இரு ஒளிக் கலைஞர்கள்..!

By சமஸ்

புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவு. மார்கழி பனி சன்னமாக நகரத்தை நிறைத்துக்கொண்டிருக்கிறது. சென்னையின் புதிய கலாச்சாரத் திருவிழாக்களில் ஒன்றாகிவரும் புத்தாண்டு புத்தக இரவுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடந்த புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி.

 

சாலை என்றோ தெரு என்றோ முழுமையாகச் சொல்லிவிட முடியாத குறுகலான அந்த வீதியில் அந்த இரவிலும் சரசரவென்று போகின்றன வாகனங்கள். வீதியின் இடது ஓரத்தில் எதற்காகவோ நீளமான பள்ளம் தோண்டப்பட்டு கிடக்க வலது ஓரத்தில் விழா மேடையை அமைத்திருந்தார்கள். திறந்தவெளி மேடை. மேடைக்கு முன் மூன்று வரிசையாகப் போடப்பட்ட நாற்காலிகளில் ஐம்பது அறுபது பேர். எல்லோருக்கும் பின்னால் ஒரு மூலையில் நின்றபடி, கசியும் பனியிலிருந்து தன்னுடைய வீடியோ கேமராவைப் பாதுகாக்க தான் கட்டியிருந்த மஃப்ளரை அவிழ்த்து கேமராவுக்குச் சுற்றிக்கொண்டிருந்தபோதுதான் கபிலனை முதன்முதலாக நான் பார்த்தேன். பிரபு காளிதாஸைப் பார்த்ததும் அதே இரவில்தான். இன்னொரு பதிப்பகம் ஏற்பாடு செய்திருந்த ‘புத்தக இரவுக் கொண்டாட்டம்’ அது. விடிவதற்குக் கொஞ்ச நேரம் முன்பு வரை அவர் அங்கு வந்திருந்த எழுத்தாளர்களையும் தருணங்களையும் படம் எடுத்துக்கொண்டிருந்தார் அவர்.

 

சென்னையின் இந்த நாட்களில் இலக்கிய நிகழ்ச்சிகள் பெரும்பாலானவற்றில் தவறாமல் பார்க்கக் கூடிய முகங்கள் இவர்கள் இருவரும். பிரபுவின் ஸ்டில் கேமரா சமகால தமிழ் இலக்கிய ஆளுமைகளைத் துரத்துவது; கபிலன் இலக்கிய நிகழ்ச்சிகளையும் உரைகளையும் சமூக ஊடகங்கள் வழி நேரடியாக ஒளிபரப்புவதோடு, காணொலி ஆவணங்களாகவும் அவற்றை மாற்றிவிடுகிறார். சமகாலத்தில் சென்னைப் புத்தகக்காட்சியோடு பிரித்துப் பார்க்கவே முடியாத இந்த இரு ஒளிக்கலைஞர்களின் பின்னணியிலும் சுவாரஸ்யமான கதைகள் உண்டு.

 

தஞ்சாவூர்க்காரரான பிரபு காளிதாஸ் மராத்திய – தமிழ்க் கலவை. பிறந்தது மும்பையில். வளர்ந்ததெல்லாம் தஞ்சையில். சென்னைக்கு வந்து 18 ஆண்டுகள் ஆகின்றன. “படிப்புன்னு பார்த்தா நான் ஒழுங்கா படிச்சவன் இல்லை. ஆனா, சின்ன வயசுலேர்ந்தே வெறித்தனமான வாசிப்பு உண்டு. காமிக்ஸ், க்ரைம் நாவல் இப்படிதான் ஆரம்பிச்சேன். ராஜேஷ்குமார், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர்னு போய்க்கிட்டிருந்தது தி.ஜானகிராமன், லா.ச.ரா., அசோகமித்திரன்னு படிப்படியா வளர்ந்து சாருநிவேதிதா, மனுஷ்யபுத்திரன், எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன்னு திரும்பி இன்னைக்கு லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களைத் தொட்டு நிற்குது.

