நூல் நயம்: ஆனி ஃபிராங்கும் ஹ்யானாவும்

By செய்திப்பிரிவு

ஹிட்லரின் இனப் படுகொலைகளால் சிதறிப் போகும் ஒரு குடும்பத்தின் தந்தையும் எட்டு வயது மகளும் இந்தியா வந்து சேர்கின்றனர். நாஜிப் படைகளிடம் பிடிபட்ட குடும்பத்தினரின் கதி குறித்தான கேள்வியுடனும் பயத்துடனும் நகர்கிறது காலம். மிகவும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் போரும் முடிவுக்கு வருகிறது. ஆனால், அதற்கு முன்னதாகவே, சொந்த மண்ணுக்கும் ஹ்யானா என்கிற அந்தப் பெண்ணுக்குமான இடைவெளி கடக்க முடியாததாகி விடுகிறது.

கரிசனமும் அக்கறையும் இறைந்து கிடக்கும் ஒரு இந்தியக் குடும்பத்துடன் வளரும் அந்த யூதச் சிறுமி பெண்ணாகி, மனைவியாகித் தாயான போதிலும், வாழ்க்கையிலிருந்து அந்நியப்பட்டே உணர்கிறாள். ஜீவிதத்துக்கான அர்த்தத்தையும், தொலைந்து அறுந்துபோன வாழ்வின் எச்சத்தையும் கண்டடைவதற்கான சந்தர்ப்பம் மகன் மூலம் அவளுக்கு வாய்க்கப்பெறுகிறது.

தன் வேர்களை நோக்கிய அந்தப் பயணத்தின் வழி அவள் மேற்கொண்ட தேடலின் முடிவில் வாழ்க்கையை மட்டும் அல்லாது வரலாற்றின் பரிமாணத்தை; மனித இனத்தின் இயங்கு முறையை; அதில் மதங்களின் ஆதிக்கத்தையும் செல்வாக்கையும் கண்டடைகிறாள்.

புலம்பெயர் வாழ்வின் கொடூரங்களை, மனோதிடத்தைக் குலைத்துவிடும் வலியுடன் எழுதப்பட்ட நூல்களுக்கு இடையில், நேமிசந்த்ரா அதைப் பிரதான உணர்வாக எடுத்தாளாமல், தாய்மையையும் அணைப்பின் கதகதப்பையும் தெரிவு செய்திருக்கிறார். உலகின் எந்த மூலையில் நடக்கும் போரிலும் அதிக விலை கொடுப்பது பெண்கள் என்ற உண்மையின் அடிப்படையிலேயே அவரது கதாபாத்திரப் படைப்புகளை அணுக வேண்டியிருக்கிறது.

அந்த வகையில், இந்நூலில் பெண்கள் பிரதான கதாபாத்திரங்களாகவும் ஒவ்வொரு திருப்பத்திலும் கதையோட்டத்தை நிர்ணயம் செய்கிறவர்களாகவும் இருக்கிறார்கள். ஹ்யானாவை வளர்க்கும் தாய், பக்கத்து வீட்டுப் பிராமணப் பெண், விசா பெற உதவும் பெண், நாஜி வதை முகாமில் அடைபட்டிருந்த ஷாலோமித் உள்ளிட்ட அனைத்துக் கதாபாத்திரங்களிலும் இது பிரதிபலிக்கிறது.

ஹ்யானாவின் பாத்திரப் படைப்பிலும் குடும்ப அமைப்பிலும், உலகின் கவனத்தை நாஜிக்களின் இருண்ட பக்கத்தின் மீது திருப்பிய ஆனி ஃபிராங்க்கினுடைய வாழ்வின் தாக்கம் வெளிப்படுகிறது. அவர் தப்பிப் பிழைத்திருந்தால் என்கிற கற்பனையே ஹ்யானாவாகத் தோன்றுகிறது. சொல்லாடலிலும் விவரணைகளிலும் பெண் கதாபாத்திரங்களுக்கே உரிய அன்பின் நயமும் கருணையின் லகுத்தன்மையும் இழைந்தோடுகின்றன.

இந்திய யூதர்கள் தொடங்கி, இரண்டாம் உலகப் போர், ஜெர்மானிய அறிவியல் துறை, இந்திய விமானத் துறை, அமெரிக்கா, இஸ்ரேல் என வரலாற்றுத் தகவல்களுக்கான நேமிசந்த்ராவின் தேடலும் உழைப்பும் அசாத்தியமானது. அவற்றை அவர் கையாண்ட விதத்தில் உண்மைக்கு நெருக்கமான படைப்பாக மிளிரச் செய்திருக்கிறார்.

இந்து, இஸ்லாம், யூத, கிறித்துவ மதங்களுக்கு இடையிலான ஒற்றுமை, வேற்றுமையை உலகளாவிய பார்வையில் பேசும் அதே வேளையில், இந்திய சாதியக் கட்டமைப்புகளையும் தொட்டுச் செல்வதன் மூலம் காலத்தின் ஒரு பரந்துபட்ட பார்வையை முன்வைக்கிறார். - கோடீஸ்வரன் கந்தசாமி

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE