விஜய நகர அரசின் ஆட்சியின்போது , அந்த அரசின் ஆளுநர்களாக இருந்த நாயக்கர்களின் நாயக்கம், போர்ச்சுகீசியர் வருகை காரணமாகச் சோழ மண்டலப் பகுதிகளில் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சி, சமுதாய சூழ்நிலை, நாயக்கத்தின் ஆட்சிமாற்றம் பற்றி மிகத் தெளிவாக எழுதப்பட்ட ஆய்வு என்று, எஸ்.ஜெயசீல ஸ்டீபன் எழுதியுள்ள ‘சோழ மண்டலக் கடற்கரையும் அதன் உள்நாடும் - பொருளாதார, சமூக, அரசியல் அமைப்பு ’ என்ற நூலைத் தயக்கமின்றி சொல்லலாம்.
ஆய்வின் காலப்பகுதி கி.பி 1500- 1600 என்றாலும், ஆய்வுகள் வரலாற்று ஊஞ்சல்கள். அவை முன்னும் பின்னும் சஞ்சாரம் செய்பவை. பிற்காலச் சோழர்கள் சமைத்த அரசியலும், போர்ச்சுகீசியர் வரவு வட தமிழகத்தில் ஏற்படுத்திய நவீன காலமும், உலக அரசியல், வணிகத்தோடு ( அரசியல் மற்றும் வணிகம் என்று தனித்தனியாக வாசிக்க வேண்டுகிறேன் ) தமிழர் இணைந்த ஒரு புதிய சங்கமமும் தோன்றிய, தமிழர் வாழ்வின் ஒரு முக்கிய காலகட்டம் இது. விஜயநகரம் அதன் ஆட்சி என்றதும், ராயர்களோடும் நாயக்கர்களோடும் பெயர் உதிர்ப்பைச் செய்துவிட்டு நழுவும் ஆய்வுகள் இருக்கவே செய்கின்றன.
புதிய வாழ்க்கை முறையை ருசிக்க வாய்ப்புகளை வாழ்க்கை தரத்தான் செய்தது. அது, தமிழர்கள் வாழ்க்கை முறையில் எவ்வாறு படர்ந்தது என்பதை ஆய்வு ஓர்மையோடு ஜெயசீல ஸ்டீபன் மிகவும் அடர்த்தியான மொழியில் எழுதியுள்ளார். போர்ச்சுகீசியம் போன்ற சில ஐரோப்பிய மொழிகளில் பயிற்சி உள்ளவர் ஸ்டீபன். ஆகவே, முதன்மை ஆதாரங்களை எளிதாக அவரால் திரட்ட முடிந்தது. இத்தனைக்கும் விஜய நகரக் காலத்துக்குரிய பல கல்வெட்டுகள் இன்னும் பதிப்பிக்கப்படவே இல்லை. (அரசுகளின் அரிய தொண்டு?)
நிலவியலின் அரசியல்
சோழ மண்டலத்தின் வட எல்லை கிழக்குப்படை நாடும், சூலூர் தாலுக்காவின் ஆத்தூர் நாடும், வங்க விரிகுடாவின் துர்க்கா ராஜபட்டணம் வரை நீண்டது. பழவேற்காட்டில் முடிகிறது. சேலம் மாவட்ட ஆத்தூர், தென் ஆற்காடு திருக்கோவிலூர் வரை சோழ மண்டலம் பரவியது. சோழ மண்டலத்தின் தென்மேற்கு எல்லை திருவரங்கத்துடன், திருச்சி, குளித்துறை, புதுக்கோட்டையின் சில பகுதிகளை உள்ளடக்கியது. இந்த எல்லைக்குட்பட்ட நிலவியலின் அரசியல் சமூக வாழ்க்கை ஆய்வுக்கு உள்ளாகி இருக்கிறது.
நிலப்பிரிவுகள்- மண்டலம், ராஜ்யம், சீமை, உச்சவாடி, வளநாடு, கோட்டம், பற்று, நாடு, குர்ரம், தனியூர் என்பதாம். கி.பி.1371 முதல் 1530 வரை 58 நாயக்கர்கள் ஆண்டுள்ளார்கள். நிலப்பிரிவின் தலைவர்கள் நாயக்கர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். 14-ம் நூற்றாண்டின் நடுவில், விஜய நகர அரசு அதிகாரம் தொடங்கியது. பெரிய நிலப்பரப்பை ஆளவும், சோழ மண்டலக் கோயில்களில் சீராக வழிபாடுகள் நடக்கவும், நிலம் சொத்து விவகாரங்களைக் கவனிக்கிற பொறுப்பு மட்டுமே நாயக்கர்களுக்கு இருந்தது. பிறகு, ராணுவம் முதலான பொறுப்புகளை இவர்கள் கையில் எடுத்துக் கொண்டார்கள்.
நிலங்கள் அரசரிடம் இருந்தன. மடங்கள், கோயில்கள், அரசு தானம் பெற்று நிலவுடமை கொண்டன. கோயில் நிலக் குத்தகையாளர்கள், தனிநபர்கள், சாதிக் குழுக்கள் நில உரிமையாளராக மாறினர். நில உடமையில் பிராமணர்கள் குறைவு. மனித அடிமை முறை இருந்தது. காஞ்சி காமாட்சி அம்மன் நில சேவைக்கு 1,563 விவசாயத் தொழிலாளர்கள் வாழ்நாள் அடிமை ஆயினர்.
பருத்தி முக்கிய பயிர்
நிலத்தை, வாரம் ஒன்று பகிர்வு முறையில் விவசாயத்துக்கு அளிக்கப்பட்டது. இது உள்ளூர் விவசாயிகளுக்கு மட்டுமே தரப்பட்டது ஒரு நல்ல அம்சம். நன்செய் நிலத்தில் பெரும்பாலும் நெல் பயிரிடப்பட்டது. இவை சம்பா, ரஜனா, குறுவை மற்றும் பஞ்சாவரை என்று பெயர் பெற்றவை. பருத்தி முக்கிய பயிர். கரும்பும் பயிரிடப்பட்டது.
நீர் ஆதாரத்தை அடிப்படையாகக் கொண்டு நன்செய், புன்செய், தோட்டம், நத்தம், படுகை என்று நிலம் வகைப்பட்டது. நீர்ப்பாசனத்தில் நாயக்கர்கள் கவனம் செலுத்தினார்கள். இது அவரது ஆட்சியில் முக்கிய அம்சம். கிணறுகள், குளம், ஏரி முதலான இன்றுள்ள தமிழக நீர் ஆதாரங்கள் அக்காலத்தின் (16,17 நூற்றாண்டுகளின் ) உருவாக்கமே ஆகும்.
இப்போது நாம் அழைத்து மகிழும் ஏரிக்கரைத் தெரு, குளத் தெரு, வாய்க்கால் கரை, டேங்க் ரோடு என்ற பெயரில் நீர் இருந்தமைக்கு ஆதாரம். ஏரிகள், நகர்கள் ஆயின. தமிழகத்துக்குப் பேருந்து நிலையங்கள் பெரும்பான்மையும் ஏரிகள், குளத்துக்கு மேல் கட்டப்பட்டவை. விவசாயிகளைக் கோவனத்தோடு டெல்லிக்கு அனுப்பி வைத்துள்ளது நம் காலத்து ஜனநாயகம்.
வரிச்சுமை தாங்காமல் மக்கள் தம் வாழ்விடத்தை விட்டு அடிக்கடி வெளியேற்றம் செய்துள்ளார்கள். மக்கள், தங்களைத் தாங்களே அடிமைகளாக விற்றுக் கொண்டார்கள்.
சோழ மண்டலம் முக்கியமான நெசவு மையமாக இருந்துள்ளது. சிண்ட்ஸ் என்பதே பிரபலமான ஜவுளி. சிண்ட்ஸ் என்பது சிட்டா என்கிற புள்ளி போட்ட துணி. இவை பழவேற்காட்டுக்கும் சாந்தோமுக்கும் கொண்டு செல்லப்பட்டு கப்பல் பயணம் செய்தன. சோழ மண்டலத் துணிகள் கலிக்கோ, அல்லது மஸ்லின் என்றும் அறியப்பட்டது. போர்ச்சுகீசியர் ‘பீட்டிலா’ என்ற முகத்திரைத் துணியாக மஸ்லினைப் பயன்படுத்திக் கொண்டனர். விலையுயர்ந்த பூப்போட்ட பட்டு, தங்கம் மற்றும் வெள்ளி இழையோடிய சரசா அல்லது சரங் துணியும் சோழ மண்டல நெசவாளிகள் திறனை உலகுக்கு அறிவித்தன. நெசவாளர் குடி இருக்கக் கோயில் நிலம் அளிக்கப்பட்டது. அரசு, தறிவரி கேட்டு வாங்கிக் கொண்டது.
கடல் போர்கள்
கூலித்தறி தொழிலாளிக்குக் கட்டுப்பட்டும், வணிகர்களுக்கு அவர்கள் மேல் இருந்த அதிகாரமும் கல் எழுத்து. சர்க்கரை, உப்பு எண்ணெய் உற்பத்தியும் நடந்தது.சேலம் இரும்பு கொண்டு பீரங்கிகள், பீரங்கிக் குண்டுகள் செய்யப்பட்டன. வணிகம் செழித்திருக்கிறது. வணிகப் பொருட்கள் பரவலாகப் பாதைகள், வழிகள், போக்குவரத்துக்கள் வேண்டும். அந்த வகைக் குற்றம் நாயக்கர்கள் மேல் சொல்ல முடியாது. வணிகம் செழிப்பது என்பது அரசு கஜானா செழிக்கிறது என்பது. பொருட்கள் கிராமங்களுக்குச் சென்று வாரச்சந்தை வியாபாரத்துக்குட்பட்டு, மக்களுக்கு கிடைத்தன.
வணிக வளர்ச்சி நகர வளர்ச்சியாகப் பரிணமித்தன. இதன் ஒரு வளர்ச்சி கோட்டை. அதிகாரம், செல்வம் சேர்க்கும். செல்வத்தைக் காக்கக் கோட்டை வரும். ராணுவம் வரும். அதிகாரம் பேரதிகாரமாகும். பாதுகாப்பு பலப்படும். எப்போதும் ஆதிக்கங்கள், தம்மை அறியாமலேயே தமக்கு எதிராக மக்கள் திரளைச் சேர்க்கும்.
விடுதலைப் போராட்டங்கள் வெடிக்கும். மக்கள் அதிகாரம் என்ற பெயரில் சிலர் அதிகாரம் பெறுவர். அவர்கள் ஆதிக்கவாதிகள் இடத்தை நிரப்புவார்கள். இதுவே நியதியாக இருக்கிறது. கடல்வழி வணிகம் முக்கியத்துவம் பெற்றது. சோழ மண்டலத்தில் பட்டணம் என்ற பெயரில் துறைமுகங்கள் செழித்தன. அரிசி வியாபாரத்தில் ஆதிக்கம் செலுத்திய மரைக்காயர்க்கும் போர்ச்சுகீசியர்க்கும் கடல் போர்கள் நிகழ்ந்தன.
டிசம்பர் 1524 ல் சோழ மண்டலத்துறைமுகங்களில் இருந்து மேற்குக் கடற்கரைக்குப் போர்ச்சுகீசியர்களின் ஏற்றுமதிகள் என்று ஸ்டீபன் பட்டியலே தருகிறார். சாண்டியாகோ, கான்சேகாவோ முதலான பல துறைமுகங்களுக்கும் அரிசி, வெண்ணெய், உப்பு, இரும்பு, மரம், பீரங்கிக் குண்டு ஆகியவை சென்றன. போர்ச்சுகீசியரின் முதல் வணிகத் தலமாகப் பழவேற்காடு உருவாயிற்று.
மக்களை வாட்டிய பஞ்சம்
சோழ மண்டலச் சமூகம், தேக்க சமுதாயம் இல்லை. மாறும் சமூகமாகவே இருந்தது. விவசாயிகள் நிலை சரிந்தது. ஆனால், வணிகர்களை விட மேலாக இருந்தார்கள். சில சாதிகள் மேல் வந்தன. வரிக்கொடுமை மிகுந்தது. விவசாயிகள், நிலத்தை விற்றுவிட்டு வெளியேறினார்கள். நாயக்கர்கள் விழித்துக் கொண்டார்கள். சில சலுகைகள் கிடைத்தன. அடிக்கடி ஏற்பட்ட வறட்சி, பஞ்சம் போன்றவை மக்களைத் துன்புறுத்தின. கைக்கோளர், தேவாங்கர், சாலியர், பட்டு நூல்காரர், கோயில்களோடு இணைக்கப்பட்டதால் வளம் கண்டனர்.
பல்லக்கில் செல்லும் உரிமை, சடங்கு ஊதும் உரிமை போன்றவைகளுக்காக ‘உயிரைக் கொடுத்து மானம் காக்கும்’ தகராறுகளைத் தமிழர் கைவிடமாட்டார்களே! ஜவுளி, வணிகம் ஆகையால் அத்தொழில் பிழைத்துக் கொண்டது. பாவாடை, பரிவட்டம், முகம்துடை போன்ற உரிமைகளில் சமத்துவம் கேட்டுப் போராட்டம் நிகழ்ந்தது. தொழில்நுட்பத் திறன் தேவைப்பட்ட கைவினைஞர்களுக்கும், தேவைப்படாத தொழிலாளர்களுக்கும் பிணக்கு இருந்தது. வணிகர்கள், நெசவாளர்களின் உயர்நிலையை ஏற்றுக் கொண்டார்கள்.
மனிதர்கள் ஏலம் விடப்பட்டு அடிமைகளாக வாங்கவும், விற்கவும்பட்டார்கள். குடும்பங்கள் மீதே அரசு வரி விதித்ததால் குடும்பங்கள் அடிமைக் குடும்பங்களாயின. பிராமணர்கள், அவர்களுக்கு அனுமதிக்காத தொழில்களான விவசாயம், படை ஆளாகச் சேர்வது போன்ற தொழில்களைச் செய்தனர்... போர்ச்சுகீசியர் சோழ மண்டலத்தில் அமைத்துக் கொண்ட வாழ்க்கை முறையையும் ஸ்டீபன் ஆராய்ந்திருக்கிறார்.
முனைவரும், அறிஞருமான எஸ்.ஜெயசீல ஸ்டீபனின் இந்த ஆய்வு நூல், முற்ற முழுக்க மூல ஆதாரங்களைக் கொண்டு பேருழைப்பையும் உண்மையான ஈடுபாட்டையும் நல்கி உருவாக்கப்பட்ட பிரதியாகும். ரகு அந்தோணியின் மொழிபெயர்ப்பு சிறப்புடன் திகழும் அறிவார்ந்த இந்த நூலை ‘நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்’ பதிப்பித்துள்ளது.
- சுடரும்...
எண்ணங்களைப் பகிர: writerprapanchan@gmail.com
முக்கிய செய்திகள்
இலக்கியம்
14 hours ago
இலக்கியம்
14 hours ago
இலக்கியம்
14 hours ago
இலக்கியம்
14 hours ago
இலக்கியம்
4 days ago
இலக்கியம்
4 days ago
இலக்கியம்
7 days ago
இலக்கியம்
7 days ago
இலக்கியம்
7 days ago
இலக்கியம்
7 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
14 days ago
இலக்கியம்
14 days ago
இலக்கியம்
14 days ago
இலக்கியம்
14 days ago