எமதுள்ளம் சுடர் விடுக!- 25: ஒரு கிராமத்து வரலாறு

By பிரபஞ்சன்

மிழ் இலக்கியக் கட்டுரையாளர், விமர்சகர் ந.முருகேசபாண்டியன் தமிழ் பண்பாட்டு மரபைப் பதிவு செய்த 41 கட்டுரைகளின் தொகுப்பு - ‘கிராமத்து தெருக்களின் வழியே’. இந்த நூலை ‘டிஸ்கவரி புக் பேலஸ்’ அழகாகப் பதிப்பித்திருக்கிறது.

ந.முருகேசபாண்டியன், சமயநல்லூர்காரர். அவ்வூரின் 50 ஆண்டுகால சாட்சியமாக இருப்பவர். தனது ஊரை, அதன் அத்தனை அழகுகளோடும் பண்பாட்டு விழுமியங்கள் சார்ந்த நிகழ்வுகளோடும், ஒரு காலகட்டத்தின் அழுத்தமான பதிவாக வெளிப்படுத்தியுள்ளார். நினைவுகளின் சொல் சித்திரமாக, கடந்தகாலப் பதிவுகளைக்கொண்ட பண்பாட்டு வரலாறு என்றே இந்நூலைச் சொல்லலாம்.

பேய்கள் பற்றியது முதல் கட்டுரை. உலக அளவில் அதிகமாகப் பேசப்படுவது பேய், திருடன், மற்றும் பாம்புக் கதைகள்தான். சமயநல்லூரில் ஒரு காலத்தில் மக்களோடு பேய்களும் வாழ்ந்திருக்கின்றன. கடவுள் நம்பிக்கையைக் காட்டிலும் அதிகமாக பேய் நம்பிக்கை இருந்திருக்கிறது மக்களிடம்.

வயக்காட்டு காவலுக்குப் போனவர் தலைமாட்டில் ஒரு பேய்; வீட்டில் கறிக்குழம்பு வைத்துவிட்டு நிம்மதியாகத் தூங்க முடியாது. இரவில் கறிக்குழம்புச் சட்டியைத் தூக்கிக்கொண்டு போய் வழித்து விழுங்கிச் சட்டியை உடைத்துவிட்டுப் போகும் பேய்கள்; மதுரை வெள்ளைச்சாமி என்ற பேர் கொண்ட பேய், பெண்களைப் பிடித்துக்கொண்டு சேட்டை பண்ணும்; குழந்தை உருவத்தோடு இருக்கிறதே என்று சைக்கிள் கேரியரில் ஏற்றிக்கொண்டால், பின்னால் பாறை போலக் கனக்கிற பேய்; சுருட்டுக்கு நெருப்பு கேட்கும் பேய்; இப்படியான எல்லாப் பேய்களும் இப்போது எங்கே? மின்சார விளக்கு வந்து, ஊரெல்லாம் வெளிச்சம் வந்த பிறகு பேய்கள் இடம் மாற்றிக்கொண்டன. கிராமங்கள் ஒரு காலத்தில் பேய்களால் நிரம்பி வழிந்தன.

‘மதுரைக்கு போவதற்குப் பலர் நடந்துதான் போனார்கள். அரையணாவுக்குப் பொரியும், கடலையும் வாங்கி, துண்டில் முடிந்து கொறித்துக்கொண்டே போனால் மதுரை வந்துவிடும். வில்லு வண்டி, தட்டு வண்டி என பல வண்டிகள். வெளியூர்த் திருவிழா அல்லது சந்தைக்குப் போய்விட்டுத் திரும்பும் முப்பதுக்கும் மேற்பட்ட வண்டிகள் சாலையோரத்தில் அணிவகுத்துப் போகும் காட்சி அருமையாக இருக்கும். இரவு வேளையில் வண்டிக்கு அடியில் தொங்கும் அரிக்கேன் விளக்கின் ஒளியும், சக்கரத்தின் ஆரக்கால் நிழலும், மாட்டுக் கழுத்து மணி ஒலியும் ஒரு கணம் பிரக்ஞையை உறையச் செய்யும். சைக்கிள், ஆண்கள் மட்டும் உருட்டும் வாகனமாக இருந்தது. பெண்கள் ஓட்டத் தொடங்கியபோது, ‘காலம் கெட்டுப் போச்சி’என்றார்கள் பெரிசுகள்.

தொடக்கப் பள்ளிக்கூடத்துக்கு தினமும் செருப்பு அணிந்து வருபவர் யாரும் இல்லை. ஒருநாள் போட்டு வந்தால், ‘பந்தா காட்டுறான்’ என்பார்கள் சகாக்கள். காட்டில் முள்விறகு பொறுக்கிச் செல்பவர்கள், டயர் செருப்பைப் பயன்படுத்துவார்கள். திரும்பும்போது செருப்பை அணிந்துகொண்டு ஆதிக்கச் சாதியினர் ‘முன்னாடி’ச் சென்றுவிட முடியாது. மாலை வேளைகளில் வீட்டுக்கு வெளியில் குளிக்கும் கணவன், ‘யே’ என்று குரல் கொடுத்தால், மனைவி வெளியே வந்து முதுகு தேய்த்துவிட வேண்டும். நடுத்தர வயது ஆண்களும் பெண்களும் உடம்புக்கு சோப் போடுவது, பவுடர் பூசிக்கொள்வது கூடாது. இவை மேனாமினுக்குத் தனங்கள் என்பார்கள் சக குடும்பக் குத்துவிளக்குகள். குடும்பப் பெண்கள் என்றால் அழுக்குப் படிந்திருக்க வேண்டும்.

1970-களில் ஒரு முக்கிய விஷயம். விளைநிலங்கள் இருந்த கிராமங்களையொட்டி தவளைக் கம்பெனிகள் முளைத்தன. இருட்டிய பிறகு பெட்ரோமாக்ஸ் விளக்கும், ஐந்து அடி நீளக் கம்பியுடனும் பலர் நன்செய் நிலங்களுக்குள் நுழைவார்கள். விளக்கொளியில் ஈர்க்கப்பட்ட சிறிய பூச்சிகளைத் தின்பதற்கு வரும் தவளைகளை அடித்துக் கொல்வார்கள். இப்படியாக பெரிய பச்சைத் தவளைகள் வேட்டையாடப்பட்டன. தவளைகள் கம்பெனிக்கு கொண்டுசெல்லப்பட்டு கால்களைத் தனியே வெட்டி ஐஸ் பேக்கேஜில் வைத்து வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டன. தமிழகம், கொசுப் பட்டணமாக மாறியதற்கு தவளைக் கொலைகளும் ஒரு முக்கிய காரணம்.

பசுமைப் புரட்சி என்ற பெயரில், வயலில் வீசப்பட்ட வேதியல் உரங்கள் மீன்களைக் கொன்றன. சென்ற தலைமுறையில் வீட்டுத் தாழ்வாரங்களில் சிட்டுக்குருவிகள் கூடுகட்டிக் குடித்தனம் செய்தன. சிட்டுக்குருவிகள் காணாமல் போயின. குருவிக் கூட்டைக் கலைக்கக் கூடாது என்பது அக்கால நம்பிக்கை. பனை மரங்களில் தொங்கிய தூக்கணாங்குருவிக் கூடுகள் அதி அற்புதமானவை. குட்டியோண்டு குருவி தன் சின்ன அலகால் கட்டிய இரண்டு வாசல் வைத்த கூடு கலைநயம் மிக்கவை.

தூக்கணாங்குருவி பற்றி என் பிள்ளைகளுக்குச் சொல்ல வெறும் சொற்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. கிளி, மைனா, கீரிப்பிள்ளை, யானை, குதிரை, பூனை, நாய், மாடு, கவுதாரி, ஆடு என்று பல்வேறு உயிரினங்களுடன் சேர்ந்ததுதான் மனித வாழ்க்கை.

1940-களில் வேற்று சாதியர் நுழையத் தடை, 60-களில் அக்ரஹாரத்தில் யார் வேண்டுமானாலும் நுழையலாம். அய்யர்கள் சென்னை நோக்கிப் பயணமானார்கள். நியாயம், அறம் போன்ற சொற்களுக்கு எந்த அர்த்தமும் இல்லாமல் ஒடுக்குவது என்பதும், ஒடுங்கி இருப்பதும்தான் தங்கள் வாழ்க்கை என்பதுமாக நம்பிக்கொண்டிருந்த காட்டுமிராண்டித்தனம் எங்கும் பரவியிருந்தது. ஒவ்வொரு மனித உயிரும் சாதியால்தான் அடையாளப்படுத்தப்பட்டிருந்தது. முருகேசபாண்டியன் எழுதுகிறார்: “பசுவின் பாலை விற்கக்கூடாது, பாலை விற்பது குல தெய்வத்துக்கு ஆகாது. பாலை விற்கும் குடும்பம் விளங்காது என்ற நம்பிக்கை என் தந்தையாருக்கு இருந்தது.”

இதேபோன்று, சோறு விற்கும் பொருளல்ல, தமிழருக்கு. சோற்று வியாபாரத்தோடு, தண்ணீர் விற்கும் காலத்தைப் பற்றி நம் முன்னோர்கள் அறிவதற்கு முன்பே, நல்லவேளை போய்ச்சேர்ந்து விட்டார்கள்.

திடீரென்று ஊருக்குள் வந்த கூட்டுறவு பால் விநியோகச் சங்கம், தாம் விற்க பால் வேண்டி கறவை மாடுகளைக் கடனாகத் தந்தது. பசுமாடு என்ற சொல் போய், கறவை மாடு என்ற சொல் அறிமுகமாயிற்று.

தமிழ்த் தெருவில், வாழும் மக்களோடு தாம் வாழ என அன்னக்காவடிச் சாமியார்கள், பூம்பூம் மாட்டுக்காரர்கள், குடுகுடுப்பைக்காரர்கள், மணியாட்டிக்காரர்கள் என்கிற நாழிக்காரர்கள், டேப் அடித்தபடிப் பாடிக்கொண்டுவரும் முஸ்லிம் பாடகர்கள், குரங்காட்டிகள் காணப்படுவார்கள். வாழ்வை இம்மாதிரியான மனிதர்கள்தான் இயக்கினார்கள்.

தினமும் இட்லி, தோசை என்பதெல்லாம் இல்லை. தீபாவளிக்கு இட்லி, தோசை நிச்சயம் உண்டு. தீபாவளிக்கு முன் சினிமா பார்த்தால் கெட்டுப் போய்விடுவார்கள் என்பது அக்கால நம்பிக்கை. நாடகம் நடக்கும்போது கிராமங்கள் களைகட்டும். நாடகம் பார்க்க சுற்றுப்புறத்து மக்கள் ஐந்து மைல் நடந்து வருவார்கள்.

மதுவிலக்கு, ரத்து என்கிற அரசியலைத் தாண்டி, மதுவைப் பற்றி முருகேசபாண்டியன் எழுதியவை மிகவும் அர்த்தம் பொருந்தியவை.

‘குடிப்பது மகா மோசம்’ என்று கருதப்பட்ட 60-களில் கிராமத்தினர் வெவ்வேறு வழிகளில் போதையை நாடினர். வாழ்வின் துக்கமும், இருப்பின் துயரமும் எதிர்காலம் குறித்த நிச்சயமின்மையும் மனிதர்களுக்குள் ஏதோ ஒரு நிலையில் பதற்றத்தை ஏற்படுத்திக்கொண்டே இருக்கின்றன. வாழ்க்கையில் ‘அபத்தம்’ விடாது மனிதர்களைத் துரத்திக்கொண்டே இருக்கிறது.

ஒவ்வொருவரும் தனித்தனியாக அவரவர் உலகைக் கற்பித்து தன்னையே மறந்திடப் ‘போதை’ பயன்பட்டுள்ளது. மனிதன் ‘தான்’ என்று தன்னை அறிந்தவுடன் தன்னை மறப்பதற்கான முயற்சியிலும் ஈடுபட்டதன் வெளிப்பாடுதான் போதை.

சுமார் 400 பக்கங்களில், அன்றைய (1960-80) தமிழ்க் கிராம வாழ்க்கையை எந்த அச்சமும் விடுபடாது மிகவும் சரளமாக மொழியில் பதிவு செய்திருகிறார் முருகேசபாண்டியன். இவை வெறும் நினைவுகள் இல்லை. பண்பாட்டுரீதியில் தமிழர் வாழ்க்கை எப்படி இருந்தது என்று கண்டறிவதுதான் ஆசிரியர் நோக்கம். இந்த முயற்சியில் முழுமையான வெற்றி பெற்றிருக்கிறார் அவர்.

“வெறுமனே ஊர், நினைவுகளைப் பெருமிதமாக அடையாளம் காட்டாமல், அது பண்பாட்டுரீதியில் எவ்வாறு அமைந்திருந்தது, தமிழர் வாழ்க்கை எப்படிக் காலம்தோறும் உருமாறி வருகிறது என்று சுட்டிக்காட்டுவது இந்நூலின் சிறப்பு”என்று இந்நூலை மிகச் சரியாக மதிப்பிடுகிறார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்.

- சுடரும்...

எண்ணங்களைப் பகிர: writerprapanchan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

13 hours ago

இலக்கியம்

13 hours ago

இலக்கியம்

13 hours ago

இலக்கியம்

13 hours ago

இலக்கியம்

4 days ago

இலக்கியம்

4 days ago

இலக்கியம்

7 days ago

இலக்கியம்

7 days ago

இலக்கியம்

7 days ago

இலக்கியம்

7 days ago

இலக்கியம்

13 days ago

இலக்கியம்

14 days ago

இலக்கியம்

14 days ago

இலக்கியம்

14 days ago

இலக்கியம்

14 days ago

மேலும்