சு
ந்தர ராமிசாமியை முதன்முதலாக 1975, ஜனவரி 31, இரவு ஆறரை மணியளவில் சந்தித்தேன். மதுரை ரயில் நிலையத்தின் முதலாவது நடைமேடையின் வலதுபுறம் வெகுவாகத் தள்ளியிருந்த ஒரு பெஞ்சில் அமர்ந்திருந்தார். அப்போது எனக்கு வயது 23. ‘க்ரியா’ வெளியிட்டிருந்த ‘நடுநிசி நாய்கள்’ புத்தகத்தின் பின்னட்டையில் ஆதிமூலம் வரைந்திருந்த சுந்தர ராமசாமியின் கோட்டோவியத்தை மனப்பதிவாகக் கொண்டு, இனம்புரியா உணர்வுகள் ஒன்றையொன்று மேவிய மனநிலையோடு சென்று அவரைப் பார்த்தேன்.
சுந்தர ராமசாமி வியாபார நிமித்தமாக மதுரை வந்து காலேஜ் ஹவுஸில் தங்கியிருப்பதாகவும், என்னைப் பார்க்க விரும்புவதாகவும், இரவு பெங்களூர் செல்லவிருப்பதாகவும், மாலை ஆறு மணியளவில் சென்று சந்திக்கும்படியும் தகவல் கிடைத்திருந்தது. மாலை ஆறு மணியளவில் காலேஜ் ஹவுஸின் குறிப்பிட்ட அறையை அடைந்தபோது அது பூட்டியிருந்தது. ஆனால், அறைக் கதவில் ஒரு தாள் சிறு குறிப்புடன் ஒட்டப்பட்டிருந்தது. ‘ரயில் நிலையத்தின் முதல் பிளாட்பாரத்தின் வலது கோடி பெஞ்சில் இருப்பேன். அங்கு வந்து சந்தியுங்கள்’ என்று தெரியப்படுத்தி ‘சு.ரா’ என்று கையெழுத்திடப்பட்டிருந்தது. சு.ரா.வின் கையெழுத்துடன் முதல் பரிச்சயம். ரயில் நிலையம் நோக்கி வேக வேகமாக நடைபோட்டேன்.
எட்டு முழ வேட்டி, அரைக்கைச் சட்டை. எவரையும் ஒருமுறை கவனிக்க வைக்கும் வசீகரத் தோற்றம். அருகில் சென்று “மோகன்” என்றேன். சிரித்த முகத்துடன் பக்கத்தில் உட்காரச் சொன்னார். “இவ்வளவு குறைந்த வயதாயிருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை” என்றார். நான் பதற்றத்துடனேயே இருந்தேன். பெங்களூர் செல்லும் ரயில் வர இன்னும் இரண்டு மணி நேரத்துக்கு மேலிருப்பதாகவும், ரயில்வே ஸ்டேஷனில் அமர்ந்திருப்பது பிடிக்குமென்றும், அதனாலேயே அறையைக் காலிசெய்துவிட்டு அங்கு வந்துவிட்டதாகவும் சொன்னார். “‘காகங்கள்’ என்றொரு அமைப்பைத் தொடங்கவிருக்கிறேன். மாதமொருமுறை புத்தகங்கள் பற்றி அதில் விவாதிக்கலாமென்றிருக்கிறோம். ‘விழிகள்’ இதழில் வெளிவந்த கலாப்ரியாவின் ‘சுயம்வரம்’ குறித்த உங்களுடைய கட்டுரையைப் படித்துவிட்டு, புதிய குரலாக இருக்கிறது; முதல் கூட்டத்துக்குக் கூப்பிடலாமென்று கிருஷ்ணன்நம்பி சொன்னான். நானும் படித்துப்பார்த்துவிட்டு அந்த முடிவுக்கு வந்தேன்” என்றார். நான் திகைப்பின் உச்சத்தில் இருந்தேன். அவர் தொடர்ந்து, அவருடைய ‘நடுநிசி நாய்கள்’, வண்ணநிலவனின் ‘எஸ்தர்’ ஆகிய இரண்டு புத்தகங்களை முதல் கூட்டத்துக்கு எடுத்திருப்பதாகக் கூறி, அதில் ஒன்றைப் பற்றி நான் கட்டுரை வாசிக்க வேண்டும் என்றார். வண்ணநிலவனின் ‘எஸ்தர்’ தொகுப்பில் வெகுவாக ஈர்க்கப்பட்டிருந்த சமயமது. தயக்கத்துடன், ‘‘எஸ்தர்’ பற்றி வாசிக்கிறேன்” என்றேன். அவர் நிமிர்ந்து, ஒருகணம் என் முகம் பார்த்துவிட்டு, “சரி” என்றார்.
“எப்படி அடையாளம் கண்டுகொண்டீர்கள்?” என்று கேட்டார். ‘நடுநிசி நாய்கள்’ பின்னட்டை ஓவியம் ஞாபகத்தில் இருந்தது என்றேன். “அந்த ஓவியத்தில் ஏன் அவர் கண்களைப் போடவில்லை?” என்று கேட்டார். தெரியவில்லை என்பது போல் தலையசைத்துவிட்டு, சிறு தயக்கத்துக்குப் பின், கவிஞனின் கண்கள் என்பதால் அவை உள்முகமாகப் பார்த்துக்கொண்டிருப்பதாக நினைத்திருக்கலாம் என்றேன். “உங்களுக்கு மாடர்ன் ஆர்ட் தெரியுமா?” என்று கேட்டார். “இல்லை” என்று தலையசைத்தேன்.
பெங்களூர் செல்லும் ரயில் வந்து, அவர் தன்னுடைய இருக்கையில் அமர்ந்த பின்னும் ரயில் கிளம்பும்வரை உடனிருந்தேன். அந்த முதல் சந்திப்பு கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் நீடித்தது. ஏதோ ஒரு கட்டத்தில், “நீங்கள் இப்போது என்ன எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டேன். “தாஸ்தாயெவ்ஸ்கியின் ‘கரமசோவ் சகோதரர்கள்’ நாவலை மொழிபெயர்த்துவிட்டால் போதும். ஒரு எழுத்தாளனுக்குரிய கடமையைச் செய்த நிறைவோடு நிம்மதியாக இறந்துவிடலாம்” என்றார். அவருடைய உரையாடலின் மாய விசீகரத்தில் கட்டுண்டிருந்தேன்.
‘காகங்கள்’ அமைப்பின் முதல் கூட்டம், நாகர்கோவில், ஆசாத் லாட்ஜின் ஓர் அறையில், 1975, மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் தொடங்கியது. புற்றுநோய் காரணமாக, ஒரு கால் நீக்கப்பட்டிருந்த நிலையில் கிருஷ்ணன் நம்பி வந்து காலை அமர்வில் கொஞ்ச நேரம் இருந்தார். திருவனந்தபுரத்திலிருந்து நகுலன், நீல.பத்மநாபன், ஆ.மாதவன், ஷண்முக சுப்பையா வந்திருந்தனர். காலை அமர்வில் வண்ணநிலவனின் ‘எஸ்தர்’ பற்றி கட்டுரை வாசித்தேன். சில சில அபிப்ராயங்களோடு, சுவாரஸ்யமோ, ஆரவாரமோ இன்றி அந்த அமர்வு மிதமாக அமைந்தது. மதிய அமர்வில் சுந்தர ராமசாமியின் ‘நடுநிசி நாய்கள்’ பற்றி ந.முத்துசாமியின் கட்டுரை. முத்துசாமி வந்திருக்கவில்லை. அவர் அனுப்பிவைத்திருந்த கட்டுரையை உமாபதி வாசித்தார். வாசித்து முடித்ததும் கூடி அமர்ந்திருந்தவர்களிடையே ஒரு இறுக்கமான அமைதி கவிந்தது. “ந.முத்துசாமி இந்தக் கட்டுரையில் என்ன சொல்கிறார் என்று எனக்குப் புரியவில்லை. புரிந்தவர்கள் சொன்னால் அதை முன்வைத்து விவாதிக்கலாம்” என்றார் நகுலன். மீண்டும் அமைதி. சு.ரா.வைப் பார்த்து, “ராமசாமி, உங்களுக்குப் புரிகிறதா?” என்று கேட்டார் நகுலன். “முத்துசாமிக்கு என்னுடைய கவிதைகள் பிடித்திருக்கிறது என்று தெரிகிறது. ஆனால், ஏனென்று கட்டுரையிலிருந்து தெரியவில்லை” என்றார் சு.ரா. “அப்படியானால் அந்தக் கட்டுரையை ஒதுக்கிவைத்துவிட்டு நாம் பேசலாம்” என்றார் நகுலன். தொடர்ந்து, கலாப்ரியாவின் ‘சுயம்வரம்’ குறுங்காவியம் பற்றிய என்னுடைய கட்டுரையை வெகுவாக சிலாகித்துவிட்டு, “முதலில் நீங்கள் ஆரம்பியுங்கள்” என்றார் நகுலன்.
“சுந்தர ராமசாமியின் கவிதைகள் என் மனதுக்கு நெருக்கமானவையாக இல்லை. கவிதைகளில் என்னை ஈர்க்கும் உணர்வுபூர்வமான அம்சம் சு.ரா.விடம் இல்லை. புத்தி தூக்கலாக அமைந்திருப்பது, ஒருவிதத் தடையாக இருக்கிறது” என்பதாக ஏதேதோ பேசினேன். பொதுவாக, அவருடைய கவிதைகள் குறித்து எதிர்மறையான கருத்துகளே அதிகமும் முன்வைக்கப்பட்டன.
இறுதியில் சு.ரா பேசினார். இலக்கியம் பற்றிய தேர்ந்த ஞானமும், அதைத் தெளிவாக எடுத்துரைக்கும் தீர்க்கமும், பதற்றத்துக்கு இடமளிக்காத பக்குவமும் வார்த்தைகளாக அறையெங்கும் சூழ்ந்தன. கவிதையில் சொற்சிக்கனத்தின் முக்கியத்துவம் பற்றிக் குறிப்பிட்டார். மரபுக் கவிதைகளின் இலக்கணச் சட்டகங்கள் வார்த்தைகளின் விரயங்களுக்குக் காரணமாக இருப்பதைச் சொன்னார். இரண்டு அடிகளும் ஏழு வார்த்தைகளுமே கொண்ட திருக்குறளில்கூட, வார்த்தைகள் அவசியமற்று நிரப்பப்பட்டிருக்கிறது என்றார். ‘செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் / செல்வத்துள் எல்லாம் தலை’ என்ற குறளில் செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் என்ற முதல் மூன்று வார்த்தைகளிலேயே முடிந்துவிடும் பாடுபொருள், எப்படி அவசியமற்று நீள்கிறது என்று சுட்டிக்காட்டினார். அவருடைய கவித்துவப் பிரயாசைகள் பற்றிய சிந்தனைத்தெறிப்புகளில் அந்தச் சிறு கூட்டம் ஸ்தம்பித்திருந்தது. பேச்சின் இறுதியில் மிகப்பெரும் ஆகிருதியாக சுந்தர ராமசாமி தோற்றமளித்தார். அவர் கவிதைகளைப் பற்றி சிறுபிள்ளைத்தனமாக உளறிவிட்டதாகத் தோன்றிக் குறுகிப்போனேன் நான்.
- தொடரும்...
- சி.மோகன், கலை இலக்கிய விமர்சகர்.
தொடர்புக்கு: kaalamkalaimohan@gmail.com
முக்கிய செய்திகள்
இலக்கியம்
4 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
1 month ago
இலக்கியம்
2 months ago
இலக்கியம்
2 months ago
இலக்கியம்
2 months ago
இலக்கியம்
3 months ago
இலக்கியம்
4 months ago
இலக்கியம்
4 months ago