இலக்கியம்

எமதுள்ளம் சுடர்விடுக! - 05: வாடியப் பயிரை கண்டு வாடியவர்!

பிரபஞ்சன்

ள்ளலார் என்று அறியப்படும் வடலூர் இராமலிங்க அடிகள், சமய ஆன்மிக உலகில் ஒரு புரட்சியாளர் எனவே கருதப்படுவர். தனிமனிதரின் முழுமையையே இலக்காகக் கொண்டு இயங்கும் சமய உலகில், தனி மனிதனைச் சமுதாய அங்கமாகவே பாவித்து இரண்டின் உயர்வுக்கும் பாடுபட்டவர் வள்ளலார்.

19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அவருடைய ஞானமும் சிந்தனைகளும் 20-ம் நூற்றாண்டின் தமிழக அரசியல், கலாச்சாரத்தைப் பெரிதும் வடிவமைத்ததைப் பலரும் இன்னும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ‘சீர்திருத்தச் சைவம்’என்ற ஒன்று தோன்றியது. மறைமலை அடிகளும், திரு.வி.க-வும் தம்மைச் சீர்திருத்தச் சைவர் என்று அழைத்துக் கொண்டார்கள். சீர்திருத்தச் சைவம், வள்ளலாரின் ‘சன்மார்க்கம்’எனும் கருத்தாடலில் இருந்து பிறந்ததாகும்.

தமிழ்நாட்டில் முதன்முதலாகத் திருக்குறள் வகுப்பு நடத்தியவர் வள்ளலாரே. தமிழ்நாட்டில் முதன்முதலாக முதியோர் கல்வியை ஏற்படுத்தியவர் அவரே. முதன்முதலில் மும்மொழிப் பாடசாலை (தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம்) அவர் கண்டது. இலக்கியச் சான்றாகக் கல்வெட்டை ஆராய்ச்சி செய்து உரைத்தவர் அவர். தன் கொள்கைக்காகத் தனி மார்க்கமும், தனிக் கொடியும், தனி மந்திரமும் அமைத்து வழிபாட்டுக்குச் சபையும் அமைத்தவர் அவர். சமய குரவர்கள் அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகருக்குப் பிறகு அவர்களுக்கு நிகராக மதிக்கப்பட்டதோடு, அவர்களின் தேவார, திருவாசகத்துக்கு நிகராகத் தம் படைப்பான திருவருட்பாவை நிறுவியவர் அவர்.

வள்ளலாரின் வரலாறு தெளிவாகவும் மிகவும் ஆராய்ச்சிபூர்வமாகவும் ஊரன் அடிகள் அவர்களால் எழுதப்பட்டு 1971-ல் வெளிவந்தது. அதன் நான்காம் பதிப்பு, சென்னை வர்த்தமானன் பதிப்பக வெளியீடாகச் சிறப்பாக இப்போது வெளிவந்துள்ளது.

ஊரன் அடிகள், 1955-ம் ஆண்டே தம் சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிலையத்தைத் தொடங்கிவிட்டவர். தம்மை இராமலிங்க அடிகளிடமும், அவர் ஸ்தாபனம் செய்த சன்மார்க்கப் பணிகளிலும் சமர்ப்பணம் செய்துவிட்டவர். எனினும், ஊரன் அடிகளின் பக்தியும் பரவசமும், வரலாற்றின் பக்கங்களில் மேலேறிவிடாமல் உண்மை, ஆதாரம், இவைகளின் அஸ்திவாரத்திலேயே இந்த நூலை எழுதி இருக்கிறார். ‘வள்ளலார் இராமலிங்க அடிகள் வரலாறு’ எனப் பெயரிய சுமார் 700 பக்க நூலில், அவர் மேற்கொண்ட ஜாக்கிரதை – அதாவது வள்ளலாரை எதிர்த்தவர்களைக் குறிப்பிப்பிடும்போதும் மரியாதைக் குறைவு ஏற்பட்டுவிடாமல் – பாராட்டத்தக்க பண்பாகும்.

வள்ளலாரின் தந்தை இராமையா பிள்ளை கிராமக் கணக்கர். தாயார் சின்னம்மை. பிறந்த ஊர் சிதம்பரம் அருகில் இருக்கும் மருதூர். தந்தையை ஆறாவது மாதமே இழந்தார் வள்ளலார். குடும்பம் சென்னைக்குக் குடியேறியது. வள்ளலாரின் அண்ணன் சபாபதி. புராணப் பிரசங்கியாக ஈட்டிய சிறிய வருவாயில் குடும்பம் வாழ்ந்தது.

வள்ளலாருக்குப் பள்ளிப் படிப்பில் கவனம் இல்லை. பாடல் எழுத வந்தது. அண்ணனுக்கு உதவியாகப் புராணம் வாசித்தார். தினமும் சென்னை கந்தசாமிக் கோயில் (கந்தக்கோட்டம்) சென்று முருகனைத் துதிப்பதை வழக்கமாகக் கொண்ட அவர், சுயமாகப் பாடத் தொடங்கினார்.

வள்ளலார் தனது 9 வயதில் பாடிய பாடல்கள் ‘தெய்வமணி மாலை’31 பாடல்களைக் கொண்டது. முதல் பாடல் ‘திருவோங்கு’என்றே தொடங்குகிறது.

‘திருவோங்கு புண்ணியச் செயல் ஓங்கி அன்பருள்

திறல் ஓங்கு செல்வம் ஓங்க..’ என்ற பாடலில் 23 முறை முறை ‘ஓங்கு’என்ற சொல் வருகிறது. இந்த மணிமாலையில் இடம்பெற்ற பாடல்தான் ‘ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்’என்ற பாடலும், வள்ளல் குழந்தை ஆடல் செய்யும் முன் பாடல் செய்திருக்கிறார்.

திருவொற்றியூரில் 35 வயது வரை வாழ்ந்த வள்ளலார், அக்காலத்தில் பெரிய வித்வானாக அறியப்பட்டிருக்கிறார். அக்காலத்தில் வாழ்ந்த மகா வித்வான்கள் மூவர். மீனாட்சி சுந்தரம் பிள்ளை (உ.வே.சா-வின் ஆசான்), ஆறுமுக நாவலர், இராமலிங்க அடிகள் ஆகியோரே அந்த மூவர். அவர் திருமுறைகளில் பெரும்பாலானவை இப்போது எழுதப்பட்டவை. அப்போது தமிழில் வசன நூல்கள் எழுதப்படுதல் அரிது. நம் வள்ளலார் மனுமுறை கண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம் எனும் இரண்டு வசன நூல்களை எழுதினார்.

வள்ளலாரின் 26-வது வயதில் (1849) தொழுவூர் வேலாயுத முதலியார் அவர்க்கு மாணவர் ஆனார். 1850-ல் வள்ளலாருக்குத் திருமணம் ஆயிற்று. மணமகள், அவர் அக்காள் மகள். முதலிரவு அறைக்குள் வள்ளலார் திருவாசகம் படித்தார். மனைவி கேட்டுக் கொண்டிருந்தார்.

wrapper

தன் 35-வது வயதில் சென்னையை நீத்த வள்ளலார், சிதம்பரத்தை நாடினார். சிதம்பரம் கோயில் மகுடாகமக் கோயில். அதற்கான பூசை இல்லாமல், வைதிகப் பூசை செய்து கொண்டிருந்தார்கள். அதை மாற்றி முயற்சி செய்தார் வள்ளலார். முடியாது போகவே, ஒரு புதிய சிதம்பரத்தையே வடலூரில் உருவாக்கினார். வடலூரை, உத்தரஞான சிதம்பரம் எனப் பெயரிட்டார். வள்ளலார் 1865-ல், ‘சமரச சுத்த சண்மார்க்க சங்கம்’எனும் புதிய அமைப்பை, சங்கத்தைத் தொடங்கினார்.

‘கடவுள் ஒருவர், அக் கடவுளை ஒளி (ஜோதி) வடிவில் வழிபட வேண்டும், சிறு தெய்வ வழிபாடு கூடாது, உயிர்ப் பலி வேண்டாம், சாதி சமய வேறுபாடு வேண்டாம், எவ்வுயிரும் தன் உயிர் போல எண்ணுதல், ஏழைகளின் பசி போக்குதல், புராண சாத்திரம் முடிவான உண்மைகளைத் தெரிவிக்காது’ போன்றவை வள்ளாருருடைய சங்கத்துக் கொள்கைகள்.

இறுக்கம் இரத்தின முதலியார், பெருமானின் அன்பர். அவர், வள்ளலாரின் பாடல்களைத் ‘திருவருட்பா’என்ற பெயரில் 1867-ல் வெளியிட்டார். அருட்பாவின் வரலாறு நீண்டது. வள்ளலாரை வற்புறுத்தியே அன்பர்கள் காரியம் சாதித்தார்கள். இதனால், ஒரு பெரும் கருத்து யுத்தம் சுமார் 50 ஆண்டுகள் நீண்டது. வள்ளலாரது பாடல்கள் அருட்பா அல்ல; அவை ‘மருட்பா’என்றார் ஆறுமுக நாவலர். காலம், அருட்பாவை ‘அருட்பா’ என்றே ஏற்றுக்கொண்டது.

பசி குறித்து வள்ளலார் சிந்தித்தது போல, வேறு ஞானியர் சிந்தித்தாரா என்பது சந்தேகம். பசி வந்தால், மானம் போகிறது. மானத்தைவிடவும் பெரிது எது? பசி தீர்ப்பது என்பது மனிதரை வாழச் செய்வது மாத்திரம் அல்ல; அறிவோடும் மானத்தோடும் வாழச் செய்வது. ‘பசி’ குறித்து ஒரு காவியமே (மணிமேகலை) எழுதப்பட்ட மொழி தமிழ்.

இதை உணர்ந்த வள்ளலார் ‘சத்திய தருமச் சாலை’ அமைத்தார். மூன்றுவேளையும் உணவு அறம் நடக்கும் இடம் அது. இப்படி பசித்தோர் இருக்கலாமா என்பது சரி. கேட்க வேண்டிய இடம் அரசு. ஜீவகாருண்யம் - வள்ளலாரின் முதல் கொள்கை. அதில் வருவது பசிப் பிணி போக்குதல்.

கடவுளை (அருட் பெரும் சோதி) வடிவில் வணங்கவே வள்ளலார் ஏற்படுத்தியதே சத்திய ஞான சபை. (இது 1872-ல்)

மேட்டுக்குப்பம் சித்திவளாகத் திருமாளிகையில், 1874-ம் ஆண்டு ஜனவரி மாதம் 30-ம் நாள், வள்ளலார் தாம் சித்தி அடையப் போவதாகச் சொல்லி அறைக்குள் சென்று தாளிட்டுக் கொண்டார்.

அரசாங்க விசாரணை நடந்தது. கலெக்டர் ஜே.எச்.கார்ஸ்டின் கதவைத் திறந்தார். வள்ளலார் இல்லை. தருமச் சாலையைப் பார்வை இட்ட கலைக்டர், ஏழைகளுக்கு உணவு தரும் பணியைப் பாராட்டி, செலவுக்கு இருபது ரூபாய் கொடுத்துவிட்டுச் சென்றார்.

- சுடர் விடும்.
எண்ணங்களைப் பகிர - writerprapanchan@gmail.com

SCROLL FOR NEXT