த
ன்னைப் பற்றிய வரலாறு ‘தன் வரலாறு’எனப்படுகிறது. தன்னைப் பற்றி ஒருவர் எழுதுவது என்பது, அவர் பற்றியதாக மட்டும் இருப்பது இல்லை. அவர் சமூகத்தின் அங்கமாக இருப்பதால், சமூக வரலாறாகவும், அவர் வாழ்ந்த காலகட்டத்தின் திறப்பாகவும், அவர் வாழ்ந்த வாழ்வின் விமர்சனமாகவும், தன்னோடு வாழ நேர்ந்த சக மனிதர்களைப் பற்றிய சித்தரிப்பாகவும் அது அமைய வேண்டும். அப்படி தமிழில் எழுதப்பட்ட தன் வரலாற்றில் உ.வே.சா. எழுதிய ‘என் சரித்திரம்’ ஆகச்சிறந்த முதல் படைப்பு.
உ.வே.சாமிநாதய்யர் 19-ம் நூற்றாண்டில்(19.2.1855) பிறந்து, 20-ம் நூற்றாண்டில் (28.4.1942) வாழ்வை நிறைவு செய்தவர். 87 ஆண்டுகள் பயனுள்ள வாழ்க்கையை வாழ்ந்து, தமிழுக்கு ஒப்புமை இல்லாத் தொண்டு செய்தவர். ஏடுகளில் இருந்த இலக்கியத்தை, நாடு முழுக்க நடந்து அலைந்து திரிந்து பெற்று, ஒழுங்கு செய்து பதிப்பித்தவர். சங்க இலக்கியம், காப்பியங்கள் என நீள்கிற பல நூல்களை அச்சாக்கம் செய்த பதிப்பாளர் அவர். அச்சாக்கத் துறையில் வசதியும் நவீனமும் உருவாகாத காலகட்டத்தில் சீவகசிந்தாமணி, மணி மேகலை, பத்துப்பாட்டு, குறுந்தொகை போன்ற பல முக்கியமான நூல்களைப் பதிப்பித்தவர் சாமிநாதய்யர். ‘தமிழைக் கேளாத, பயிலாத, பயிற்றுவிக்காத நாளைப் பிறவா நாள்’ என்று வாழ்ந்த மனிதர்.
உ.வே.சா.வின் ‘தன் வரலாறு’ உருவாகக் காரணர்கள் கல்கியும் ‘ஆனந்தவிகடன்’ ஆசிரியர் எஸ்.எஸ்.வாசனும் ஆவர். அந்த இருவரும் ஐயரைச் சந்தித்து அவருடைய ‘தன் வரலாறு’ தொடரை எழுத வேண்டுகிறார்கள். ஆனால், ஐயருக்கே உரிய தன்னடக்கம் தடுத்தது. ‘உங்கள் வரலாறு ஒரு நூறாண்டு தமிழ் வரலாறு ஆயிற்றே’ என கல்கி வற்புறுத்த, ஐயர் எழுதச் சம்மதிக்கிறார். விகடன் இதழில் 6.1.1940-ல் ‘என் சரித்திரம்’ தொடங்கி, 122 வாரங்கள் வெளிவந்தது. 1942-ல் ஐயர் காலமானார். அந்தத் தொடரும் நின்றது. ஐயர், தன் வாழ்வின் பாதி வாழ்க்கையை இத்தொடரில் எழுதியிருந்தார். மீதி வாழ்க்கையை அவர் மாணவர் கி.வா.ஜ. நிறைவு செய்திருக்கிறார்.
ஆங்கில ஆதிக்கம் ஊன்றியிருந்த தமிழ் சமூகத்தின் ‘சமூகம்’ உருவான வரலாறு இந்த ‘என் சரித்திரம்.’ சாதிகள், பள்ளிகள், தமிழ்ப் படிப்பாளிகள், இறைப் பணியோடு இணைந்து தமிழ்ப் பணியையும் மேற்கொண்ட மடங்கள், மடாதிபதிகள், தமிழ்ச்சுவை அறிந்த ஜமீன்தார்கள், சமஸ்தான அதிபதிகள், பிரமுகர்கள் என்று சகல தரப்பு மக்கள் குழுவைப் பற்றியும், அவர்கள் மனோபாவத்தையும் பெரும்பான்மையும் குளிர்ந்த சொற்களால் சித்திரம் தீட்டுகிறார் ஐயர். எவரையும் புண்படுத்திவிடக்கூடாது என்ற எண்ணமும் எந்த வகையிலும் பொய்யைப் புகுத்திவிடக் கூடாது என்ற ஒழுக்கமுமே அவரின் எழுத்தறம்.
