எமதுள்ளம் சுடர்விடுக! - 11: ஒரு பிறவிப் போராளி!

By பிரபஞ்சன்

ஒரு பிறவிப் போராளி!

வர்னர் மாளிகையில், கவர்னருக்கு முன்பு அமர்ந்திருந்தார்கள் அவர்கள். வ.சுப்பையா, கிரி (பின்னாளில் இந்திய ஜனாதிபதி), குருசாமி, எல்.ஜே.எக்ஸ்.துரை சாமி ஆகியோரே அவர்கள்.

கவர்னர், பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தார். முன்னதாக, உபசாரத்துக்காக கவர்னர் குளிர்பானம் வழங்கினார்.

வ.சுப்பையா, கவர்னரைப் பார்த்து சொல்கிறார்:

‘‘நீங்கள் வழங்குவது குளிர்பானம் அல்ல. (உங்களால்) சுட்டுக் கொல்லப்பட்ட தொழிலாளர்களின் ரத்தம். நான் அதை அருந்த மாட்டேன்!’’

கவர்னர் அதிர்ந்து கதிகலங்கிப் போனார்.

இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆண்டுகொண்டிருந்த காலத்தில் பிரெஞ்சுப் பகுதிகளாக இருந்த புதுச்சேரி, காரைக்கால், மாகி (மலையாளம்), ஏனாம் (தெலுங்கு) மற்றும் சந்திரநாகூர் (வங்கம்) ஆகிய பகுதிகளை ஆண்டவர்கள் பிரெஞ்சுக்காரர்கள். பிரெஞ்சு கவர்னர் சோலாமியாக் அன்றைய ஆட்சியாளர். காலம் 1936-ம் ஆண்டை ஒட்டி. தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை, வேலை, சம்ப ளம் முதலான கோரிக்கைகளை முன்வைத்து தொழிலாளர்கள் மேற்கொண்ட மாபெரும் போராட்டத்தை துப்பாக்கி கொண்டும், பீரங்கி கொண்டும் சந்தித்த கவர்னர்தான் சோலாமியாக்.

சர்வதேச அளவில் இக்கொடூரக் கொலைகள் கவனம் பெறவே, தொழிலாளர் தலைவர்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தார். 12 தொழிலாளர்கள் கொல்லப்பட்டும், பலர் பலத்த காயம்பட்டும் நிகழ்ந்த அந்த அரசியல் படுகொலைக்குத்தான் மேற்சொன்னபடி எதிர்வினை ஆற்றினார் வ.சுப்பையா.

‘வி.எஸ்.’ என்றும் ‘மக்கள் தலைவர்’ என்றும் மக்களால் பேரன்புடன் அழைக்கப்பட்ட வ.சுப்பையா, பிரெஞ்சு ஏகாதிபத்திய அரசுக்கு எதிராக மகத்தான மக்கள் போரை நிகழ்த்தி, சுதந்திரத்தின் விதையை நட்டு, அதை விருட்சமாக்கிய மாபெரும் புதுச்சேரித் தலைவர். புதுச்சேரி சுதந்திரப் போரை முன்நின்று நிகழ்த்தியவர்.

என்.சி.பி.ஹெச்-ன் அழகிய பதிப்பு

1911-ம் ஆண்டு பிறந்து, 1993-ம் ஆண்டு அமரரான வ.சுப்பையா, அவரது போர் வரலாற்றை ‘பிரஞ்சிந்திய விடுதலை இயக்க வரலாறு’ என்ற தலைப்பி்ல், ஒரு நூலாக ஆங்கிலத்தில் எழுதி 1990-ம் ஆண்டு வெளிட்டுள்ளார். அதை அழகிய தமிழில் மொழியாக்கம் செய்தவர் காசி வில்லவன். என்.சி.பி.ஹெச்-ன் அழகிய பதிப்புகளில் இதுவும் ஒன்று.

பிறவிப் போராளியின் சத்திய வேட்கை மிகுந்த தன் வரலாறு இது. 1919-ம் ஆண்டின் ரவுலட் சட்டம், அதைத் தொடர்ந்த ஜாலியன் வாலாபாக் படுகொலைகள், 1920-ல் காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கம், இவற்றுக்கு மூலமான 1905-ன் வங்கப் பிரிவினை என்று தொடங்கும் இந்த வரலாறு, ஒரு நூற்றாண்டு முழுவதுமாகப் பயணிக் கிறது.

காந்தியடிகளின் சொற்பொழிவை 1927-ல் கேட்க நேர்ந்த வ.சு, காந்தியராகிறார். அப்போது அவருக்கு வயது 16. அவர் படித்த புதுச்சேரி கலவை கல்லூரிப் பள்ளியில், தகுதியற்ற ஆசிரியர்களைக் கொண்டு நிர்வாகம் மெட்ரிக் தேர்வுப் பாடங்கள் நடத்துவது கண்டு, மாணவர்கள், பெற்றோரைத் திரட்டிப் போராட்டம் தொடங்கி சூழ்நிலையை மாற்றுகிறார். போராட்டத்தின் ஊடாக, மாணவர்கள், பெற்றோரைக் கொண்ட அமைப்பு ஒன்றை உருவாக்குகிறார். வ.சு-வின் முதல் போர் இது. அரசியல் உலகுக்கு வ.சு-வின் பங்களிப்புகளில் முதலாவது, இந்த அமைப்பு கட்டும் அவரது போர் முறைதான். தனிமனிதர் அல்ல; அமைப்புகளே எதேச்சதி காரத்தை எதிர்த்தும் போராடியும் வெல்லும் என்பது அவரது அனுபவம்.

