மதுரை சித்திரக்காரருடன் ஓர் உரையாடல் - ஓவியர் ரஃபீக் நேர்காணல்

By முத்தையா வெள்ளையன்

மதுரை நகரத்தின் பெரிய கோபுரங்கள், நாயக்கர் மஹால் அரண் மனை, பத்துத்தூண் மண்டபம், மொட்டைக் கோபுரம், இன்னும் பிரம்மாண்டமாய் நிற்கும் ஐயனார் சிற்பங்கள் போன்றவற்றை சிறுவயதிலிருந்தே பார்த்துப் பார்த்துப் பழகி வளர்ந்தவர் ஓவியர் ரஃபீக்.

மதுரையின் பழைமை இவரது கொலாஜ் ஓவியங்களில் தோற்றம் கொள்கின்றன. மதுரை மீனாட்சியம்மன் கோவிலைச் சுற்றி வாழும் உருது பேசும் மக்களின் வாழ்க்கையை 'சித்திரக் காரனின் குறிப்பிலிருந்து' என்ற நூலில் பதிவு செய்துள்ளார்.

நீங்கள் ஓவியரானது எப்படி?

நான்கு ஐந்து வயதில் நான் வரைந்ததை என் அப்பா யாரிடமாவது சொல்லிக்கொண்டிருப்பார். எனக்கு இடதுகைப் பழக்கம் என்பதால் யாருமே விளையாட சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். என்னோட சுட்டித்தனத்தை வெளிப்படுத்தவும், தனிமைக்கு வடிகாலாகவும் ஓவியம்தான் சிறந்தது என்று முடிவுக்கு வந்தேன்.

ஓவியம் என்றால் பார்த்துதான் வரைய வேணும் என்று நானே முடிவுசெய்து மதுரைக்குப் பக்கத்திலுள்ள அழகர் கோவிலுக்கு ஒரு கேன்வாசை எடுத்துக்கொண்டுபோய் வரைந்தேன். அப்போது மதுரையில் தனபால் சார் தலைமையில் ஓர் ஓவியக்கண்காட்சி நடந்தது. நானும் என்னுடைய ஓவியத்தை வைத்தேன். அவர் எல்லா ஓவியங்களையும் பார்த்தார். இங்கே இருக்கிற எல்லா ஓவியங்களும் நகலாக இருக்கிறது, ஒரே ஒரு ஓவியம் மட்டும்தான் அசலாக இருக்கிறது;

அதை வரைந்தது யார்' என்று கேட்டார். நான் அவரிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். என்னைப் பாராட்டிவிட்டு பல ஓவியமுறைகளைக் கற்றுக்கொள்ளவும், பல ஓவியர்களின் ஓவியத்தைப் பார்க்கவும் உற்சாகப்படுத்தினார். சென்னைக்கு வந்து ஓவியர்கள் அல்போன்ஸ், பாஸ்கர், தட்சிணாமூர்த்தி போன்ற ஓவியர்களைச் சந்தித்தேன். நான் அன்றைக்கு அழகர் கோவிலுக்கு சென்று வரைந்தது கிட்டத்தட்ட போட்டோகிராபி மாதிரிதான். போட்டோகிராபி வந்த பிறகு ஏன் இந்தமாதிரி வரைய வேண்டும் என்று யோசித்து கொலாஜ் ஓவியங்களை வரையத் தொடங்கினேன்.

முதல் கொலாஜ் ஓவியத்தை எப்போது வரைந்தீர்கள்?

1987-ல் வரைந்தேன். மதுரையில் ஏழுகடல் தெரு இருக்கிறது. அந்தத் தெருவின் நடுவில் இரண்டு பெரிய தூண்களும் நடுவில் சிறியதாகக் குளம் ஒன்றும் இருந்தது. அந்தத் தெருவைச் சற்றுப் பின்னோக்கிப் பார்த்தால் ஐரோப்பாவில் உள்ள ஒரு பழைய நகரத்தின் தோற்றத்தை ஒத்து இருக்கும். அந்தத் தெருவை கொலாஜ் ஓவியத்தில் வரைந்தேன். அதற்கு லலித் கலா அகாடமி விருது கிடைத்தது.

அப்போது கொலாஜ் ஓவியத்திற்குப் பெரிய அங்கீகாரமெல்லாம் கிடையாது. இப்போது கொலாஜ் ஓவியத்திற்கு அடுத்த கட்டமாக மிக்ஸ்டு மீடியா (mixed media) வந்திருக்கிறது. இந்த ஓவிய முறையில் காகிதங்களையும் வண்ணங்களையும் கலந்து பயன்படுத்துவார்கள். அன்று இடதுகைப் பழக்கமுள்ள நான், இன்று ஒரே நேரத்தில் என் ஓவியங்களை இரண்டு கைகளாலும் வரைகின்ற அளவுக்கு வளர்ந்துள்ளேன்.

