எமதுள்ளம் சுடர்விடுக! - 04: தமிழில் தன் வரலாறுகள் அதிகம் இல்லை

By பிரபஞ்சன்

சத்திய ஒளி பாய்ச்சியவர்!

தமிழில் தன் வரலாறுகள் அதிகம் இல்லை. எல்லோரிடமும் எழுத அவர்களின் வாழ்க்கை இருக்கிறதே. எழுதலாம். அப்படி நினைத்துத்தான் நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை (1888 – 1972) தன் வரலாறு ஒன்றை ‘என் கதை’ என்ற பெயரில் 1944-ம் ஆண்டு எழுதியிருக்கிறார். இப்போது ‘சந்தியா’ பதிப்பக வெளியீடாக வந்திருக்கிறது. தமிழின் மிகவும் குறிப்பிடத் தகுந்த வரலாறு இது!

திலகர் சகாப்தத்தின் தீவிர அரசியல் விளைவு பாரதி என்றால், காந்தீய சகாப்தத்தின் அமைதி வெளிப்பாடு இராமலிங்கம் பிள்ளை! ஓவியர், கவிஞர், அரசியல்வாதி, சிறை சென்ற தியாகி, திருக்குறளுக்குப் புதிய உரை கண்டவர், அரசவைக் கவிஞர் என்று பல வண்ணங்கள் கொண்டவர்.

தன் வரலாறு வெற்றிபெறும் இடம், அதன் உண்மைத் தன்மை. உண்மையை உரைக்கும்போது, தன்னை முழுதும் திறந்து வைத்துக்கொண்டு சகலத்தையும் சம பாவத்தோடு எழுதிச் செல்லும் தீவிரம் எழுதுபவருக்கு வேண்டும். கடந்த காலத்தை நேர்மையாக வரைகிற ஒருவர், எதிர்காலத்துக்குச் சத்திய ஒளி பாய்ச்சுபவராக இருக்கிறார்.

இராமலிங்கம், போலீஸ் ‘ஏட்’வெங்கட்ராம பிள்ளையின் மகனாக 1888-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 19-ம் தேதி பிறந்தவர். குழந்தைப் பருவத்தில் ரிசாக் ஹுசேன் சாயுபு என்கிற சர்க்கிள் இன்ஸ்பெக்டருடைய குடும்பத்தோடு, அவரின் மனைவி பதூவா பேகத்துடன் இராமலிங்கத்துக்கு ஏற்பட்ட பாசப் பிணைப்பை மிகுந்த ஈரத்தோடு சொல்கிறார். பேகத்தை ‘ஆசைத் தாயார்’ என்றும் ‘செல்லத் தாயார்’ என்றும் விளிக்கிறார். குழந்தை இல்லாத அவர் கிளி, மயில், புறா, முயல் போன்ற உயிர்களை வளர்த்தார்.

வாரத்தில் நாலு நாட்கள் பேகம் வீட்டுக்கு இராமலிங்கம் தன் தாயாரோடு செல்வார். பேகத்தின் மடியில் உட்கார்ந்து பழம், பிஸ்கட், பப்பர் மின்ட் சாப்பிடுவார். சமயங்களில் உணவும் உண்பார். மிகுந்த ஆசாரக்காரராகிய இராமலிங்கத்தின் அம்மா இதைச் சகித்துக் கொள்வார். இஸ்லாமியர்கள், ‘தீண்டப்படாதவராக’ அக்காலத்தில் கருதப்பட்டார்கள். உணவு விடுதியில் அவர்களுக்கு தனி தம்ளர், சொம்புகள் உண்டு.

பேகம், ஐந்து வேளையும் நமாஸ் படித்துத் தொழுவதைப் பார்த்து இராமலிங்கமும் தொழுகை பண்ணுவார். 20 வயதுக்கு மேலேயும் பேகம் வீட்டுக்கு இராமலிங்கம் போய்வந்துகொண்டிருந்தார். சாதி, மதச் சுவர்களை அன்பு ஒன்றே இடித்து வீழ்த்தும் என்கிறார் இராமலிங்கம் பிள்ளை.

பள்ளிக்கூடம் பற்றிய ஓர் அனுபவத்தை எழுதுகிறார்:

‘அந்த நாளில் மூன்றாம் பாரம் (8-ம் வகுப்பு) முடிய சிலேட்டில்தான் எழுதிப் படித்தோம். இந்த நாளில் முதல் வகுப்பில் நோட்டுப் புத்தகங்களும், பென்சில்களையும் வாங்க வேண்டி இருப்பதை நினைக்கும்போது, நம் நாட்டின் கல்வி இலாகாவானது நோட்டு, பென்சில் கம்பெனியின் கமிஷன் ஏஜென்டோ என்று தோன்றுகிறது’ என்று 1944-ம் ஆண்டு எழுதுகிறார்.

இராமலிங்கம், அடிப்படையில் ஓர் ஓவியர். போட்டோ மாதிரி மனித உருவம் வரைவது அக்காலத்தில் பிரசித்தம். அவர், சித்திரப் பழக்கம் ஒரு விபரீதத்தை உருவாக்கி இருந்ததாக எழுதுகிறார். பள்ளி இறுதி வகுப்பில் வேங்கவரதன் நண்பனாகிறான். அவன் முறைப் பெண் சீதா. கண்ணைப் பறிக்கும் அழகோடு இருந்த அவளை, ஒரு நாள் படம் வரைந்து வர்ணம் பூசிக்கொண்டிருந்தார் இராமலிங்கம். பின்னால் வந்து நின்ற சீதா, திடுமென அவர் கண்களைப் பொத்துகிறாள். பொத்திய கைகளைப் பிடித்துக்கொள்கிறார் இவர். திடுமென சீதா கைகளை உருவிக்கொள்கிறாள். அருகில் அவள் அம்மா.

முடிந்தது.

15 வருஷங்களுக்குப் பிறகு, திருச்சி ரயில் நிலையத்தில் கரூர் வண்டிக்காகக் காத்திருக்கிறார் இராமலிங்கம். அப்போது 3 வயதுக் குழந்தை விளையாடியபடி அவர் மேல் மோதியது. குழந்தையைத் தாயாரிடம் கொண்டு போய்விட்டார். அந்தத் தாய் மொட்டை அடித்து முக்காடு போட்டிருந்தாள். அந்தப் பெண் இராமலிங்கத்தைக் கூர்ந்து பார்த்தாள். ‘‘என்னைத் தெரியலையா?’’ என்றாள். ‘‘யார் நீங்கள்?’’ என்றார் இவர். அவள் முக்காட்டை நீக்கினாள்.

சீதா!

மகாத்மா காந்தி, சுதந்திரப் போரின் ஒரு கட்டத்தில் உப்பு சத்தியாகிரகத்தைத் தொடங்கினார். தமிழ்நாட்டில், ராஜாஜி தலைமையில் திருச்சியில் இருந்து வேதாரண்யத்துக்குத் தொண்டர் படை புறப்பட்டது. அவர்களுக்கு வழி நடைப்பாட்டு தேவை. இராமலிங்கம் அந்தப் பாட்டை எழுதினார்.

‘கத்தி இன்றி ரத்தம் இன்றி யுத்தமொன்று வருகுது

சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்!’ - என்று தொடங்கும் அந்தப் பாடல், இராமலிங்கத்துக்குப் பெரும் புகழ் சேர்த்தது. பாரதி இல்லாத குறையை இராமலிங்கம் தீர்த்துவிட்டார் என்றார் ராஜாஜி.

நாடக ஈடுபாடுகொண்ட இராமலிங்கம் அக்காலத்தில் பத்து ஹீரோக்களுக்கு மேலாகப் புகழ் கொண்ட கிட்டப்பாவுக்கு பாடல் எழுதியிருக்கிறார். இந்த வரலாற்றில், முக்கியமான பகுதி அக்கால நாடக நடிகர்கள் பற்றிய சித்தரிப்பு. கிட்டப்பாவை ‘ஒரு கலைத் தெய்வம்’ என்கிறார் இராமலிங்கம். கிட்டப்பாவுக்கு ஏராளமான நாடகப் பாட்டுகள் எழுதித் தந்துள்ள இவர், கிட்டப்பாவின் இளமைக் காலத்தைப் பற்றி எழுதியிருக்கிறார்.

