ஜ
னவரி 10-ல் தொடங்கும் புத்தகக் காட்சிக்காகப் பரபரப்பாகத் தயாராகிக்கொண்டிருக்கிறது பதிப்புலகம். அச்சகங்கள் முதல் பைண்டிங் வரை பதிப்புத் துறையின் எல்லா முனைகளும் துரிதமாக இயங்கிக்கொண்டிருக்கின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளில் மழை, வெள்ளம், புயல்கள், பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. என்று பல்வேறு சவால்கள் காரணமாகப் புத்தகத் தயாரிப்பில் சற்று தொய்வு இருந்தது. இந்த சவால்களையும் தாண்டி, முன்பைவிட அதிகமான புத்தகங்களுடன் களமிறங்குகின்றன பதிப்பகங்கள். 50-க்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியிடும் பதிப்பகங்களும் உண்டு. வாசகர்களை மூழ்கடிக்க பெரும் புத்தக அலையே காத்திருக்கிறது.
மலைக்கவைக்கும் பட்டியல் கிழக்குப் பதிப்பகத்துடையது. 70 ரூபாய் தொடங்கி 1,300 ரூபாய் வரையிலான விலைகளில் பல்வேறு வகைமையிலான வெளியீடுகள். சுஜாதா தொடங்கி சரவணன் சந்திரன் வரை பல்வேறு எழுத்தாளர்களின் படைப்புகள் தயாராகியிருக்கின்றன. வழக்கமாக வெளியிடும் அபுனைவு புத்தகங்களைத் தாண்டி, இந்த முறை நிறைய புனைவுகளை வெளியிடுகிறது கிழக்குப் பதிப்பகம்.
இந்த முறை 60-க்கும் மேற்பட்ட தலைப்புகளில் புதிய புத்தகங்களைக் கொண்டுவருகிறது காலச்சுவடு பதிப்பகம். நவீன உலக கிளாசிக் நாவல் வரிசையில் ஏழு புத்தகங்கள், இந்திய கிளாசிக் நாவல் வரிசையில் இரண்டு, தமிழ் கிளாசிக் நாவல் வரிசையில் இரண்டு என்று தொடங்கி, தமிழ் கிளாசிக் குறுநாவல்கள், கிளாசிக் சிறுகதைத் தொகுப்புகள், கவிதைத் தொகுப்புகள் என்று படைப்பிலக்கிய வகைமையில் புத்தகங்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. ஆய்வுக் கட்டுரைகள், வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு, நினைவோடை வகைமையிலும் பல புத்தகங்கள் வெளியாகின்றன.
42 தலைப்புகளில் புதிய புத்தகங்களை வழங்குகிறது நியூ செஞ்சுரி புக் ஹவுஸ். மொத்தம் 528 தலைப்புகளில் புத்தகங்களை என்.சி.பி.ஹெச். அரங்கில் வாங்கலாம். ஆ.சிவசுப்ரமணியம், அழகிய பெரியவன் நேர்காணல் தொகுப்புகள் தயாராகியிருக்கின்றன. ராகுல் சாங்கிருத்யாயன்– தத்துவ அறிமுக நூல் வரிசை நீண்ட இடைவெளிக்குப் பிறகு மறுபிரசுரம் செய்யப்பட்டிருக்கிறது. சங்ககாலப் பெண் புலவர்களின் மொத்தக் கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன.
உயிர்மை பதிப்பகம் வெளியிடும் 25-க்கும் மேற்பட்ட புதிய புத்தகங்களில் கவிதைத் தொகுப்புகள், நாவல்கள், மொழிபெயர்ப்புச் சிறுகதைகள், உளவியல் கட்டுரைகள் உள்ளிட்டவை அடக்கம். உயிர்மையில் வெளியான தலையங்கங்களின் தொகுப்பும் வெளியாகிறது. கட்டுரைகள், கவிதைகள் என்று மனுஷ்யபுத்திரன் எழுதிய நான்கும், தமிழ்மகனின் படைப்புகளும் பட்டியலில் உண்டு.
20-க்கும் மேற்பட்ட புத்தகங்களுடன் வாசகர்களை வரவேற்கக் காத்திருக்கும் எதிர் வெளியீடு பதிப்பகம், மருத்துவம், அரசியல், பறவையியல், மொழிபெயர்ப்பு நாவல்கள் என்று முக்கியமான புத்தகங்களை வெளியிடுகிறது. இஸ்மத் சுக்தாய் சிறுகதைத் தொகுப்புகள் தமிழுக்கு வருகின்றன. வழக்கம்போல் கவர்ந்திழுக்கும் அட்டைப் படங்கள் கூடுதல் சிறப்பு. சந்தியா பதிப்பகம் வெளியிடும் புத்தகங்களின் எண்ணிக்கை 30-ஐத் தாண்டுகிறது. இவற்றில் சிறுகதைத் தொகுப்புகள் மூன்று, நாவல்கள் ஏழு. அத்துடன் ஏழு கவிதைத் தொகுப்புகள், ஒரு மொழிபெயர்ப்பு நூலைக் கொண்டுவரும் சந்தியா பதிப்பகத்தின் கணக்கில் வெளிவரும் கட்டுரைத் தொகுதிகளின் எண்ணிக்கை 18.
17 புதிய புத்தகங்களை வெளியிடுகிறது பாரதி புத்தகாலயம். புரட்சியாளர்கள் தொடர்பான நினைவுக் குறிப்புகள், விவசாயிகள் போராட்டம் போன்றவற்றைத் தாண்டி, தனது அங்கமான புக்ஸ் ஃபார் சில்ட்ரன் மூலம் அறிவியல், சிறுவர் பாடல்கள் என்று சிறார் புத்தகங்களை வெளியிடுகிறது, ‘கிழவனும் கடலும்’ நாவலைக் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்யும் புத்தகம் உட்பட!
டிஸ்கவரி புக் பேலஸ் வெளியிடும் புத்தகங்களின் எண்ணிக்கை 20-க்கு மேல். நாவல்கள், சிறுகதைகள் அதிக எண்ணிக்கையில் இடம்பிடித்திருக்கின்றன. பூமணி எழுதிய பழைய நாவல்களுடன் அவரது புதிய நாவலான ‘கொம்மை’யும் இப்பதிப்பகத்தின் மூலம் வெளியாகிறது. ஜெயகாந்தன் எழுதி வெளிவராமல் இருந்த திரைக்கதை ஒன்றும் அச்சேறியிருக்கிறது!
முக்கிய செய்திகள்
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
1 month ago
இலக்கியம்
2 months ago
இலக்கியம்
2 months ago
இலக்கியம்
2 months ago
இலக்கியம்
3 months ago
இலக்கியம்
4 months ago
இலக்கியம்
4 months ago