ப
டைப்பாளராக அறியப்படுபவர் கடற்கரய் என்னும் கடற்கரய் மத்தவிலாச அங்கதம். பத்திரிகையாளர். வரலாற்று ஆய்வில் தீவிரச் செயல்பாட்டாளர். கடந்த 2016-ம் ஆண்டு ஏ.கே.செட்டியார் அவர்களின் படைப்புக்களைத் தேடிச் சிறப்பாகப் பதிப்பித்துக் கவனிக்கப்பட்டும் வரலாற்றாளராக வெளிப்பட்டவர். இப்போது நாம் பேச எடுத்துக் கொள்ளும் ‘பாரதி விஜயம் ’ நூலின் மூலம் துல்லியம் தேடும், உண்மைகள் சார்ந்து உழைக்கும் ஆய்வாளராகத் தன்னை நிறுவிக் கொள்கிறார்.
‘பாரதி விஜயம்’... மகாகவி பாரதியின் சுற்றத்தார், உறவுகள், நண்பர்கள், சக இருதயர்கள் என்று பாரதியை நெருங்கி அறிந்தவர்கள், பாரதியைப் பற்றி எழுதிய குறிப்புகள், கட்டுரைகள் கொண்டு சேர்த்து பாரதியைச் சொற்களால் தீட்டிக் காட்டுகிற மிகப்பெரிய முயற்சி இது. பாரதியின் வாழ்க்கைக்கு வடிவம் கொடுக்கிற பெரிய உழைப்பு. பாரதியின் மன அவஸ்தைகள், நெருக்கடிகள் ஆகியவற்றை உலகுக்கு உரத்துச் சொல்கிறது, இந்த கட்டுரைத் தொகுப்பு. பாரதிக்குச் சகாவாக, அருகில் இருந்து பார்த்தவர்கள் பேச்சில் இருந்து பாரதியை உணர வைக்கும் முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறது இந்த ‘பாரதி விஜயம்’.
காலப் பிழைகள் நீக்கம்
’பாரதி விஜயம்’ மகாகவியுடன் கூடி வாழ்ந்தவர்களின் குறிப்புகள் என்பதே பதிப்பாசிரியர் வைத்த பெயர். கூடி வாழ்ந்தவர்கள் என்றாலும் நினைவுகளைப் பகிரும்போது, தேதி முதல், ஆண்டு முதல், சம்பவங்கள் முதல் பலதை மாற்றிச் சொல்லி விடுகிறார்கள். சம்பவம் நடந்து பல பத்தாண்டுகள் பிறகு பேசும்போது இவை நிகழ்ந்து விடுகின்றன.
உதாரணத்துக்கு, பாரதியின் பால்ய கால நண்பர் சோமசுந்தர பாரதி, மகாகவி காசிக்குப் போனது 1901 என்கிறார். உண்மையில் அது 1898-ல். பாரதி, புதுச்சேரியில் வாழ்ந்தது பத்தாண்டுகள். பாரதி பற்றி எழுதிய பலர் 12 ஆண்டுகள் என்றனர். இதுபோன்ற காலப் பிழைகளை நீக்கிப் புதிய தலைமுறைக்கும் பாரதியை சரியாக அடையாளம் காட்டுகிறார் கடற்கரய்.
காந்தியைச் சென்னையில் சந்தித்து பாரதி, திருவல்லிக்கேணி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்த முக்கிய சம்பவமானது என்றைக்கு? எந்தத் தேதியில் நிகழ்ந்தது என்பதிலும் கூட குழப்பம் நிலவுகிறது. தமிழர்களாகிய நாம் வரலாற்றை அவ்வண்ணம் வளர்க்கிறோம். இரண்டாயிரம் ஆண்டு மொழியை வண்ணமும் தொனியும் மாற்றி புதுக்கியதோடு, புதிய சிந்தனை, புதிய மரபு படைத்த மகாகவிக்கு நாம் செய்யும் மரியாதை இது.
சித்திரம் தீட்டிய சக இருதயர்
வரகவி சு.சுப்ரமணிய பாரதி, ஏ.வி.சுப்ரமணிய ஐயர், என். நாகசாமி, வெ.சாமி நாத சர்மா, டி.எஸ். சொக்கலிங்கம், சுந்தரேசைய்யர், சுத்தானந்த பாரதி, வ.சுப்பையா, ஓவியர் ஆர்யா, வ.உ.சி., எஸ்.ஜி.இராமானுஜலு நாயுடு, நாமக்கல் கவிஞர், உ.வே.சா., வையாபுரிப் பிள்ளை, பாரதிதாசன் முதலான 61 பேர் பாரதியை எழுதியிருக்கிறார்கள். அத்தோடு கட்டுரை, கட்டுரையாளர் சுயகுறிப்புகள், அரிய புகைப்படத் தொகுப்பு, சர்ச்சைகள், வானொலிப் பேட்டிகள், சரியான வாழ்க்கைக் குறிப்பு, பயன்பட்ட நூல் பட்டியல் என்று ஒரு முழுமையான 1,039 பக்க நூலாக, மிக அழகிய, அக்கறைக்கூடிய தொகுப்பாகச் ‘சந்தியா பதிப்பகம்’ இதனை (புதிய எண் 77, 53-வது தெரு, 9-வது அவென்யூ, அசோக் நகர், சென்னை- 83) வெளியிட்டுள்ளது.
வைரம் நிகர்த்த வரிகள்
பாரதியே தன் சுயசரிதை பொதிந்த படைப்புகளை வழங்கியிருக்கிறார். கனவு (1910), சின்னச்சங்கரன் கதை (1913) என்பவை அவை. இதில் சி.ச. கதையில் ஒரு நாலு வரி.
பாரதி தமிழர்களுக்கு என்ன அளித்தான் என்பதற்கு இதுவே பதில்.
தான் பிறந்த ஊரான எட்டயபுரம் குறித்து இப்படி எழுதினார் பாரதி:
‘தென்பாண்டி நாட்டிலே பொதிய மலைக்கு வடக்கே இருபது காத தூரத்தில் பூமி தேவிக்கு திலகம் போல் (ஒரு) நகரம். ஜலம் குறைவு. பணம் குறைவு. நெல்விளைவு கிடையாது. வாழை, தென்னை, மா, பலா, இவையெல்லாம் வெகு துர்லபம். பூக்கள் மிகவும் குறைவு...’
ஓர் ஊரைப் பற்றி வர்ணிக்கிற, ஊருக்கும் இன்றியமையாதவை பற்றிய பட்டியலில் பூக்களைச் சேர்த்த மாமனிதன் நம் மண்ணில் வாழ்ந்தவன்.
என்.நாகசாமி எழுதிய கட்டுரை
செங்கோட்டையில் பாரஸ்ட் ரேஞ்சராக இருந்த சுமார் 25 வயதுள்ள ஏழைப் பிராமணர், புதுவையில் இருந்து சென்ற எல்லாப் பத்திரிகைகளையும் துண்டுப் பிரசுரங்களையும் படித்துவிட்டு, உணர்ச்சி மேலிட்டு, சிறையில் சிதம்பரம் பிள்ளையும், சுப்பிரமணிய சிவாவும் ‘வதைக்கப்’பட்டதைக் கேள்விப்பட்டு உணர்ந்து, திருநெல்வேலி மாவட்டம் கலெக்டர் ஆஷ் துரையை பழிவாங்கியே தீரவேண்டும் என்று முடிவு செய்து புது வையில் உள்ள தர்மாலயம் வந்து சேர்ந்தார். தர்மாலயம் வாஞ்சியை மிகுந்த அனுதாபத்துடன் வரவேற்றது. வ.வே.சு.ஐயர் இந்த ஒரு மாதமும் தினம் தினம் தர்மாலயம் வந்து வாஞ்சிக்குத் தனியே போதித்து வந்தார்.
அதிகாலையில் சுமார் நாலு மணிக்கு ரிவால்வருடன் நான் வாஞ்சியை அழைத் துக் கொண்டு போய் புதுவைக்கு அருகே உள்ள கரடிக்குப்பம் ஓடை வெள்ளவாரியில், கை நடுங்காமலும் குறி தவறாமலும் சுடுவதற்குக் கற்றுக் கொடுத்தேன். பிரான்சில் இருந்து அம்மையார் காமா அனுப்பிய பிரெவுனிங் பிஸ்டல் வந்துவிட்டது. 1911-ம் ஆண்டு இறுதியில் ஒருநாள் இரவு சுமார் 11 மணிக்கு நானும் கண்ணுப்பிள்ளையும் (தமிழாசிரியர், பாரதி நண்பர், வாஞ்சியின் பயிற்சியாளர்) கால்நடையாகப் புறப்பட்டு, வாஞ்சியை ரயில் ஏற்றி அனுப்பினோம்...
ரா.கனகலிங்கம் எழுதுகிறார்
அது (வீடு) ஒரு செட்டியாருக்குச் சொந்தம். அவர் பெயர் ஐயாக்கண்ணு செட்டியார். அவர் குள்ளமாக இருப்பார். தயாள குணம் உள்ளவர். அவர் பாரதியாரிடம் குடிக்கூலி கேட்பதே விநோதமாக இருக்கும். சந்தடி செய்யாமல் அடிமேல் அடி எடுத்து வைத்து வருவார். கேட்க மாட்டார். மவுனமாக அந்தச் சைகையை அறிந்துகொண்டே பாரதியார் பணம் கொடுத்துவிடுவார். ஆம். பணம் கையில் இருந்தால். ஆனால், இப்படி அடிக்கடி நிகழ்வதில்லை. பணம் இல்லாவிட்டால் பாரதியார் செட்டியாரைப் பார்த்து, ‘‘செட்டியாரே... இன்னும் வந்த சேர்ந்தபாடில்லை. ஒரு வாரம் கழித்து வாருங்கள்’’ என்று சொல்வார். புதுவையில் பாரதியார் பட்ட கஷ்டங்களே ஒரு பாரதமாகும். கட்டுரை, கவிதை எழுத வேண்டி இருக்கும். வெள்ளைக் காகிதம் இராது. கையில் காசும் இராது. அப்படித் தவிக்கும் நேரத்தில் பழைய இந்து, சுதேசமித்திரன் பத்திரிகைகள் உதவி செய்யும். அவற்றைக் கட்டாகக் கட்டிக் கொடுத்து அதை மளிகைக் கடையில் விற்று வெள்ளைக் காகிதம், ‘ரிலீப் நிப்’ முதலியவைகளை வாங்கிவரச் சொல்வார்.
வ.ராமஸ்வாமி அய்யங்கார் எழுதி இருப்பது
1919-ம் வருஷம் காந்தி சென்னைக்கு வந்தார். அப்போது ராஜாஜி கத்தீட்ரல் ரோடு இரண்டாம் நம்பர் பங்களாவில் குடி இருந்தார். அந்த பங்களாவில்தான் காந்தி வந்து தங்கினது. ஒருநாள் மத்தியானம் சுமார் 2 மணி இருக்கும். காந்தி வழக்கம்போல திண்டு மெத்தையில் சாய்ந்து கொண்டு வீற்றிருந்தார். அவர் சொல்லிக் கொண்டிருந்ததைப் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு மகாதேவ தேசாய் எழுதிக் கொண்டிருந்தார். பாரதியார் மடமடவென்று வந்தார். பாரதி வணங்கிவிட்டு காந்திக்குப் பக்கத்தில் மெத்தையில் உட்கார்ந்து கொண்டார்.
பாரதியார்: மிஸ்டர் காந்தி. இன்றைக்குச் சாயங்காலம் ஐந்தரை மணிக்கு நான் திருவல்லிக்கேணி கடற்கரையில் ஒரு கூட்டத்தில் பேசப் போகிறேன். அந்தக் கூட்டத்துக்குத் தாங்கள் தலைமை வகிக்க முடியுமா?
காந்தி: மகாதேவபாய்! இன்றைக்கு மாலையில் நமது அலுவல்கள் என்ன?
மகாதேவ்: இன்றைக்கு மாலை ஐந்தரை மணிக்கு நாம் வேறொரு இடத்தில் இருக்க வேண்டும்.
காந்தி: அப்படியானால் இன்றைக்குத் தோதுபடாது. தங்களுடைய கூட்டத்தை நாளைக்கு ஒத்திப்போட முடியுமா?
பாரதியார்: முடியாது. நான் போய் வருகிறேன். மிஸ்டர் காந்தி,. தாங்கள் ஆரம்பிக்கப் போகும் இயக்கத்துக்கு நான் ஆசிர்வாதம் செய்கிறேன்!
பாரதியார் போய்விட்டார். பாரதியார் வெளியே போன தும் ‘இவர் யார்?’ என்று காந்தி கேட்டார்.
ரெங்கசாமி ஐயங்கார் பதில் சொல்லவில்லை. சத்தியமூர்த்தி வாய் திறக்கவில்லை. ராஜாஜிதான் ‘அவர் எங்கள் தமிழ்நாட்டுக் கவி’ என்று சொன்னார்.
காந்தி: இவரைப் பத்திரமாக பாதுகாக்க வேண்டும். இதற்குத் தமிழ்நாட்டில் ஒருவரும் இல்லையா?
எல்லோரும் மவுனமாக இருந்துவிட்டார்கள்.
வ.ரா-வின் ஆதங்கம் நமக்குப் புரிகிறது. காலமும் சூழலும் அப்படித்தான் இருந்தது. பாரதி இயலில் தம்மைச் சமர்ப்பணம் செய்துகொண்ட பலர், உருவானார்கள். இப்போது அவர்களில் ஒருவராக கடற்கரய்.
‘பாரதி விஜயம்’ என்கிற இந்த நூல் கடற்கரையின் பெரும் பணி.
ஒரு மகத்தான கவியை இளம் தலைமுறையினருக்கு சரியாக, பிழையற்ற முறையில் அறிமுகம் செய்வதில் ‘பாரதி விஜயம்’ பெரும் பங்கு பெறுகிறது.
- சுடரும்...
எண்ணங்களைப் பகிர: writerprapanchan@gmail.com
முக்கிய செய்திகள்
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
7 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
19 days ago
இலக்கியம்
19 days ago