கவனம் ஈர்க்கும் நாவல்கள்

By Guest Author

தமிழின் காத்திரமிகு எழுத்துக்குச் சொந்தக்காரர் இமையம். மூர்க்கமும் வெள்ளந்தித்தனமும் ஒருங்கே அமைந்த கதைகளை எழுதி வருபவர். அவரது புதிய நாவல் ‘நெஞ்சறுப்பு’ (க்ரியா பதிப்பகம்) இந்தப் புத்தகக் காட்சியை ஒட்டி வெளியாகியுள்ளது. புதிய பொருளா
தாரம், சமூக மாற்றம் குறித்து எழுதும்போது அது எளிய மக்களின் வாழ்க்கையில் விளைவித்த பாதிப்பு என்கிற கோணத்தில்தான் இமையம் எழுதுவார். அந்தப் பண்புக்கான சாட்சி இந்த நாவல்.

தமிழ் நவீன நாவலாசிரியர்களில் விசேஷமானவர் வண்ணநிலவன். அவரது ‘கடல்புரத்தில்’, ‘ரெயினீஸ் ஐயர் தெரு’ போன்ற நாவல்கள் தமிழ் நவீன கிளாசிக்குகளாகக் கருதப்படுகின்றன. வண்ணநிலவன் திருநெல்வேலியில் ஒரு வழக்கறிஞரிடம் குமாஸ்தாவாக வேலைபார்த்தவர். நீதித் துறையுடன் நெருங்கிய அந்தத் தொடர்பு தந்த அனுபவங்களை அவர் எழுதியிருக்கிறார். அது போன்ற அனுபவங்களின் தொகுப்பாக ‘கருப்புக் கோட்டு’ நாவல் (காலச்சுவடு) வெளியாகியுள்ளது.

தமிழின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவர் என்.ஸ்ரீராம். தமிழ் நிலத்தை, அதன் இயற்கைச் சூழலை, மரங்களை ராமைப் போல் வாஞ்சையுடன் பதிவுசெய்யும் எழுத்தாளர்கள் தமிழில் குறைவு. இவரது ‘மாயாதீதம்’ நாவல் (தமிழ்வெளி) வெளியாகியுள்ளது. இளம் ஓவியனின் பயணம்தான் இந்த நாவல். இந்தப் பயணம் வாழ்க்கையின் விசித்திரத்தைத் தேடி விரிகிறது. கொங்குக் களத்தில் நிகழும் இந்தக் கதையும் அதையும் தாண்டி விரிந்துசெல்கிறது. தூத்துக்குடி துறைமுகப் பின்னணியில் எழுதப்பட்ட நரனின் ‘வேட்டை நாய்கள்’ நாவல் வெளியாகிக் கவனம்பெற்றுள்ளது. தூத்துக்குடித் துறைமுகத்தைக் கைப்பற்ற நினைக்கும் இரு பிரிவினரின் மூர்க்கத்தைச் சொல்லும் நாவல் இது.

குலதெய்வத்தை தேடிச் செல்லும் சினிமா உதவி இயக்குநர் குறித்த சுவாரசியமான கதையோடு புத்தகக் காட்சிக்கு வந்திருக்கும் நாவல் ‘சாத்தா’ (நெடில் வெளியீடு). திருநெல்வேலி வட்டார வழக்கில் கதைகள் எழுதிவரும் ஏக்நாத்தின் நாவல் இது. நம்பிக்கையூட்டும் இளம் எழுத்தாளரான முத்துராசா குமாரின் ‘கங்கு’ நாவல் (சால்ட்) இந்தப் புத்தகக் காட்சியை ஒட்டி வெளியாகியுள்ளது. மதுரைக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தின் சமூகக் கதை இது. ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கிய ஆதிக்க சாதி மனோநிலையை இந்த நாவல் வழி முத்துராசா கேள்விக்கு உட்படுத்தியுள்ளார். கிட்டதட்ட இதே பின்புலத்தில் எழுத்தாளர் மாற்கு எழுதிய ‘மறியல்’ நாவலும் (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்) தற்போது வெளியாகியுள்ளது.

‘நஞ்சுண்ட காடு’ நாவல் வழி கவனம் பெற்ற ஈழு எழுத்தாளர் குணா கவியழகன். இவரது சமீபத்திய நாவல் ‘கடைசிக் கட்டில்’ (எதிர் வெளியீடு) வெளிவந்துள்ளது. வாட்ஸ்அப் சேனலில் எழுதப்பட்ட நாவலாக ‘கிளைக்கதை’யும் (அழிசி) வெளியாகியுள்ளது. இது சுரேஷ் பிரதீபின் நாவலாகும். யுவ புரஸ்கர் விருது பெற்ற கார்த்திக் பாலசுப்ரமணியத்தின் 'தரூக்' (காலச்சுவடு) வெளிவந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE