இருபதாம் நூற்றாண்டின் மகத்தான பரத நாட்டியக் கலைஞராக இந்தியாவிலும் வெளி உலகிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவர் பாலசரஸ்வதி. இசை, நடனம், நாடகம் மூன்றும் இணைந்த நிகழ்த்து கலையான பரதநாட்டியத்துக்கு ஒருகட்டத்தில் உயிர் கொடுத்து, மேடை ஏற்றம் காணாமல் ஒடுக்கிவைக்கப்பட்டிருந்த அந்தப் பாரம்பரிய நாட்டியக் கலையை, பொதுமக்கள் முன் நிறுத்தி ஒரு பெரிய வரலாற்றுத் தொடர்ச்சியை ஏற்படுத்தியவர் பாலசரஸ்வதி.
இந்தியாவின் செவ்வியல் நடன வகைகளில் ஒன்றான பரதநாட்டியத்தை மறு உருவாக்கம் செய்தவர் அவர். சுமார் ஆயிரம் ஆண்டுகளாகப் பரம்பரைப் பரம்பரையாக கையளிக்கப்பட்டுத் தொடர்ந்து ஆடிக்கொண்டிருந்த நடனமணிகள் மரபில் வந்த அவர், தன் காலத்தில் தன் கலைக்குத் தாயகத்திலும் உலக அளவிலும் ஏற்படுத்தித் தந்த மரியாதை அளவிட முடியாதது. தன்னைவிடத் தன் பரதக் கலை உயர்ந்தது என்பதை அவர் எப்போதும் மறந்ததில்லை.
பாலசரஸ்வதியின் வாழ்க்கை மற்றும் அவரது கலையின் வரலாற்றை டக்லஸ் எம்.நைட் ஆங்கிலத்தில் எழுதி 2010-ல் வெளியிட்டார். அந்த அமெரிக்கப் பதிப்பின் இந்தியப் பதிப்பு 2011-ல் வெளிவந்துள்ளது. தமிழில் எழுத்தாளர் டி.ஐ.அரவிந்தன் மொழியாக்கம் செய்துள்ளார். ‘க்ரியா’ பதிப்பகத்தின் அழகிய பதிப்பு. ‘பாலசரஸ்வதி – அவர் கலையும் வாழ்வும்’ என்பது தமிழ்ப் பதிப்பின் பெயர். பதிப்பாண்டு 2017. ஒரு நூறாண்டு பரதக்கலை வாழ்வு சித்தரிக்கப்படும் ஆற்றலோடு எழுதப்பட்ட நூல்.
தஞ்சாவூரில் பாலசரஸ்வதி 1918-ல் பிறந்தார். இசை, நடனத்தைத் தம் வாழ்க்கைமுறையாகக் கொண்ட தேவதாசி மரபில் தோன்றிய அவரது முன்னோர் பற்றிய வரலாற்றை தஞ்சாவூர் அரசவையில் காணமுடிகிறது. தஞ்சையை ஆண்ட துளஜா ராஜா காலத்தின் (1763-1783) பதிவேட்டில் பாலாவின் குடும்ப வரலாறு காணப்படுகிறது. அவரது முப்பாட்டியின் பாட்டி தஞ்சாவூர் பாப்பம்மாள், 1760 வாக்கில் பிறந்தவர், தஞ்சை அரசவையில் நர்த்தகியாகவும், இசைக் கலைஞராகவும் இருந்தார். இவரது மகள் ரூபவதி, தாயின் பணியைத் தொடர்ந்தார். ஏறக்குறைய இக்காலத்தில்தான் தஞ்சை நால்வர் என்கிற நாட்டிய ஆசான்கள், நடனத்தில் பெரும் மாறுதலைச் செய்து, அக்கலைக்குப் புதிய அடித்தளம் இட்டார்கள். ரூபவதியின் மகள் தஞ்சாவூர் காமாட்சி அம்மாள். அவருக்கு சியாமா சாஸ்திரியின் மகன் சுப்பராய சாஸ்திரி குருவாக வாய்த்தார். தியாகராஜ சுவாமிகளிடம் கற்றவர் சுப்பராயர். அவர் மட்டுமல்லாமல், தஞ்சாவூர் நால்வரிடம் சிஷ்யையாகப் பயின்றபோது முத்துசாமி தீட்சிதரின் மரபையும் கற்றார். ஆக, மாபெரும் மூன்று சங்கீத ஆச்சாரியார்களின் வளமான மரபுக்கு உட்பட்ட காமாட்சி, அவர் மகள் சுந்தரம்மாள், அவர் பேத்தி ஜெயம்மாள், அவர் மகள் பாலசரஸ்வதி என்று தம் கலைவாரிசுகளுக்குத் தம் கலையைக் கையளித்திருக்கிறார். ஒரு முக்கிய செய்தி, பாலாவின் தாயார் ஜெயம்மாளின் தாயாரே – அதாவது பாலாவின் பாட்டி – மாபெரும் வீணைக் கலைஞர் தனம்மாள்.
குழந்தை பாலாவுக்கு தம் குலக் கலையான நடனம் பயில்விக்கலாமா என்று தாய் ஜெயம்மாள், தன் தாயான வீணை தனம்மாளிடம் கேட்டார். தனம்மாளுக்கு விருப்பம் இல்லை. இருபதாம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளில் நடனம், குறிப்பாக நடனத்தைக் குடும்பக் கலையாகக் கொண்ட மரபுக் கலைஞர்கள் மனதிலும்கூட ஒதுக்கத்தைக் கண்டிருந்தது. சமூகச் சூழல் அக்கலையின்மேல் கவுரவம் ஏற்படுத்துவதாக இல்லை. தனம்மாள் யோசிக்கிறார். அரியக்குடி ராமானுஜ ஐயங்கார், தனம்மாளின் ரசிகர். அவசியம் பாலாவுக்கு நாட்டியம் கற்றுத்தர வேண்டும் என்கிறார். தனம்மாள் அப்போது கண் பார்வையை இழந்திருந்தார். ஒருநாள் ஜெயம்மாளை அழைத்த தனம்மாள், ‘‘அவளுக்கு (பாலாவுக்கு) மாறு கண் இருக்கிறதா?’’ என்று கேட்டிருக்கிறார். ‘‘இல்லை’’ என்கிறார் ஜெயம்மாள்.
‘‘அவள் பல் வரிசை சரியாக இருக்கிறதா?’’
‘‘ஆமாம்!’’
‘‘பார்க்க நன்றாக இருக்கிறாளா?’’
‘‘அழகு இல்லை என்றாலும் பார்க்க நன்றாக இருப்பாள்!’’
‘‘நன்றாகப் பாடுவாளா?’’
பாலா பாடிக் காட்டவேண்டி இருந்தது.
தனம்மாள் உத்தரவு கொடுத்தார். பாலா, நான்கு வயதில் தஞ்சை நால்வர் பரம்பரையில் வந்த கந்தப்பப் பிள்ளையிடம் நடனம் பயிலத் தொடங்கினார். நாள் ஒன்றுக்கு 16 மணி நேரம் பயிற்சி பெற்றார். பாலாவின் நடன அரங்கேற்றம், 1925-ல் அவரது ஏழாம் வயதில் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்கு அருகில் இருக்கும் அம்மனாட்சி அம்மன் எனும் ஒரு சிறிய கோயிலில் நிகழ்ந்தது. அரங்கேற்றத்துக்கு வந்திருந்த நைனா பிள்ளை போன்ற மகாவித்வான்கள், பாலாவின் நடனத்தை மெச்சி ஆதரித்தார்கள். தான் ஆற்றிய நடனக் கச்சேரிகளில் தன் முதல் அரங்கேற்ற நிகழ்ச்சி பற்றிப் பெருமிதம் கொண்டார் பாலா.
பாலாவின் காலத்து நடனம், நிருத்தத்துக்கு (நடனத்தின் தான அம்சம்) முக்கியத்துவம் கொடுத்தது. வாழ்க்கையின் பலப்பல மனநிலைகளுக்கு, அசைவுகளுக்கு முக்கிய இடம் கொடுக்கும் அபிநயம் புறக்கணிக்கப்பட்டிருந்தது. பாலா, அபிநயத்துக்கு மறுஉயிர் தந்தார். சிருங்கார ரசத்துக்கு மிகு இடம் கொடுக்கிறார் என்று அவர் மேல் எதிரிகள் சுமத்திய, அடிப்படையற்ற குற்றம் சுமத்தலையும் கடந்து, சிருங்காரம் என்கிற மனிதப் பண்பின் அழகியலை அவர் நிரூபணம் செய்தார். கல்கியும், டி.கே.சி.யும் நடனத்துக்கு எதிரான மனநிலை கொண்டிருந்தார்கள். பாலாவின் ஒரு நிகழ்ச்சியைப் பார்த்து மனம் மாறினார்கள்.
1945 ஜனவரியில் பம்பாயில் ‘விக்ரம் சம்வத் 2000’ எனும் விழா, பாலா எனும் ஆளுமை எந்தச் சூழலுக்கு மத்தியில் வாழ்ந்தார் என்பதை விளக்குவதாக இருந்தது. அன்று, மிக அழகாக அலங்கரிக்கப்பட்ட மேடையில் ருக்மணி தேவி ஆடினார். தொடர்ந்து பாலா ஆடுவதாக ஏற்பாடு. அதே மேடைப் பின்னணியில் தான் ஆடப்போகிறோம் என்று எதிர்பார்த்து அமர்ந்திருந்தார் பாலா. ருக்மணி ஆடி முடித்தவுடன், அழகான அந்த மேடைப் பின்னணிப் பிய்த்தெறியப்பட்டது. மேடையில் ஆணிகள், மரத் துண்டுகள் கிடந்தன. ஜெயம்மாள் மேடையைப் பெருக்கித் தன் மகளை அதில் ஆட வைத்தார். மேடை அலங்காரம், பாலாவுக்கு என்றுமே ஒரு பொருட்டல்ல. அவரே அலங்காரம். அவரது கலையே பரதம். அன்று மிக அற்புதமாக ஆடினார் பாலா.
உலக கலா ரசிகர்கள் வருந்த 1984-ல் மறைந்தார் பாலசரஸ்வதி.
07ChREL_Balasaraswathi wrapper
பாலசரஸ்வதி பற்றி டக்லஸ் எம்.நைட் எழுதிய இந்த 400 பக்க வரலாறு, பல வகையில் மிகச் சிறந்தது. முன் உதாரணமான வரலாற்று நூல் என்று சொல்லத் தகுந்தது. பாலாவின் மகள் லட்சுமியின் துணைவர்தான் டக்லஸ். அதன் காரணமாகவே, மிகு ஜாக்கிரதை உணர்வோடு வரலாற்றைக் கட்டமைக்கும்போது, வரிக்கு வரி உண்மையும் ஆதாரம் துலங்கவும் எழுதி இருக்கிறார். பாலா கடந்துவந்த காலம், இந்திய சுதந்திரப் போர் உச்சம் பெற்ற காலம். தேவதாசி ஒழிப்புச் சூழல் உருவாகிவந்த காலம். மரபான கலைக்கும், புதிய அமைப்பு என்று சொல்லிக்கொண்ட நடன அமைப்புக்கும் இடையேயான உராய்வு மேல் வந்த காலம்.
சரித்திரத்தின் எந்த அம்சமும் விடுபடாமல், சமூகத் தட்பவெப்பம் அனைத்தையும் கணக்கில் கொண்டு பாலா என்கிற கலை மேதைமை டக்லஸால் உருவம் கொண்டிருக்கிறது. மூலத்தைச் சர்வ விழிப்போடு தொடர்ந்த மொழியாக்கம். க்ரியாவின் அழகிய பதிப்பு இது.
சுடரும்…
எண்ணங்களைப் பகிர: writerprapanchan@gmail.com
முக்கிய செய்திகள்
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
3 days ago
இலக்கியம்
3 days ago
இலக்கியம்
3 days ago
இலக்கியம்
3 days ago
இலக்கியம்
3 days ago
இலக்கியம்
3 days ago
இலக்கியம்
3 days ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
6 days ago