கொத்துக் கொத்தாகத் தொங்கிக் கிடக்கும் கதைகளில் இடித்து, நசுங்கி, கதையாகவே நகர்கிறது கைக்குள் அடங்காத வாழ்க்கை. எவ்வளவு அள்ளினாலும் குண்டுமணியளவும் குறையாதவை அவை. தொடர்ந்து கேட்டும் வாசித்தும் தீர்ந்துவிடாத அவற்றை இன்னும் இன்னுமாகத் தேடிக்கொண்டிருக்கிறது, கதை மனம். புராணம், தொன்மம், அனுபவம், புனைவு எனப் பல்வேறு வழிகளில் விரவிக்கிடக்கும் கதைகளிலிருந்து எழுந்து வந்துகொண்டே இருக்கின்றன, தீராத கதைகளின் தீவிரமான கதாபாத்திரங்கள்.
அவை அதிசயமாகவும் அதிசயமற்றதாகவும் சுகமாகவும் சுகமற்றதாகவும் இருக்கின்றன; வியப்பு, அச்சம் விரவி விதம்விதமாக அலைந்தும் கொண்டிருக்கின்றன. அம்மாதிரியான ஒரு கதைதான் என்.ராமின் ‘மாயாதீதம்’ நாவல். இந்த நாவலில் வரும் விஸ்வரூபக் குதிரை ஒன்று கிடைத்தால், அவற்றின் வழி ஒரு குத்துக் கதையை அள்ளி வர முடியும்.
யதார்த்தத்தின் வழி மாயத்தை நிகழ்த்துகிற இக்குறுநாவல், பார்வை மங்கிவிட்ட ஒரு குழந்தையிடம் தொடங்குகிறது. ஓவியனான தன் மகனை, தனது தம்பி வீட்டுக்கு அழைத்துவருகிறார் ஒரு தந்தை. பெரும் வல்லமை கொண்ட கோட்டை மாரியம்மன், தன் அருளால் பார்வையைச் சரியாக்குவாள் என நம்பி அவர்கள் வருகிறார்கள். கண்களை மாரியம்மன் குணமாக்கும்வரை, சோழன் கட்டி வைத்திருக்கிற கொட்டக்கார மடத்தில் தங்குகிறார்கள். அவர்கள் பசியாற அருகில் இருக்கும் கிராமத்தில் அமுதெடுக்கிறார்கள். இது ஒரு தொன்ம நம்பிக்கை. இதன் வழி காலத்தில் பின்னோக்கி நம்மை அழைத்துச் செல்கிறது, நாவலின் முதல் பகுதிக் கதை.
மருத்துவர்களாலும் மருந்துகளாலும் கைவிடப்பட்ட நிலையில், மனிதன் அடுத்து நம்புவது தெய்வத்தை என்கிற நிலையில், மாயத்தின் கைப்பிடித்து கோட்டை மாரியம்மனிடம் இந்த நாவல் அழைத்துச் செல்கிறது. பார்வையற்றவர்கள் பற்றி இதற்கு முன் பேசிய படைப்புகள், அவர்களின் வலியை ஆழமாகச் சொல்லியிருக்கின்றன. இது, வலியைக் கடந்து அவர்களது தனித்துவமான உலகத்தைக் கண் முன் நிறுத்துகிறது. இது நாவலின் சிறப்பான அம்சம்.
திருப்பூருக்கு அருகில் நிகழும் இந்தக் கதை பிறகு பம்பாய்க்கு ரயில் ஏறுகிறது. அவனுக்குப் பார்வை கிடைக்கிறது. பம்பாயில் கலை இயக்குநராகிறான். தன்னை நம்பிய அத்தை மகளுக்குக் கருவைக் கொடுத்துச் சூழ்நிலையால் கைவிடுகிறான். அந்த அத்தை மகளை, அவனது சித்தி மகன் மணக்கிறான். இவன் குழந்தைக்கு அவன் தந்தையாகிறான். இப்படிக் கதை எங்கெங்கோ சென்றாலும் கதை தொடங்கிய கோயிலில், மகனைத் தோளில் சுமந்தபடி, தம்பி அமுதெடுக்கச் செல்வதாக வந்து முடிகிறது.
இதற்கிடையே பூசாரி, ‘பீடி இருக்கா அப்பனே’ என அடிக்கடி விளிக்கிற தேசாந்திரக்காரன், எதிர்மீன் பிடித்துக் காதலில் விழும் பார்கவி எனத் தொடரும் கொங்கு மண்ணின் மனிதர்கள் நம்மோடு உலவத் தொடங்கிவிடுகிறார்கள். அல்லது நாம் அவர்களோடு உறவாடத் தொடங்குகிறோம். கதை நடக்கும் காலம் தெரியவில்லை என்றாலும், காலத்துடன்தான் கதை சொல்ல வேண்டுமா என்ன?
பரம்பரைப் பார்வை நோயின் வழியே ஸ்ரீராம் அழைத்துச் செல்லும் கதைக்குள் அவர் காட்டும் நிலப்பரப்பும் கதாபாத்திரங்களும் அக்கதாபாத்திரங்களின் வழி பேசுகிற விஷயங்களும் ஒரு முதிர்ந்த கதை சொல்லியின் முன்னே, ஆர்வத்துடன் முகம் பார்த்து அமர்ந்திருக்கிற சிறுவனின் மனநிலையைத் தருகின்றன.
கொங்கு வட்டார வழக்கு அதிகம் இல்லை என்றாலும் அந்த வாசனையை, அதன் அழகை, ராமின் வார்த்தைகளில் உணர்ந்துவிட முடிகிறது. வாதநாராயண மரத்தின் நுண் பழுப்பிலைகள், வனாஞ்சிட்டுகள் கூடு கட்டிய, பசுங்குருத்திட்ட குடைச் சீத்தை மரங்கள் என இக்குறுநாவலில் ஆழ்ந்து ரசிக்க வைக்கும் இடங்கள் அதிகம்.
அந்த ரசனையின் வழி அவர் காட்டுகிற, வேலா மரங்களில் வெயில் பூச்சிகள் கத்தும் ஓசையையும் கேட்டுவிட முடிவது இந்நாவலின் சிறப்பு.
மாயாதீதம்
என்.ஸ்ரீராம்
தமிழ்வெளி பதிப்பகம்
விலை: ரூ.120
தொடர்புக்கு: 9094005600
முக்கிய செய்திகள்
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
15 days ago