நூல் நயம்: தமிழ் நாடகத் தந்தை

By செய்திப்பிரிவு

தமிழ் நாடக உலகுக்குத் தொண்டாற்றி, தமிழ் நாடக மேடைக்குச் சமூக மரியாதையை ஏற்படுத்திக்கொடுத்தவர் சங்கரதாஸ் சுவாமிகள். தமிழ்த் திரைப்படத் துறைக்கு இவருடைய நாடகங்களே அடித்தளம் அமைத்துக்கொடுத்தன. தமிழ் நாடகத் தந்தை, மறுமலர்ச்சியாளர் என்றெல்லாம் போற்றப்படும் சங்கரதாஸ் சுவாமிகள் பற்றிய நூல் ‘தமிழ் நாடக சாமி’. சங்கரதாஸ் சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றையும் தமிழ் நாடக வரலாற்றையும் இந்த நூல் விவரிக்கிறது. சங்கரதாஸ் சுவாமிகளின் வரலாறு மட்டுமல்லாமல், அவருடைய நாட்டுப்புற நாடகங்கள், நாட்டுப்புற வழக்காறுகள் இடம்பெற்றிருப்பது வாசிக்கச் சுவாரசியத்தைக் கூட்டுகிறது. - கார்த்திக்

தமிழ் நாடக சாமி
சு.சண்முகசுந்தரம்

காவ்யா வெளியீடு
விலை: ரூ.200
தொடர்புக்கு:
044-23726882 / 9840480232

கண்ணகி வழிபாடு: ஓர் ஆய்வு: கதை மாந்தர்கள் என்பதற்கும் அப்பாற்பட்ட உறவில் தமிழ் மக்களின் மனதில் நிலைத்திருப்பவர்கள் கண்ணகி, கோவலன், மாதவி ஆகியோர். சிலப்பதிகாரம், தமிழ்ச் சான்றோரின் நூலாகவே இருப்பினும், குடிமக்கள் காப்பியம் என்ற சிறப்பு அளிக்கப்பட்டதற்கு ஏற்ப, கண்ணகி-கோவலன் கதை அவரவர் குடும்பக் கதைபோல மக்களுக்கு நெருக்கமானது. இந்தச் சூழலில் கேரளப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவர் ப.ஜெயகிருஷ்ணன், கண்ணகி வழிபாடு குறித்துச் செறிவான உரையாடலை நிகழ்த்தியிருக்கிறார்.

கண்ணகி கோயில் என்றால் தேனி மாவட்டம் கூடலூர் வனப் பகுதியில் உள்ள மங்கலதேவி கோயில் என்ற புரிதலை விரிவாக்கும் வகையில், இந்நூல் பல தகவல்களைக் கொண்டுள்ளது. கண்ணகி வழிபாடு தமிழகம், கேரளம், கர்நாடகம், இலங்கை எனத் தென்னிந்தியா முழுதும் ஆழமாக நிலைபெற்றுள்ளதை நிறுவும்வகையில் ஜெயகிருஷ்ணனின் ஆய்வு அமைந்துள்ளது. - ஆனந்தன் செல்லையா

சிலப்பதிகாரமும் கண்ணகி வழிபாடும்
ப.ஜெயகிருஷ்ணன்

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி) லிட்
விலை: ரூ.210
தொடர்புக்கு:
044-26251968

வீர வரலாறு: இந்த நூல் நேதாஜியின் வாழ்க்கை, அரசியல், இந்திய தேசிய ராணுவம் போன்றவற்றை முதல் பாதியில் சொல்கிறது. மறுபாதியில் ஜான்சி ராணி பெண்கள் படை, அதில் முக்கியப் பங்குவகித்த கேப்டன் லட்சுமியின் வாழ்க்கை போன்றவற்றுடன் வீரத் தமிழ்ப் பெண்கள் குறித்தும் சுட்டிக்காட்டியிருக்கிறது.

நேதாஜியுடன் பழகியவர்களைத் தேடிக் கண்டறிந்து, அவர்கள் மூலமாகப் பெறப்பட்ட தகவல்கள், பாடல்கள், படங்கள் எனச் சுவாரசியமாக எழுதியிருக்கிறார் மா.சு.அண்ணாமலை. இவர் ஏற்கெனவே ‘இந்திய தேசிய ராணுவத்தில் தமிழர் பங்கு’, ‘தூக்கிலிடப்பட்ட இந்திய தேசிய ராணுவ வீரர்கள்’ ஆகிய நூல்களை எழுதியவர். - சுஜாதா

நேதாஜி படையில் வீரத் தமிழ்ப் பெண்கள்
மா.சு.அண்ணாமலை

விற்பனை உரிமை: கே.எம்.லலிதா
விலை: ரூ.300
தொடர்புக்கு: 98840 94301

மாசறு பொன்னே... வலம்புரி முத்தே... பாடலாசிரியராகவும் வசனகர்த்தாவாகவும் புகழ்பெற்ற கவி கா.மு.ஷெரீப், தமிழரசுக் கழகத்தின் முன்னணித் தளகர்த்தராகவும் திகழ்ந்தவர். சிலப்பதிகாரத்தின் புகார்க் காண்டத்துக்கு அவர் எழுதிய உரை முதன்முதலாக நூலாக்கம் பெற்றுள்ளது. மூன்று காண்டங்களும் முப்பது காதைகளும் கொண்ட சிலப்பதிகாரத்துக்கு முதல் ஏழு காதைகளுக்கு மட்டுமே ஷெரீப் உரை எழுதியுள்ளார். ஒவ்வொரு காதையையும் சிறுசிறு அத்தியாயங்களாக எழுதியுள்ளார். இது வழக்கமான பதவுரை-பொழிப்புரை நூலன்று.

கட்டுரைத் தொடர் என்ற வடிவத்துக்கேற்ப அத்தியாயத்தின் தொடக்கத்திலேயே பாடலைக் குறித்த அழகானதொரு அறிமுகம், அதன் பின்பே பாடல் வரிகள் இடம்பெற்றுள்ளன. பஞ்சம், பசி, நோய்களுக்கு விதிவிலக்காய்த் திகழ்ந்த புகாரின் பெருமையும் புதுமணத் தம்பதியினரின் காதல் வாழ்க்கையைப் பேசும் மனையறம் படுத்த காதை விவரிப்புகளும் சிறப்பு. இந்த நூலில் இடம்பெற்றுள்ள பாடலாசிரியர் தகுதியும் திறமும் என்ற அத்தியாயம், பாடல்கள் இயற்ற விரும்புவோருக்கான பாலபாடம். - செ.இளவேனில்

சிலப்பதிகாரம்
கவி கா.மு.ஷெரீப் (பதிப்பாசிரியர்: முரளி அரூபன்)

கல்தச்சன் பதிப்பகம்
தொடர்புக்கு: 94448 87270
விலை: ரூ.350

நினைவுகளின் ஞானம்: நினைவுகளே மனித வாழ்வை இயக்கும் கருவி. அதை எழுத்துகள் கொண்டு மீட்டியிருக்கிறார் இந்நூலாசிரியர். எழுத்து, இயக்கம் என இயங்கும் எழுத்தாளர் என்.குமாரின் அனுபவச் சாரல்கள் நம் விரல் பற்றி உள்ளிழுத்துக் கொள்கின்றன. தான் சந்தித்த, சந்திக்க நினைத்த, இணைந்து பணியாற்றிய, தான் கடந்து வந்த, தன்னைக் கடந்துபோன மனிதர்களையும் தருணங்களையும் பற்றி நம்மையும் உணரவைக்கிறது சாரம் மிகுந்த எழுத்து.

வெகு இயல்பான மொழியில் காலம் கையளிக்கும் வாழ்வின் ஞானத்தை யாருமற்ற வனத்தில் சிலுசிலுக்கும் ஒரு நீரோட்டம்போல் சரளமான மொழிநடையால் மனதில் பாய்ச்சுகிறார். எல்லாக் கட்டுரைகளிலும் சக மனிதர்களின் பேரன்பே பிரவாகமாகப் பாய்ந்தோடுகிறது. - ஜெயந்தன்

காலமே போதி மரம்
என்.குமார்

அகநி வெளியீடு,
விலை: ரூ.150
தொடர்புக்கு:
94443 60421

மொழியற்றது உணர்வுகள்: உணர்வுகளை வெளிப்படுத்த மொழிகள் வேலிகளாக இருப்பதில்லை. அதற்கு ஒரு பொதுத்தன்மை உண்டு. மனித சமுத்திரத்தின் ததும்பும் அலைகளாக உணர்வுகள் உள்ளன. மொழி அதன் வடிகால் என்பதை உணர்த்துவதாக உள்ளது. மலர்விழியின் மொழிபெயர்ப்புக் கவிதைத் தொகுப்பான ‘அகாசிய மலர்கள்’. எதுவொன்றும் தேர்வின் தன்மையைப் பொறுத்தே அதன் பலம் வெளிப்படும்.

இத்தொகுப்பில் மொழிபெயர்ப்புக்காக அவர் தேர்ந்துகொண்டுள்ள கவிதைகளின் பாடுபொருள்கள் நம் சமகாலத்தன்மையைப் பிரதிபலிப்பதாக உள்ளதால் தொகுப்போடு ஒன்றிப்போக முடிகிறது. தனித்திருப்பு, வலி பிரதானமாக இருந்தபோதும் அதன் விடுவிப்புக்கான உணர்வைப் பிரதானப்படுத்தும் கவிதைகளும் உள்ளன.

நிழலையும் அந்தரத்தில் பறக்கச் செய்யும் பறவையின் பறத்தல் லயம் பற்றிய கவிதை நமக்கும் ஒரு விடுதலை உணர்வைத் தருவதாக உள்ளது. நிக்கானோர் பர்ரா துயர்மிகு காலங்களில் மனிதர்கள் நம்மைக் கைவிடுவதில்லை என்பதைக் ‘கல்லறையில்' கவிதையில் காட்சிப்படுத்துகிறார். - ந.பெரியசாமி

அகாசிய மலர்கள்
மலர்விழி

வலசை வெளியீடு
விலை: ரூ.150
தொடர்புக்கு: 96772 50213

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

1 month ago

இலக்கியம்

1 month ago

இலக்கியம்

1 month ago

இலக்கியம்

2 months ago

இலக்கியம்

2 months ago

இலக்கியம்

3 months ago

இலக்கியம்

3 months ago

இலக்கியம்

3 months ago

இலக்கியம்

3 months ago

இலக்கியம்

4 months ago

இலக்கியம்

4 months ago

இலக்கியம்

4 months ago

இலக்கியம்

4 months ago

இலக்கியம்

4 months ago

இலக்கியம்

4 months ago

மேலும்