இஸ்லாமிய ஓவியமுறை நவீன ஓவியத் தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா?

அரபு நாடுகளில் இஸ்லாம் அறிமுகமான பிறகு உருவங்களை வரையக் கூடாது என்ற கட்டாயம் வந்துவிட்டது. உருவங்களைக் கொண்டுதான் கடவுள் உருவாகிறார். இதனால் ஒவ்வொரு கடவுளுக்கும் தனித்தனிக் கூட்டம் உருவாகும். ஆகவே ஒரு கடவுள் சிவப்பாக இருப்பார். இன்னொரு கடவுள் கருப்பாக இருப்பார். ஒரு கடவுள் உயரமாக இருப்பார்; ஒரு கடவுள் கட்டையாக இருப்பார். ஆனால் இறைவன் உருவமற்றவன்; இதனால் இயற்கைக் காட்சிகளையே வரைந்தனர். இப்படியாக 300 வருடங்கள் ஓடிவிட்டன.

கிரேக்கம், பாரசீகம் ஆகிய நாடுகளில் இஸ்லாம் அறிமுகமாவதற்கு முன்பே ஓவியத்தின் உச்சக்கட்டத்திற்குச் சென்றுவிட்டனர். பொதுவாகக் குருவியைவிட பெரிய உருவமாக வரைந்தால், அந்த ஓவியம் வழிபாட்டுத் தன்மைக்குப் போய்விடும் என்பதால்அதற்கு மேலான ஓவியத்தை வரையவில்லை. இதனால் நுண் ஓவிய முறையில் புத்தகங்களுக்கு வரைய ஆரம்பித்தனர்.

அன்றைக்கு இஸ்லாமிய ஓவியம் என்பது புத்தகம் சார்ந்த ஓவியப் படைப்பாகத்தான் இருந்தது. தனி கேன்வாஸெல்லாம் கிடையாது. இந்தியாவில் பல தரப்பட்ட சமூக மக்கள் வரைந்த பாகாடி பெயிண்டிங்ஸ், அக்பர் காலத்தில் வரையப்பட்ட முகலாய ஓவியங்கள், ப்ரெஷ்யன், துருக்கி போன்ற நாடுகளில் வரையப்பட்ட ஓவியங்கள் ஆகியன மேலிருந்து கீழே பார்க்கும் காட்சி அமைப்பில் (top angle) வரையப்பட்டன. இந்த முறை இறை நம்பிக்கை சார்ந்ததாக இருந்தது.

இந்த ஓவிய முறை 19-ம் நூற்றாண்டு வரை இருந்தது. இந்த ஓவியமுறையும் உருவங்களை வரையக்கூடியதுதான், ஆகவே இதுவும் கூடாது என்றனர். இதற்குப் பிறகு ஒருசிலர் பூ, பறவை போன்றவற்றை கார்பெட்டில் வரைந்தனர்; அது ஒரு இஸ்லாமிய ஓவிய மரபாக மலர்ந்தது.

அடுத்து காலியோகிராபி. அது எழுத்துக்களைக் கொண்டு அழகுபடுத்துவது; அது இன்றைக்கு மேற்கத்திய முறைக்குச் சென்றுவிட்டது. புத்தகம் சார்ந்து இஸ்லாமிய ஓவிய மரபு இன்றைக்கு பெரியதாக இல்லாவிட்டாலும் ஆங்காங்கே இருந்துவரத்தான் செய்கிறது.

நீங்கள் சிறுவயதிலிருந்து மீனாட்சியம்மன் கோவிலைக் கவனித்து வருகிறீர் கள். அங்குள்ள கலைப்படைப்புகளின் தற்போதைய நிலை என்ன?

அங்கே மீனாட்சி திருக்கல்யாணம் என்ற பழைய ஓவியத்தைத் தவிர, மற்ற ஓவியங்களில் எல்லாம் எனாமல் பெய்ண்ட் அடித்துவிட்டார்கள். பொற்றாமரைக் குளத்தைச் சுற்றி சமணர்கள் கழுவேற்றம் பற்றிய ஓவியங்கள் இருந்தன. இன்றைக்கு அந்த ஓவியங்கள் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டன. தங்க முலாம் பூசப்பட்ட ஓவியங்கள் முழுவதும் அழிக்கப்பட்டுள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை ஓவியக் கல்லூரி மாணவர்கள் பழைய ஓவியங்களை அப்படியே வரைந்து ஆயிரங்கால் மண்டபத்தில் வைத்திருந்தார்கள். அதையும் சிதைத்துவிட்டார்கள்.

