தமிழ்-சிங்கள வெகுஜனங்கள் ஒன்றிணையும் புள்ளி!

By செ.சண்முகசுந்தரம்

பல்லாயிரம் ஆண்டுகளாக ஈழநிலம் அடைகாத்து வைத்திருக்கும் அறத்தவிப்பை அதன் ஓட்டை உடைத்து வெளிக்கொணரும் முயற்சியில் முதல் வெற்றியை அடைந்திருக்கிறார் குணா கவியழகன். ‘கர்ப்பநிலம்’ மூலம் நாவல் ஈழத்தில் நடைபெற்ற அனர்த்தங்களைப் பதிவுசெய்வதோடு, ஈழத் தொல்குடிகளின் வேர்களையும் அதன் பண்பாடுகளையும் தேடித் தொகுக்கும் முயற்சியில் அவர் இறங்கியிருக்கிறார். ஆதித் தமிழனைத் தேடி ஒரு அகதித் தமிழன் செய்யும் வரலாற்றுப் பயணம் இது. தேசியம், தேசிய இனத் தன்னுரிமை, கம்யூனிசம் ஆகிய கோட்பாடுகளின் துணைகொண்டும் ஈழப்போராட்டத்தை விசாரணை செய்கிறார்.

தமிழ் நிலத்தின் மீது, தமிழ்ச் சமுதாயத்தின் மீது ஈழப்போர் ஏற்படுத்திய தாக்கத்தை மீண்டும் வாசிப்புக்கும், விசாரணைக்கும் உட்படுத்துகிறார். அவரவர் கோட்பாட்டு வழி ஈழ எழுச்சியை நாம் உள்வாங்கிக்கொள்ள முடியும். ஈழத் தமிழனின் உண்மையான வரலாற்றை, அவனின் பண்பாட்டுத் தொடர்ச்சியை மட்டுமல்லாது, அரசியல், மதக் குறுக்கீடுகள் அற்ற, எல்லா வகை அதிகாரத்துக்கும் அப்பாற்பட்ட‌ வெகுஜன சிங்கள மக்களுக்கும், ஈழத் தமிழனுக்கும் இடையேயான அன்பான, இணக்கமான வாழ்வியலையும் நமக்கு அறிமுகம் செய்கிறது நாவல். நாவலின் ஆகப் பெரும் வெற்றி இதுதான்.

ஈழப் போராட்டத்தில் ஒடுக்கப்படும் மக்கள் தமிழர்கள். ஒடுக்கியவர்கள் சிங்கள அரசும் அதன் அதிகாரவர்க்கமும். ஒடுக்கப்பட்டவனின் அறச்சீற்றமும், ஒடுக்கிய சிங்கள அதிகார வர்க்கத்தை நோக்கிய எளிய சிங்கள மக்களின் அறச்சீற்றமும் இணையும் புள்ளியின்மீது ஒளிபாய்ச்சியிருக்கிறார் குணா.

சமச்சீரற்ற, சகிக்கமுடியாத அளவுக்குப் பண்பாட்டுத் தீமைகளான சாதியும் தீண்டாமையும் ஈழ மண்ணை, ஈழ மக்களை ஆக்கிரமித்திருந்தாலும் ஈழ மண் பறித்தெடுக்கப்பட்டபோது ஒட்டுமொத்த ஈழமக்களும் சாதி, மத வேறுபாடின்றி வேட்டையாடப்படார்கள். தோழர் சண்முகதாசனால் கம்யூனிச இயக்கம் இலங்கையில் வீறுகொண்டு எழுந்தபோதிலும், அதிலிருந்து பிரிந்த சிங்கள கம்யூனிஸ்ட்கள் தங்கள் கட்சியின் பெயரை தங்களின் இனத்தின் பெயராலேயே அடையாளப்படுத்திக் கொண்டனர் என்பதை நாம் புரிந்துகொள்ளவும் வேண்டியுள்ளது. நாவல் இச்செய்தியை நுணுக்கமாகத் தொட்டுச் செல்கிறது.

கம்யூனிஸ்ட் சாமிப்பிள்ளை பாத்திரம் மூலமாக பல உண்மைகளைப் பேசுகிறார் குணா. “வீரத்தமிழன், மானத்தமிழன் எண்டு போராடி நாங்கள் வெல்ல முடியாது. வெண்டாலும் வெற்றி எங்களுக்கில்லை பாக்கிறிங்களா. சிங்களப் பாட்டாளிகளையும் சேர்த்து உலகப் பாட்டாளிகளையும் கூட்டுச் சேர்த்துப் போராட வேணும். சிங்கள அரசாங்கம் முதலாளித்துவ அரசுகளின்ர ' புறோக்கர் ' தான். புறோக்கரோட போராடி உரிமையை எப்படிப் பெறுகிறது? சும்மா அரசியல் வெத்து வேலை இது" என்னும் சாமிப்பிள்ளையின் வாதத்தை நாம் முற்றாக நிராகரிக்க முடியுமா? இருப்பினும் தமிழ்-சிங்கள மக்களின் ஐக்கியத்தை நாவல் வேறொரு தளத்தில் கட்டமைக்கிறது. கம்யூனிஸ்ட்கள் கட்டமுடியாத தமிழ்-சிங்கள பாட்டாளி வர்க்க ஒற்றுமையை அதிகாரம் குறுக்கிடாத பொழுதில் சாதாரணத் தமிழ்-சிங்கள வெகுஜனங்கள் அதைச் சாதித்துக் காட்டுவார்கள் என்பதை குணா அற்புதமாக நாவலின் வழி கட்டமைக்கிறார். அவரின் இந்த கதைக் கட்டமைப்பு வாசகர்களுக்குப் புது அனுபவம் தரும்.

ஒடுக்கப்படுபவனின் வலியை ஒடுக்கியவன் அறிந்துணர அங்கு அறம் செழிக்கும். புது உலகம் பிறக்கும். இக்கருத்தை தமிழ் மக்களின் மீதான சிங்கள மக்களின் இரங்கற்பா என்று எடுத்துக் கொள்ளவேண்டியதில்லை. மண்ணை மீட்பதற்கான தங்களது போராட்டம் படுதோல்வியில் உள்ளாக்கப்பட்டதை நினைத்து குமுறும் ஒரு இனத்துக்கு அதை ஒடுக்கியவன் அறம் வழி என்ன செய்துவிடமுடியும் என்ற சிந்தனைப் போக்கின் தொடக்கமே இந்நாவலின் நல்விளைவாக இருக்கமுடியும்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

14 days ago

இலக்கியம்

15 days ago

இலக்கியம்

15 days ago

இலக்கியம்

15 days ago

இலக்கியம்

15 days ago

மேலும்