தமிழ் உரைநடை நவீனமாகிக் கொண்டிருந்த காலகட்டத்தின் முதல் அறுவடை, ஐயரின் வசனம். பழம் பண்டித மரபில் வந்தவரே ஐயர். எனினும் ஆனந்தவிகடன் என்ற ‘பொதுஜனப்’ பத்திரிகையில் மிகச் சாமானியர்களையும் உள்ளிட்ட அதன் வாசகப் பரப்பின் சகலருக்கும் ‘சென்று புகும்’ வகையில் அவர் தன் வசனத்தை அமைத்துக்கொண்டது அவரது விவேகம்.
தஞ்சை மாவட்டம், பாபநாசத்துக்கு அருகில் இருக்கும் உத்தமதானபுரத்தைச் சொந்த ஊராகக் கொண்டவர் ஐயர். தன் ஊரை எப்படி அறிமுகப்படுத்துகிறார் பாருங்கள்:
‘எங்கள் ஊரைச் சுற்றி குடமுருட்டி ஆற்றிலிருந்து பிரிந்து வரும் பல வாய்க்கால்கள். சூரியோதய காலத்தில் வீடுதோறும் ஜபம் செய்யும் அந்தணர்கள். மதிய நேரத்தில் அந்தணர்கள் சிலர் மண்வெட்டியும் அரிவாளையும் கொண்டு வயல் வேலைகளில் ஈடுபடுவார்கள். காய்கறித் தோட்டம், பசு எருமை வளர்த்துப் பயன் காண்பார்கள். உத்தமதானபுரத்தில் தச்சர், கொல்லர், தட்டார், வலைஞர், நாவிதர், வண்ணார் என்பவர்கள் மான்யம் பெற்று வாழ்ந்தார்கள். மூப்பச் சாதியார் முதலான குடியானவர்கள் பலர் அந்தணர் நிலங்களைக் கவனித்துக் கொண்டார்கள். அவர்கள் திருப்தியாக வாழ்ந்தார்கள். அவர்கள் உள்ளத்தில் சாந்தி இருந்தது…’
இது ஐயர் தன் ஊரைப் பற்றித் தீட்டிய சித்திரம். இது ஐயரின் வாழ்க்கைக் கண்ணோட்டமும்கூட. ஆயிரம் பக்கம் கொண்ட ‘என் சரித்திரம்’ நூலில் ஓரிடத்திலும் ஒரு மனிதர் பற்றியும் காழ்ப்பும், வெறுப்பும் இல்லை.
1868-ல் ஐயருக்கு கலியாணம் நடந்தபோது வயது 13. எட்டு வயது மதுராம்பிகையை மணந்தார். அப்போது ஐயர் எப்படி இருந்தாராம்? மாப்பிள்ளையே சொல்கிறார்: ‘அந்தப் பிள்ளை பார்க்க லட்சணமா இருக்கிறான். தலைநிறைய குடுமி இருக்கிறது. நன்றாகப் பாடுகிறான் என்று அந்த வீட்டு முதிய பெண் பாலார் திருப்தியடைந்தனர்…’
ஐயரின் ஒரே கனவு, மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் தமிழ் கற்பது.‘தமிழ்தான் தன் வாழ்வு’ என்று முடிவு செய்துகொண்டாலும் கொடுமையான வறுமையில் வளர்ந்த ஐயர், எதைச் செய்வது? எதனால் பிழைப்பது என்று தடுமாறினார். உறவுகள் சமஸ்கிருதம் படி என்றது. பலர் இங்கிலீஷ் படி என்றார்கள். தந்தை சங்கீதம் சரி என்றார். ‘தமிழ்த் தெய்வத்தின் அழகிலே என் உள்ளம் பதிந்துவிட்டது’ என்ற ஐயர், தன் 16-ம் வயதில் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் தன்னைச் சமர்ப்பணம் செய்துகொண்டார். அதுவரை வேங்கடராமன் என்று அறியப்பட்ட ஐயர், ஆசிரியர்ப் பிரானின் விருப்பப்படி சாமிநாதன் ஆனார். குருவுக்கும் மாணவனுக்குமான உறவு, அற்புதமாக வாய்த்தது. சிஷ்யன் உண்ணாமல் குரு உண்பதில்லை. ‘தாயினும் சிறந்தவர் என் குரு’என்று மகன் சொல்வதைக் கேட்டு ஐயரின் தாய் வருத்தம் அடைந்ததையும் எழுதியிருக்கிறார்.
