திரு, உயர்திருவையும் தாண்டி கவுரவிக்கிறது ‘தமிழ் திரு’ விருது!

By செய்திப்பிரிவு

சென்னை: ‘இந்து தமிழ் திசை' நாளிதழ் 2013 செப்.16-ல் தொடங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டு நிறைவின்போதும் வாசகர் திருவிழா நடத்தப்பட்டு வந்தது. தமிழ் ஆளுமைகளுக்கு மணிமகுடம் சூட்டி மகிழும் விதமாக 2017 முதல் 2019, 2022 ஆகிய ஆண்டுகளில் ‘தமிழ் திரு' விருதுகள் வழங்கும் விழாக்களும் நடத்தப்பட்டு வருகிறது. 4-வது ஆண்டாக ராம்ராஜ் காட்டன் வழங்கும் 'இந்து தமிழ் திசை - யாதும் தமிழே 2023' விழா சென்னை காமராஜர் அரங்கில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இவ்விழாவில் ‘இந்து தமிழ் திசை' நாளிதழின் ஆசிரியர் கே.அசோகன் வரவேற்றார்.

விழாவின் சிறப்பம்சமாக, தங்கள் செயல்பாடுகளால் தமிழ்ச் சமூகத்தை செழுமைப்படுத்தி அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்ற கல்விச் செயற்பாட்டாளரும், பெண்ணுரிமைப் போராளியுமான பேராசிரியர் வே.வசந்தி தேவி, திரைப்பட வரலாற்று ஆய்வாளரும், சுற்றுச்சூழல் எழுத்தாளருமான சு.தியடோர் பாஸ்கரன், கரிசல் வட்டார எழுத்தாளர் மு.சுயம்புலிங்கம், அறிவியலாளர் என்.கலைச்செல்வி ஆகிய 4 பேருக்கு ‘தமிழ் திரு' விருதுகளையும், நாட்டியக் கலைஞரும், திரைக் கலைஞருமான வைஜெயந்திமாலா பாலிக்கு ‘தமிழ் திரு’ வாழ்நாள் சாதனையாளர் விருதையும், ‘தி இந்து' குழும இயக்குநர் விஜயா அருண், ‘இந்து தமிழ் திசை' நாளிதழ் ஆசிரியர் கே.அசோகன் ஆகியோர் வழங்கினர். ஐவருக்கும் விருதுகளோடு ரூ.1 லட்சம் காசோலையும் வழங்கப்பட்டது. விருது பெற்றவர்கள் பேசியது:

வை ஜெயந்திமாலா பாலி

நாட்டியக் கலைஞர் மற்றும் திரைக் கலைஞருமான வைஜெயந்தி மாலா பாலி: அனைவருக்கும் எனது மனமார்ந்த வணக்கம். விருது பெற்றவர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். கலை, கல்வி, கலாச்சாரம், வரலாறு உட்பட பல்வேறு துறைகளில் பிரபலமானவர்களுக்கு விருது வழங்கி ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் கவுரவப்படுத்தி வருகிறது. ஆண்டாள் தாயார் அருளால் பரதநாட்டியத்தை கலைச்சேவையாக இன்னும் பின்பற்றி வருகிறேன். யாதும் தமிழ் நிகழ்வில் எனக்கு அளித்த தமிழ் திரு வாழ்நாள் சாதனையாளர் விருதை நன்றியுடன் ஏற்றுக் கொள்கிறேன்.

வே.வசந்தி தேவி

கல்விச் செயற்பாட்டாளர் மற்றும் பெண்ணுரிமைப் போராளி பேராசிரியர் வே.வசந்தி தேவி: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கல்வி தொடர்பான எனது அனைத்து முயற்சிகளும் பல தோழர்களின் பங்கேற்புடன் தான் நடந்து வருகிறது. எதுவும் எனது தனிப்பட்ட முயற்சியோ, சாதனையோ அல்ல. அந்த தோழர்கள் அனைவருக்கும் இந்த விருது உரியது. அவர்கள் அனைவருக்கும் இந்த விருதை அர்ப்பணிக்கிறேன்.

