கடவுளின் நாக்கு: 76- தந்தையெனும் தியாகி!

By திருவனந்தபுரம் எஸ்.ராமகிருஷ்ணன்

யதான காலத்திலும் தந்தை வேலை செய்து சம்பாதிக்க வேண்டுமா? எந்த வயதில்தான் ஒரு தந்தை ஒய்வு பெற முடியும் என்பது குறித்த, ஒரு தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்துகொள்ளச் சென்றிருந்தேன். 60 வயதுகளைக் கடந்த பல தந்தைகள் குடும்பச் சுமையைத் தாங்குவதற்காக வேலைக்குப் போய் வருவதாகச் சொன்னார்கள். அதைப் புரிந்துகொள்ள முடிந்தது.

ஆனால், வேலைக்குப் போகாவிட்டால் வீட்டில் இவர்களை வைத்து சமாளிக்க முடியாது; ஊர் விஷயங்களில் நாட்டம் கொண்டுவிடுவார்கள்; வெட்டி அரசியல் பேசுவார்கள்; சின்ன விஷயங்களைப் பெரிதுபடுத்தி சண்டையிடுவார்கள்... ஆகவே வயதானாலும் ஆண்கள் வேலைக்கு போயாக வேண்டும் என, ஒரு பெண் உணர்ச்சிபூர்வமாகச் சொன்னார். இது பொதுபுத்தியின் குரல். தவறான எண்ணம்.

இரண்டு தலைமுறைகளுக்கு முன்பு 15 வயது வந்துவிட்டாலே, ஆண் சம்பாதிக்க தொடங்கிவிட வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. அதனால், படிப்பை விட்டு வேலைக்குப் போய் குடும்ப பொறுப்புகளை ஏற்றுக் கொண்டவர்கள் ஏராளம். அந்தத் தலைமுறையினருக்கு அறுபது, எழுபது வயதுகள் ஆனாலும் ஓய்வே கிடையாது. மகனுக்காக, மகளுக்காக, பேரன் - பேத்திகளுக்காக வாழ் நாள் முழுவதும் அவர்கள் உழைத்துக்கொண்டேதான் இருக்க வேண்டும்.

ஆண் அழக்கூடாதா?

பெண்ணின் வலியும், வேதனையும் கண்ணீராக வெளிப்பட்டுவிடுகின்றன. அதிலும் ஆண்கள் அழக்கூடாது என்ற கட்டுப்பாடு இருப்பதால், அவர்களின் துயரம் உறைந்து இறுகி மவுனமாகிவிடுகிறது. அந்தச் சுமையைத் தாங்குவது எளிதானது இல்லை.

தந்தை என்றாலே தியாகி என்ற பிம்பம் பண்பாட்டினால் உருவாக்கப்பட்டதே. தலை நரைக்கத் தொடங்கியதும் அவர் எளிய ஆசைகளைக் கூட கைவிட்டுவிட வேண்டும். கோயிலைத் தவிர அவருக்கு புகலிடம் கிடையாது. முதியவர்கள் சத்தமாக சிரித்து பேசினால்கூட தவறாக கருதப்பட்டது. அதிலும், மனைவியை இழந்த முதியவரின் துயரம் சொல்லில் அடங்காதது. அது, வலது கை துண்டிக்கபட்ட ஒருவனின் நிலையை போன்றது.

பிள்ளைகளுக்குத் தந்தை ஆற்ற வேண்டியது கடமை. பொறுப்பு எனக் கருதப்படுகிறது. அதே நேரம் பிள்ளைகள் விருப்பமிருந்தால் மட்டுமே தந்தைக்கு உதவிகள் செய்யலாம். வைத்துப் பராமரிக்கலாம் என்று கருதப்படுகிறது. அது தவறானது.

பிள்ளையின் மனசில் பிம்பம்

பிள்ளைகளின் வீட்டில் முதுமையைக் கழிக்க தந்தை ஏன் தயங்குகிறார்?

பிள்ளைகளை அவர்தான் வளர்த்தார் என்றபோதும், அவர்களுக்கு தான் சுமையாகிவிடக் கூடாது என நினைக்கிறார். அதுபோலவே இத்தனை ஆண்டுகளாக அவர்களுக்கு பணம் கொடுத்து பழகிய நாம், எப்படி அவர்களிடம் பணம் கேட்பது என்று தயங்குகிறார். அது இயல்பான தயக்கம்தானே. தாயோடு பிள்ளைகளுக்கு உள்ள நெருக்கம், தந்தையிடம் அவ்வளவாக இருப்பது இல்லை. பெரும்பான்மை தந்தைகள் தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்திக்கொள்ளத் தெரியாதவர்கள். அல்லது மிகையாக, தவறாக வெளிப்படுத்துகிறவர்கள். அது, அவர்கள் குறித்த மனப்பதிவு ஒன்றை பிள்ளைகள் மனதில் ஆழமாக பதித்துவிடுகிறது.

