திண்ணை: ஆஸ்திரேலிய விருதுப் பட்டியலில் தமிழர் நாவல்

By செய்திப்பிரிவு

ஆஸ்திரேலிய விருதுப் பட்டியலில் தமிழர் நாவல்: ஆஸ்திரேலியாவின் உயர்ந்த இலக்கிய விருது ‘மைல்ஸ் ஃபிராங்க்ளின்’. புகழ்பெற்ற ஆஸ்திரேலிய எழுத்தாளர் பெயரில் இந்த விருது வழங்கப்படுகிறது. இதன் இறுதிப் பட்டியலில் ஆறு நாவல்களுடன் ஆஸ்திரேலியாவில் வாழும் இலங்கைத் தமிழரான சங்கரி சந்திரன் எழுதிய ‘Chai Time at Cinnamon Gardens’ ஆங்கில நாவலும் இடம்பிடித்திருக்கிறது.

சங்கரி சந்திரனின் மூன்றாவது நாவல் இது. சின்னமன் என்கிற இல்லத்தைச் சுற்றிப் பின்னப்பட்டுள்ள கதையில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ்க் குடும்ப வாழ்க்கையின் வழி ஆஸ்திரேலியாவின் நடுநிலைமையைக் கேள்விக்கு உள்ளாக்குகிறது இந்த நாவல்.

கோவை புத்தகத் திருவிழா: கோயம்புத்தூர் மாவட்ட சிறுதொழிற்சாலைகள் சங்கமான கொடிசியா ஒருங்கிணைக்கும் கோவைப் புத்தகத் திருவிழா ஜூலை 21இல் தொடங்கியுள்ளது. ஜூலை 30ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தப் புத்தகக் காட்சி, கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெறவுள்ளது.

கோவை புத்தகக் காட்சியை ஒட்டி வழங்கப்படும் வாழ்நாள் சாதனையாளர் விருது கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமான சுகுமாரனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மொழியாக்கத்துக்கான விருது அருட்செல்வப் பேரரசனுக்கும் சிறுகதைக்கான விருது மயிலன் சின்னப்பனுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளன.

மலையாளத்தில் ‘உறுபசி’ - எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் பிரபலமான நாவல்களில் ஒன்று, ‘உறுபசி’. தோல்வியடைந்த ஒருவனின் கதையைச் சொல்லும் நாவல். லட்சியவாதியாக இருந்த சம்பத் என்கிற இளைஞனை வாழ்க்கை எப்படியெல்லாம் புரட்டிப் போடுகிறது என்பதைத் துலக்கமான விவரிப்பின் வழி ராமகிருஷ்ணன் அந்நாவலில் சித்தரித்திருப்பார்.

சம்பத் என்கிற மனிதனின் மரணத்துக்குப் பிறகு நினைவுகள் வழி நாவலுக்குள் அவன் மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவான். இந்த நாவல் மலையாளத்தில் ‘தீப்பசி’ என்னும் தலைப்பில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இடமண் ராஜன் மொழிபெயர்த்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE