ந
டந்து முடிந்துள்ள சென்னைப் புத்தகக் காட்சியில் நொபொரு கராஷிமா எழுதிய நூல்களுக்கு வாசகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு. சமீபத்தில் வெளிவந்த அவரது இரண்டு கட்டுரைத் தொகுப்புகள் விற்பனையில் முன்னிலை வகித்தன. அவர் மறைந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும், அவரது ஆய்வுக் கட்டுரைகள் தென்னிந்திய சமூகப் பொருளாதார ஆய்வில் கலங்கரை விளக்குகளாய் வழிகாட்டிக்கொண்டிருக்கின்றன.
ஜப்பானிய மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட இவர், டோக்கியோ மற்றும் தயிஷோ பல்கலைக்கழகங்களில் இந்தியவியல் பேராசிரியராகப் பணியாற்றியவர். இவருடைய ஆய்வுகளின் குவிமையம், தமிழகத்தில் 9-ம் நூற்றாண்டு தொடங்கி 18-ம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் நிலவுடைமை அடைந்துவந்திருக்கும் மாற்றங்களைப் பற்றியது.
ஆய்வியல் அணுகுமுறையால் தனித்து விளங்கியவர் கராஷிமா. தனது ஆய்வுகளுக்குக் கல்வெட்டுச் சான்றுகளையே முதன்மை ஆதாரமாகக் கொண்டிருந்தார். முக்கியமாக, மேற்கோள்களின் வழியாக அல்லாது மூல பாடங்களையே அவர் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டார். இதன்மூலம், சோழர் கால நிலவுடைமை அமைப்பைப் பற்றிய ஒரு தெளிவான பார்வையை அவர் உருவாக்கியிருக்கிறார். அதேநேரத்தில், விஜயநகர ஆட்சிக்காலத்தைச் சேர்ந்த ஆய்வுகளுக்காக இலக்கியச் சான்றுகளையும் ஓலைச் சுவடி ஆவணங்களையும் அவர் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். இரண்டாவதாக, அவர் தனது ஆய்வுகளில் புள்ளியியல் முறையைக் கையாண்டார். தென்னிந்திய வரலாற்று ஆய்வில் புள்ளியியலை அறிமுகப்படுத்திய முன்னோடியாக அவர் இருக்கிறார்.
மூன்றாவதாக, அவர் தனது ஆய்வுகளின் பரப்பை நுண்வட்டங்களாகச் சுருக்கினார். பெரும்பரப்பிலான ஆய்வை இவ்வாறு தனித்தனி கூறுகளாகப் பகுத்து, ஒவ்வொன்றையும் நுட்பமாக அணுகி, தெளிவான முடிவை அடைந்து அதன்வழியாக பெரும்பரப்புக்கான முடிவை அடையும் அவரது அணுகுமுறை இதுவரையிலான ஆய்வியல் நம்பிக்கைகளை நொறுக்கிப்போட்டிருக்கிறது.
தமிழகத்தில் சாதியக் கட்டுமானத்துக்கும் இறுக்கத்துக்கும் நிலவுடைமையே அடிப்படையாக இருக்கிறது. ஆனால், நிலவுடைமையின் தோற்றமும் பரிணமிப்பும் உருமாற்றங்களும் வெறும் நம்பிக்கைகளைச் சார்ந்தே விவாதிக்கப்பட்டுவருகின்றன. அவை வரலாற்றுச் சான்றுகளின் வழியாக நிரூபிக்கப்படவில்லை. முதன்முறையாக, கல்வெட்டுச் சான்றுகளின் அடிப்படையில் நொபொரு கராஷிமா நடத்திய ஆய்வுகளிலிருந்து, சோழர் காலத்தில் காவிரிப் படுகையில் சமூகவுடைமையாக இருந்த நிலவுடைமை படிப்படியாகத் தனிநபர் நிலவுடைமையாக மாறியிருக்கிறது என்பது தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. மேலும், இந்த மாற்றம் நிகழ்ந்துகொண்டிருந்த வேளையில், உழவர்கள் நிலவுடைமையாளர்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்துப் போராடிய வரலாறும் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறது.
ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு முன்னால், தஞ்சாவூர் தமிழகத் தொல்லியல் கழகம், நொபொரு கராஷிமாவின் 11 கட்டுரைகள் அடங்கிய தொகுப்பை, ‘வரலாற்றுப் போக்கில் தமிழ்ச் சமூகம்’ (சோழர் காலம் 850-1300), என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தது. ஆய்வாளர்களிடையே மட்டும் வாசிக்கப்பட்டும் விவாதிக்கப்பட்டும் வந்த அந்த நூலை தமிழின் பெரும் வாசகர் பரப்புக்கு முன்னால் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது பாரதி புத்தகாலயம். அந்நூலின் இரண்டாம் பாகமான, விஜயநகரப் பேரரசுக் காலகட்டத்தைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பும் விரைவில் வெளிவரவிருக்கிறது.
இதே காலகட்டம் குறித்து, கராஷிமா தனித்தும் வரலாற்றாய்வாளர் எ.சுப்பராயலுவுடன் இணைந்தும் எழுதிய நான்கு கட்டுரைகளை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ‘தமிழகத்தில் சாதி உருவாக்கமும் சமூக மாற்றமும் (பொது ஆண்டு 800-1500)’ என்ற தலைப்பில் வெளியிட்டிருக்கிறது. இத்தொகுப்பில் அடங்கியுள்ள ‘தமிழகத்தில் தீண்டாதார்’ என்ற தலைப்பிலான கட்டுரை, தமிழகத்தில் சாதியக் கட்டுமானம் குறித்த மனச்சாய்வு கொண்ட நம்பிக்கைகளைத் தகர்க்கும்வகையில் அமைந்திருக்கிறது.
சோழர் காலக் கல்வெட்டுகளில் இடம்பெற்ற ஊர்களில் மிகச் சிலவற்றிலேயே தீண்டாச் சேரி என்ற வார்த்தைகள் இடம்பெற்றிருக்கின்றன. எந்தெந்த இனக்குழுக்கள் பொதுச் சமூகத்திலிருந்து விலக்கப்பட்டன என்பதற்கான உறுதியான சான்றுகள் இல்லை என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறார் கராஷிமா. முக்கியமாக, ஒடுக்கப்பட்ட சமூகங்கள் சோழர் காலத்தில் அந்த நிலையில்தான் நடத்தப்பட்டனவா என்பதற்கு எந்த உறுதியான ஆதாரங்களும் இல்லை என்ற முடிவுக்கும்வருகிறார். சாதி உருவாக்கத்துக்கு மனுதர்மமே ஒரு முக்கியமான காரணியாகக் கூறப்பட்டுவருகிறது. ஆனாலும், அடிப்படையில் பொருளாதாரமே முக்கியமான காரணமாக இருந்திருக்கிறது என்பதை இந்த ஆய்வு முடிவுகள் எடுத்துக்காட்டுகின்றன.
புத்தகக் காட்சியில் இலக்கிய நூல்களுக்குக் கிடைக்கும் பெரும் வரவேற்பு ஆய்வுக் கட்டுரைகளுக்கும் கிடைக்கத் தொடங்கியிருக்கிறது. இது தமிழகத்தில் நடந்துகொண்டிருக்கும் வாசிப்புப் புரட்சிக்கு ஓர் உதாரணம். தொடரட்டும்!
- செல்வ புவியரசன்,
தொடர்புக்கு: puviyarasan.s@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
16 days ago
இலக்கியம்
16 days ago
இலக்கியம்
16 days ago
இலக்கியம்
20 days ago
இலக்கியம்
20 days ago