மேற்குலகில் தந்தையின் பொறுப்பு படிக்க வைப்பதுடன் முடிந்துவிடுகிறது. வேலை தேடுவது, திருமணம் செய்துகொள்வது, குடும்பத்தை அமைத்துக்கொள்வது எல்லாமும் பிள்ளைகளின் வேலை. பிரார்த்தனையின்போது அவர்கள் ஒருவர் நலத்துக்காக மற்றவர் பிரார்த்தனை செய்துகொள்கிறார்கள். மற்றபடி, தந்தையின் வருவாயை நம்பி மட்டுமே பிள்ளைகள் இருப்பதில்லை. தந்தைகளும் தன் பிள்ளைதானே என்று வைத்து தாங்கிக்கொண்டே இருப்பதில்லை.

தாங்க முடியாத ஏமாற்றம்

மனிதனைத் தவிர, வேறு எந்த விலங்கும் இத்தனை காலம் பெற்றோர்களால் பராமரிக்கப்படுவதில்லை. அதனால்தான் உறவு அழுத்தமாக இருக்கிறது. தன் கஷ்டங்களைப் பெற்றோர் வெளிப்படுத்திக்கொள்வது இல்லை. கொள்ளக்கூடாது எனப் பண்பாடு தடுத்துவைத்திருக்கிறது. ஆனால், இன்று தந்தையான இளைய சமூகம் நாளை நிச்சயம் அப்படி நடந்துகொள்ளாது. 70 வயதான தனது தந்தை வேலை பார்க்க வேண்டும் எனச் சொல்லும் இளைஞன், நிச்சயம் அவனது 50 வயதுக்கு மேல் வேலைக்குப் போக மாட்டான்.

காலம் மாறிக்கொண்டே வருகிறது. ஆனால், அந்த மாற்றம் சென்ற தலைமுறைக்குச் சுமையாக இருக்கிறது. அவர்கள் தத்தளிக்கிறார்கள். தங்கள் கஷ்டங்களைப் பகிர்ந்துகொள்ள ஆள் இன்றி துயரம் கொள்கிறார்கள். உலகம் தன்னைப் புரிந்து கொள்ளவில்லையே என்று ஆதங்கப்படுவதை விடவும், சொந்தப் பிள்ளைகள் தன்னைப் புரிந்துகொள்ளவில்லையே என்று ஆதங்கப்படுகிறவர்கள்தான் அதிகம். அந்த ஏமாற்றம் தாங்க முடியாதது.

படித்த பிள்ளைகளை விடவும் படிக்காத பிள்ளைகள் பெற்றோர்களை முறையாக வைத்துப் பேணுகிறார்கள் என்று ஒரு வயதானவர் சொன்னார். அதில் நிஜம் இருக்கவே செய்கிறது.

கண் பேசும் சோக மொழி

இயந்திரங்கள் கூட குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே ஓடக்கூடியது. மனிதர்கள் இயந்திரங்கள் இல்லை. அவர்கள் மனம் விரும்புவது போல உடல் ஒத்துழைப்பு தராது. தனக்காக பணம் சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்காத தந்தை முடிவில் கைவிடப்படுகிறார். நிர்கதியாக நிற்கிறார். அப்படி பொதுமருத்துவமனையில் நோயாளியாக நிற்கும் பலரைக் கண்டிருக்கிறேன். அவர்கள் கண்களில் வெளிப்படும் சோகம் தாங்கமுடியாதது.

ஜப்பானில் அந்தக் காலங்களில் ஒரு பழக்கம் இருந்தது. முதுமையை எய்தியதும் அவர்களை மலைமேல் கொண்டுபோய்விட்டுவிட்டு வந்துவிட வேண்டும். அது பிள்ளைகளின் கடமை. ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் மலைக் குகையில் தனியாக வாழ்ந்து மரணத்தை சந்திக்க வேண்டும். இப்படியொரு பழக்கம் சட்டமாகவே இருந்தது.

