நூல் வெளி: தமிழ் பிராமியைவிட முந்தையதா அசோகன் பிராமி?

By தேன்மொழி

ற்போது இயங்கிவரும் முக்கியமான தொல்லியல் அறிஞர்களில் ஒருவரான பேராசிரியர் கா.ராஜனின் நீண்டகால ஆராய்ச்சியின் விளைவாக உருவாகியிருக்கும் நூல் இது. இதுவரை இந்திய வரலாற்றறிஞர்களிடையே நிலவிவந்த எழுத்துமுறை குறித்த முடிவுகளைத் தகர்ப்பதாகவும், அசோகன் பிராமியிலிருந்துதான் தமிழ் எழுத்துமுறை தோன்றியது என்ற தீர்மானத்தைக் கேள்விக்குட்படுத்துவதாகவும் இந்நூல் உள்ளது.

பேரரசர் அசோகனின் பாறைக் கல்வெட்டு எழுத்து வகை அசோகன் பிராமி என அழைக்கப்பட்டது. அதன்பிறகு ஆந்திரப் பகுதியில் கிடைக்கப்பட்ட எழுத்துமுறையால் அசோகன் பயன்படுத்தியது வட பிராமி என்றும் ஆந்திராவில் கிடைத்தது தென் பிராமி என்றும் அழைக்கப்பட்டன. அதன் பின்னர், மதுரை மேலூர் மாங்குளத்தில் 1882-ல் அடையாளம் காணப்பட்ட எழுத்து, பிராகிருத பிராமியிலிருந்து வேறுபடுத்தி அறிவதற்காக தமிழ் பிராமி என அழைக்கப்பட்டது. இந்தத் தமிழ் பிராமி எழுத்துகள் அசோகன் காலத்துக்கு பிற்பட்டவை எனவும் அசோகன் பிராமியிலிருந்துதான் தமிழ் பிராமி தோன்றியது எனவும் தான் கண்டறிந்த கல்வெட்டுகளின் அடிப்படையில் ஐராவதம் மகாதேவன் கூறிவருகிறார். அவரது கருத்து இரா. நாகசாமியால் தொடர்ந்து வழிமொழியப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பேராசிரியர் கா.ராஜனால் மேற்கொள்ளப்பட்ட கொடுமணல் அகழ்வாய்வில், இந்தியாவில் இதுவரையில் கிடைத்திராத எண்ணிக்கையிலான 1,456 பானையோடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்தச் சுடப்பட்ட பானையோடுகளில் கீறல் எழுத்துகளும் உயிரெழுத்து 8, மெய்யெழுத்து 16 கொண்ட தமிழ் பிராமி எழுத்துக்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும் மணிகள் செய்யும் தொழிற்கூடங்கள், சங்கு அறுத்தல், நெசவுத் தொழில், இரும்பு எஃகு பொருட்கள் தொடர்பான தொழிற்கூடங்கள், தாமிர உருக்கு உலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. நாணயங்கள் (ஓட்டை, ரோமன்) பொருட்கள் (தாமிரம், சில்வர், தங்கத்தினாலான பொருட்கள், இரும்பு பொருட்கள்), பானையோடுகள், அடக்கம் செய்யும் இடம், அங்குள்ள பொருட்கள், புதை மேடுகள், இறந்தவர்களை அடக்கம் செய்யும் முறை போன்றவையும் அடையாளம் காணப்பட்டுள்ளன. தற்போதைய இந்த ஆய்வின்படி தமிழ் எழுத்துகளின் காலம், கி.மு. 6-ம் நூற்றாண்டு ஆகும். கி.மு. 6-ம் நூற்றாண்டிலேயே தமிழை எழுத்து வடிவத்தில் பயன்படுத்திய தமிழ்ச் சமூகம் பானையோடுகளில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துவந்திருக்கிறது.

மாங்குளம் குகைக் கல்வெட்டுகள், புலிமான்கோம்பை மற்றும் தாதப்பட்டி ஆகிய இடங்களில் கிடைத்துள்ள நடுகற்கள், கி.மு. 3-ம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே தமிழ் பிராமி எழுத்துகள் பயன்பாட்டில் இருந்துள்ளதை உறுதிசெய்கின்றன. பாண்டிய நாட்டு கற்படுக்கைகளில், குகைகளில் தமிழில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் அசோகனுக்கு முந்தைய தசாப்தங்களைச் சேர்ந்தவை என தொல்லியல் ஆய்வாளர் கே.வி. ரமேஷ் தெரிவித்துள்ளார். அசோகன் பிராமியிலிருந்து தமிழ் பிராமி உருவாகவில்லை. அது அசோகன் காலத்துக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்தது என்பதையும் பல ஆய்வு முடிவுகளின் வழியாக கா.ராஜன் நிறுவுகிறார்.

பானையோடுகளின் வண்ணங்களின் அடிப்படையில் காலம் கணிக்கும் முறையின்படி, கி.மு. 3 - கி.மு 2 (அ) 1-ம் (தொடக்க வரலாற்றுக் காலம்- இரண்டாம் நிலை) காலத்தைச் சேர்ந்த தடித்த கருப்பு சிவப்புப் பானையோடுகளில் தமிழ் பிராமி எழுத்துக்கள் கண்டறியப்பட்டுள்ளன. தமிழ் பிராமியின் காலத்தை கி.மு. 3-ம் நூற்றாண்டுக்கு முன்னே கொண்டு செல்லக்கூடிய ஏழு ஏ.எம்.எஸ். ஆய்வு முடிவுகள், இவ்வாய்வு தொடர்பாக பெறப்பட்டுள்ளன. ‘ரேடியோமெட்ரிக்’ எனும் கதிரலைக் கரிமக் காலக் கணிப்பு மூலமும் உறுதிசெய்யப்பட்டுள்ளது அ, இ, உ, எ, ஐ எனப்படும் ஐந்து எழுத்துகளில் இ, ஐ என்பவையும், ம, ர என்னும் எழுத்துகள் முற்றிலும் வடிவத்திலும் அமைப்பிலும் அசோகன் பிராமியிலிருந்து மாறுபட்டு காணப்படுகின்றன என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருந்தல் அகழாய்வில் கண்டறியப்பட்ட பானை ஒன்றில் இருந்த நெல்மணிகளின் காலம் கி.மு. 490 என ‘ரேடியோ கார்பன் டேட்டிங்’ ஆய்வின் மூலம் நிறுவப்பட்டுள்ளது. அப்பானையின் மேல் எழுதப்பட்ட ‘வயிர’ என்னும் எழுத்தின் காலமும் இதுவாகவோ அல்லது இதற்கு முந்தியதாகவோ இருக்க வேண்டும் என்பதையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

இப்புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகள், முடிவுகள் குறித்து நடன காசிநாதன் போன்றவர்கள் உடன்பாடு கொண்டவர்களாகவும், சிலர் மாற்றுக் கருத்துடையவர்களாகவும் உள்ளனர். இப்புத்தகத்துக்கு முன்னுரை எழுதியுள்ள எ.சுப்பராயலு பிராமி எழுத்துகளின் காலக்கணிப்போடு முரண்படுகிறார்.

பேராசிரியர் ராஜனின் முடிவை தொல்லியல் அறிஞர் திலிப் சக்ரவர்த்தி முழுமையாக ஆதரிக்கிறார். இந்திய வரலாறு தமிழ்நாட்டிலிருந்து தொடங்கி திருத்தி எழுதப்படவேண்டும் என வலியுறுத்துகிறார்.

சங்க காலத்தின் பெருமையை உரக்கப்பேசிக் கொண்டிருப்பவர்கள், அதன் காலத்தை நிலைநிறுத்துவதில் ஏற்பட்டிருக்கும் இத்தகைய சிக்கல்களில் அதிகம் ஆர்வம் காட்டுவதில்லை. பல்கலைக்கழகங்களில் உள்ள தமிழ்த் துறைகள், மேலோட்டமான ஆய்வுகளின் வழியாக, சங்க காலத்தின் பெருமையைச் சுருக்கி விடும் அபாயத்துக்கு வழிவகுத்துக் கொண்டிருக்கின்றன. சங்க காலத்தை அதன் முழுப் பரிமாணங்களோடு புரிந்துகொள்வதற்குத் தொல்லியல் ஆய்வுகள் தவிர்க்க முடியாதவை என்பதை இப்புத்தகம் தெரிவிக்கிறது. கல்வெட்டு ஆராய்ச்சி வரலாற்றுத் துறை சார்ந்தது எனத் தமிழ்த் துறைகள் ஒதுங்கும் போக்கு தவிர்க்கப்பட வேண்டும். அறிவியல் துறைகள் கூடுமான பங்களிப்பை நல்க வேண்டும்.

தமிழ்நாட்டில் அகழ்வாய்வுகளை மேற்கொள்கிறவர்கள் குறைவு. அவர்களும் ஓய்வுபெறும் வயதை எட்டிவருகின்றனர். அவர்களுக்குப் பிறகு அகழ்வாய்வுகளின் நிலை என்பது கேள்வியாகவே உள்ளது. இதைக் கவனத்தில்கொண்டு அடுத்த தலைமுறை ஆய்வாளர்களை உருவாக்கும்விதமாகப் பல்கலைக்கழகங்களில் தொல்லியல் துறைகளை உருவாக்கத் தமிழக அரசின் உயர்கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். தொல்லியல் துறை நிதி நல்கைக்காக மத்திய அரசை எதிர்பார்த்திருக்காத வகையில், தமிழக அரசு போதுமான நிதி ஒதுக்கீட்டைச் செய்ய வேண்டும்.

- தேன்மொழி, கவிஞர்,

கலை வரலாற்று ஆய்வாளர்.

தொடர்புக்கு:manarkeni@gmail.com

‘எர்லி ரைட்டிங் சிஸ்டம்:

எ ஜர்னி ஃப்ரம் க்ராஃபிட்டி’

பேராசிரியர் கே. ராஜன்,

விலை: ரூ.2,500

பாண்டிய நாடு வரலாற்று

ஆய்வு மையம், மதுரை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

4 days ago

இலக்கியம்

4 days ago

இலக்கியம்

7 days ago

இலக்கியம்

7 days ago

இலக்கியம்

7 days ago

இலக்கியம்

7 days ago

இலக்கியம்

12 days ago

இலக்கியம்

14 days ago

இலக்கியம்

14 days ago

இலக்கியம்

14 days ago

இலக்கியம்

14 days ago

இலக்கியம்

21 days ago

இலக்கியம்

21 days ago

இலக்கியம்

21 days ago

இலக்கியம்

2 months ago

மேலும்