த
ஞ்சை மாவட்டத்தைப் பின்புலமாகக் கொண்டு வண்டல் இலக்கியம் படைத்துவரும் சி.எம்.முத்து, இதுவரை பத்து நாவல்களும் 300 சிறுகதைகளும் எழுதியிருக்கிறார். காவிரிப் படுகையின் விவசாய வாழ்வு, விவசாயிகளின் வலிமை, வலி ஆகியவற்றை முன்வைக்கும் இலக்கிய ஆவணங்களாக முத்துவின் படைப்புகள் திகழ்கின்றன. அவரின் சமீபத்திய நாவல் ‘மிராசு’. தஞ்சைக் கிராமங்களில் மிராசு என்ற சொல்லுக்கு அரட்டல், உருட்டல், மிரட்டல் என்றெல்லாம் அர்த்தங்கள் உண்டு. தஞ்சை மண்ணின் மூன்று தலைமுறை வாழ்க்கையைப் பேசுகிறது இந்த நாவல்.
தஞ்சை மாவட்டம் என்றாலே ஏழை எளிய விவசாயிகளை விடவும் வசதி படைத்த மிட்டா மிராசுகளின் பிம்பமே தூக்கலாகத் தெரியும். சாதியின் பெயரால் ஒரு பெரும் வர்க்கத்தைத் தள்ளிவைத்து அவர்களை அடிமைகளாக்கி அவர்களின் உழைப்பை மட்டும் சுரண்டி வாழ்ந்த பெருமையைப் பேசவில்லை இந்த நாவல். மிராசுதாரர்களின் மேட்டுக்குடி மனோபாவத்தையும், உயர் சாதி ஜபர்தஸ்துகளையும் உயர்த்திப் பிடிக்கவில்லை. மூன்று தலைமுறைகளில் தஞ்சை மக்கள் வாழ்க்கையை அந்த வாழ்க்கையின் ஊடாக அவர்களில் ஒருவராய்ப் பங்கெடுத்து, உள்ளது உள்ளபடி சித்தரிக்கிறார் சி.எம்.முத்து.
மிராசு என்ற சொல்லை உச்சரித்து அது உண்டாக்கும் அதிர்வுகளை சி.எம்.முத்து தன் முன்னுரையில் பதிவுசெய்கிறார். “தஞ்சை மாவட்டத்தில் உள்ள சின்னஞ்சிறிய கிராமங்களில் வாழ்ந்துகொண்டிருந்த ஏராளமான மிராசுதாரர்களைப் பற்றி அறிந்துவைத்திருக்கின்றேன். அவர்களின் வாழ்க்கைமுறை அபாரமானது. ரசிக்கத்தக்கது. மிடுக்கானது. கொஞ்சம் சூசகமானதும்கூட. அப்படி வாழ்ந்துகொண்டிருந்த ஒரு மனிதரின் வாழ்க்கையே இந்த நாவல். அவர்களின் வாழ்க்கை படாடோபமானது. நூதனமான செருக்குமிக்கதும்கூட. இதைச் சொல்லியே தீர வேண்டும் என்ற தீராத முனைப்புடன்தான் இந்த நாவலை எழுத முயன்றேன்.”
சேது காளிங்கராயர் ராஜாமணி தம்பதியரின் வாழ்க்கைதான் இந்த நாவல். ஒரு மிராசுதாரரின் ஒரு நாள் வாழ்க்கை தொடங்குவதைச் சித்தரிக்கும் விதத்திலேயே பாத்திரங்களின் தன்மையை விளக்கிவிடுகிறார். சேது காளிங்கராயரின் பழமையில் ஊறிய போக்கையும், கிராமத்துக்குப் பள்ளிக்கூடம் வேண்டும் என்று அவர் மனைவி ராஜாமணி முன்வைக்கும் யோசனைகள் மூலம், பழமையை மீறிய புரட்சிச் சிந்தனைகள் அடுக்களைப் புகைபோல் எழுவதையும் சித்தரித்திருக்கிறார். சேது காளிங்கராயர் ஒரு மிராசுதாரராக வாழ்ந்தாலும் அவர் தாத்தா காலத்தில் இல்லாத மாற்றங்கள் தன்னைச் சுற்றி நிகழத் தொடங்கியிருப்பதை ஒருவித பயத்தோடு கவனிக்கிறார். அரசியல், பொருளாதாரம், நிலவுடைமை குறித்து ஒடுக்கப்பட்ட மக்களிடம் ஏற்பட்டுவரும் விழிப்புணர்வுடன் உடன்படுவதா அல்லது அதனுடன் மல்லுக்கட்டுவதா என்று குழம்பிப்போகிறார். ஊருக்குள் யார் வாழ்ந்தாலும் செத்தாலும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் சுகமாக வாழும் காளிங்கராயர், தமது சொத்துக்களைப் பராமரிக்கவும் பாதுகாக்கவும் பயன்படும் தொழுவத்து மாடுகளாகவே பண்ணையாட்களையும் பாவிக்கிறார்.