இராமலிங்கத்தின் மணவாழ்க்கை விசித்திரமானது. உறவுக்காரப் பெண் முத்தம்மாளை மணம் செய்துகொண்டவர், என்ன காரணத்தாலோ மனைவியை வெறுத்தார். முத்தம் மாளோ கணவர் மேல் உயிரையே வைத்திருந்தார். திருமணமாகி, 9 மாதங்கள் வரை அவர்களுக்குள் நட்பு மலரவே இல்லை. 9 மாதங்களுக்குப் பிறகு முத்தம்மா ‘‘ஏன் என்னுடன் பேச மறுக்கிறீர்கள்?’’ என்றாள். அந்தச் சொல், எல்லாத் திரையையும் விலக்கிவிட்டது.

அடுத்த 14 ஆண்டுகள் அவர்கள் இணைந்திருந்தார்கள். குழந்தை இல்லை. தன் தங்கை சவுந்திரத்தை இரண்டாம் தாரமாகக் கட்டிக் கொள்ளுங்கள் என்றாள் முத்தம்மா. கொஞ்சம் கடுமையாக, “அது நீ இருக்குவரை நடக்காது” என்றார் இராமலிங்கம். மறுநாள் முத்தம்மாள் உண்மையாகவே இறந்து போனார்.

மகாகவி பாரதியாரைப் பார்க்கப் போனார் இராமலிங்கம். அவர் கனவு அது. பாரதியை அறிந்திருந்த வேங்கடகிருஷ்ணன், இராமலிங்கத்தைப் பாரதிக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

‘‘ஓவியப் புலவரா, வருக கலைஞரே! தமழ்நாட்டின் அழகே கலையழகுதான். நீர் நம்மை ஓவியத்தில் தீட்டும். நாம் உம்மைக் காவியத்தில் தீட்டுவோம்” என்று சொல்லிக் கலகலவென்று சிரித்தார் பாரதி.

பாரதியும் வேங்கடகிருஷ்ணனும் பேசத் தொடங்கினர். இலக்கியம் பற்றியப் பேச்சுதான். வெகுநேரம் ஆன பிறகு, இராமலிங்கம், ‘‘ஒரு பாட்டு…’’ என்றார்.

‘‘என்னைப் பாடச் சொல்லுகிறீரா? பாட்டு ‘ஆர்டருக்கு’ வராது. பாடும்போது கேளும்’’ என்றார் பாரதி.

‘‘இராமலிங்கம்கூட பாட்டுக்கள் செய்வார்…’’ என்று வேங்கடகிருஷ்ணன் பாரதிக்குச் சொன்னார்.

‘‘அப்படியா.. ஓவியக் கலைஞர் காவியக் கலைஞருமா? எதைப் பற்றிப் பாடியிருக்கிறீர். எங்கே ஒன்று பாடும் கேட்போம்.’’

இராமலிங்கம் நாணப்பட்டுக்கொண்டே நடுங்கும் குரலில் பாடினார்.

‘தம்மரசைப் பிறர் ஆள விட்டுவிட்டுத்

தாம்வணங்கிக் கை கட்டி நின்ற பேரும்…’ - என்று முதல் அடியைச் சொல்லி முடிப்பதற்குள், பாரதியார் துள்ளித் துடிக்க ஆரம்பித்துவிட்டார்.

பாட்டு முடிந்தது.

‘ ‘பலே பாண்டியா! பிள்ளை… நீர் ஒரு புலவன். ஐயம் இல்லை…’’ என்றார் பாரதியார்.

இன்னும் விடியாத நேரம். இராமலிங்கம் உறங்கிக் கொண்டிருந்தார். அவரை எழுப்பினார்கள்.

‘‘பிள்ளை பாட்டுக்குக் கேட்க வேண்டுமென்று ஆசைப்பட்டீரே. பாடப் போகிறேன். எழுந்திரும்’’ என்றார் பாரதியார்.

சுமார் மூன்று மணி நேரம் பாடிவிட்டு எழுந்தார் பாரதியார்.

‘‘போதுமா பாட்டு. இனி புறப்படுவோம்’’ என்று சொல்லிக்கொண்டே புறப்பட்டார் பாரதியார்.

- சுடரும்…

எண்ணங்களைப் பகிர: writerprapanchan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

2 days ago

இலக்கியம்

3 days ago

இலக்கியம்

3 days ago

இலக்கியம்

3 days ago

இலக்கியம்

3 days ago

இலக்கியம்

4 days ago

இலக்கியம்

4 days ago

இலக்கியம்

4 days ago

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

6 days ago

மேலும்