 

கேமரா அளவுக்கு வசீகரிச்ச ஒண்ணு என் வாழ்க்கையில கிடையாது. படிக்கும்போது வீட்டுல ஒரு சின்ன தங்கச்சங்கிலி வாங்கி போட்டுவிட்டிருந்தாங்க. அவசரத்துக்கு உதவும்னு கழுத்துல போட்டுவிடுறது. அதை வித்து கேமரா வாங்கிட்டேன். பள்ளிக்கூட நாட்கள்லேயே நண்பர்கள் வீட்டு விசேஷங்கள்ல படம் எடுக்க ஆரம்பிச்சுட்டேன். கொஞ்சம் காசு சேர்ந்தா ஃபிலிம் வாங்கிக்கிட்டு ஊர் ஊரா கிளம்பிடுவேன். என் பாட்டுக்குச் சுத்தி படங்கள் எடுக்கணும். இன்னைக்கும் அப்படிதான் ஓடுது. கல்யாணம், தொழில் நிறுவனங்கள்னு எனக்கு வருமானம் கொடுக்கிற இடங்கள் வேற; நான் விருப்பத்தோடு எடுத்துக்கிட்டிருக்கிற படங்கள் வேற!

 

ஒரு இலக்கிய வாசகனா ஆங்கில புத்தகங்களுக்குப் பின்னாடி எழுத்தாளர்களோட படங்களைப் பார்த்துட்டு தமிழ்ப் புத்தகங்களோட பின்னாடி வர்ற எழுத்தாளர்கள் படங்களைப் பார்க்கும்போது வேதனையா இருக்கும். படைப்பாளிகளோட படங்கள் அவங்களோட ஆளுமையை வெளிப்படுத்துற மாதிரி இருக்கணும். இங்கெ அப்படியான வசதியும் வாய்ப்பும் சினிமாக்காரங்களுக்குத்தான் சாத்தியமா இருக்கு. இதை மாத்தணும்னு நெனைச்சேன்!

 

ஒருநாள் ‘உயிர்மை பதிப்பக’த்தைத் தேடிப் போனேன். மனுஷ்யபுத்திரன்கிட்ட அறிமுகப்படுத்திக்கிட்டேன். ‘எனக்கு காசுகூட வேணாம்; ஆனா, எழுத்தாளர்களை பெருமைப்படுத்துற மாதிரி படங்களோட பதிப்பிக்கணும். எடுத்துத்தர நான் தயார். நீங்க உதவணும்’னு கேட்டேன். அப்படித்தான் ஆரம்பமாச்சு இந்த வேலை” என்று சொல்லும் பிரபு காளிதாஸுக்கு ஐந்து மொழிகள் அத்துபடி. தீவிரமான வாசகர் என்பதைத் தாண்டி எழுத்திலும் கை வைத்திருக்கும் பிரபு காளிதாஸ் ‘நீருக்கடியில்’ என்று ஒரு நாவலும் எழுதியிருக்கிறார். ‘நதியின் மூன்றாவது கரை’ என்ற இவருடைய சமீபத்திய புத்தகம் லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களின் கதைகளின் மொழிபெயர்ப்பு!

 

திருத்துறைப்பூண்டிக்காரரான கபிலன் விவசாயக் குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவர். பிழைப்புக்காக ஒளிப்பதிவைத் தேர்ந்தெடுத்துக்கொண்டவர் பிரபலமான தொலைக்காட்சி தொடர்கள் பலவற்றில் பணியாற்றியவர். வாசிப்பின் ஆர்வம் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்த கூடவே வாழ்க்கையும் மாறியிருக்கிறது.

 

“என்னோட வாசிப்பு சுஜாதால தொடங்கினது. சாருநிவேதிதாவை வாசிக்க ஆரம்பிச்சதும் தீவிர இலக்கிய பரிச்சயம் ஏற்பட்டது. மனுஷ்யபுத்திரன் அறிமுகம் கூடவே நிறைய எழுத்தாளர்களோட பரிச்சயத்தை உண்டாக்கியது. இலக்கியக் கூட்டங்களுக்குப் போகும்போது எவ்வளவோ அற்புதமான விஷயங்களை அங்கே பேசுவாங்க. ஆனா, அது பத்து பதினைஞ்சுப் பேரைத் தாண்டி யாருக்கும் போகலையேங்கிற வருத்தம் ஆட்டிப்படைக்கும்.