பனைமரத்துக் கள்ளும் வெடக்கோழிக்கறியும் தொடுப்பாக ஒரு பெண்ணும் வைத்துக்கொண்டு டாம்பீகமாக வாழும் மிராசுத்தனத்துக்கு எவ்வித பங்கமும் வந்துவிடக் கூடாதே என்பதுதான் அவர் கவலை. காளிங்கராயரை மனிதத்தன்மையற்றவராகவும் கருத முடியவில்லை. கல்லிடுக்கில் முளைத்துத் தலைகாட்டும் சிறு செடிகளைப் போல சிலசமயம் அவருக்குள்ளும் கருணை பூக்கிறது. தனது குழந்தைகளைப் படிக்கவைக்காதது பற்றியோ, தானே படிக்காதது பற்றியோ அவருக்குக் கவலை இல்லை. மிராசுதாரராகிய தனக்கு உதவ கணக்குப்பிள்ளையும் கார்வாரியும் இருப்பதைக் கெளரவச் சின்னமாக கருதுகிறாரே ஒழிய, தனக்குக் கல்வியறிவு இல்லை எனும் இழிவு அவரை உறுத்துவதில்லை.
காங்கிரஸ் கட்சியும், திராவிட இயக்கமும் ஏற்படுத்தும் தாக்கங்கள் இந்தளூர் கிராமத்தை எட்டிப்பார்க்கவில்லையா அல்லது அவை குறித்த பதிவுகள் போதுமான அளவு இடம்பெறவில்லையா என்று தெரியவில்லை. ‘மிராசு’ நாவலின் மற்றொரு முக்கிய அம்சம் மூன்று தலைமுறைகளாகக் கிராமங்களில் ஏற்பட்டுவரும் படிப்படியான தளர்ச்சியும், வேளாண்மை வீழ்ச்சியும் மிகச் சிறப்பாகப் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. காவிரிப் படுகை, பாசனமின்றி பாலைவனமாகிக்கொண்டிருக்கும் தஞ்சை மாவட்டத்தில் இன்று பறவைகளையும் அந்த மண்ணுக்கே உரிய மனிதர்களையும் காண முடியவில்லை. அறுவடை காலத்தில் காக்காய், குருவி, நார்த்தம் பிள்ளை, தவிட்டுக் குருவி, அரிக்காடை, உள்ளான், சூத்தாட்டிக் குருவி போன்றவை ஏராளமாக வரும். அவற்றின் பெயர்களை முத்து குறிப்பிடுவது அருமை. எல்லாக் கிராமவாசிகளும் பறவைகளின் பெயர்களையும் பழக்கவழக்கங்களையும் நன்கு அறிந்தவர்கள்தான்.
அறுவடை சமயத்தில் வரும் பலவிதமான மனிதர்களை சுவாரஸ்யமாகச் சொல்லிச்செல்கிறார். உடுக்கை அடிப்பவர், குடுகுடுப்பைக்காரர், கிளி ஜோசியம் பார்க்கிறவர், கம்பங்கட்டிக்காரர், நரிக்குறவர்கள், பொம்மை விற்பவன், பம்பாய் மிட்டாய்க்காரன், தோல் பொம்மை நாடகம் போடுகிறவர் என்று இப்படிப் போகிறது அவரது நீண்ட விவரணை. முதன்முதலாக கிராமத்துக்கு வரும் பேருந்து பற்றிய விவரணை ரசிக்கவைக்கிறது. அதிசயப் பொருளாகக் காட்சியளிக்கும் பேருந்து பற்றி நகைச்சுவையோடு விவரிப்பது நயம்.
சேதுகாளிங்கராயர், ராஜாமணி தம்பதியரின் மரணத்தோடு நாவல் முடிந்துவிட்டதாகத் தோன்றினாலும், முடிந்துவிடவில்லை. நம்ப முடியாத மாற்றங்களுடன் பெருக்கெடுத்தோடும் வாழ்வெனும் மகாநதி மிராசுதாரர்களையும், மிராசுத்தனத்தையும் அடித்துக்கொண்டு போகிறது. மாற்றங்கள் அவர்களின் வாரிசுகளையும் விட்டுவைக்கவில்லை. அவர்களும் வாழ்கிறார்கள். ஆனால், அந்த வாழ்க்கை குறித்து ‘மிராசு’ நாவல்போல் சொல்லும்படியாக ஏதும் மிஞ்சுமா என்ற ஏக்கத்தை ஏற்படுத்துகின்றன நாவலின் முடிவுறாத பக்கங்கள்.
- தஞ்சாவூர்க் கவிராயர்,
தொடர்புக்கு:
thanjavurkavirayar@gmail.com
மிராசு
சி.எம்.முத்து
அனன்யா பதிப்பகம்
தஞ்சாவூர் - 5, விலை ரூ.780/-
தொடர்புக்கு: 9442346504
முக்கிய செய்திகள்
இலக்கியம்
3 days ago
இலக்கியம்
3 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
11 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
20 days ago
இலக்கியம்
20 days ago
இலக்கியம்
20 days ago
இலக்கியம்
2 months ago