எ
ல்லா மனுஷங்களுக்கும் வாழ்க்கையைத் திரும்பிப் பார்ப்பதில் ஒரு அலாதி பிரியம். அதிலும் சொந்த ஊரை நினைத்துப் பார்ப்பதில் தனீ சுகம். ‘‘இப்படிக் கசகசன்னு கட்டிடங்களா வந்துருச்சு.. அப்போல்லாம் இப்படியா இருந்துச்சு’’ என்று அங்கலாய்த்துக் கொள்வார்கள். 70 வருடங்களுக்கு முன்பு நெல்லை எப்படி இருந்தது என்று பார்க்க ஆசைப்படுபவர்கள் இசக்கி அண்ணாச்சியின் உடையார்பட்டி ஸ்டூடியோவுக்குத்தான் செல்ல வேண்டும்.
இசக்கி அண்ணாச்சி அந்தக் காலத்தில் திருவனந்தபுரம் ஓவியக் கல்லூரியில் படித்தவர். பிரபல கலைஞர் ராய் சவுத்திரியிடம் ஓவியம் கற்றவர். எழுத்தாளர் தொ.மு.சி.ரகுநாதன், நெல்லையில் ‘சாந்தி’ பத்திரிகை நடத்தியபோது, அதில் முகப்புப் படங்கள் வரைந்திருக்கிறார். அந்தக் கால கம்யூனிஸ்ட் தலைவர் சிந்துபூந்துறை சண்முகம் அண்ணாச்சி நடத்திவந்த நெல்லை பப்ளிசிங் ஹவுஸ் சோவியத் மொழிபெயர்ப்பு நூல்களுக்கும் படங்கள் வரைந்துள்ளார். அவர் வீடு தாமிரபரணி ஆற்றங்கரையான சிந்துபூந்துறை அருகில் உள்ள உடையார்பட்டியில் உள்ளது. சிந்துபூந்துறையில் உள்ள ஆற்றங்கரை படித்துறையில் பூக்கள் சிந்திக் கிடக்குமாம் ஒரு காலத்தில். அதனாலேயே இந்தப் பெயர் வந்தது.
இயல்பிலேயே ஒதுங்கி வாழும் தன்மை கொண்டவர் இசக்கி அண்ணாச்சி. நெல்லையின் தொன்மை முகங்கள் எல்லாம் ஃபிலிம் நெகடிவ்களாய் அவரது உடையார்பட்டி ஸ்டூடியோவில் இருக்கும். அவை ஒழுங்கற்ற ஒரு ஒழுங்கில் இருப்பதுபோலவே படும். ஒருபக்கம் புத்தகங்களும், இன்னொரு பக்கம் அட்டைப் பெட்டிகளில் குமிந்து கிடக்கும் நெகடிவ் ஃபிலிம்களுமாய் இறைந்து கிடக்கும். எதை சொல்லிக் கேட்டாலும், அவர் கச்சிதமாய் அடுத்த நொடியில் எடுத்துவிடுவார். ஆனால், அவ்வளவு லேசில் எல்லாம் அவரிடம் எந்தவொரு படத்தையும் வாங்கிவிட முடியாது.’’ ‘ஆதிச்சநல்லூரும் பொருநை நாகரீகமும்’, ‘நம் நாட்டுக் கப்பல் கலை’, ‘தமிழ்நாட்டுத் திருவிளக்குகள்’ போன்ற நூல்களை எழுதிய தமிழறிஞர் சாத்தான்குளம் அ.ராகவன் இவரது நெருங்கிய நண்பர். ராகவன் ஒரு கம்யூனிஸ்ட் என்பது பலரும் அறிந்திராத செய்தி.
அவரது ‘தமிழ்நாட்டு அணிகலன்கள்’ என்ற நூலுக்கு முகப்புப் படம் வரைந்து தரும்படி இசக்கி அண்ணாச்சியிடம் கேட்டிருந்தார். படத்துக்காக நடையாய் அலைந்தார்.. ஒருநாள், ராகவன், இசக்கி அண்ணாச்சியின் வீட்டுக்கே வந்து, இரவு முழுக்கத் தங்கியிருந்து படத்தை வாங்கிக்கொண்டு அதிகாலை 5 மணிக்குச் சென்றதை அடிக்கடி சிரிப்பாணியோடு சொல்லுவார் இசக்கி அண்ணாச்சி.
மருத மரங்கள் அணிவகுத்திருந்த நெல்லையப்பர் நெடு வீதி, குறுக்குத்துறை முருகன் கோயில், உடையார்பட்டி குளம், மண்ணாங்கட்டி சுவரால் சூழப்பட்ட வைக்கோல் போர்கள், பேருந்துகள் அவ்வளவாய் செல்லாத அகன்ற சாலையில் கரும்பு தின்றுகொண்டிருக்கும் யானை, நெல்லை புகைவண்டி நிலையம், மாட்டுவண்டியில் சாய்ந்துகொண்டு ஊர்க் கதைகள் பேசும் பாட்டையாக்கள், பேட்டை பகுதியில் கொட்டகை அடித்துத் தங்கியிருக்கும் குறவன், குறத்திகளின் வசீகரமான முகங்கள் என இவரது படங்களில் தொன்மையை ரசிக்கலாம்.
மனசுக்கு யாரையும் பிடித்து, அவர் வித்தியாசமான முகபாவம் கொண்டவராக இருந்துவிட்டால் போதும்.. அவரை உட்காரவைத்து பென்சிலால் படம் வரைந்துவிடுவார். இவருக்கு 80 வயதான போது, ‘இசக்கி - 80’ என்ற ஓவியக் கண்காட்சியை திருநெல்வேலியில், ஓவியர் கிருஷி, எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோருடன் இணைந்து நடத்திய அனுபவம் எனக்கு உண்டு. நெல்லை மக்கள் கூட்டம்கூட்டமாய் வந்து மூன்று நாட்களும் பார்த்துவிட்டு அசந்துபோனார்கள்.
புகைப்படங்கள் எடுத்து, பின்னர் ஓவியமாய் வரைவது இவரது வழக்கம். நெல்லையில் இன்று இருக்கும் பல ஓவியர்களுக்கும் வழிகாட்டியாய்த் திகழ்ந்தவர் இசக்கி அண்ணாச்சி. அவர் மறைந்து எட்டு வருடங்கள் ஆகிவிட்டன. வரும் ஜூன் மாதம் அவரது நினைவு நாளில், அவரோடு நெருங்கிப் பழகிய எழுத்தாளர் வண்ணதாசன், எழுத்தாளர் தமிழ்ச்செல்வன், ஆவணப்பட இயக்குநர் காஞ்சனை சீனிவாசன், காஞ்சனை மணி, ஓவியர் கதிர், ஓவியர் பொன். வள்ளிநாயகம், கவிஞர் கிருஷி உள்ளிட்ட பலரிடமும் கட்டுரைகள் வாங்கி ஒரு நூலாய்க் கொண்டுவரும் முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன.
நெல்லையின் அடையாளமாய் திகழ்ந்த இந்த மகத்தான கலைஞன் மீது அவ்வளவாய் வெளிச்சம் படவில்லை என்பதுதான் வேதனை.
-இரா.நாறும்பூநாதன்,
தொடர்புக்கு: narumpu@gmail.com
முக்கிய செய்திகள்
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
15 days ago