பா
ணர்கள் பற்றிச் சங்க இலக்கியம் பரவலாகப் பேசுவதை அறிவோம். சங்க காலத்துக்கு முன்பிருந்தே காலத் தொடர்ச்சியாகப் பண்டைத் தமிழ் இனத் தில் பண்பாடு, சமூக அடிப்படையில் குறிஞ்சி, முல்லை, பாலை, நெய்தல், மருதம் என்கிற வாழ்வு முறைகள் நிலைபெற்றிருந்தன.
இந்தத் திணை வாழ்வு முறைகள் நிலைபெற்றிருந்த காலத்தில் இருந்தே பாண் சமூகமும் இங்கே உருவாக்கம் பெற்றிருந்தது. பாணர், பொருநர், கூத்தர், துடியர், கோடியர், அகவர், வேலன் என்று 17 வகையான பாண் சமூக மரபினர் இங்கு வாழ்ந்திருந்தனர்.
பாண் சமூகத்தினர் ஐந்து திணைகளிலும் நிலையாக வாழ்ந்த குடிமக்களை சார்ந்து வாழ்ந்தவர்களாக அன்றையநாட்களில் இருந்துள்ளனர். தொல்காப்பியர் சொல்லும் பன்னிரண்டு நிலப் பகுதிகளிலும் பாண் சமூகர்கள் சென்று வந்துள்ளார்கள். மன்னர் முதல் மக்கள் வரையான எல்லாப் படிகளிலும் மரியாதையோடு மனம் கலந்திருக்கிறார்கள். தமிழ் நாகரிகச் செரிவில் மன மாற்றும், பண்ட மாற்றும் அளித்தார் கள்.
தமிழ்ச் செவ்வியல் காலம் தொடர்ந்து, பின்னர் வந்த இடைக்காலம், இப்போதைய பிற்காலம் வரை பாணர்கள் தொடர்ந்து புதிய பெயர்களோடு, ஆனால் பாண் வாழ்க்கை முறையை ஏதோ ஒருவகையில் தக்க வைத்துக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
தமிழர்களின் சுமார் மூவாயிரம் ஆண்டு கால வாழ்வியக்கத்தையும், அசைவையும் இன்னும் தங்கள் தோள்களில் சுமக்கிற பாணர்கள் இன வாழ்க்கையை ஆராய்ந்த ஒரு மிக முக்கிய, அவசியமான, பண்பாட்டு ஆர்வம் கெழுமிய நூல் ஒன்றை அறிய நேர்ந்தது.
‘பாணர் இன வரைவியல் - இந்தியாவில் நாடோடிகளின் அசைவியக்கங்கள்’ எனும் பெயருடைய அந்த நூலின் ஆசிரியர் பக்தவத்சல பாரதி.
இனவரைவியல் மற்றும் மானிடவியல் ஆய்வில் புகழ்பெற்ற அறிஞர்கள் பாராட் டும் ஆய்வறிஞர் பக்தவத்சல பாரதி. அவ ரது இன்னொரு மேன்மை நூலான ‘இலக் கிய மானிடவியல்’ எனும் நூலையும் அண்மையில் வாசிக்க நேர்ந்தது மகிழ்ச்சியான அனுபவம்.
நூல் என்ன சொல்கிறது?
சங்க காலப் பாணருடைய சமூக வாழ்க்கைமுறை என்ன தன்மை கொண்டது? அவர்களது நீண்ட மரபு என்னென்ன மாற்றங்களோடு உருமாறிப் புதிய திரிபு வடிவங்களுடன் தொடர்ந்து கொண்டிருக்கிறது? சங்க காலப் பாணர், பழங்குடிப் பாணர், சமகாலப் பாணர் எனும் தொடர்ச்சி செயல்படும் விதம்; நாடோடியம் என்பது முல்லை நில ஆயர்களோடு மட்டுமே தொடர்புடையதாக இருந்த நிலை மாறி, அது பாணர்களுக்கும் ஒப்புடையதே எனும் நிலை பற்றிய புரிதல்; முதலான பல வரலாற்றுச் செய்திகளை இனவரைவியல் அடிப்படையில் ஆராய்வதாக இந்த பாணர் இனவரைவியல் நூல் விளக்குகிறது.
பாணர் என்ன செய்தார்கள்?
பாணர்கள் அடிப்படையில் இசைப் பாடகர்கள். வாய்மொழி மரபில் மன்னர்களைப் போற்றிப் பாராட்டி பரிசில் பெற்று வாழ்ந்தவர்கள். இவர்கள் முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல் என்கிற ஐந்து நிலங்களையும் நடந்து கடந்தார்கள். அவ்வாறு நடக்கும்போது ஒரு நிலத்துச் சிறப்பை இன்னொரு நிலத்துக்குக் கொண்டு சேர்க்கும் கலாச்சாரத் தூதர்களாகவும் செயல்பட்டார்கள்.
பாணர்கள் ஒவ்வொரு திணைக்கும் உரிய தனிமரபுகளை ஒருபுறத்திலும், மருத நில நகரங்கள், நெய்தல் நில வணி கத் துறைமுகங்கள் போன்ற இடங்களில் வளர்ந்த பொது மரபினை மறுபுறத்திலும் இணைப்பவர்களாகவும், பாலம் அமைப்பவர்களாகவும் ஒரு மரபை இன் னோர் இடத்தில் அறிமுகப்படுத்துபவர்களாகவும் செயல்பட்டுள்ளனர்.
வேறு வார்த்தைகளில் சொன்னால், கிராமங்களில் நகரியத்தையும், நகரத்தில் கிராமத்தையும் பதியமிட்டவர்கள் பாணர்கள்.
ஓர் அழகான உதாரணம் தருகிறார் பக்தவத்சல பாரதி. முல்லை நிலத்துக் குழலை (வண்டு துளைத்து இசையைக் காட்டிய புல்லாங்குழலை) மற்ற நிலத்து இசைக் கலைஞர்களுக்கும், மக்களுக்கும் அறிமுகம் செய்தவர்கள் பாணர்கள். மூவாயிரம் வருஷத்துக்கு முன்பு, ஒரு பாணன் கொடுத்த குழலை, இன்றைய பல்லடம் சஞ்ஜீவராவும், மகாலிங்கமும் பயன்படுத்தி இந்திய இசையை உலக இசையாக்கினார் கள்.
பாணர்கள் சமூக மதிப்பு
பாணர்கள் சகல நிலங்கள்தோறும் சுற்றித் திரிந்தார்கள். (புறம் - 138) அதை அழகாகச் சொல்கிறது. ‘பாணனே! பசு இனம் கூட்டமாக நடக்கும் வழிகடந்து, மான் கூட்டம் அலையும் மலைகளைக் கடந்து, மீன் தொகுதி மிக்க நீர் நிலைகளையும் கடந்து, வளமான இசை எழுப்பும் சிறிய யாழையும், கிழிந்த உடையையும் அணிந்து வந்திருக்கும் முதிய பாணனே...’ என்று விளிக்கும் அப்பாடல், இறுதியில் பாணனுக்கு நம்பிக்கையைத் தருகிறது.
பாணன், நாஞ்சில் வள்ளுவனைப் பாடியதும் உரிய பரிசில் பெறுவான். புதிய ஆடையையும் பெறுவான் என்கிறது பாடல். மன்னர்கள் புகழ், பாணர்கள் வழியாகத்தான் தமிழகம் முழுக்க அறிய வேண்டும் என்கிறது ஒரு பாடல். ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் புகழினைத் தரணியெங்கும் பாடுக என்று பரிசிலரை நோக்கி நச்செள்ளையார் பாடுகிறார்.
‘பிட்டங்கொற்றன் புகழைத் தமிழகம் அறியுமாறு பாடுக’ என்கிறது இப்பாடல்: ‘ஊர்தல் இல்லாத குதிரை மலைக்குத் தலைவனே, உன்னைத் தூய நா களிக்கும்படியாக வாழ்த்திப் பாடுபவர், பரிசிலர். உனக்கு அதனால் ஒன்றும் இல்லை. ஆனால் மற்ற மன்னர்க்கு அவர் கள் கொடுக்கும் மனோபாவம் இல்லாத குறை மனதை உலகம் கீழாகப் பேசும்...’
ஆக, பாணர்கள் மன்னர் பீடும் புகழும் படைத்த பாடல் (324) ஒரு நுட்பமான வரலாற்றைச் சொல்கிறது.
ஒரு தலைவன் வீரன். ஒரு குறுநில மன்னன். வேளிர் என்று சொல்லலாம். அவன் வேந்தனின் நண்பனாக இருந்தான். அவன் போரில் உதவினான். அறிவுரை சொன்னான். அந்த அளவு புகழ் கொண்ட அந்த வீரன், இடையர்கள் பொருத்திவைத்த விளக்கு வெளிச்சத்தில், பாணர்கள் சூழ பேசிக் கதைத்துக் கொண்டிருந்தான். இந்த இயல்பு, நட்பின் இனிமை, வர்க்கம் பாராத பிணைப்பு, ஆலத்தூர் கிழாரை வியப்பு கொள்ளச் செய்தது. எத்தனை புகழ் கொண்டவன். இந்த எளிய (பாணர்) மனிதர்களுடன் சரி சமமாகத் தரையில் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்கிறான்?
அந்த சீறூர் வீரனின் இனிய சுபாவம் பற்றி பேச மட்டுமல்ல இப்பாடல். பாணர்களின் சமூக வீழ்ச்சியையும் குறித்தது. பாணனாகவே வாழ்தல் சாத்தியம் ஆகாமையால், மீன் பிடிக்கும் தொழிலைச் செய்யத் தொடங்கினார்கள் கலைஞர்கள். (நல்ல கலைஞர்கள் முழுநேரக் கலைஞராகவே வாழ அனுமதிப்பதில் தமிழ்ச் சமூகம் சுணக்கம் காட்டுவதன் தொடக்கம் இதுவாகும்.
கிழார்களாகிய புதிய, படித்த, வசதி மிக்க புலவர்கள், பாணர்களை ‘இரக்கம் செய்த காலத் தொடக்கம் இதுதான். பாணர்கள் சமூகப் படியில் மிகவும் கீழாக வைக்கப்படும் தொடக்கத்தின் சித்திரம் இது.
மீன் பிடித்தல் இழிவன்று. அது உணவு தேடுதல் மற்றும் உணவைப் பகிர்தல். ஆனால் மீன்பிடிப் பாணர் இழிவு கொண்டனர். புலவர்கள் பாட்டு இயற்றுபவர், பாணர்கள் இசையோடு நிகழ்த்துபவர்கள் ஆனார்கள். பாணர்களுக் கும் புலவர்களுக்கும் பரிசளிக்கும் முறையும் வேறுபட்டது. பாணர்கள் பொற்றாமரைப் பூச்சூடினார்கள். புலவர்கள் பட்டம் பொலிந்த யானையுடன் கட்டப்பட்ட தேர் ஊர்ந்து சென்றார்கள். கபிலர் தன்னை அந்தணன் என்று பெருமை கொள்கிறார். தன்னைப் பொய்யா மொழிப்புலவன் என்கிறார். தன்னை (புறம் 121) மற்றவர்களோடு சேர்த்து ஒன்றாகக் காண வேண்டாம் என்கிறார் பெரியவர்.
பாணர்கள் நாடாண்டிருக்கிறார்கள். பாணன் நன்னாடு என்கிறது அகம். பாணர்கள் எப்போதும் குழுவாகவே தம் கலைப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்கள். எப்போ தும் பசியோடு இருக்கும் மனிதர்களுக்கு எடுத்துக்காட்டாகப் பாணர்கள் சொல்லப்பட்டார்கள். எப்போதும் வறுமை; வறுமையர் பாணர் என்கிறது குறுந்தொகை. செல்வத்தை அவர்கள் கண்டதுண்டு என்றாலும் செல்வம் அவர்களிடம் நிற்பதில்லை. அரசர்களோடும் உண்பார்கள்; உப்பு இல்லாமல் கீரையைச் சமைத்து உண்ணவும் செய்தார்கள்.
பாணர்கள் படைப்புகள்
சங்க இலக்கியப் பாடல்களைப் பாடியவர்களில் முக்கியமானவர்கள் பாணர்கள். அவர்களது பாடல்களில் பண் இருக்கும் என்றாலும் பாணர் படைப்பு எது? புலவர் படைப்பு எது? கிழார்கள் படைப்பு எது என்பதைப் பிரித்தரியும் முயற்சி தொடங்கப்பட வேண்டும்.
ஆசிரியரின் பெரும்பணி
சங்கத்துக்குப் பிறகு பாணர் மரபு எப்படி எவ்வகையில் தொடர்ந்தது எனும் ஆய்வு இந்த நூலில் முக்கியப் பகுதியாகும். சில அடையாளங்கள் தருகிறார். அரச அறிக்கைகளை முதலில் பாணர்கள் வெளியிட்டார்கள்.
பின்னர் அப்பணியை வள்ளுவர்கள் எனப்பட்டவர்கள் செய்தார்கள். பாணர்கள் வழிவந்தவர்களே அவர்கள். வட இந்தியாவில் தொல் திராவிடப் பழங்குடிகளாக விளங்கும் கோண்டு இன மக்கள் வாழ்க்கையை ஆராய்ந்து, பாணர் இனத்தை மீட்டெடுக்கிறார் ஆசிரியர். இந்தத் திராவிட மக்களின் பாணர்கள், இப்போது பர்தான்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
இன்று தமிழகத்தில் பாணர் மரபு இருக்கிறதா? தமிழகத்துச் சாதிகள் ‘குடிப்பிள்ளைகள்’ என்று அழைத்துச் சிலரை வைத்திருக்கின்றன. இவர்களின் இன்றைய உருமாறிய பாணர்கள் என்கிறார் ஆசிரியர்.
கொங்கு வேளாளர் – முடவாண்டி (குடிப்பிள்ளை)
கைக் கோளர் – பொன்னம்பலத்தார்
பிராமணர்கள் – பீதாம்பர ஐயர்
ரெட்டி – பட்ராசு
முதலியார் – கக்கிலவன்
சக்கிலி – பொம்ம நாயுடு
பறையர் – பறைத் தொம்மன்
இசுலாமியர் – பக்கீர்
பாணர் இனவரைவியல் என்ற நூல், இதன் படைப்புப் பயணத்தில் சில கருத்துகளை முன்வைத்திருக்கிறது. இந்தத் துறையில் மேலும் மேலும் ஆய்வுகள் நிகழ்த்தப்பட வேண்டும். ஆய்வாளர்கள் வருவார்கள். வருபவர்க்கு, பக்தவத்சல பாரதி நிறைய தரவுகளை, திக்குகளைக் காட்டிக்கொண்டு இருப்பார் சுடரும்...
எண்ணங்களைப் பகிர: prapanchan@gmail.com
முக்கிய செய்திகள்
இலக்கியம்
16 hours ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
3 days ago
இலக்கியம்
3 days ago
இலக்கியம்
3 days ago
இலக்கியம்
4 days ago
இலக்கியம்
4 days ago
இலக்கியம்
4 days ago
இலக்கியம்
5 days ago