பாரதி வரலாற்றைப் பலர் எழுதியிருக்கிறார்கள். இதில் வ.ரா. எழுதிய ‘மகாகவி பாரதியார்’ என்ற வரலாற்று நூல், பல வகையில் சிறப்பானது. வ.ரா. எழுதுவதைப் படிக்கும்போது, பாரதி பக்கத்தில் நின்று நம்மைப் பார்த்துக் கொண்டிருப்பதான உணர்வு ஏற்படுகிறது. அவர் நகைக்கும் ஒலி கேட்கிறது.
பல சமயங்களில் நம்மோடு அவர் கை குலுக்குகிறார். பாரதி என்கிற மனிதரோடும் கவியோடும் மனம் கலந்து வாழ்ந்திருக்கிறார் வ.ரா. கவிதை உருக்கொள்ளும்போது, கவிதையைச் சொல்லவோ, பாடவோ உணர்ச்சிக் கூடும்போது பாரதி எப்படி இருந்துள்ளார்?
வ.ரா. சொல்கிறார்: ‘ஸரிக - க - காமா என்று அவர் வாய்க்குள்ளே சொல்லிக்கொண்டால், புதிய பாட்டுக்குத் தாளம் கோலிக்கொண்டிருக்கிறார் என்று அர்த்தம். மரத்தை வெறித்துப் பார்ப்பார்; குளத்தை உற்றுப் பார்ப்பார்; ஆகாயத்தை முட்டுகிறார்போல மார்பை வெளியே தள்ளி, தலையை எவ்வளவு தூரம் நிமிர்த்தி உயர்த்த முடியுமோ அவ்வளவு தூரம் நிமிர்த்தி, உயர்த்திப் பார்ப்பார். ஸஸ்ஸ என்று மூச்சுவிடாமல் உரக்கக் கத்துவார். வலக் காலால் தாளம் போடுவார். தவறிப் போனால் இடக்காலால் பூமியை உதைப்பார். ஒரு நிமிஷம் மவுனம்.
‘சொல் ஆழி வெண் சங்கே’என்ற கூக்குரல், கூப்பாடு. இல்லாவிட்டால் தாயுமானவரின் கண்ணிகளில் ஒன்று, ‘மதிதகஜம் என வளர்த்தாய்’ என்ற சந்தோஷ முறையீடு. மீண்டும் ஒருமுறை ஸரிக - க - காமா…’ இதுபோன்ற, பாரதியின் உயிர்ச் சித்திரங்களை எழுதிக்காட்டி இருக்கும் வ.ரா. என்கிற வரதராஜ ஐயங்கார் ராமசாமி, அடிப்படையில் சுதந்திரப் பேராட்ட வீரர். சமூக சீர்திருத்தவாதி. பத்திரிகையாளர். எழுத்தாளர்.
சென்னையில் சுதேசமித்திரன், இந்தியா பத்திரிகைகளில் பாரதி எழுதிய தணல் உமிழும் கட்டுரைகளுக்காக அவர்மேல் ‘வாரண்ட்’ பிறப்பித்தது பிரிட்டிஷ் அரசு. நண்பர்கள் யோசனையின் மேல், பாரதி புதுச்சேரிக்கு வந்து சேர்ந்தார். புதுச்சேரி பிரஞ்சுக்காரர்களால் ஆளப்படும் பூமி. இங்கே, பிரிட்டிஷ் சட்டம் செயல்படாது. இதே காரணங்களுக்காக, அரவிந்தர், வ.வே.சு.ஐயர், சீனிவாசாச்சாரி முதலான தேச பக்தர்கள் புதுச்சேரிக்கு வந்து சேர்ந்தார்கள்.
பாரதி - வ.ரா முதல் சந்திப்பு. “சாஷ்டாங்கமாகத் தரையில் விழுந்து நமஸ்காரம் செய்தேன். புலி பாய்வது போலப் பாய்ந்து என்னைத் தூக்கி நிறுத்தி, நமஸ்காரம் வேண்டாம். நீர் யார்? வந்த காரியத்தைச் சொல்லும்” என்றார்.
அவர் யார் என்று கேட்டதற்கு, நான் தமிழில் பதில் சொல்லி இருக்கலாமே. இங்கிலீஷ் படித்த கர்வம். நான் இங்கிலீஷில் பொழிய ஆரம்பித்தேன். மிகுந்த மன வேதனையோடும் வருத்தத்தோடும் பாரதி என்னைக் கேட்டார்:
“ஒரு தமிழன் மற்றொரு தமிழனோடு இன்னும் எவ்வளவு காலம் ஆங்கிலத்திலேயே பேச வேண்டும்?”
பாரதி, புதுச்சேரி ஈஸ்வரன் கோயில் தெருவிலும், சென்னை திருவல்லிக்கேணியிலும் வசித்தார். பார்த்தால் பெரிய வீடுகள். வாடகைப் பிரச்சினையை எங்ஙனம் சமாளித்தார்? ஒரு நிகழ்ச்சியைச் சொல்கிறார் வ.ரா. பல் தேய்த்துகொண்டிருந்த சமயத்தில் ஒரு கிழவர் வந்தார். ‘‘வாரும் விளக்கெண்ணெய்ச் செட்டியாரே’’ என்றார் பாரதி (செட்டியார், வீட்டு உரிமையாளர். வாடகைக் கேட்டு வந்திருக்கிறார். செட்டியாருக்குப் பாரதி வைத்த பெயர் விளக்கெண்ணெய்) செட்டியார் நடுங்கிக்கொண்டு நிற்கிறார்.
‘‘செட்டியாரே, உமக்கு ஏன் வாடகைக்கு அவசரம். இன்னும் பத்து வருஷத்துக்குள் சுயராஜ்யம் வரப் போகிறது. அந்த ராஜாங்க கஜானாவுக்கு ஒரு செக் கொடுக்கிறேன். வாங்கிக் கொள்ளுமே…’’ என்று சொல்லிவிட்டு வெண்கலத்தை இடைவிடாமல் தட்டியது போலக் கலகலவென்று சிரித்தார். வ.ரா. இப்படி எழுதுகிறார்:
‘தரித்திரத்தை நிந்தனை செய்யும் நகைப்பு!
அதுசரி. செட்டியார் என்ன செய்தார்? சொன்னார்?
‘மகான், உங்கள் உண்டியல் ஏன் செல்லாது, கூசாமல் கொடுங்கள். வாங்கிக் கொள்கிறேன்.’
அரவிந்தரை அறிமுகம்கொள்ள அவர் வீட்டுக்குச் செல்கிறார் வ.ரா. பாரதி வ.ரா.வை அறிமுகம் செய்து வைக்கிறார்.
‘‘தமிழ்நாடு தேச பக்தன்!’’
அங்கிருந்த வங்காளி இளைஞன் துடுக்குத்தனமாக, ‘‘சர்க்காருக்கு மனுப் பண்ணிக்கொள்ள அவருக்குத் தெரியுமல்லவா?’’ என்கிறான். ஏதோ, வாங்காளிகள்தாம் புரட்சிக்காரர்கள், தமிழர்கள் மனு போட்டு தயவு கோருபவர்கள் என்பது போல. எல்லோரும் சிரிக்கிறார்கள்.
பாரதியார் முகத்தில் ஈ ஆடவில்லை. பாரதி வெடிக்கிறார்: ‘‘அடிமைகளிலே, வங்காளி உயர்த்தி, தமிழ் தாழ்த்தியா?’’
கிருஷ்ணசாமி செட்டியார் என்று ஓர் இளைஞர், அவருக்கு வெல்லச்சுச் செட்டியார் என்று பாரதி பெயர் வைத்தார். அவர் எப்போது தன்னைக் காணவந்தாலும் அவரிடம் அண்மையில் தாம் கவனம் செய்த பாடல்களைப் பாடிக் காட்டுவார்.
ஒரு சமயம், பாரதி ஒரு கதை சொல்கிறார்: ‘‘ஒரு காட்டுப் பகுதி. ஒரு விவசாயியும் செட்டியார் ஒருவரும் பயணம் செய்கிறார்கள். திருடர் பயம் அதிகம். நினைத்தாற்போல திருடர்கள் வந்தேவிட்டார்கள். விவசாயி அடிபட்டார். செட்டியார் பேச்சு மூச்சில்லாமல் படுத்துக் கொண்டார். திருடன் ஒருவன் செட்டியாரைத் தட்டிப் பார்த்துவிட்டு ‘‘கட்டை கிடக்கிறது…’’ என்றான்.