தியாகராச செட்டியார் கும்பகோணம் கல்லூரியில் பண்டிதராகப் பணி ஆற்றி ஓய்வு பெற்றபோது, அந்த இடத்தில் சாமிநாதய்யரை நியமித்தார். உலகம், ஐயரை அறிந்துகொள்ளத் தொடங்கியது.
தாமே எழுதியும், பதிப்பித்ததுமாக 108 நூல்கள், உ.வே.சாமிநாதயரின் பேருழைப்பைச் சொல்லிக்கொண்டிருக்கின்றன. 1950-ல் முதல் பதிப்பு கண்டது. பதிப்புகள் பலவற்றில் தவறுகள் புகுந்தன. ஐயர் எழுதியதை மாற்றியும் தாமே எழுதியும் ஐயரின் வசன அழகைக் குலைத்தனர் பலர்.
இப்போது நாம் பேசும் இப்புதிய, செம்பதிப்பு கண்ட ‘என் சரித்திரம்’பிழையற்றது. நம்பகமானது. ஆயிரம் பக்கங்கள் கொண்ட நூல். பதிப்பாசிரியர் ப.சரவணன், ஐயரோடு தொடர்புகொண்ட பெரியோர்கள், குடும்பத்தார், ஊர், ஐயர் பயணம் கண்ட கோயில், குளங்கள் போன்ற பல இடங்களுக்கு நேரிலும் மானசீகமுமாகப் பயணம் செய்து தம் உழைப்பால் மாபெரும் நூலாகத் மாற்றியிருக்கிறார். ஐயர், தன் வார்த்தைகளால் உருவாக்கிய ஒரு நூறாண்டு தமிழ் வாழ்க்கையை, தான் தேடி எடுத்த புதிய படங்கள் மூலம், வாசகரின் மிக அருகில் கொண்டுவந்திருக்கிறார். புத்தகம், அச்சடித்த பிரதி மட்டும் அல்ல; நல்ல நூல், ஆசிரியரைக் கனம் பண்ணும். அவரை மாண்பு செய்யும். இந்தச் செம்பதிப்பு அப்படிச் செய்திருக்கிறது. காலச்சுவடு பதிப்பக வெளியீடு இது.
ஐயருக்கு வாழ்க்கையின் பிற்பகுதியில் மிகப்பெரிய கவுரவங்கள் வந்து சேர்ந்தன. வடமொழி அறிஞர்கள் மட்டுமே பெற்றிருந்த ‘மகா மகோபாத்யாய’ (பெரும் பேராசிரியர்) பட்டத்தை ஐயர் பெற்றார்.
சென்னைப் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் அளித்தது. தாகூர் இவர் வீடு வந்து பேசிச் சென்றார். காந்தியின் முன் உரையாற்றினார். ஒரு தமிழறிஞர் இன்றுவரை பெறாத அனைத்துச் செல்வமும் பெற்று நிறைவாழ்வு வாழ்ந்தார் அவர்.
அதனால்தான் புதுமைப்பித்தன் ‘உ.வே.சாமிநாதய்யர் தமிழிலக்கியத்தின் மெய்க்காப்பாளர்’ என்றார்.
பாரதி ‘பொதியமலைப் பிறந்தமொழி வாழ்வறியும்
காலமெலாம் புலவோர் வாயில்
துதி அறிவாய்! அவர் நெஞ்சின் வாழ்த்தறிவாய்!
இறப்பின்றித் துலங்கு வாயே!’ - என்று வாழ்த்தினார்.
- சுடரும்…
முக்கிய செய்திகள்
இலக்கியம்
13 hours ago
இலக்கியம்
13 hours ago
இலக்கியம்
13 hours ago
இலக்கியம்
13 hours ago
இலக்கியம்
4 days ago
இலக்கியம்
4 days ago
இலக்கியம்
7 days ago
இலக்கியம்
7 days ago
இலக்கியம்
7 days ago
இலக்கியம்
7 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
14 days ago
இலக்கியம்
14 days ago
இலக்கியம்
14 days ago
இலக்கியம்
14 days ago