கோமல் சுவாமிநாதனை கொண்டாடிய நாடக விழா

By ச.கோபாலகிருஷ்ணன்

எழுத்து, நாடகம், சினிமா, இதழியல் என பல துறைகளில் முத்திரை பதித்தவர் கோமல் சுவாமிநாதன். இவரது 90-வதுபிறந்த நாள் தொடக்கத்தை ஒட்டி, 2 நாள்நாடக விழா, சென்னை நாரத கான சபாவில் நடந்தது. கோமல்சுவாமிநாதனின் மகள்தாரிணி, தனது கோமல் தியேட்டர் நாடகக் குழு மூலம் இதை ஒருங்கிணைத்திருந்தார்.

முதல் நாள் நிகழ்வில் ‘நாடகக் கலை -நேற்று இன்று நாளை’ என்ற தலைப்பில்கருத்தரங்கம் நடைபெற்றது. நடிகர் காத்தாடி ராமமூர்த்தி, டிவி ராதாகிருஷ்ணன், அகஸ்டோ, ரத்னம் கூத்தபிரான், ‘டம்மீஸ்’ஸ்ரீவத்சன், சதீஷ் சந்திரசேகரன், கார்த்திக் பட், இளங்கோ குமணன் உரையாற்றினர். நடிகர் டெல்லி கணேஷ் தலைமை வகித்தார்.

கருத்தரங்கில் பேசியவர்கள், குழந்தைகளை நாடகங்களுக்கு அழைத்து வர வேண்டியதன் முக்கியத்துவத்தையும் நாடகக் குழுக்கள் காலமாற்றத்துக்கு ஏற்ப தகவமைத்துக்கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்தினர்.

இரண்டாம் நாள் நிகழ்வில் கோமல்சுவாமிநாதனுடன் பழகிய ஆளுமைகள் நினைவலைகளைப் பகிர்ந்துகொண்டனர்.

நடிகர் எஸ்.வி.சேகர் பேசுகையில் “நாடகம் பார்க்க அழைத்தால் உட்கார்ந்து முழுமையாகப் பார்த்துவிட்டு எங்களிடம் வந்து நிறை குறைகளை விவாதிப்பார். அனைத்து நாடகக்குழுக்களும் வளர வேண்டும் என்று நினைத்தவர் அவர்” என்றார்.

எழுத்தாளர் திருப்பூர் கிருஷ்ணன் பேசும்போது, “நான்தினமணியில் பணியாற்றியபோது சினிமா சிறப்பிதழுக்காகக் கட்டுரைகேட்டிருந்தேன். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருந்தநிலையிலும் அவர் மகள் தாரிணியிடம் சொல்லி எழுத வைத்து 2 நாள்களில் அனுப்பினார். அடுத்த சில நாள்களில் காலமாகிவிட்டார்” என்றார் .

“கோமலின் அனைத்து நாடகங்களிலும் இயற்கை, வாழ்க்கைத் தத்துவம், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் கருத்துகள் தவறாமல் இடம்பெற்றிருக்கும்” என்றார் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்.

நடிகர் சிவகுமார் பேசும்போது, “தண்ணீர் தண்ணீர் திரைப்படமாக வெளியான பிறகும் நாடகத்தின் தாக்கம் குறையவில்லை” என்றார்.

வழக்கறிஞர், சிகரம் செந்தில்நாதன், நாடக ஆளுமைகள் குடந்தை மாலி, பூவை மணி, ராம்ஜி ஆகியோரும் கோமல் குறித்துப் பேசினர்.

இறுதி நிகழ்வாக தாரிணி கோமல் இயக்கிய ‘திரவுபதி’ நாடகம் அரங்கேற்றப்பட்டது. இளம் நாடகக் குழுக்களுக்குமேடை அமைத்துக் கொடுக்கும் விதமாக இளைஞர்கள் உருவாக்கிய ‘எழுமின்’, ‘நிழலுக்குள் நிஜம்’, ‘பயமேன்’ ஆகிய குறு நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன. விடுதலைப் போராட்ட வீராங்கனை தில்லையாடி வள்ளியம்மை குறித்த ஓரங்க நாடகமும் அரங்கேற்றப்பட்டது.

கோமல் சுவாமிநாதனை நினைவுகூர்வதற்கான இந்த 2 நாள் நிகழ்வு அவர் நேசித்த நாடகக் கலையையும் கொண்டாடுவதாக அமைந்தது. இன்றைய டிஜிட்டல் யுக இளைஞர்களுக்கு உயிரோட்டமான நாடகக் கலையின் மகத்துவத்தைக் கொண்டு சேர்த்தது பாராட்டுக்குரியது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE