தமிழ்ச் சிறுகதையின் புதிய முகங்கள்!

By திருவனந்தபுரம் எஸ்.ராமகிருஷ்ணன்

மிழ்ச் சிறுகதை உலகம் ஒவ்வொரு பத்தாண்டிலும் ஒரு புதிய எழுச்சியைச் சந்தித்திருக்கிறது. புதிய முகங்களாக இளம் எழுத்தாளர்கள் அறிமுகமாகி, முந்தைய சிறுகதைகளின் வடிவத்தை, கதைக்களன்களை, மொழியைப் புத்துருவாக்கம் செய்வார்கள். 2010-க்குப் பிறகு எழுதத் தொடங்கிய இன்றைய இளம் எழுத்தாளர்களிடமும் அந்த வீச்சை, பங்களிப்பை, தொடர்ச்சியைக் காண முடிகிறது.

இளம் தலைமுறை எழுத்தாளர்களின் சிறுகதைகளை அச்சிலும் இணையத்திலும் தேடி வாசித்துவருபவன் என்ற முறையில், என் வாசிப்பில் விருப்பத்துக்குரிய சிறுகதை ஆசிரியர்களாக கே.என்.செந்தில், மாரி செல்வராஜ், நரன், போகன் சங்கர், தூயன், சுனில் கிருஷ்ணன், அகரமுதல்வன், கார்த்திக் புகழேந்தி, ஜீவகரிகாலன், எல்.ஜே.வயலட், நர்சிம், கே.ஜே.அசோக்குமார், கிருஷ்ணமூர்த்தி, சித்துராஜ் பொன்ராஜ், கருத்தடையான், ரமேஷ் ரக்சன், கீரா, விஷால் ராஜா, குமார் அம்பாயிரம், அனோஜன், நவீன், எம்.கே.குமார், கனவுப்ரியன், சிங்கப்பூர் லதா, மாதங்கி, பிரபு மயிலாடுதுறை, ஏ.ஜே.டேனியல், ஹசீன், கணேசகுமாரன், ஹரி கிருஷ்ணன், சசிகலா பாபு, ஜி.கார்ல் மார்க்ஸ் போன்றோரைக் கருதுவேன்.

புதிய கதைக்களன்

இவர்களின்றி வார, மாத, இலக்கிய இதழ்கள், இணையம் எனச் சிறுகதைகள் ஏராளமாக வெளியாகிவருவதால், நான் வாசித்தறியாத இளம் படைப்பாளிகள் பலரும் இருக்கக்கூடும்.

தமிழ்ச் சிறுகதைகள் இதுவரை கண்டிராத புதிய கதைக்களன்களை, மனிதர்களை, அனுபவங்களை பிரச்சினைகளை விவரிக்கிறது என்பதே இன்றைய சிறுகதைகளின் தனிச்சிறப்பு. குறிப்பாக, உடலின் மீதான அதிகாரம் மற்றும் வன்முறையை எழுதுவதிலும், பிம்பங்களால் துன்புறுத்தப்படும் மனநிலை பற்றியும், விலக்கப்பட்ட, மறுக்கப்பட்ட, பேசப்படாத நிகழ்வுகளை, பிரச்சினைகளை அனுபவங்களை, இருண்மையை எழுத்தில் கொண்டுவருகிறார்கள்.

வாழ்வின் நுண்தருணங்களைக் கதையாக்கிய முந்தைய தலைமுறைக்கு மாறாக, மீறல்களும் வன்முறையும் கொந்தளிப்பும் மரணமும் குடியும் குற்றமும் இன்றைய கதைகளின் பொதுஅம்சங்களாக உள்ளன. துண்டிக்கப்பட்ட, சிதறடிக்கப்பட்ட நிகழ்வுகளாகவே சிறுகதைகள் எழுதப்படுகின்றன.

ஒருவரின் சிறுகதையிலிருந்து ஒரு பத்தியைத் துண்டித்து இன்னொருவர் சிறுகதையில் எளிதாகச் சேர்த்துவிடலாம் என்பதுபோல ஒரே பாணி, ஒரே கூறல்முறை, ஒரே வகை சம்பவங்கள் இன்றைய சிறுகதைகளில் இடம்பெறுகின்றன. அதைப் பலவீனமாகக் கருதுகிறேன்.

சிறுகதை எழுத விரும்பும் இளம் எழுத்தாளர்களுக்குக் கடந்த தலைமுறை வரை ஆதர்சமாக இருந்தவர்கள், அவர்களின் மூத்த படைப்பாளிகளே. ஆனால், இன்றைய இளம் எழுத்தாளர்களுக்கு மொழிபெயர்ப்புக் கதைகளும் திரைப்படங்களும் செய்திகளும் இணையத் தொடர்களும் பாலுணர்வுப் பிரதிகளுமே ஆதர்சமாக உள்ளன.

தான் மரபின் தொடர்ச்சியில்லை. தானொரு தனித்துப் பறக்கும் பறவையென்று அடையாளப்படுத்தவே ஒவ்வொரு இளம் எழுத்தாளரும் விரும்புகிறார். இதன் காரணமாகத் தமிழ்ச் சிறுகதைகளின் சாதனையாளர்களை அவர்கள் எளிதாகப் புறந்தள்ளிவிடுகிறார்கள்.

உலகச் சிறுகதைகளுக்கு இணையாக தமிழ்ச் சிறுகதைகள்

யதார்த்தம் குறித்த பழைய பார்வைகளை, கருத்தாக்கங்களைக் கடந்துசெல்வது இன்றைய எழுத்தாளர்களின் பலம். ஆனால், கற்பனையின் வீச்சையும் பலத்தையும் சவாலையும் அவர்கள் முழுமையாக அறிந்திருக்கவில்லை. கதையின் வடிவம் பற்றிய பிரக்ஞையோ மொழியைக் கையாள்வதில் ஏற்படும் சவாலையோ சுயஅனுபவங்களுக்கு வெளியே கதையை எழுதுவதில் உள்ள போதாமையோ முழுதாக உணர்ந்திருக்கவில்லை.

காட்சிபூர்வமாக எழுதினால் போதும் கதை வெற்றியடைந்துவிடும் என்று இளம் எழுத்தாளர்கள் நம்புகிறார்கள். மௌனத்தையும், சொல்லாமல் விடப்படும் தருணங்களையும், கற்பனையின் எல்லையற்ற சாத்தியங்களையும், கற்றுக்கொள்ளத் தவறிவிடுகிறார்கள் என்பதே இன்றைய சிறுகதை ஆசிரியர்களின் மீதான விமர்சனம்.

தமிழைப் போல இந்தியாவின் வேறு எந்த மொழியிலும் இத்தனை விதமான சிறுகதை ஆசிரியர்கள் இருப்பார்களா என்பது சந்தேகமே. உலகச் சிறுகதைகளைக் கண்டு நாம் வியக்கிறோம். உண்மையில், அந்தக் கதைகளுக்கு இணையாகத் தமிழிலும் எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால், அக்கதைகளுக்கு உலக அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதே உண்மை.

யதார்த்தம் நோக்கித் திரும்பிய சிறுகதைகள்

1990 வரை தமிழ்ச் சிறுகதைகளில் வடிவரீதியான, கதைகூறல்ரீதியாகப் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்திருக்கவில்லை. யதார்த்தக் கதைகளே பெரிதும் எழுதப்பட்டன. அதைக் கவித்துவமாகவும் நுட்பமாகவும் வட்டார வழக்கிலும் எழுதவே பலரும் முற்பட்டார்கள். ஆனால், 90-களில் லத்தீன் அமெரிக்க இலக்கியங்களின் அறிமுகமும், பின்நவீனத்துவ சிந்தனையும், நான்லீனியர் எழுத்தின் அறிமுகமும், சமூகம், அரசியல் சார்ந்த புதிய கோட்பாடுகளின் விவாதங்களும் சிறுகதை எழுத்தைப் புரட்டிப்போட்டன. மேஜிகல் ரியலிசம், நான்லீனியர், பின்நவீனத்துவம், காலனியம் என விதவிதமான சிறுகதைகள் எழுதப்பட்டன. குறுங்கதை வடிவம் புத்துருவாக்கம் பெற்றது. அந்த மாற்றங்கள் யாவும் இரண்டாயிரத்துடன் முடிந்துபோயின. மீண்டும் சிறுகதை யதார்த்தம் நோக்கித் திரும்பியது.

டிஜிட்டலின் வருகைக்குப் பிறகு, திரைப்பட உலகம் பெரும் மாற்றங்களைச் சந்தித்ததுபோலவே இணையத்தின் வருகையால் சிறுகதை உலகில் பெரும் மாற்றங்கள் உருவாகின. சிறுகதைகளை வெளியிடுவதற்குப் பத்திரிகைகளைச் சார்ந்திருக்க வேண்டியதில்லை என்ற புதிய சுதந்திரம் உருவானது. அதன்வழி காத்திரமான படைப்புகள் நேரடியாக இணையத்தில் வெளியாகின. அதே நேரம் குப்பைகளும் கசடுகளும் போலியான பாவனைகளைக் கொண்ட சிறுகதைகளும் நிரம்பி வழியத் தொடங்கின.

உலகம் முழுவதும் இன்று செவ்வியல் சிறுகதைகளுக்குத் திரும்புதல் என்ற போக்கு உருவாகியுள்ளது. கதை சொல்லுதலுக்கு உலகமே திரும்பிக்கொண்டிருக்கிறது என்பதே நிஜம். மீண்டும் ஆன்டன் செகாவும் எட்கர் ஆலன்போவும் பால்சாக்கும் டால்ஸ்டாயும் தஸ்தாயெவ்ஸ்கியும் துர்கனேவும் மாப்பசானும் காப்காவும் ரேமண்ட் கார்வரும் உயர்த்திப்பிடிக்கப்படுகிறார்கள்.

உலகம் கொண்டாடும் கதை

உலக அரங்கில் செவ்வியல் தன்மை கொண்ட சிறுகதைகளை எழுதவே இன்றைய எழுத்தாளர்கள் விரும்புகிறார்கள். அது போன்ற சிறுகதைகளே கொண்டாடப்படுகின்றன. விருதுகள் பெறுகின்றன. உதாரணத்துக்கு, காப்காவின் உருமாற்றம் கதையின் நாயகன் கிரிகோர் சாம்சாவைத் தனது சிறுகதையில் மறுஉருவாக்கம் செய்கிறார் ஹருகி முராகமி. அக்கதையை உலகமே கொண்டாடுகிறது.

சமகால உலகச் சிறுகதைகள் தங்கள் தேசத்தின் அரசியலை, சமூகப் பிரச்சினைகளை, புலம்பெயர்தலின் துயரத்தை, போரை, பெண்களின் மீதான ஒடுக்குமுறையை, கைவிடப்பட்ட முதியவர்களின் துயரத்தை, மறைக்கப்பட்ட வரலாற்றை, கண்காணிக்கும் அதிகாரத்தை, மத இன சாதிய ஒடுக்குமுறைகளை, தொழில்நுட்ப சாதனங்களால் உருவான புதிய குற்றங்களைப் பேசுகின்றன.

உலகமயமாக்கலின் விளைவாக நுகர்வுக் கலாச்சாரம் மேலோங்கி எழுந்துள்ள சூழலில், அதை எதிர்கொள்ளக் கதை கூறலே ஆயுதமாகக் கருதப்படுகிறது. தமிழ்ச் சிறுகதையும் இந்த வழித்தடத்தில் பயணிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.

- எஸ்.ராமகிருஷ்ணன், ‘பதின்’ உள்ளிட்ட நாவல்களின் ஆசிரியர், தொடர்புக்கு: writerramki@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

2 days ago

இலக்கியம்

7 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

9 days ago

இலக்கியம்

13 days ago

இலக்கியம்

13 days ago

இலக்கியம்

15 days ago

இலக்கியம்

15 days ago

இலக்கியம்

16 days ago

இலக்கியம்

20 days ago

இலக்கியம்

20 days ago

மேலும்