செட்டியார் ‘‘கட்டை மடியில் பத்து ரூபாய் வைத்திருக்குமோ?’’ என்று கேட்டாரே ஒரு கேள்வி. கதையை முடித்து பாரதி செட்டியாரிடம், ‘‘சரிதானே கதை!’’ என்று கேட்கிறார். செட்டியார் தம் மடியில் இருக்கும் பத்து ரூபாயை எடுத்து நீட்டுகிறார். பாரதி சொல்கிறார்: ‘‘கதையில் திருடர்கள். நான் பகல் கொள்ளைக்காரன்’’ மனதில் துயரம் இல்லாமல், பாரதி இதைச் சொல்லி இருக்க மாட்டார்.
இந்த வரலாற்று நூலில் மிக முக்கிய தகவல், மகாத்மா காந்தி - மகாகவி பாரதி சந்திப்பாகும்.
1919-ம் ஆண்டு காந்தி சென்னை வந்தார். ரவுலட் சட்டக் கிளர்ச்சி பற்றிய ஆலோசனைக் கூட்டம். காந்தி, ராஜாஜி வீட்டில் தங்கி இருந்தார். ஒரு மதிய நேரம். காந்தி திண்டு மெத்தையில் சாய்ந்துகொண்டு அமர்ந்திருந்தார். ஏ.ரங்கசாமி ஐயங்கார், சத்தியமூர்த்தி, ராஜாஜி முதலியவர்கள் அருகில். பாரதி மடமடவென்று உள்ளே வந்தார். காந்தி அமர்ந்திருந்த திண்டில் போய் அமர்ந்தார்.
‘‘மிஸ்டர் காந்தி, இன்றைக்குச் சாயங்காலம், ஐந்தரை மணிக்கு நான் திருவல்லிக்கேணிக் கடற்கரையில் ஒரு கூட்டத்தில் பேசப் போகிறேன். அந்தக் கூட்டத்துக்குத் தாங்கள் தலைமை வகிக்க முடியுமா?’’
காந்தி, தன் செயலாளர் மகாதேவதேசாயைப் பார்த்து, ‘‘இன்றைக்கு மாலை நம் அலுவல் என்ன?’’ என்றார்.
‘‘நாம் வேறோர் இடத்தில் இருக்க வேண்டும்.’’
காந்தி, ‘‘இன்றைக்கு தோதுப்படாது. தங்களுடைய கூட்டத்தை நாளைக்கு ஒத்திப் போட முடியுமா’ என்று கேட்டார்.
‘‘முடியாது… நான் போய் வருகிறேன் மிஸ்டர் காந்தி. தாங்கள் ஆரம்பிக்கப் போகும் இயக்கத்தை நான் ஆசீர்வதிக்கிறேன்!’’ பாரதி போய்விட்டார்.
காந்தியைச் சுற்றி நின்ற தமிழ்ப் பெரியோர்கள் யாரும், பாரதியை முறையாக வரவேற்றுக் காந்தியிடம் கவியின் மேன்மையை உணர்த்தத் தவறிவிட்டார்கள். தமிழர்கள் அல்லவா?
வ.ரா. பாரதியோடு ஐந்து ஆண்டுகள் (1910 – 1915) கூடவே இருந்தார். ‘பாரதி ஒரு கவிஞர். மகாகவி இல்லை’என்பது போலத் தமிழ்ப் பிரமுகர்கள் பேசத் தொடங்கும்போது, வ.ரா. பாரதி வரலாற்றை ‘காந்தி’ இதழில் எழுதினார். பரவசம் இழையோட, ரசிக மனோபாவத்துடன் பாரதியின் வரலாற்றை அவர் எழுதியிருக்கிறார். ஆனால், உண்மையாக எழுதி இருக்கிறார். 1889-ம் ஆண்டு பிறந்த வ.ரா. 1951-ம் ஆண்டு சென்னையில் காலமானர்.
- சுடரும்…
எண்ணங்களைப் பகிர
writerprapanchan@gmail.com
முக்கிய செய்திகள்
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
3 days ago
இலக்கியம்
3 days ago
இலக்கியம்
3 days ago
இலக்கியம்
3 days ago
இலக்கியம்
4 days ago
இலக்கியம்
4 days ago
இலக்கியம்
4 days ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
6 days ago