இன்குலாப்: விடுதலையின் குரல்

By பா.செயப்பிரகாசம்

பா

ரதி காலத்தின் பெரும் பிரச்சினை அந்நிய ஆட்சி. அவனுடைய நாட்களில் இந்தியா காலனியாதிக்க நாடு. அடிமைவாசிகளின் குணங்களை மக்களும் பெற்றிருந்தனர். அதன் பின், காலனியாதிக்கத்தை விரட்டிவிட்டோம் எனப் பெருமிதம் கொண்டு நின்றோம்; பல காலனியாதிக்கங்களின் மடமாக நாடு ஆனது. பன்னாட்டு நிறுவனங்கள், உள்நாட்டு நிறுவனங்களின் வேட்டைப் பிராணிகளாக மக்கள் ஆக்கப்பட்டனர். பாரதி காலத்தின் பிரச்சினைப் பிசாசுகள் ஒரு நூறு எனில், பாரதிதாசன் காலத்தில் ஐநூறு . இன்குலாப் காலத்திலோ ஓராயிரம் பிசாசுகள்.

பாரதிக்குப் பிந்திய காலத்தைச் சரியாகக் கணித்தவர் இன்குலாப். சமகால வாழ்க்கையின் புறப் பிரச்சினைகள் மலையாக அழுத்தி அக உளைச்சலைத் தளும்பச் செய்கின்றன. நவகாலனியாதிக்கத்தின் கரங்களில் சிக்கிக்கொண்டிருக்கும் நம் நாட்டில் அடித்தட்டு மக்கள் நாதியற்றவராயினர். சாதிய ஆணவத்தால் நசுக்கப்படும் தாழ்த்தப்பட்டோர், ஆணதிகாரத்தால் ஒடுக்கப்படும் பெண்கள், ஆதிக்கக் குழுக்களால் சிதைபடும் தொழிலாளர்கள், மொழி ஆதிக்கத்தால் ஒடுக்கப்படும் தமிழர் - என நாதியற்றோர் வரிசை நீளும்.

‘வெள்ளை எதிர்ப்பின்

மனிதம் புரியக்

கறுப்பனாய் இருந்து பார்

ஆதிக்க மொழி

எதிர்ப்பின் வரலாறு தெரிய

தமிழனாய் இருந்து பார்…”

என்று நாதியற்ற மக்களின் குரலாக இன்குலாப் வாழ்ந்தார்.

இயற்கையை நோக்கி…

மனிதர்கள் மிகவும் சுருங்கிப் போய்விட்டனர். இயந்திர வாகனங்களை இயக்கி, அவற்றை விடவும் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தொலைத்த வாழ்க்கையைத் தானும் தொலைத்துவிடக் கூடாது என்று வண்டலூர் உயிரியல் பூங்காவின் பின்புறம் உள்ள அய்யஞ்சேரி என்ற கிராமத்தில் 2004–ல் வீடுகட்டிக் குடிபுகுந்தார் இன்குலாப். இயற்கை கும்மாளமிடும் நிலம் அய்யஞ்சேரி. வீட்டுக்கு முன்னும் பின்னும் வலப் பக்கமும் இடப் பக்கமும் வனம். இரவுகளில் உயிரியல் பூங்காவிலிருந்து எழும்பும் உயிரினங்களின் ஓசை: யானை பிளிறும், சிங்கம் கர்ஜிக்கும், புலி உறுமும், நரிகளின் ஊளை, மயில்களின் அகவல் – ஆனாலும் என்ன, ‘இசைக் கச்சேரி’ கேட்டுக்கொண்டிருப்பார் இன்குலாப் என்ற கவி. வீட்டைச் சுற்றியும் மண்டிக் கிடந்த தாவரக் காட்டில் மலர்ந்தன காந்தள் மலர்கள்; அவருக்குப் பார்க்க, கேட்க, உறவாட இயற்கை இருந்தது. உலகுக்குச் சொல்ல கவிதை இருந்தது.

‘பசுமை முண்டிக் கொண்டிருக்கிறது

வீட்டு முன் மண்டும் புதர்களில்.

குடுகுடுவென ஓடும்

சிறிதும் பெரிதுமாய்க் கவுதாரிகள்.

மறுநாள்

தாவிக் குதித்தது ஒரு குறுமுயல்.

வனத் துறையின்

நீண்ட சுவர்களிலிருந்து

அகவி,

தோகை விரிக்கும் ஒரு சாயல் மயில்.

மரவண்ணத்தில்

வளைந்து நெளிந்து செல்லும்

ஒரு சாரைப் பாம்பு

பின் தொடரும் என் கவிதை.”

இயற்கைச் சூழலுக்குள் இல்லமும் வாழ்வும் வசப்பட்டபின் கவிதையும் எழுத்தும் இயற்கைவசப்படுகிறது. வீட்டைச் சுற்றிலும் மரங்கள், செடிகள் என்று நட்டுவளர்த்துப் பசுமைச் சூழல் கொண்ட தன் இல்லத்துக்கு ‘பசுங்குடில்’ என்று பெயரிட்டார். இயற்கைச் சூழலுக்குள் வருகையும், புறஉலகத் தொடர்புகளிலிருந்து வெளியேற்றமும் ஒருசேர நிகழ்ந்ததுபோல் எங்களில் சிலருக்குத் தோன்றிற்று. அடிக்கடி போய்ப் பார்த்து அளவளாவிவருகிற எங்களுக்கு ‘என்ன இப்படித் தனியா வந்திட்டீங்களே’ என்ற ஆதங்கம் படரும். தனிமைப்படவா இத்தனை காலம் நெருப்பேந்தி, சுடர்கொண்டு நடந்தீர் என நாங்கள் சடவுற்றபோது, அவரோ தனிமையைத் தனக்கு வரமாக்கிக்கொண்டிருந்தார்.

புதுச்சேரிக்கு இடப்பெயர்வான பின் பாரதிக்கும் வாய்க்கப் பெற்றது தனிமை. புதுச்சேரி அப்போது நகரமில்லை; குயில்தோப்பு, முந்திரிக்காடு, வயல்வெளி, நீலக்கடல் – அந்தக் கடற்காற்றில் பாரதி கவிதையின் ஆயுள் கூடியது. இயற்கையின் முற்றுகைக்குள் தனிமை கைகொடுக்க இயற்கை தன்வயமாயும் தான் இயற்கைவயமாயும் கரைந்ததில் பரவசப்பட்டுக் குயில் பாட்டிசைத்தான் பாரதி.

இல்லத்தைச் சுற்றியிருந்த வனம் - இன்குலாபுக்கும் கவிதைப் பாலூட்டியது; ‘ஒவ்வொரு புல்லையும் பெயர்சொல்லி அழைப்பேன்’ என புதிய பாடல்களின் பிறப்புத் தலமாகியது அய்யஞ்சேரி.

‘சன்னல் வலைக்கு வெளியே

தலைவிரிக்கும்

தென்னங்கீற்றுகளின் இடுக்கில்

தெரியும் விண்மீன்களோடு

வலை ஓரத்தில் சுடர்கிறது

நாள்தோறும்

ஓர் ஒற்றை மின்மினி.

வலை கிழித்து வா

வானுக்கென அழைக்கிறதோ’

என்று மின்மினியை அழைத்தார்.

போராட்டங்கள் ஓய்வதில்லை

குடிப்பெயர்வுக்குப் பிந்தைய காலத்தில் அவர் வீட்டுக்குப் பக்கத்தில் புதிய குடியிருப்பின் பூங்காவுக்காக ஒதுக்கப்பட்டிருந்த இடம் அரசியல்வாதிகள், அதிகார வர்க்கம், ரியல் எஸ்டேட் புள்ளிகள் ஆகியோரின் கூட்டணியால் ஆக்கிரமிக்கப்பட்டபோது, இன்குலாப் அங்குள்ள குடியிருப்போர் சங்கம் மூலம் வழக்குத் தொடர்ந்தார். பல முறை கொலை மிரட்டல்கள் வந்தபோதும் அஞ்சாமல், கடைசி வரை போராடினார். இரண்டாண்டுகளுக்குப் பின் அது பூங்காவுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட பொதுச்சொத்து என நீதிமன்றம் தீா்ப்பளித்தது. அவர் இறப்புக்கு இரு மாதம் முன்பு தீர்ப்பு வந்தது. நில அபகரிப்பை எதிர்த்துப் போராடி அதை மக்களுக்காக்கியதில் இன்குலாப் பெருமகிழ்ச்சியடைத்திருந்தார். போராட்டத்தின் முடிவில் வசப்படுகிற மகிழ்ச்சி அது.

‘புதுத் தளிர்களால்

கொண்டாடக் காத்திருக்கிறது தரு

ஒரு பாடலுடன்

வரவிருக்கிறது குயில்

உடன் தளிர்த்து வீழும்

சருகுகளைத் தொடர்ந்து

ஒரு பழுப்புடை தரித்து

என் பயணமும் ;

இலையுதிர் காலம் எனினும்

சருகாவதில்லை வேர்கள்’

முதுமை முற்றுகையிட்டபோதும், நீரிழிவால் ஒருகால் நீக்கப்பட்டுவிட்டபோதும், போர்க்குணம் மட்டுப்பட்டுவிடவில்லை என்பதற்கு இந்தக் கவிதையே சாட்சியம்.

‘வாழ்வது இனிமையானது

போராட்டங்ளோடும்

புன்னகையோடும்;

இறப்பது

நிறைவானது – நம்பிக்கையோடு’

என்றார். 07.02.2009 – ல் முன்கூட்டியே அவர் எழுதிவைத்த மரண உரையொன்று 2017–செப்டம்பரில் அவருடைய மகள் ஆமினா பர்வினால் கண்டெடுக்கப்பட்டது. சேரிகளும் வயல்களும் புதுப்புதுச் சாலைகளும் என நீளும் ‘மனுசங்க’ வெளியில் தொடருகிறது அவரின் கவிதைகளின் பயணமும் வாழ்வின் பயணமும்.

-பா.செயப்பிரகாசம்,

மூத்த எழுத்தாளர், jpirakasam@gmail.com

டிசம்பர் 1, 2017 -

மக்கள் பாவலர் இன்குலாப்

முதலாம் ஆண்டு நினைவு நாள்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

7 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

12 days ago

இலக்கியம்

12 days ago

இலக்கியம்

15 days ago

இலக்கியம்

15 days ago

இலக்கியம்

15 days ago

இலக்கியம்

19 days ago

இலக்கியம்

19 days ago

மேலும்