1930-ல் பிரெஞ்சிந்திய வாலிபர் சங்கம் தொடங்குகிறார். டாக்டர் வரதராஜுலு நாயுடு, தெ.பொ.மீ, கே.எஸ்.கண்ணப்பர், எழுத்தாளர் கோதை நாயகி அம்மாள், டாக்டர் சி.நடேசன் கலந்துகொள்கிறார்கள். வ.சு-வின் வாழ்வில் கவனம் கொள்ள வேண்டியது இதுதான்... வாழ்நாள் முழுக்க அவர் இலக்கிய ஆளுமைகளோடு தொடர்ந்து நட்புகொண்டு, தன் மன ஈரத்தைத் தக்கவைத்துக் கொண்டதும் வளர்த்துக்கொண்டதும், அவர் மேன்மையைச் செப்பம் செய்தன.

டி.எஸ்.சொக்கலிங்கத்தின் ‘காந்தி’, ‘சுதந்திரச் சங்கு’, ‘தமிழ்நாடு’ தொடங்கி லெனின் வாழ்க்கை வரலாறு, உலகைக் குலுக்கிய 10 நாட்கள், ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சி யின் அறிக்கைகள், தொடர்ந்து மணிக்கொடி வரை அவர் வாசகர். அவரது 20 வயதுக்குள் அவருக்கு எட்டிய உலக இலக்கிய, தத்துவ நூல்கள் அவரை உருவாக்கியதை நாம் அறிய முடிகிறது. அவரே, ஒரு பத்திரிகையின் ஆசிரியர். ‘சுதந்திரம்’ மாதப் பத்திரிகையைத் தொடங்கி நடத்தினார். வ.ரா., பரலி நெல்லையப்பர், சுத்தானந்த பாரதி போன்றவர்கள் அவரது ‘சுதந்திரம்’ இதழில் எழுதியவர்கள். பாரதியாரின் வெளிவராத பல கவிதைகள், கட்டுரைகளை ‘சுதந்திரம்’ வெளியிட்டது.

சடக்கென்று நின்ற காந்தியின் ராட்டை

1934-ம் ஆண்டு காந்தியாரைப் புதுவைக்கு அழைத்து வந்தார் வ.சுப்பையா. அரிஜன சேவா சங்கத்தின் நிதி அளிப்பு விழா. முதலில் ஒப்புக்கொண்ட காந்தியார், பின்னர் மறுத்தார். அரிஜன சேவா நிதியும் திரட்டி, கூட்டத்துக்கு இரவும் பகலும் உழைத்த சுப்பையா வருத்தமடைந்தார். சுதந்திரப் போர் பின்னடையும் என்பதே அவர் கவலை. காந்தியை நேரில் சந்தித்தார் வ.சு. ‘‘உங்கள் சொந்தப் பிரச்சினையை முன்வைத்து, நீங்கள் புதுச்சேரி வர மறுப்பது உங்களுக்கு அழகல்ல!’’ என்றார்.

காந்தி சுற்றிய ராட்டை சடக்கென்று நின்றது.

‘‘எதை சொந்தப் பிரச்சினை என்கிறீர்கள்?’’ என்றார் காந்தி.

‘‘புதுச்சேரி வருகையின்போது, நீங்கள் அரவிந்தரைச் சந்திக்க விரும்பிக் கேட்டீர்கள். அரவிந்தர் தங்களைச் சந்திக்க மறுத்துவிட்டார். அதனால் புதுச்சேரிப் பயணத்தை நீக்கிவிட்டீர்கள்!’’

காந்தி, பக்கத்தில் இருந்த தக்கர் பாபாவிடம், ‘‘நான் புதுச்சேரி போக வேண்டும்’’ என்றார். அப்படியே வந்து பேசியும் சென்றார்.

வ.சு.வின் மற்றுமொரு மாபெரும் அரசியல் பங்களிப்பு, தொழிலாளர் சக்தியைச் சுதந்திரப் போராட்டச் சக்தியாக மடை மாற்றியது. பிரெஞ்சு தேசமே சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்னும் மானுடப் பதாகையைத் தந்ததாகப் பெருமை பேசும் தேசம். என்றாலும், பிரான்ஸின் ஆக்கிரமிப்புப் பகுதிகளில், புதுச்சேரியில், தொழிலாளர்கள் சங்கம் வைக்கும் உரிமை இல்லை. வேலை நேரம் சூரியன் தோற்றம் முதல் இரவு வரை. கூலியோ மிகக் குறைவு. சமூக வாழ்க்கையிலோ, நண்பர்கள் சேர்ந்து ஒரு அமைப்பை ஏற்படுத்த முடியாது. எந்த அமைப்பானாலும் கோயில் திருவிழா ஆனாலும் அனுமதி பெற்றே செயல்பட வேண்டும். அதற்கு மிகக் கடுமையான அக்கினிப் பிரவேசம் செய்ய வேண்டும்.

வ.சுப்பையா, இந்த இரண்டு பேடிமைத்தனத்தில் இருந்தும் சுதந்திரம் பெற்றுத் தந்தார். ஆசியாவிலேயே தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலை, முதன்முறையாக புதுச்சேரியில் அமல்படுத்தப்பட்டது. அடிமைப்பட்ட புதுச்சேரி, 1954-ம் ஆண்டு சுதந்திரம் பெற்றது. 1954 நவம்பர் முதல் தேதியே புதுச்சேரியின் சுதந்திர நாள்.

இந்திய தேசிய பேரியக்கத்தில் தம்மை இணைத்துக்கொள்ள ஒரு கட்டத்தில் வ.சு. விரும்பினாலும், நேரு, ‘‘உங்கள் சுதந்திரத்தைக் காப்பாற்றிக்கொள்ள தனி அமைப்பு கட்டுங்கள்!’’ என்றதால், முதலில் ‘மகாஜன சபா’ என்ற பெயரில், புதுச்சேரி முன்னணி நபர்களைக் கொண்ட அமைப்பைத் தொடங்கினார். மீரட் சதி வழக்கில் சம்பந்தப்படுத்தப்பட்டு தலைமறைவாக இருந்த ஹமீர் ஐதர் கான் அவர்களை சென்னையில் வ.சு. சந்திக்கிறார். உடன் சந்திக்க வந்தவர் பி.சுந்தரையா. தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சியைத் தொடங்குவது பற்றியே அவர்கள் உரையாடினார்கள். 1942-ம் ஆண்டே, பகிரங்கமாக கம்யூனிஸ்ட் கட்சியை வ.சு. அமைக்க முடிந்தது.

வ.சு.வின் சர்வதேசப் பார்வையும் செயல்பாடும், அவரைத் தனித்து அடையாளம் காட்டுகிறது. நாசிப் படையால் ஆக்கிரமிக்கப்பட்ட பிரான்ஸின் விடுதலைக்காகப் பாசிச எதிர்ப்புச் சங்கம் தோற்றுவிக்கப்பட்டபோது, வ.சு. அதன் புதுவைக் கிளைக்குத் தலைவரானார். மட்டுமல்ல,

புதுச்சேரியின் தொழிலாளர்களின் அடக்குமுறை, அரசுக்கு எதிரான போராட்டங்களை பிரான்ஸின் தொழிலாளர் அமைப்புக்கு எடுத்துச் சென்றதிலும் அவர் பங்கு அதிகம். நேரு, பிரான்ஸில் தாம் அறிந்த அரசியல் பிரமுகர்களுக்குக் கடிதம் கொடுத்து வ.சு.வை பிரான்ஸுக்கு அனுப்பி வைத்தார்.

வளர்ந்துவந்த அரசியல் சூழ்நிலையைக் கணக்கில் கொண்டு, தேசிய ஜனநாயக முன்னணி எனும் அமைப்பு, ‘இறுதி நோக்கம் சுதந்திரம்’ என்று தொடங்கப்பட்டது. வ.சு. அதன் தளகர்த்தர். வாழ்நாள் முழுக்க தலைமறைவு, கைது, சிறைவாசம் என்று தன் வாழ்க்கையைப் புதுச்சேரி மண்ணுக்கு அளித்தார் சுப்பையா. ஆயிரமாயிரம் தொண்டர்களின் குருதிக்கு விலையாக, சுமார் 250 ஆண்டுகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்த புதுச்சேரி 1954-ல் தன் சுதந்திரத்தைக் கண்டது,

சுதந்திரம் பெற்ற புதுச்சேரிக்கு வந்த நேரு, ‘பிரஞ்சுக் கலாசாரத்தின் ஜன்னல்’ என்று புதுச்சேரியைப் புகழ்ந்தார்.

சுதந்திரப் புதுச்சேரிக்குத் தம் வாழ்நாள் முழுவதும் அரசியல் வழிகாட்டிக் கொண்டிருந்தார் வ.சுப்பையா. சின்னஞ்சிறு மண்ணில் பணியாற்ற நேர்ந்தாலும், வ.சுப்பையா எந்த இந்தியத் தலைவருக்கும் குறைந்தவர் இல்லை. பலருக்கும் மேலானவர். அரசியலில் முன் உதாரணம் கூறத் தகுதி வாய்ந்த மிக மேலான தலைவர்.

- சுடரும்...

எண்ணங்களைப் பகிர: writerprapanchan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

2 days ago

இலக்கியம்

3 days ago

இலக்கியம்

3 days ago

இலக்கியம்

3 days ago

இலக்கியம்

3 days ago

இலக்கியம்

3 days ago

இலக்கியம்

3 days ago

இலக்கியம்

4 days ago

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

6 days ago

மேலும்