எமதுள்ளம் சுடர்விடுக! - 15: சென்னப்பட்டணம்

By பிரபஞ்சன்

 

ரலாறு என்பது, வந்து போகும் மன்னர்களின் பதிவல்ல. மாறாக, அது மக்களின் இயக்கம். காலத்தாலும் சூழல்களாலும் இயக்கப்படும் மக்களின் வாழ்வியக்கமே வரலாறு!

நாம் பேசப் புகும், ‘சென்னப்பட்டணம், மண்ணும் மக்களும்’ என்னும் இந்த நூலில், சென்னப்பட்டணத்தின் வரலாற்றை வெகுமக்கள் கண்ணோட்டத்தில் - வரலாறு என்பது அவர்களால் உருவாக்கப்படுகிறது என்பதால் - எளிமையாகவும் நேர்த்தியாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. ஆசிரியர் ராமச்சந்திர வைத்தியநாத். சிறுபத்திரிகைகளில் படைப்புகளை வெளியிடுவதோடு, மிக முக்கியமான அரசியல் ஆவணங்களையும், கட்டுரைகளையும் மொழியாக்கம் செய்துள்ளார். இந்திராகாந்தி தன் நெருக்கடியை, தேச நெருக்கடி யாக மாற்றிய அக்காலம் குறித்த ‘அஸ்வமேதம்’ எனும் நாவல். குறிப்பிட வேண்டிய படைப்பு.

சில பத்தாண்டுகளுக்கு முன்னால், பட்டணம் பார்க்க வந்த மாப்பிள்ளைகள், எல்.ஐ.சி. கட்டிடத்தைக் கழுத்து வலிக்க அன்னாந்து பார்த்ததையும், உயிர் காலேஜ், செத்த காலேஜ்களைப் பார்த்ததையும், ஊர் திரும்பி நீர்மோராக்கி அடிச்சுவிட்டதையும் நானும் கேட்டிருக்கிறேன். கட்டிடங்களும் சென்னைதான். அவை மட்டுமே அல்ல.

நகரம் பார்த்திருக்கிறது

‘சுமார் 370 ஆண்டுகளுக்கு முன்னர் ஆண்ட்ரூகோகனும், பிரான்சிஸ்டேயும், பெரி திம்மப்பாவும், நாகபத்தனும் சேர்ந்து உருவாக்கியது இந்நகரம்’ என்று தொடர்ந்து இந்த பிராந்தியச் சிறப்பைச் சொல்கிறார் ஆசிரியர் ராமச்சந்திர வைத்தியநாத். வரலாற்றுக்கு முந்தைய காலத்துப் பொருட்கள், மதராஸ் பட்டணம் மக்கள் பட்டணமாக இருந்துள்ளதை நிரூபிக்கின்றன. பல்லவர், சோழர், பாண்டியர், சேரர் தொடங்கி காடவராயர், சம்புவரையர் போன்ற குறுநில மன்னர்கள் பலரையும் நகரம் பார்த்திருக்கிறது.

இரண்டாயிரம் ஆண்டு வயதுகொண்ட பல்லாவரம், திருவல்லிக்கேணி, மயிலை, ஒற்றியூர், திருநீர்மலை, முல்லைவாயில், பாடி போன்றவை ஆழ்வார்கள், நாயன்மார்களால் பாடப்பட்டவை. ஒற்றியூரில்தான் பட்டினத்தாருக்கு வாழ்வெனும் கரும்பு கசந்தது. மதமான பேயை ஒழிக்க வள்ளலார், மதபேதம் ஓதி மதி கெட்டவர் உணரப் பாடிய குணங்குடி மஸ்தானும் வாழ்ந்த பட்டணம் இது. இயேசுவின் சீடர் புனித தாமஸின் ரத்தம் மயிலை மண்ணில்தான் விழுந்தது. ஒரு கடற்கரை ஊருக்குச் சாந்தோம் என்று பெயரிட்டவர்கள் போர்ச்சுகீசியரே. ஹாமில்டனை அம்பட்டனாக்கிய நம் ஞானத் தமிழர், எழுமூரை எக்மோர் ஆக்கினர். திருஅல்லிக்கேணி டிரிப்பிலிகேன் அல்லது திர்ல கேணி என்றும் சேற்றுப் பேடு சேத்துப்பட்டு ஆயிற்று.

(சேறு - என்பது வயல்வெளிப் பகுதி. பற்று - நிலம். தமிழர் பட்டு அல்லது பேட், பேட்டு என்கிறார்கள்) கோமுட்டிச் செட்டியார்கள், குடியேறிய பகுதி இது. முதலாவது குலோத்துங்கன் காலத்தில், மதராசுக்குப் பக்கத்தில் ஒரு காசுக்கு 100 குழி. 20 காசுக்கு ஒரு வேலி நிலம் வாங்க முடிந்திருக்கிறது.

மிதவாதக் கும்பலின் சதி

மதராஸ் பட்டணத்தின் பிறந்தநாள் என்று வைத்தியநாத் 22.8.1639-ஐ குறிப்பிடுகிறார். கோட்டை திறப்புவிழா வெகு கோலாகலமாக இருந்தது. பட்டணத்துப் பிரமுகர்கள் பிரசன்னம். ஏழைகளுக்கு அன்னதானம். கைதிகள் விடுதலை. பிரமுகர்களுக்கு விருந்து. பெர்ஷிய தேசத்து ஷிராஸ் ஒயின் பரிமாறப்பட்டது.

ஆக, ஆதிக்கவாதிகள் காலூன்றிவிட்டார்கள். கோட்டை அத்தியாயத்துக்குப் பிறகு, அண்ணல் காந்தியின் சென்னை வருகையைப் பற்றிய அத்தியாயத்தை வைத்திருக்கிறார் ஆசிரியர். மிக நுட்பமான அத்தியாய அமைப்பு இது. காந்தி முதன்முதலாக 1896-ம் ஆண்டு சென்னைக்கு விஜயம் செய்கிறார். மொத்தம் 12 முறை, 1946-வரைக்கும் அவர் வருகை நிகழ்ந்துள்ளது. ஒருமுறை, இரண்டு தீவாந்திர தண்டனைகள் பெற்ற வ.உ.சி-யையும், ஒப்பற்ற தியாகி சுப்ரமணிய சிவத்தையும் காந்தியைச் சந்திக்கவிடாமல் மிதவாதக் கும்பல் தடுத்திருக்கிறது.

பச்சையப்பன் அறக்கட்டளை நிறுவனம், ‘இந்து’ நிறுவனமாகப் பிரகடனம் செய்து செயல்பட்டு வருவதை காந்தி ஆட்சேபிக்கிறார். பச்சையப்பன் கல்லூரியில் முஸ்லிம்களையும் தாழ்த்தப்பட்டவர்களையும் அனுமதிக்காததை அவர் கண்டனம் செய்தார்.

ஆக, இந்திய தேசிய விடுதலைப் பேரியக்கம் அரும்பிக் கொண்டிருந்த அக்காலகட்டத்தை மிகச் செறிவாகப் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர்.

மேலே வந்து விழுந்த காலணி

1907-ம் ஆண்டு காங்கிரஸ் மகாசபையில், மேடையில் இருந்த பெரோஸ்ஷா மேத்தா மேல் கனமான டெக்கான் காலணி வந்து மோதியது. சுரேந்திநாத் பானர்ஜி மேல் இன்னொரு காலணி. இதுபற்றி ஆசிரியர் இப்படி எழுதுகிறார். ‘காங்கிரசின் மற்ற கொள்கையைப் போலன்றி தப்தி நதிக்கரையில் தொடங்கிய இந்தக் கலாச்சாரம் இன்றைய தினம் நாட்டின் அனைத்துப் பிரிவினர் மத்தியிலும் பரவி நிற்பது ஆச்சர்யமே!’

காங்கிரசுக்குள் சமூக சமத்துவம் காண விரும்பியோர், இருக்கவே செய்தார்கள். ஆலயப் பிரவேசம், அரிஜன இயக்கம் போன்ற முக்கிய அம்சங்களில் அவர்கள் குரலை காங்கிரஸ் ஒதுக்கியது. பெரியார், வ.உ.சி., வரதராஜுலு நாயுடு போன்றவர்கள் ஒதுக்கப்பட்டார்கள். மொழிப் பிரச்சினையிலும் இதே போக்கு. தொ.பொ.மீ.,சிதம்பரநாத முதலியார், மறைமலை அடிகள், திரு.வி.க. போன்றோர் நகர்ந்து நின்றதை ஆசிரியர் குறிப்பிடத் தவறவில்லை.

நீலன் சிலை அகற்றும் போராட்டம், சென்னை கண்ட மிக முக்கியப் போர். அதற்குச் சிறப்பான இடம் கொடுத்துள்ளார் ஆசிரியர். 1857 இந்தியச் சுதந்திரப் போரில் நீல் எனப்படும் ஜார்ஜ் நீய்ல், படை நடத்திச் சென்ற வழியில் எல்லாம் பெண்களையும், குழந்தைகளையும் கடுமையாகத் தாக்கியவன். அதற்காகவே சென்னையில் அவனுக்குச் சிலை.

மக்களே மக்களுக்கு...

1923-ம் ஆண்டு, இந்தியாவிலேயே முதன்முறையாக மதராஸில் மே தினம்அனுஷ்டிக்கப்பட்டது. சிங்காரவேலர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். 1931 மார்ச் 23 இரவில் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு மூவரும் தூக்கில் இடப்பட்ட செய்தி கேட்டுச் சென்னை அதிர்ந்தது. காந்தியும் காங்கிரசும் இவ்விஷயத்தில் சரியாக நடந்துகொள்ளவில்லை. சென்னைப்பட்டணத்தில் மக்கள் தாமாகவே கடைகளை அடைத்திருக்கிறார்கள். எந்தக் கட்சியின் தலைமையும் இன்றி, மக்களே மக்களுக்குத் தலைமை தாங்கி ஊர்வலம் நடத்தி இருக்கிறார்கள்.

ருக்மிணி லட்சுமிபதி, உப்பு சத்தியாகிரகத்தில் முதன் முதலாகக் கைதான பெண்மணி. போராட்டம் என்றால் முதலில் வந்து நிற்பவர். பிரகாசம் மந்திரிசபையில் தன் துறையில் பல புரட்சிகள் செய்தவர். என்றாலும் ஓமந்தூரார் மந்திரி சபையில் அவர் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. காரணம், அடிக்கடி காங்கிரசை விட்டுப் போவதும் வருவதுமாக இருந்த ராஜாஜியையும், காங்கிரசையும் அவர் விமர்சனம் செய்தது. இதுபோல நேதாஜிப் படையில் பணியாற்றிய லட்சுமி, கேப்டனாகத் துப்பாக்கி ஏந்தி நிற்கிற படம் சென்னையை மருட்டி இருக்கிறது. சென்னையின் ஒரு முக்கிய பெருமையான எழுத்தாளர் வை.மு.கோதைநாயகி அம்மாள் பற்றிய அறிமுகமும் செயல்பாடும் சரியாகப் பதிவாகி இருக்கின்றன.

மாற்றம் செய்த பெரியார்

சென்னைக்கு முதன்முதலாக ரயிலும் டிராம் வண்டியும் அறிமுகமாகும்போது, சமூகம் அவற்றை எப்படி எதிர்கொண்டது? ‘மறையரோடு பள்ளுப் பறையரை ஏற்றிட்டு, மதபேதத்தை ஒழித்திட்ட ரயிலே’ என்று பாடுகிறார் உடுமலை நாராயணகவி. இந்தியர்கள் அவ்வளவு சீக்கிரம் மாறிவிடுவார்களா, என்ன?

‘மறையரோடு பள்ளுப் பறையை ரயில் ஏற்றிச் சென்றாலும், ரயில்வே போஜன சாலையில் (உணவு விடுதியில்) தனி இடமுறை இருந்துள்ளது. இதுபற்றிக் கண்டனம் எழுந்துள்ளது. ரயில் நிர்வாகம் அசையவில்லை. இந்த விஷயத்தில் பெரியார் தலையிட்டு மாற்றம் ஏற்படுத்தியதை ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டுப்பாடல்களில், குஜிலிப் பாடல்களில் மக்கள் வாழ்வு எவ்வாறு சித்தரிக்கப்படுகிறது? இந்தத் தேசத்தின் பொருளாதாரம் சீர் குலைந்தபோது, ‘ஊரான் ஊரான் தோட்டத்திலே, ஒருத்தன் போட்டானாம் வெள்ளரிக்காய், காசுக்கு ரெண்டாக விற்கச் சொல்லி காகிதம் போட்டானாம் வெள்ளக்காரன்...’ என்று பாடினார்கள் நாட்டுக்கவிகள். அதே சமயம், ‘நாம் செய்த புண்ணியத்தாலல்லவோ நம் இங்கிலீஷ் அரசாட்சி இருந்ததடி’ என்று ஒருவர் பாடியும் இருக்கிறார்.

வாசியுங்கள்... யோசியுங்கள்...

சென்னையின் சுமார் 300 ஆண்டுகால வரலாற்றில் அனைத்து முக்கிய மக்கள் இயக்கத்தையும், 650 பக்கத்தில் நல்ல மொழியில் கொண்டு வந்திருக்கிறார் ராமச்சந்திர வைத்தியநாத். ஏராளமான அந்தக் காலத்துப் புகைப் படங்கள்.

சென்னை என்றாலே கூவம், கொசு மற்றும் மோசமான அரசியல்வாதிகள் என்று வெறுத்துப் பேசும் மனிதர்கள் இந்த ‘சென்னப்பட்டணம், மண்ணும் மக்களும்’ நூலை வாசிக்க வேண்டும். அவர்கள் மனம் மாறும்.

பாரதி புத்தகாலயத்தின் பெருமைக்குரிய புத்தகங்களில் ஒன்று இது.

வரலாறு, யார் பார்வையில், யாருக்காக எழுதப்பட வேண்டும் என்பதற்கு இந்த நூல் நல்ல முன்மாதிரி!

- சுடரும்...

எண்ணங்களைப் பகிர: writerprapanchan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

16 hours ago

இலக்கியம்

17 hours ago

இலக்கியம்

17 hours ago

இலக்கியம்

6 days ago

இலக்கியம்

7 days ago

இலக்கியம்

7 days ago

இலக்கியம்

7 days ago

இலக்கியம்

7 days ago

இலக்கியம்

11 days ago

இலக்கியம்

11 days ago

இலக்கியம்

14 days ago

இலக்கியம்

14 days ago

இலக்கியம்

14 days ago

இலக்கியம்

18 days ago

இலக்கியம்

18 days ago

மேலும்