நாட்டில் பெரும்பாலான குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் வாய்ப்பு மறுக்கும் இதயமற்ற அமைப்பு நம்முடைய கல்வி அமைப்பு. நம் அனைவரின் முன் நிற்கும் முக்கிய பொறுப்பு என்னவென்றால், இன்றைய கல்வி அமைப்பு முழுவதையும் உடைத்தெறிந்து மாற்று அமைப்பை கட்ட வேண்டும். நம் அரசியல் சாசன கனவுகள் மீட்டெடுக்க வேண்டும். ஜனநாயக இந்தியா, சுதந்திரம், சமத்துவம், சமூகநீதி, மதச்சார்பின்மை, சோசியலிசம் ஆகியவற்றை சமரசமின்றி நிறுவும் கல்வியை நாட்டின் அனைத்து குழந்தைகளுக்கும் பிறப்புரிமையாக்க வேண்டும்.

க.தியடோர் பாஸ்கரன்

திரைப்பட வரலாற்று ஆய்வாளர், சுற்றுச் சூழல் எழுத்தாளர் க.தியடோர் பாஸ்கரன்: நாவல் எழுதுபவர், சிறுகதை எழுதுபவர், கவிஞர் ஆகிய மூவர்தான் எழுத்தாளராக அறியப்படுகிறார்கள். கட்டுரை எழுதுபவர்களை கவனிப்பதில்லை. இந்த விருதை கட்டுரை இலக்கியத்துக்கு கொடுக்கும் முக்கிய உந்துதலாக பார்க்கிறேன். சினிமா, சுற்றுச்சூழல் எழுத ஆரம்பித்தபோது, அவை பாரம்பரிய இலக்கியமாக இல்லை. முக்கியமாக, இரண்டிலும் கலைச்சொற்கள் இல்லை. இப்போது வளர்ந்துள்ளது.

மு.சுயம்புலிங்கம்

கரிசல் வட்டார எழுத்தாளர் மு.சுயம்புலிங்கம்: இங்கே நாம் ஒன்று கூடியிருக்கிறோம். நமக்கு இந்த வாய்ப்பை வழங்கிய ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மு.சுயம்புலிங்கத்தின் ஒரு சிறுகதை தொகுதி வரும் ஜனவரி மாதத்தில் வெளியாகிறது. மிகச்சிறந்த 33 கதைகள் படித்துப் பாருங்கள். அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

என்.கலைச்செல்வி

அறிவியலாளர் என்.கலைச்செல்வி: அடுத்தவர்களை எப்போதும் மரியாதையாக திரு என்று அழைப்பார்கள். இந்த திருவுக்கு இன்னும் அடைமொழி சேர்க்க உயர்திரு என்பார்கள். இந்த உயர்திருவையும் தாண்டி ஏதேனும் அடைமொழியை தமிழ்ச் சார்ந்த வல்லுநர்களுக்கு கொடுக்க முடியுமா என சிந்தித்து, ‘நீள அகலங்களுக்கு மட்டும் தமிழ் எல்லை இல்லை, உயரத்துக்கும் தமிழ்தான் எல்லை’ என்பதை புரிந்து மிக உயரிய ஒரு விருதாக ‘தமிழ் திரு’ என்று பெயர் புனைந்திருப்பதாக நான் புரிந்துக் கொள்கிறேன்.

இப்படிப்பட்ட விருதை பெறுகின்றபோது மிகுந்த பணிவோடு நான் ஏற்றுக் கொள்கிறேன். அறிவியலால் இந்த உலகத்தை அளந்திட முடியும். ஆனால், இந்த உலகத்தை அறிவியலால் செம்மையாக அறிந்திட வேண்டும் என்றால் தமிழால் முடியும் என்பதை நான் புரிந்துக் கொண்டேன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE