தொடங்கியது அறிவுக் கலாச்சாரத் திருவிழா!

By க.சக்திவேல்

பு

த்துணர்வுடன் தொடங்கியிருக்கிறது புத்தகக் காட்சி. தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் 41-வது ஆண்டாக நடத்தப்படும் இந்தப் புத்தகக் காட்சி, புதன்கிழமை மாலை தொடங்கியது. கடந்த ஆண்டைப் போலவே இந்த முறையும் அமைந்தகரையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் (பச்சையப்பா கல்லூரி எதிரில்) புத்தகக் காட்சி நடத்தப்படுகிறது. 2015-ல் மழை வெள்ளம், 2016-ன் இறுதியில் பணமதிப்பு நீக்கம், 2017-ல் ஜி.எஸ்.டி. என்று பல்வேறு விஷயங்களின் நேரடிப் பாதிப்பு பதிப்புலகில் பிரதிபலித்த நிலையில், அவற்றிலிருந்து மீண்டுகொண்டிருக்கும் பதிப்புலகம், புத்தகக் காட்சியில் வாசகர்களை வரவேற்கத் தயாராகியிருக்கிறது.

ஜனவரி 22-ம் தேதி வரை நடக்கும் இந்தப் புத்தகக் காட்சியில் வழக்கமான சிறப்பம்சங்களுடன் வாசகர்களுக்கு உற்சாகமளிக்கும் பல புதிய அம்சங்களும் காத்திருக்கின்றன.

சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், மற்ற நாட்களில் மதியம் 2 முதல் இரவு 9 மணி வரையிலும் புத்தக வேட்டையாடலாம்!

சுமார் 710 அரங்குகள், 5 லட்சம் தலைப்புகள், 1 கோடிப் புத்தகங்கள் என்று பிரம்மாண்டமாக நடக்கவிருக்கும் இந்தப் புத்தகக் காட்சியில், சுமார் ரூ.15 கோடிக்கும் மேல் விற்பனை எதிர்பார்க்கப்படுகிறது.

நிகழ்ச்சிகள்

புதன் கிழமை மாலை நடந்த நிகழ்ச்சியில் புத்தகக் காட்சியைத் தொடங்கிவைத்துத் தலைமை உரையாற்றினார் தமிழகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன். பபாசி தலைவர் எஸ்.வயிரவன் வரவேற்புரை வழங்கினார். நிகழ்ச்சியில் தொழிலதிபர்கள் நல்லி குப்புசாமி, எம்.ஏ.எம்.ஆர். முத்தையா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பபாசி செயலாளர் அரு.வெங்கடாசலம் நன்றியுரை வழங்கினார்.

விருதுகள்

தொடக்க நிகழ்ச்சியில், சிறந்த தமிழறிஞருக்கான ‘பாரி செல்லப்பனார் விருது’ சு.சு.ராமர் இளங்கோவுக்கும், சிறந்த ஆங்கில எழுத்தாளருக்கான ‘ஆர்.கே.நாராயண் விருது’ டாக்டர் ஆர்.ராஜராஜனுக்கும், சிறந்த சிறுவர் அறிவியல் நூலுக்கான ‘நெல்லை சு.முத்து விருது’ பேராசிரியர் சு.முத்துச்செல்லக்குமாருக்கும், சிறந்த குழந்தை எழுத்தாளருக்கான ‘குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா விருது’ கள்ளிப்பட்டி சு.குப்புசாமிக்கும், சிறந்த பதிப்பாளருக்கான ‘பதிப்பகச் செம்மல் க.கணபதி விருது’ கவிதா பப்ளிகேஷனுக்கும், சிறந்த விற்பனையாளருக்கான ‘பதிப்புச் செம்மல் ச.மெய்யப்பன் விருது’ ஸ்ரீ ஈஸ்வர் எண்டர்பிரைசஸுக்கும், பபாசி ‘சிறந்த நூலகர் விருது’ கு.மகாலிங்கத்துக்கும் வழங்கப்பட்டன.

வரவேற்கிறோம்!

இந்த ஆண்டும் தொடரும் ஜி.எஸ்.டி. சிக்கல்களுடன், அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டமும் இருந்தாலும், இவற்றைத் தாண்டி புத்தகக் காட்சியை நடத்துகின்றனர்.

புத்தகக் கலாச்சாரம் செழுமைப்படுவதற்குப் புத்தகக் காட்சிகள் வெற்றிபெறுவது அவசியமானது. அந்த வெற்றியை வாசகர்களாகிய உங்களால்தான் உறுதிப்படுத்த முடியும். திரண்டு வாருங்கள் வாசகர்களே, பெரு வெற்றியடையச் செய்வோம் இந்தப் புத்தகக் காட்சியை!