 

சமூக வலைதளங்களோட வருகைக்கு அப்புறம் நாம இதை மாத்த ஏதாவது செய்யலாம்னு தோணுச்சு. மனைவியோட நகைகளை அடமானம் வெச்சு காமிரா வாங்கினேன். நான் போற கூட்டங்களுக்கு எல்லாம் கேமராவையும் தூக்கிட்டுப்போக ஆரம்பிச்சேன். பொழுதுபோக்கா தொடங்கினதுதான் என்னோட ‘ஸ்ருதி டிவி’ யூடியூப் சேனல். அப்புறம் பகுதிநேரமா மாறுச்சு. இப்ப வேலையை விட்டு விலகி இதையே வேலையாக்கிக்கிட்டேன்.

 

அஞ்சு பேர் கலந்துக்குற நிகழ்ச்சியா இருந்தாலும் சரி; ஐந்நூறு பேர் கலந்துக்குற நிகழ்ச்சியா இருந்தாலும் சரி; போய்டுவேன். புறப்படும்போது அவங்களா ஏதாவது கொடுத்தா வாங்கிக்குவேன். டீக்குகூட காசில்லாம திரும்பின நாட்கள் பல உண்டு. யார்கிட்டேயும் காசு கேட்க மாட்டேன். பதிவுசெஞ்ச காணொலியை மறுநாளே யூட்யூப்ல போட்ருவேன். இந்த அஞ்சு வருஷங்கள்ல நான் பதிவு செஞ்சுருக்குற நிகழ்ச்சிகளை ஒருத்தர் தொடர்ந்து கேட்குறதுக்கே பல வருஷங்கள் வேணும்.

 

ஆரம்பத்துல அஞ்சாறு பேர் பார்த்துக்கிட்டிருந்த இலக்கிய நிகழ்ச்சி காணொலிகளை இன்னைக்கு ஐம்பதாயிரம் அறுபதாயிரம் பேர் பார்க்குறாங்க” என்று சொல்லும் கபிலன் தன் சொந்த வாழ்க்கையில் இன்னமும் மனைவியின் நகைகளை மீட்க முடியாதவராக ஓடிக்கொண்டிருப்பதுதான் துயரம். சினிமா நிகழ்ச்சிகளைப் பதிவுசெய்வதன் மூலமாகக் கிடைக்கும் சொற்ப வருமானத்தைக் கொண்டே காலத்தைக் கடத்துகிறார்.

 

தமிழின் மகத்தான ஆளுமைகளில் ஒருவரான ஜானகிராமனுக்கு ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தைத் தாண்டி தமிழ் வாசகனுக்குக் காணக் கிடைத்த புகைப்படம் ஒன்று கிடையாது. புதுமைப்பித்தனும் மௌனியும் சிங்காரமும் எப்படியெல்லாம் பேசியிருப்பார்கள், அவர்களுடைய ஆளுமை, உடல்மொழி எப்படியானதாக இருந்திருக்கும் காட்சி ஆவணங்கள் எதுவும் நம்மிடம் கிடையாது. ஆனால், சமகால அறிவுலகத்துக்கு இந்த அவலம் நேராது. ஆர்வம், உழைப்பு, அர்ப்பணிப்பு இவற்றையெல்லாம் தாண்டி பிரபு காளிதாஸ், கபிலன் இருவரின் பங்களிப்பையும் உச்சி முகர வைக்கும் இடம் இதுதான். ஒரு அரசாங்கம் அக்கறை காட்டாத, உலகில் எட்டுக் கோடி மக்களைக் கொண்ட ஒரு சமூகத்தின் அறிவுலகின் ஒரு பகுதியை இருவரும் ஆவணப்படுத்திக்கொண்டிருக்கிறோம் என்ற நினைப்பு இவர்களிடத்தில் இல்லை. ஆனால், அதைச் செய்துகொண்டிருக்கிறார்கள்!

 

- சமஸ், தொடர்புக்கு:samas@thehindutamil.co.in

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

11 days ago

இலக்கியம்

12 days ago

இலக்கியம்

12 days ago

இலக்கியம்

12 days ago

இலக்கியம்

12 days ago

இலக்கியம்

16 days ago

இலக்கியம்

16 days ago

இலக்கியம்

19 days ago

இலக்கியம்

19 days ago

இலக்கியம்

19 days ago

இலக்கியம்

23 days ago

இலக்கியம்

23 days ago

மேலும்