காலவாசிகள் நவீன நாடகம் களரி மக்கள் பண்பாட்டு மையத்தால் நாகர்கோவிலில் அரங்கேற்றப் பட்டது. இயக்கம் கலா. பினுகுமார். இணை இயக்கம் இரா. அரிகரசுதன். ஏழு நாட்கள் பயிற்சியின் விளைவாக சாதாரண இளைஞர்களும் குழந்தைகளும் முதிர்ந்த அனுபவமிக்க நடிகர்களுக்கு இணையான ஆற்றலை வெளிப்படுத்தினார்கள். நவீன நாடகங்கள் நகரமயப்படுத்தப்பட்டுள்ள சூழலில் இதுவொரு முக்கிய நிகழ்வாகக் கருதப்பட வேண்டியது. இக்குழுவினர் தொடர்ந்து நாடகங்களில் தங்கள் கலை ஈடுபாட்டையும் ஆற்றலையும் செலவழிப்பார்களேயாயின் இதுவொரு முன்மாதிரியான நாடக இயக்கமாக மாறும் வாய்ப்புள்ளது.
திரைப்படங்களுக்குள் நுழையத் தங்கள் உடல்மொழியைப் பதனப்படுத்த விரும்புபவர்களின் புகலிடமாக நவீன நாடக அரங்குகள் மாறிவிட்டசூழலில் கல்லூரி, பள்ளிக் குழந்தைகள் பயிற்சியில் கரைந்து கலையில் ஈடுபட முன்வருதலே பொழுதுபோக்கிகளின் ஆதிக்கம் நிறைந்த இந்தக் காலத்தில் முன்னுதாரணமற்ற பாலபாடமாகும். பொழுது போக்கிகளிடமிருந்து குழந்தைகளை காபந்து செய்வதற்கும் தற்காப்பதற்கும் அவர்களை நிஜமான கலைகளில் ஆர்வம் கொள்ளச் செய்வதுதான் வழி. அதுதான் அவர்களை உள்ளடக்கம் கொண்டவர்களாக மாற்றும். பொழுது போக்கிகளின் அசுர பலத்தை முறியடிக்கும். அந்த வகையில் இதனை முன்மாதிரியான முயற்சி எனலாம். இந்த நாடகத்தின் சிறப்பு இதுமட்டுமல்ல.
காலவாசிகளில் பத்தொன்பது நடிப்புக் கலைஞர்கள். அதில் ஒரிருவரைத் தவிர பிறர் புதியவர்கள் என்று சொல்லப்பட்டது. நாகர்கோவில் குழந்தைகளுக்கு இயல்பிலேயே உருவாகிவிடும் களரி விளையாட்டின் பின்னணி, உடல்மொழியைத் திறம்பட அவர்கள் வெளிப்படுத்த உதவியது. ஐம்பது நிமிடங்களுக்கும் மேலாக நடைபெற்ற இந்த நாடகம் நவீன நாடகப் பழக்கமற்ற பார்வையாளர்களுக்கும் வேறுபட்ட கலை அனுபவத்தைத் தந்தது என்றே சொல்ல வேண்டும். நுட்பமான படிமங்களோடும் மொழியோடும் பார்வையாளர்கள் இயல்பாகப் பயணித்தனர். மாறிவரும் காலத்தில் பூர்வீகப் பண்புகளும் கலைகளும் எப்படி ஒடுக்கப்படுகின்றன, குற்றப்படுத்தப்படுகின்றன என்பதைக் கலாபூர்வாகமாக இந்த நாடகம் கையாண்டது. சாமியாடியின் துடியை இல்லாமலாக்கக் கைகால்களைக் கட்டியிறுக்குவதும் ஒடுக்குதலையும் மீறி துடி மேலெழும்பி வருவதும் நாடகத்தின் ஆன்மாவை வெளிப்படுத்திய நல்ல காட்சி. ச. முருகபூபதி உருவாக்கும் நாடக மொழியின் தாக்கம் இந்த நாடகத்தில் சில இடங்களில் தென்பட்டாலும்கூட சுயமான ஒரு பயணத்தின் பக்கமாக இயக்குநர் செலுத்தியிருக்கிறார்.
முருகபூபதியின் நாடக மொழி சமகால நாடகத்தில் தவிர்க்கவும் இயலாதது. தமிழ் நாடக மொழியின் சமகாலப் பெரும் பாய்ச்சல் அது. அக விழிப்புணர்வு அதிகம் கொண்ட பெருங்கலைஞனால் உருவாக்கப்பட்டது. ஆனால் அம்மொழியின் மூலம் பெருத்த அசதியையும் உருவாக்கிவிடுபவர் முருகபூபதி. படைப்பு உருவாக்க வேண்டிய அகவுந்துதலையும் கலை மகிழ்ச்சியையும் அவரே நோகடித்தும் விடுவார். அதற்குக் காரணம் மொழிக்கு ஒரு முற்போக்கு முகச்சாயத்தைப் பூசிவிட்டால் போதுமென்று அவர் நம்பிக்கை கொண்டிருப்பதுதான்.
நிகழ்த்துக் கலையில் மொழி தனித்த பிறிதொரு பிரதியின் மீதேறி ஆட்சிபுரிய வேண்டி யிருக்கிறது. மொழிக்கு முகச்சாயம் பூசுகிற வேலையை ராமானுஜம் போன்றவர்கள் ஒரு மேட்டிமை நாடக மொழியில் செய்து பிணம் தின்ன வைத்துவிட்டார்கள். கடின உழைப்பு, பேரலங்காரம் ஆகியவற்றுக்கு அஞ்சிப் பார்வையாளனால் இது பற்றி அவருடன் உரையாட முடிவதில்லை. உரிய சந்தர்ப்பத்தை மொழிக்குள் அவர் இடமறுப்பும் செய்துவிடுகிறார். ஆனால் மேட்டிமைக்கு எதிரான மக்கள் மொழியை உருவாக்கியதில் அவருக்கு இணையாகச் சொல்ல எவருமில்லை. காலவாசிகள் நாடகம் பூபதியிடம் விடுபடுகிற இடத்தை மிகச் சாதாரணமாகத் தொட முயற்சிப்பதே அதன் சிறப்பு. அந்த இடத்தில்தான் காலவாசிகள் உன்னதமான இடத்துக்கு நகர்ந்து படைப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. ஆர்பாட்டமின்றி நடந்த கலைப் பயணம் இது.
களரி இயக்கம் தொடர்ச்சியாக இயங்க வேண்டும். நவீன நாடகங்களும் நவீன நிகழ்த்துக் கலைகளும் நகரமயமாக்கப்பட்டு நகரத்துக் குளிர்பதன சுக்குக் காப்பி பார்களாக மாற்றப்பட்டிருக்கும் நிலை அப்போதுதான் மாறும். நகரத்து அரங்குகளை ராமானுஜம், முத்துசாமி ஆகியோர்தான் புது விசையேற்றியவர்கள் என்பதில் சந்தேகமேயில்லை. அந்தத் தாக்கம் பலமானது. அந்த வகையில் பெரிய மூதாதைகள் அவர்கள். சுக்குக் காப்பிக் கடையாக மாற்றியவர்களும் அவர்கள்தான். அந்தப் பெருமையும் அவர்களையே சாரும். கூடவே பொழுது போக்கித் திரைப்படங்களுக்குப் புதுமுகங் களைத் தேர்வு செய்து தரும் பணியையும் சேர்த்துச் செய்தவர் முத்துசாமி.
இன்று நவீன நாடகத்தில் நடிக்க வரும் இளைஞன், நவீன நாடகங்களைப் பொழுதுபோக்கித் திரைப்படங்களில் கதாநாயகனாவதற்கான உடற்பயிற்சிக் கூடங்கள் என நினைப்பதற்கு அவரும் ஒரு காரணம். கிராமங்களிலிருந்து காலவாசிகள் போன்று கலையதிர்வு மிக்க நாடகங்கள் ஆற்றலுடன் வரும்போது மட்டும்தான் மீண்டும் நவீன நாடகங்கள் இழந்த தன் விசையை மீட்டெடுக்க முடியும்.
மூதாதைகளைச் சென்று பார்த்துவிட்டு வர வேண்டியதுதான். ஆனால் அவை பேசத் தொடங்குவதற்கு முன்னால் எழும்பி ஓடிவந்துவிட வேண்டும். முருக பூபதியை நினைவுபடுத்தி காலவாசிகளைப் பேச, அவரது நேர்மறையான பாதிப்பு இதில் இடம் பெற்றுருப்பது மட்டுமே காரணமல்ல. அவர் தேர்ந்தெடுத்த பாதையில் காலவாசிகள் பயணத்தைத் தொடங்குகிறது என்பதால்தான்.
காலவாசி தனது பயணத்தைத் தொடர ஒரு பார்வையாளனின் வந்தனம். வணக்கம்.
முக்கிய செய்திகள்
இலக்கியம்
17 hours ago
இலக்கியம்
17 hours ago
இலக்கியம்
17 hours ago
இலக்கியம்
17 hours ago
இலக்கியம்
4 days ago
இலக்கியம்
4 days ago
இலக்கியம்
7 days ago
இலக்கியம்
7 days ago
இலக்கியம்
7 days ago
இலக்கியம்
7 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
14 days ago
இலக்கியம்
14 days ago
இலக்கியம்
14 days ago
இலக்கியம்
14 days ago