தி இந்து’ அரங்கு

52 - 53

இந்தப் புத்தகக் காட்சியில் ‘தி இந்து’ அரங்கு (எண்: 52 & 53) வாசகர்களைப் பெருமகிழ்வுடன் வரவேற்கிறது. ‘உள்ளாட்சி உங்கள் உள்ளங்களின் ஆட்சி’, இயக்குநர் எஸ்.பி.முத்துராமனின் ‘சினிமா எடுத்துப் பார்’, ‘பொருள்தனைப் போற்று’, ‘தடைகளைத் தாண்டி பாயும் நதி’, ‘பதின் பருவம் புதிர் பருவமா?’, ‘வேலையற்றவனின் டைரி’, ‘வேட்டைக்கார ஆந்தையின் தரிசனம்’, ‘இசை மேடையில் பெண்கள்’, ‘மாய விரோதி’ உள்ளிட்ட புத்தகங்கள் ‘தி இந்து’ அரங்கில் இடம்பெற்றுள்ளன. இதே அரங்கில், தமிழ் திசை பதிப்பகத்தின் ‘காலத்தின் வாசனை’, ‘தொழில் முன்னோடிகள்’, ‘வாழ்க்கையை மாற்றும் 35 புத்தகங்கள்’, ‘ஸ்ரீராமானுஜர்’, ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘ஜிஎஸ்டி ஒரு வணிகனின் பார்வையில்..’ போன்ற புதிய வெளியீடுகளும் இடம்பெற்றுள்ளன. ‘தி இந்து’வின் ஆங்கில நூல்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

புத்தகக் காட்சியின் சிறப்பம்சங்கள்

பேருந்து கிடைக்காமல் அல்லாட வேண்டியதில்லை. மீனம்பாக்கம் முதல் நேரு பூங்கா வரை அமைக்கப்பட்டுள்ள மெட்ரோ ரயில் கைகொடுக்கும். பச்சையப்பா கல்லூரி நிறுத்தத்தில் இறங்கினால் நேராகப் புத்தகக் காட்சிதான்!

முதன்முறையாக ரோபோ அறிமுகப்படுத்தப்படுகிறது. பெயர் பவிஷ்யா. அரங்குகளைத் தேடுவதில் உங்களுக்கு வழிகாட்டப்போகிறாள் இந்த எந்திரத் தோழி!

முதல் முறையாக புத்தகக் காட்சி நடைபெறும் வளாகம் முழுவதும் சிசிடிவி கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக 35 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

எழுத்தாளர்களைக் கெளரவிக்கும் வகையில் அவர்களுக்கென முதல் முறையாக இந்த ஆண்டு சிறப்பு அனுமதிச் சீட்டு வழங்கப்படுகிறது.

இரண்டு ஏடிஎம் இயந்திரங்கள். ரொக்கப் பிரச்சினை இருக்காது. 15-க்கும் மேற்பட்ட இடங்களில் கார்டு ஸ்வைப்பிங் செய்துகொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது. இலவச வைஃபை உண்டு.

குழந்தைகளிடம் வாசிப்பு ஆர்வத்தைத் தூண்டும் வகையில், அரசு, தனியார் பள்ளிக் குழந்தைகளுக்காக சுமார் 5 லட்சம் இலவச அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

இரண்டு நுழைவுவாயில்கள், இரண்டு வெளியேறும் வழிகள். நெரிசல் இல்லாமல் சென்றுவரலாம்.

ஒரே நேரத்தில் 50 பேர் பயன்படுத்தும் வகையில் கழிப்பறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

வாசகர்கள் - எழுத்தாளர்கள் சந்திப்புக்கும் ஆவணப்படத் திரையிடலுக்கும் தனி அரங்குகள் உண்டு.

பள்ளி வளாகத்திலேயே வாகனங்களை நிறுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது. அதற்கு மேல் வாகனங்கள் வந்தால் பச்சையப்பன் கல்லூரி வளாகம் காத்திருக்கிறது. அங்குள்ள வேனில் ஏறிப் புத்தகக் காட்சி வளாகத்துக்குள் வந்துவிடலாம்.

மாற்றுத்திறனாளிகள் அரங்குகளுக்குச் செல்ல சக்கர நாற்காலிகள் நுழைவுவாயிலில் வைக்கப்பட்டுள்ளன.

108 ஆம்புலன்ஸ் ஒன்றும், மருத்துவக் குழுவினரும் தயாராக இருப்பார்கள். தனியார் மருத்துவமனை சார்பில் இலவசமாக ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு பரிசோதிக்கப்படுகிறது.

வாசகர்களுக்கு வழிகாட்ட 75 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்ற முறை போலவே வழிகாட்டி ‘ஆப்’ ஒன்றும் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதைப் பயன்படுத்தி எந்த பதிப்பகத்தின் அரங்கு, எந்த வரிசையில் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.

ரூ.100-க்கு சீசன் டிக்கெட் வாங்கினால், ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரோ அல்லது நண்பர்கள் நான்கு பேரோ எப்போது வேண்டுமானாலும் வந்துசெல்லலாம்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

2 days ago

இலக்கியம்

2 days ago

இலக்கியம்

2 days ago

இலக்கியம்

7 days ago

இலக்கியம்

9 days ago

இலக்கியம்

9 days ago

இலக்கியம்

9 days ago

இலக்கியம்

9 days ago

இலக்கியம்

13 days ago

இலக்கியம்

13 days ago

இலக்கியம்

16 days ago

இலக்கியம்

16 days ago

இலக்கியம்

16 days ago

இலக்கியம்

20 days ago

இலக்கியம்

20 days ago

மேலும்