இந்தப் பழக்கம் பற்றிய உண்மை சம்பவம் ஒன்றை பழங்கதையாக இன்றும் ஜப்பானில் சொல்கிறார்கள்.

தூக்கி வளர்த்த துயரம்

கிச்சிரோ என்ற இளைஞன் தனது வயதான தாயை மலையில் கொண்டுபோய் விட்டுவிட முடிவு செய்தான். தாயோ தனது மகனை, பேரன் - பேத்திகளை விட்டுப் பிரிய மனமில்லாமல் இருந்தாள். ஆனால், மகனும் - மருமகளும் அவளை மலையில் கொண்டுபோய்விட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்கள்.

குறிப்பிட்ட நாளில் கிச்சிரோ தாயைத் தூக்கிக்கொண்டு மலைக்குச் சென்றான். அடர்ந்த காடுள்ள மலை அது. அம்மாவை முதுகில் தூக்கிக் கொண்டு நடக்க ஆரம்பித்தான். வழியில் அம்மா ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை. மலையின் உச்சிக்குக் கொண்டுபோய் அங்கிருந்த குகையில் விட்டுவிட்டு மகன் திரும்பும்போது அம்மா அழுதாள்.

‘‘ஏன் அம்மா அழுகிறாய்? சாவை கண்டு பயமா..?’’ என கிச்சிரோ கேட்டான்.

‘‘இல்லை மகனே! நீ தூக்கத்தில் அம்மா அம்மா என்று புலம்புவாய். எழுந்து வந்து நான் உன் நெற்றியைத் தடவி ஆறுதல் படுத்துவேன். இத்தனை வயதாகியும் அந்தப் பழக்கம் உன்னை விட்டுப் போகவே இல்லை. நாளை நீ தூக்கத்தில் புலம்பும்போது நான் உடனிருக்க மாட்டேன் என்பதுதன் கவலை அளிக்கிறது. அதுபோல உடல் நலமில்லாமல் போனாலும், கஷ்டம் வந்தாலும் அம்மா அம்மா என என்னைத் தேடுவாய். பெற்றோர்கள் தங்கள் நோயை, வலியை தாங்கிக்கொள்வார்கள். ஆனால், பிள்ளைகளின் கண்ணீரை அவர்களால் தாங்கவே முடியாது. ஓடி அணைத்து ஆற்றுபடுத்தத் துடிப்பார்கள். நான் உயிரோடு இருந்தும் உன் கண்ணீரைத் துடைக்கமுடியாமல் போய்விடுமே.. என்றுதான் வருந்துகிறேன்’’ என்றாள்.

அதைக் கேட்ட மகன் அழுதான். தன்னை அரசன் தண்டித்தாலும் பரவாயில்லை என்று, தனது தாயை வீட்டடுக்குத் திரும்ப அழைத்து வந்தான். அரசாங்க வீரர்கள் அவனைப் பிடித்துக்கொண்டுப் போய், சிறையில் அடைத்தார்கள். இந்த விஷயம் பொதுமக்கள் மத்தியில் பரவியது. அரசை எதிர்த்து பலத்த போராட்டங்கள் உருவாகின. அதன் பின்பே அந்தச் சட்டம் கைவிடப்பட்டது. அரசே அதன்பின்பு முதியவர்களுக்கான பராமரிப்பையும் உதவித் தொகை வழங்குவதையும் நடைமுறைப்படுத்தத் தொடங்கியது என, அந்தக் கதை முடிகிறது.

ஒவ்வொரு தலைமுறையும் தனக்குப் பின்னால் வரும் அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டுகிறது. ஆகவே, இந்தத் தலைமுறையில் பலர் பெற்றோர்களை மோசமாக நடத்துகிற விதம் நாளை அவர்களுக்கே வந்து சேரப் போகிறது என்பது நிதர்சனம்!

- கதைகள் பேசும்...

எண்ணங்களைப் பகிர:writerramki@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

3 days ago

இலக்கியம்

3 days ago

இலக்கியம்

6 days ago

இலக்கியம்

6 days ago

இலக்கியம்

6 days ago

இலக்கியம்

6 days ago

இலக்கியம்

11 days ago

இலக்கியம்

13 days ago

இலக்கியம்

13 days ago

இலக்கியம்

13 days ago

இலக்கியம்

13 days ago

இலக்கியம்

20 days ago

இலக்கியம்

20 days ago

இலக்கியம்

20 days ago

இலக்கியம்

2 months ago

மேலும்