புட்டியை மறைத்து வைத்துக் குடிக்கும் அளவுக்கு, மது அவரை மாற்றிவிட்டது. ‘‘மண்ட்டோ எத்தனையோ பொறுப்பற்ற செயல்களைச் செய்திருக்கலாம். ஆனால், அவரின் மரணம்தான் அவரின் மிகவும் பொறுப்பற்ற செயல்!’’ என்று அவரின் மைத்துனரும், எழுத்தாளருமான ஹமீத் ஜலால் கூறுகிறார்.

மண்ட்டோவின் மரணத் தருணத்திலும் அவரை மிகவும் பாதித்தது ஒரு கோர சம்பவமே. குஜராத்தில் தன் கை குழந்தையுடன் காத்திருந்த இளம் பெண்ணை ஏழு கொடூர மிருகங்கள், சூறையாடி, உடம்பில் துண்டுத் துணியில்லாமல் சாலையில் ஓடவிட்டிருக்கிறார்கள். மண்ட்டோவால் இந்தச் சம்பவத்தின் பாதிப்பில் இருந்து மீளமுடியவில்லை. துயரங்களைச் சமூகத்துக்குக் கடத்த வேண்டிய எழுத்தாளர், தனக்குள் கடத்திக்கொண்டால், தன்னையே இழக்க நேரும் என்பதற்கு மண்ட்டோவே உதாரணம்.

எனக்காக யாரும் அழ வேண்டாம்

இளம்பெண்ணின் சம்பவத்தால் அதிக அளவு உணர்ச்சிப்பெருக்குக்கு ஆளான மண்ட்டோ நாள் முழுக்கக் குடித்திருக்கிறார். குடல் வெந்து போனதால், ரத்த வாந்தி எடுத்திருக்கிறார். உடல்நிலை மோசமான தருணங்களில் எல்லாம் மண்ட்டோ மீண்டு வந்ததைப் போல், இம்முறையும் மீண்டு வந்துவிடுவார் என மருத்துவர்கள் காத்திருந்தார்கள்.

‘‘இப்போது எல்லாம் கடந்துவிட்டது. என்னை இங்கிருந்து அப்புறப்படுத்தாதீர்கள். இந்த மதிப்பற்ற வாழ்க்கை முடிந்து போகட்டும். நான் இங்கேயே அமைதியாக மரணம் கொள்கிறேன்!’’ என்று சொல்லிய மண்ட்டோவைப் பார்த்து, வீட்டில் இருந்த பெண்கள் அழத் தொடங்கியிருக்கிறார்கள்.‘‘யார் அழுவதையும் நான் விரும்பவில்லை!’’ என்று போர்வையால் முகத்தை மூடிக்கொண்ட மண்ட்டோ, தன் மரணத்தை மற்றவர்கள் பார்ப்பதைக்கூட விரும்பவில்லை. தன்னுடைய கோட் பாக்கெட்டில் இருந்த மூன்றரை ரூபாயை எடுத்துக்கொண்டு போய், கொஞ்சம் மது வாங்கி வரச் சொல்லிக் கேட்டிருக்கிறார்.

அவரின் கடைசிப் பார்வை, அவரின் மனைவிக்கோ, மகள்களுக்கோ, அருகில் இருந்த உறவினர் களுக்கோ, அவரின் புத்தகங்களுக்கோ கிடைக்கவில்லை. மதுவிடம் தன்னை ஒப்படைக்கவே தவித்துக் கொண்டிருந்தார்.

மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல ஆம்புலன்ஸ் வரும்வரை நினைவுடன் இருந்தார். கடைசியாக மீண்டும் அவர் மதுவை கேட்க, ஒரு ஸ்பூன் அளவுக்கு மது கொடுக்கப்பட்டது. ஓரிரு சொட்டுக்கள் மட்டுமே அவரின் தொண்டைக்குள் இறங்கின. அதற்குள் அவர் தலை சரிந்தது. மண்ட்டோவை தான் வீழ்த்திவிட்டதை அறிவிப்பதற்காக, அவரின் வாயில் மீதமிருந்த மது, கடைவாயில் வழிந்தது.

‘‘உண்மைதான் மிகவும் ஆபாசமானது!’’ என்று மண்ட்டோ இப்போதும் மதுக்கோப்பையுடன் கடவுளிடம் ஆக்ரோசமாக விவாதித்துக் கொண்டிருக்கக் கூடும்.

- வருவார்கள்...

எண்ணங்களைப் பகிர: vandhainila@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

11 days ago

இலக்கியம்

12 days ago

இலக்கியம்

12 days ago

இலக்கியம்

12 days ago

இலக்கியம்

12 days ago

இலக்கியம்

16 days ago

இலக்கியம்

16 days ago

இலக்கியம்

19 days ago

இலக்கியம்

19 days ago

இலக்கியம்

19 days ago

இலக்கியம்

23 days ago

இலக்கியம்

23 days ago

மேலும்