இலக்கியம் மூலம் இந்தியர்களை இந்தியர்களுக்கு அறிமுகப்படுத்த நினைத்தேன்: எழுத்தாளர் சிவசங்கரி பேட்டி

By செய்திப்பிரிவு

இலக்கியத்தை பயன்படுத்தி இந்தியர்களை இந்தியர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என நினைத்தேன் என்று எழுத்தாளர் சிவசங்கரி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி மனதின் குரல் 106-வது நிகழ்ச்சியில் கடந்த 29-ம் தேதி உரையாற்றினார். அப்போது, தமிழ் எழுத்தாளர் சிவசங்கரி இலக்கியம் மூலம் நாட்டை இணைத்து வருவது குறித்து பாராட்டி பேசினார். இதுகுறித்து எழுத்தாளர் சிவசங்கரி அளித்த பேட்டி:

பிரதமர் மோடியிடம் இருந்து அங்கீகாரம் கிடைத்திருப்பது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

பிரதமர் மோடி ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில், நான் 16 ஆண்டு காலம் தவமாக செய்த இலக்கிய பணி 'Knit India Through Literature' எனும் ‘இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு’ புத்தகங்களை பற்றி விரிவாக பேசியிருப்பது எனக்கு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது. இதை நான் சற்றும் எதிர்பாக்கவில்லை. இது என் வாழ்க்கையில் ஒரு பொன்னாள் ஆகும். பிரதமர் மோடிக்கு இந்த புத்தகங்களை அனுப்ப வேண்டும் என்று ஆசைப்பட்டது உண்டு. ஆனால் அதை எப்படி செய்வது என்கிற சந்தேகம் இருந்தது. இந்த புத்தகங்களை அவருடைய பார்வைக்கு கொண்டு சென்றவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு என் நன்றிகள்.

‘இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு’ எப்போது உருவானது?

எழுத்துலகில் 25 ஆண்டுகளை கடந்த பிறகும் கூட இன்னும் பெரிதாக இலக்கியத்துக்கும், இந்த நாட்டுக்கும் எதாவது செய்ய வேண்டும் என ஆசைப்பட்டேன். அப்படி ஒரு சிந்தனையாக உதித்தது தான் ‘இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு’. இலக்கியத்தை பயன்படுத்தி இந்தியர்களை இந்தியர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் 4 தொகுப்புகளாக புத்தகத்தை கொண்டு வர தீர்மானித்தேன்.

இதற்காக நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் என்னென்ன?

இந்த பணியை தொடங்கும் போது அதன் ஆழம் எனக்கு புரியவில்லை. பணியை தொடங்கிய அந்த காலகட்டத்தில் (1990-களில்) வாட்ஸ்அப், கூகுள், இணையதளம் போன்றவை கிடையாது. எனவே இலக்கிய அமைப்புகளுக்கெல்லாம் கடிதம் எழுதி, அவர்கள் சொன்ன நபர்களின் புத்தகங்களை நூலகம், நூலகமாக சென்று படித்து குறிப்புகளை சேகரித்தேன். பின்னர் அந்தந்த இடங்களுக்கு சென்று எழுத்தாளர்களுடன் தங்கி, நேர்காணல் எடுத்தேன். அக்கால கட்டத்தில் போக்குவரத்து வசதியும் பெரிதாக இல்லை. பல எழுத்தாளர்களிடம் தொலைபேசி கிடையாது. இவற்றை எல்லாம் கணித்து, எழுத்தாளர்களிடம் நேரத்தை பெற்று நேர்காணல்களை எடுத்தேன். இவற்றை இப்போது நினைக்கும் போது மலைப்பாக இருக்கிறது. தெய்வத்தின் அருள் இல்லையென்றால் இதனை செய்திருக்க முடியாது.

அடுத்து இந்த நேர்காணல்களை எல்லாம், ஒலி நாடாவில் இருந்து ஒலிபெயர்ப்பு செய்வது மிகவும் சவாலாக இருந்தது. ஏனென்றால் கிழக்கு மாநிலங்களில் உச்சரிப்பு மிகவும் வித்தியாசமாக இருந்தது. தலைப்புகள் புரியாத வண்ணம் இருந்தன. இந்த பணிகளில் லலிதா என்ற உதவியாளர் என்னுடன் வலது கையாக இருந்து செயல்பட்டார். அவர் இல்லையென்றால் இவற்றை செய்திருக்க முடியாது.

தமிழ் எழுத்தாளராகிய நீங்கள் புத்தகத்தை தமிழில் மட்டும் வெளியிட்டிருக்கலாமே? ஏன் ஆங்கிலத்திலும்?

இதில் தமிழகம் மட்டும் சம்பந்தப்படவில்லை. இந்தியாவின் 18 முக்கிய மொழிகளில் ஆய்வு செய்யப்பட்டு, அந்தந்த எழுத்தாளர்களின் கண் வழியாக அந்த பிரதேசத்தை, மக்களை, கலாச்சாரத்தை, இலக்கியத்தை பார்த்து எழுதப்பட்ட பதிவுகளாகும். இது அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என நினைத்தேன். எனவே ஆங்கிலத்தில் வந்தால் தான் அந்தந்த பிராந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு அனைவரையும் சென்றடையும் என கருதி னேன். முக்கியமாக இளைய தலைமுறையினர் இந்த புத்தகத்தை படிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை. அதற்காகவே ஆங்கிலத்தில் வெளியிட்டேன்.

புத்தகத்தின் 400 பிரதிகளை ராம் நிறுவனத்தின் 3 ஆயிரம் கிளைகள் வழியாக இந்தியா முழுவதும் உள்ள சிறந்த நூலகங்கள், பல்கலைக்கழகங்களுக்கு ஒரே மாதத்தில் கொண்டு சேர்த்தனர். இதன்மூலம் என் கனவு நனவானது. இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தது போல, பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பேச்சு தற்போது அமைந்திருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE