எமதுள்ளம் சுடர்விடுக! - 19: வரலாற்றை உருவாக்கும் பெண்கள்

By பிரபஞ்சன்

ரலாறு என்பது பழசைச் சொல்வது, நேற்றைப் பற்றி எழுதுவது என்பது சரியன்று. உண்மையைச் சொன்னால் எதிர்காலத்தை எழுதுவது வரலாறே ஆகும். வரலாறு, அவனுக்கு முன் இவன், அதற்குப் பின் இது என்கிற காலக் கணக்கு இல்லை. சிந்தனை வட்டமே, வரலாறு. வரலாற்றை எழுதுபவரின் சிந்தனையே வரலாறு.

வரலாற்றை எழுதி, வரலாற்றை உருவாக்கிய பெண்கள் நம்மிடையே உண்டு. ஏன் ‘பெண்கள்’ என்று தனித்துச் சொல்ல வேண்டும்? சூழல் அப்படி இருக்கிறது. நம் ஊடகங்களில் சிலர், ‘பெண்கள் தங்கள் பங்களிப்பை அல்ல; பெண்களாக இருப்பதாலேயே அறியப்படுகிறார்கள்’ என்பதுபோல கருத்து சொல்லி, சாதனைப் பெண்களின் வியர்வையை, ரத்தத்தையே தரம் தாழ்த்துகிறார்கள்.

இதற்கு எதிர்வினையாக, பத்திரிகையும், பதிப்பகமுமான ‘மணற்கேணி’ பெண் எழுத்து பற்றி காத்திரமான முன் எடுப்புகளைச் செய்தது. அமெரிக்காவில் கருப்ப பின மக்களுக்காக, ‘பிளாக் இஸ்டரி மன்த் ’, ‘விமன் இஸ்டரி மன்த்’ கடைபிடிக்கப்பட்டது போல, ஒரு முன்முயற்சியாக பெண் வரலாற்று அறிஞர்கள் பற்றிய ஒரு குறிப்பிடத்தகுந்த அமர்வை ‘மணற்கேணி’ நடத்தியது. ஐந்து அறிஞர்கள் பேசப்பட்டார்கள்.

முதலில் வருபவர் சி.மீனாட்சி. பல விதங்களில் முன்னோடிச் சாதனையாளர். தொல்லியல் ஆய்வாளர். அடுத்தவர் தர்மா குமார். பொருளாதாரத் துறையில் முக்கியமானவர். அடுத்தவர் ரொமிலா தாப்பர். உலகம் அறிந்த வரலாற்று ஆசிரியர்.

இன்னொருவர் வித்யா தெஹேஜியா. அதிகம் அறியப்படாத கலை வரலாற்று அறிஞர் இவர்.

ஐந்தாமவர், இலங்கைவாழ் வரலாற்று அறிஞர் குமாரி ஜயவர்த்தன.

இந்த ஐந்து பெரும் ஆளுமைகள் பற்றி ‘மணற்கேணி’ கருத்தரங்கில் விவாதிக்கப்பட்ட விஷயங்களின் தொகுப்பு - ‘வரலாற்றை எழுதும் பெண்கள் ’ எனும் நூல். விஷயம் அடர்ந்த மிக முக்கியமான இந்நூலை தேன்மொழி தொகுத்துள்ளார்.

தேன்மொழி கவிஞர். சிறுகதைகள், இலக்கிய மொழிபெயர்ப்பாளர். கலை வரலாறு குறித்த முக்கியமான அறிஞர்கள் கட்டுரைகளைத் தமிழாக்கியவர். கலை வரலாற்றைத் தன் ஆய்வுப் புலமாகக் கொண்டவர்.

‘மணற்கேணி’ பதிப்பகம் தொகுத்துள்ள இந்நூலில் - ஐந்து வரலாற்று அறிஞர்களில் ஒவ்வொருவர் பற்றியும் அந்தத்துறையைச் சார்ந்த ஒரு ஆய்வாளர், அந்த ஐந்து அறிஞர் பற்றிய அறிமுகம், சாதனை முதலியவைகளைச் சொல்லி அவரை அறியப்படுத்துகிறார். பின்னர், அந்த அறிஞரின் பேச்சு என்று நூல் ஒழுங்குற அமைக்கப்பட்டிருக்கிறது.

முதலாவதாகக அறிமுகமாகும் அறிஞர் சி.மீனாட்சி. சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதல் பி.எச்.டி., பட்டம் பெற்றவர். பேரறிஞர் நீலகண்ட சாஸ்திரியின் வழிகாட்டுதலில் தொல்லியல் ஆய்வு செய்தவர். அகழ்வாராய்ச்சி என்பது, ஆண்கள் தவிர்க்கும் துறை.

அதைத் தைரியமாக எடுத்துப் பணிபுரிந்தார் மீனாட்சி. 1938-ல் டாக்டர் பட்டம் பெற்ற மீனாட்சிக்கு உடன் வேலை கிடைக்கவில்லை. திருச்சி வானொலியில் நிலைய வித்வான் வேலைக்கு நேர்முகத் தேர்வில் கலந்து கொள்கிறார். கிடைக்கவில்லை. தமிழகத்தில் வேலை கிடைக்காமல் மைசூரு போகிறார். அவரது ஆய்வைப் பற்றி இந்து பத்திரிகை, ‘பிரிலியண்ட் ரிசர்ச் ஆஃப் பல்லவாஸ்’ என்று எழுதுகிறது. பெங்களுரு மகராணி கல்லூரியில் பணியில் சேர்கிறார்.

இது 1939-ம் ஆண்டு. அப்போது ‘கலைமகள்’ பத்திரிகையில் அவர் எழுதிய கட்டுரை ஒன்றில், ‘இந்தச் சமுதாயம் ஆண்களுடைய சமுதாயம். வேலை பார்ப்பதற்கும் படிப்பதற்கும் பெண்கள் துணியும்போது, அவர்களுக்கு இந்தச் சமுதாயம் எந்த வகையிலும் நன்மை செய்வதோ, உதவுவதோ கிடையாது’ என்று எழுதுகிறார். அவர் நான்கு நூல்கள் எழுதி இருக்கிறார்.

‘‘4 வருடங்களில் அவர் செய்திருக்கிற ஆய்வைப் பார்க்கும்போது என்னைப் போன்ற பேராசிரியர்கள் வெட்கப்படுகிறோம்’’ என்று மதிப்பிடுகிறார் பேராசிரியர் ராஜேந்திரன்.

மகேந்திரவர்ம பல்லவனின் இசைப் பெருமையை, தன் இசைப் பெருமையால் நிரூபித்தவர் மீனாட்சி. குடுமியான் மலை இசைக் கல்வெட்டை நேரில் சென்று வாசித்து விளக்கம் சொன்ன ஆய்வாளர் இவர்.

அடுத்த வரலாற்று வல்லுநர் தர்மா குமார்.

இந்தியாவில் இருக்கும் எல்லாப் பிரச்சினைகளுக்கும் காலணிய ஆட்சிதான் காரணம். அதற்குமுன் எல்லாம் ஒழுங்காக இருந்தது என்பது போன்று வலதுசாரி அறிவாளிகள் சொல்லிக் கொண்டிருந்த சமயத்தில், தர்மா குமார் வித்தியாசமாகப் பேசினார்.

இவரது கட்டுரை ரவிகுமாரால் மொழியாக்கம் செய்யப்பட்டு இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நிலவுடைமை அமைப்பு பல்வேறு மாற்றங்களைப் பெற்று வந்துள்ளபோதிலும், அதனால் ஏராளமான விஷயங்கள் செய்யலாம் என்பதற்கும் அவர் என்ன சாதியைச் சேர்ந்தவர் என்பதற்குமான உறவு மட்டிலும் மாறாமல் இன்னும் வலுவாகத் தொடர்ந்துகொண்டுதான் உள்ளது என்பது போன்று பல விஷயங்களை தர்மா குமார் தன் எழுத்துகளில் கொண்டு வந்துள்ளார்.

மூன்றாவது கட்டுரை, உலகப்புகழ் பெற்ற ரொமிலா தாப்பர் பற்றியது. தாப்பர் பற்றிப் பேராசிரியர் ரகுபதி இப்படிச் சொல்கிறார்:

‘வரலாற்றாளர் எந்தக் கடந்த காலத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்கிறாரோ, அந்தக் கடந்த காலம் எதிர்காலத்தில் மிகப் பெரிய விளைவை ஏற்படுத்தும்.

இதுவரை இந்திய வரலாறு எவ்வாறெல்லாம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது? யாருடைய கண்ணோட்டத்தில் முன் வைக்கப்பட்டிருக்கிறது என்பது மாதிரியான கேள்விகளை ரொமிலா தாப்பர் எழுப்புகிறார்’.

ரொமிலா தாப்பரின் ஒரு கட்டுரையும் இதில் மொழி பெயர்த்துத் தரப்பட்டுள்ளது. மொழிபெயர்த்தவர் நாகார்ஜுனன்.

இதைத் தொடர்ந்து, தமிழில் இன்னும் சரியாக அறிமுகம் பெறாத கலை வரலாற்றுத் துறையில் அறிஞராகத் திகழ்பவர் வித்யா தெஹேஜியா.

அவரது ஆளுமையைப் பற்றிய அறிமுகத்தையும், அவருடைய மிக முக்கியமானதொரு கட்டுரையின் தமிழ் மொழியாக்கத்தையும் நூலாசிரியர் தேன்மொழி இந்த நூலில் கட்டமைத்திருக்கிறார்.

இதையடுத்து மூன்றாம் உலக நாடுகளில், பெண்ணிய மற்றும் ஜனநாயக செல்நெறியினை வரலாற்றுக் கண்ணோட்டத்தில் பல முக்கியமான நூல்களை எழுதி இருக்கும் குமார் ஜயவர்த்தனவின் அறிமுகக் கட்டுரையும் இந்த நூலில் இடம்பெற்றுள்ளது.

சமூகத்தில் வாழ்ந்துகொண்டு, சமூகத்தின் பிரச்சினைகளை நேர்கொண்டு, உணர்ந்த உண்மைகளை எழுதும் மிக முக்கிய சாதனையாளர்களைத் தமிழர் அறியத் தந்த ‘வரலாற்றை எழுதும் பெண்கள் ’ எனும் தலைப்பில் தேன்மொழி தொகுத்துள்ள, (மணற்கேணி பதிப்பகம், 79- மருத்துவக் கல்லூரி முதல்வாசல் எதிரில், மருத்துவக் கல்லூரிச் சாலை, தஞ்சாவூர்- 4) இந்த நூல் தமிழுக்கு மிக முக்கியமான வரவு என்பதில் சந்தேகம் இல்லை.

- சுடரும்...

எண்ணங்களைப் பகிர: writer prapanchan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

2 days ago

இலக்கியம்

3 days ago

இலக்கியம்

3 days ago

இலக்கியம்

3 days ago

இலக்கியம்

3 days ago

இலக்கியம்

4 days ago

இலக்கியம்

4 days ago

இலக்கியம்

4 days ago

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

6 days ago

மேலும்