கொண்டையராஜூ வரைந்த காலண்டர் படங்கள், வெகுமக்கள் கலாசாரத் தில் மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத் தியவை. அவர் வரைந்த சாமிபடங்கள் சலூனிலும், டீக்கடைகளிலும் எளிய மனிதர்களின் வீடுகளுக்கும் வந்தன. அதை ஒரு நவீன ஓவியராக எப்படிப் பார்க்கிறீர்கள்?

கொண்டையராஜு ஒரு நல்ல ஓவியர். சில மரபு ரீதியான ஓவியங்களை அவர் வேறு வகையில் வெளிக்கொணர்ந்தார். அவருக்கு முன்பு மூலிகை வண்ணங்களைப் பயன்படுத்தினர். அவருடைய காலத்தில், வணிக ரீதியாக வெற்றி பெறுவதற்கு சில சமரசங்களுக்காக எனாமல் பெயிண்ட் பயன்படுத்தப்பட்டது. இன்றைக்கு எல்லாருமே எனாமல்தான் அடிக்கிறார்கள்.

இதனால் பல மரபு ரீதியான ஓவியங்கள் சிதைந்துவிட்டதில் என்னை மாதிரியான ஓவியர்களுக்கு வருத்தம் உண்டு. என் தலைமுறைக்கு முன்னால் இருந்த ஒரு கலைப் படைப்பு சிதைக்கப்படும்போது ஒரு கலைஞனுக்கு உண்டாகும் வருத்தம் எனக்கும் இருக்கிறது. மேலும் கொண்டையராஜுவின் சிஷ்யர்கள் பலரும் ஓவியத்தின் உச்சக்கட்டத்தை அடைந்திருக்கிறார்கள். ஒரு மாற்றம் அல்லது நவீனத்துவம் என்பது நம்முடைய வேரில் இருந்துதான் வர வேண்டும். ஆனால் இங்கு மேலைநாடுகளில் இருந்து வருவதுதான் பிரச்சினையாக இருக்கிறது.

பொதுவாக நவீன ஓவியத்திற்கும் பார்வையாளனுக்கும் நிறைய இடைவெளி இருக்கிறதே?

நான் வரைந்த ஓவியத்தை என்னால் உணர முடியும், வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது. அதனால் அது ஓவியமாக இருக்கிறது. நான் என்னுடைய ஓவியத்தைப் பற்றிப் பேசினால், அது அந்த ஓவியத்தைப் பற்றி வேறு கதையாக இருக்கும். அந்த ஓவியத்தைச் சார்ந்ததாக இருக்க முடியாது. ஒரு பார்வையாளன் எடுத்தவுடனே ஒரு நவீன ஓவியத்திற்குள் நுழைய முடியாது.

அதற்குப் பரிச்சயம் வேண்டும். நாம் எப்படி ஒரு மொழியைக் கற்றுக்கொள்கிறோமோ அப்படி ஓவியத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும். இன்றைக்கு நவீன ஓவியம் என்பது தனிமனித வெளிப்பாடுதான் என்றாலும், அந்த ஓவியனைப் பற்றியும், அவனுடைய ஓவியத்தைப் பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும். அதன் பிறகு ஒரு பரிச்சயம் ஏற்படும். பிறகு ஒரு காலகட்டத்தில் அந்த ஓவியத்தைப் புரிந்துகொள்ள முடியும் என்று நான் நினைக்கிறேன்.

தற்போது நீங்கள் செய்துவரும் பணிகள் பற்றி…

தமிழகத்தின் ஒவ்வொரு ஊரிலும் இருந்த நம் பாரம்பரியத்திற்கு அடையாளமான பல கட்டிடங்கள் இன்று இடிக்கப்பட்டுவிட்டன. அவற்றில் சிலவற்றைப் புகைப்படமாக வைத்துள்ளேன். அந்த ஊருக்குச் சென்று, அங்கேயே உண்டு உறங்கி வாழ்ந்து அந்தப் படங்களை வரைய வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

16 hours ago

இலக்கியம்

16 hours ago

இலக்கியம்

16 hours ago

இலக்கியம்

16 hours ago

இலக்கியம்

4 days ago

இலக்கியம்

4 days ago

இலக்கியம்

7 days ago

இலக்கியம்

7 days ago

இலக்கியம்

7 days ago

இலக்கியம்

7 days ago

இலக்கியம்

13 days ago

இலக்கியம்

14 days ago

இலக்கியம்

14 days ago

இலக்கியம்

14 days ago

இலக்கியம்

14 days ago

மேலும்