அ
ப்போதெல்லாம் தமிழ்வாணனின் தொடர்கதைகளை நூல் வடிவில் நான் படித்ததே இல்லை. எல்லாம் பைண்ட் செய்ததுதான். சினேகிதர்கள், நூலகம் மூலம்தான். ‘மர்ம மனிதன்’ தொடரில் சங்கர்லால் அறிமுகமானார். மாது, கத்தரிக்காய் போன்ற பாத்திரங்களுடன் வேறு ஓர் அசேதனப் பொருளும் அறிமுகமாகியது. அது ஓசை எழுப்பாத கிரேப் ஷூ!
ஒரு வாரம் சங்கர்லால் சுட்டுக்கொல்லப்பட்டதைப் படித்தவுடன் அதிர்ந்துபோனேன். படிப்பில்கூட மனம் செல்லவில்லை. ஆனால், சங்கர்லால் ஜாடையிலேயே இருந்த ஒரு தையல்காரர் கொல்லப்பட்டதாகக் கதையைச் சுவாரசியமாகக் கொண்டுசென்று திசைதிருப்பினார் தமிழ்வாணன்.
பத்திரிகை ஆசிரியராக இருந்தபோதே சுயமுன்னேற்ற நூல்கள் எழுதினார். தொடர் கதை, கேள்வி-பதில், கட்டுரை, சுயமுன்னேற்ற நூல்கள் என்று எதைப் படித்தாலும் வாசகரின் ஆர்வத்தைத் தூண்டுவதாகவே இருக்கும். தேவன், மீ.ப. சோமு, ஆர்.வி. கி.வா.ஜ. போன்ற பல பத்திரிகை ஆசிரியர்களைப் பேட்டி கண்டு அவர் எழுதிய பகுதியும் வித்தியாசமாக இருந்தது. திடீரென்று அவர் பன்முக வித்தகராக மாறியது ஓர் ஆச்சரியம். ‘கனவு ஜோசியம்’, ‘கையெழுத்து ஜோசியம்’ ஆகியவற்றுடன் தமிழ்வாணன் பற்பொடியைக்கூட விளம்பரப்படுத்தினார். இந்த மாறுதலுக்கான காரணம் அவர் ‘மதர் இந்தியா’ பத்திரிகை ஆசிரியர் பாபுராவ் படேலைப் பின்பற்றியதுதான். தன் எழுத்தின் மீது அவருக்கு அபாரமான நம்பிக்கை இருந்தது.
1976-ல் அவர் கேள்வி-பதில் பாருங்கள்.
கே: சுஜாதாவைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
ப: அவரும் சில சமயம் தமிழ்வாணனைப் போல் நன்றாகவே எழுதுகிறார்!
சமத்காரமாகவும் பதில் சொல்வார் தமிழ்வாணன்:
கே: சிவாஜி கணேசன் கத்திச் சண்டை போடுவாரா?
ப: அவர் கத்தி, சண்டை போடுவார்.
“ஒரு அஞ்சல் அட்டையில் கறுப்புக் கண்ணாடியும் தொப்பியும் வரைந்து, சென்னை-10 என்று முகவரி எழுதி தபால் பெட்டியில் போட்டால் போதும், ஆபிசுக்கு வந்துவிடும்” என்று தமிழ்வாணன் பெருமையுடன் பலமுறை எழுதியிருக்கிறார். அது உண்மையே.
தொடர்கதைகள், கட்டுரைகள், கேள்வி-பதில் இவற்றுடன் பல செய்திகள், பண்புகள், மருத்துவக் குறிப்புகள் ஆகியவற்றைத் தமிழ்வாணன் நுழைத்துவிடுவார். ‘கைதட்டிக் கூப்பிடாதீர்கள்’, ‘வேர்க்கடலை சாப்பிட்டதும் துளி வெல்லம் சாப்பிடுங்கள் – பித்தம் வராது’, ‘பார்வை குறைந்தவர்கள் கண்ணாடி அணிய வெட்கப்படுவதில்லை, ஆனால் செவிப் பழுதுள்ளவர்கள் ஏன் காது கேட்கும் கருவியைப் பொருத்திக்கொள்ளக் கூச்சப்படுகிறார்கள்?’ என்று எழுதியிருக்கிறார். 1962-ல் அவர் நடையில் ஒரு மாறுதல் தென்பட்டது. தூய தமிழ்ப் பெயர்களை வைத்துத் துப்பறியும் கதைகளை எழுதினார் (திமுக பாதிப்பு). ‘மணிமொழி என்னை மறந்துவிடு’ (விகடன்), ‘அமுதா! உன் மனம் காயோ அல்லது பழமோ’ (அமுதசுரபி) என்கிற தலைப்பில் பிற ஏடுகளிலும் தொடர் எழுதினார்.
‘கல்கண்டு’ சிறுவர் பத்திரிகை என்ற நிலையிலிருந்து இளைஞர் பத்திரிகையானது. அப்போதுதான் அரசியலை அவர் தீவிரமாக எழுதினார். அதுவும் அவர் சார்ந்த குமுதத்துக்கும் கல்கண்டுக்கும் பல மாறுபாடுகள்! 1973-ல் பெரியார் இறந்தபோது தலையங்கம் எழுதிய குமுதம், அவரைப் பாராட்டி மட்டுமல்லாமல் விமர்சித்தும் எழுதியிருந்தது. கல்கண்டு பத்திரிகையில் தமிழ்வாணனோ, இரண்டு வாரம் தொடர்ந்து பெரியாரைப் பாராட்டி எழுதினார். இந்திரா காந்தி கொண்டுவந்த நெருக்கடிநிலையை 100% ஆதரித்தது குமுதம். மொரார்ஜி தேசாய் பிரதமரானவுடன் ஒப்புக்கு வாழ்த்து தெரிவித்தது. கல்கண்டு ஆசிரியர் தமிழ்வாணனோ மொரார்ஜியின் படம் போட்டு ‘தேசத்தைக் காக்க வந்த தேசாய்’ என்று விரிவாக எழுதி, வாசகர் புருவத்தை உயரவைத்தார். நிறுவனம் அளித்த கருத்துச் சுதந்திரம் என்றும் எடுத்துக்கொள்ளலாம். கல்கண்டு பத்திரிகை கிட்டத்தட்ட ‘தனிநபர் ஆவர்த்தனம்’ போன்றதுதான் என்றாலும் எஸ். விசுவநாதன் (இன்றைய சாருகேசி), முகுந்தன், ஜோதிர்லதா கிரிஜா போன்றவர்களின் எழுத்தைப் பிரசுரம் செய்து அவர்களுக்கு தமிழ்வாணன் ஊக்கமளித்தார். ஏன், சோ கூட ‘கல்கண்டு’ இதழில் கிரிக்கெட்டைப் பற்றி எழுதியிருக்கிறார்.
விகடன் ஆசிரியராக இருந்த தேவன் மீது தமிழ்வாணனுக்குத் தனி அபிமானம். 1957-ல் தேவன் மறைந்தவுடன் அவருக்குப் புகழஞ்சலி செலுத்தி அரைப்பக்கம் எழுதினார் தமிழ்வாணன். இனி சாம்பு எப்போது மூக்கை சொறிந்துகொண்டு நிற்பார், லட்சுமியின் அழைப்புக் கூவலைக் கேட்க இனி யார் வருவார் (லட்சுமி - தேவன் இல்லத்துப் பசு) என்று மனமார வருந்தி உணர்ச்சியுடன் எழுதினார்.
1960-களில் மாணவர்கள், பெண்கள் என்று பலரையும் பத்திரிகை வாசிக்கத் தூண்டியது தமிழ்வாணனின் முக்கியமான சாதனை களுள் ஒன்று. நாவல், சிறுகதை, கட்டுரை என மூன்று பிரிவுகளிலேயே புத்தகங்கள் வெளியான சமயத்தில் முதன்முதலாக ‘வீட்டு மராமத்து வேலை கற்றுக்கொள்ளுங்கள்’, ‘பதினெட்டு நாளில் இந்தி’ போன்ற அன்றாட வாழ்க்கைக்குப் பயனுள்ள நூல்களை மணிமேகலைப் பிரசுரம் மூலம் வெளியிட்டார்.
“சிறுவனாகவும் இல்லாமல் முதிய பெரியவராகவும் இல்லாமல், அறிஞராகவும் இல்லாமல் பாமரனாகவும் இல்லாமல்… சப்ளைமிலிருந்து ரிடிகுலஸ் வரை கவனம் காட்டுபவராக, ஏராளமான தமிழ் வாசகர்களுக்கு நேர் எதிர்வீட்டுக்காரர் போலத் தோற்றம் ஏற்படுத்திவந்த தமிழ்வாணன் திடீரென்று மறைந்தபோது தமிழ் உலகம் ஒரு கணம் ஸ்தம்பித்து நின்ற பிறகுதான் மீண்டும் இயங்கத் துவங்கியிருக்க வேண்டும்… வெற்றிகரமான மனிதனின் அடையாளம் வாழ்க்கை தரும் வாய்ப்புகளைப் பயன்படுத்துபவர் என்பார்கள். தனக்குக் கிடைத்த வாய்ப்புகளை நன்கு பயன்படுத்தியவர் தமிழ்வாணன்” என்று ‘காலக்கண்ணாடி’ என்ற நூலில் தமிழ்வாணனைப் பற்றி அசோகமித்திரன் குறிப்பிட்டிருப்பார். அது மிகவும் பொருத்தமானதே என்று தோன்றுகிறது.
-வாதூலன், எழுத்தாளர்.
நவம்பர்-10: தமிழ்வாணனின் 40-வது நினைவு நாள்
முக்கிய செய்திகள்
இலக்கியம்
3 days ago
இலக்கியம்
4 days ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
11 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
16 days ago
இலக்கியம்
16 days ago
இலக்கியம்
18 days ago
இலக்கியம்
18 days ago
இலக்கியம்
19 days ago