பறவைகளின் மொழி
அ
டுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் உள்ள வீட்டின் மூடப்பட்ட கண்ணாடி ஜன்னலை காகம் ஒன்று கொத்திக் கொண்டிருப்பதைக் கண்டேன். அந்த வீடு சில மாதங்களாகப் பூட்டப்பட்டே இருக்கிறது. தூசிபடிந்துபோன ஜன்னல்கள்.
அது கண்ணாடி என்று தெரிந்துதான் கொத்துகிறதா.. இல்லை தெரியவில்லையா எனப் புரியவில்லை. அந்த காகத்தைப் பார்த்தபடியே இருந்தேன்.
ஒருமுறை கொத்திவிட்டு, ஜன்னல் திறக்கிறதா என உன்னிப்பாகப் பார்க்கிறது. பிறகு பறந்துவிடுகிறது. சில நிமிஷங்களுக்குப் பிறகு மீண்டும் கண்ணாடியை நோக்கிவந்து கொத்துகிறது. உண்மையில் அந்த காகம் என்னதான் தேடுகிறது? முன்பு, மூடப்பட்ட ஜன்னலுக்குப் பின்னால் அந்த காகத்துக்கு உணவு கிடைத்திருக்கக்கூடும். அதைத்தான் தேடுகிறதா, இல்லை இது வெறும் விளையாட்டா? எனக்குப் புரியவில்லை.
ஆனால், ஒவ்வொரு முறை காகம் பலமாக தனது அலகால் கொத்தும்போது உண்டாக்கும் சப்தம் மனதை வருத்துவதாக இருந்தது.
பாவம், அந்த காகம் எதற்காக இப்படிப் போராடிக் கொண்டிருக்கிறது? அந்த வீட்டு மனிதர்கள் ஊரில் இல்லை என்று அதனிடம் எப்படி தெரிவிப்பது? சில நேரம் காகம் ஆவேசமாக கண்ணாடியைக் கொத்துவதைக் காணும்போது இது பைத்தியக்காரத்தனமா, வேண்டும் என்றேதான் முட்டிக் கொண்டிருக்கிறதா? என்றுகூட தோன்றியது.
மனிதர்களுடன் காகங்கள் எளிதாகப் பழகிவிடுகின்றன. மனிதர்களைக் கண்டு பயப்படுவதுபோல நடிப்பது அதன் இயல்பு. உண்மையில் காகங்கள் பயப்படுவதில்லை. மாறாக, ஜன்னலில் வைக்கப்படும் உணவை ஒரு நொடிக்குள் கொத்திக்கொண்டு பறந்துபோகும் சரியான தருணத்துக்காக காத்திருக்கிறது. பாய்ந்து எடுத்த உணவை, பறந்துபோய் மொட்டைமாடி ஒன்றில் அமர்ந்து உண்ணுகின்றன. சாப்பிடும்போதும் பயம் கொள்ளும் பறவை காகம் ஒன்றுதானோ!
காகங்கள் சில நாட்கள் அந்திவேளையில் குழப்பத்துடன் சுற்றி அலைகின்றன. வடக்கும், தெற்குமாகப் பறந்து அலைகின்றன. எதற்காக அந்த அலைச்சல் எனப் புரியவில்லை. அதுபோல, மழை பெய்து வெறித்த பிறகு காகங்களின் இயல்பு மாறிவிடுகிறது. ஈரத்துக்குள் உணவு தேடுவது எளிதானதாக இல்லை.
கண்ணாடியைக் கொத்திக் கொண்டிருக்கும் காகம்போலதான் நாமும் பலநேரம் நடந்துகொள்கிறோம். நமக்கு என்ன வேண்டும் என புரிவதில்லை. என்றோ கிடைத்த ஒன்றுக்காக, இன்றைக்கும் கொத்திக்கொண்டே இருப்பதுதான் நமது வாழ்க்கையா, இல்லை எப்படியாவது ஆசைப்பட்டது கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையா? ஒவ்வொரு முறை கண்ணாடி ஜன்னல் திறக்காமல் போகும்போதும் காகம் ஏமாற்றத்துடன் பறந்துபோகிறது. நாமும் அப்படிதான் பல நாட்கள் சோர்ந்துபோய் வீடு திரும்புகிறோம். காகம் கொத்துவது கண்ணாடியை. அதை எளிதில் திறக்கமுடியாது என நமக்காவது தெரிகிறது. ஆனால் வாழ்க்கையில் நாம் எதனிடம் மோதி தோற்கிறோம்? அந்த கதவு ஏன் திறக்கப்படுவதில்லை என தெரிவதே இல்லை.
காகங்களை எப்போது காணும்போதும், அதன் ஆரோக்கியத்தைக் கண்டு வியக்கிறேன். நோயுற்ற காகத்தைக் காண்பது அரிது. பெரும்பாலும் காகங்கள் துடிப்போடு இருக்கின்றன. அதன் வேகமான ரெக்கையடிப்பில் அதன் துடிப்பை உணர்ந்துகொள்ள முடிகிறது.
சென்னையை உலுக்கியெடுத்துக் கொண்டிருந்த மழைநாளில் ஸ்கூட்டர் ஒன்றில் மழை கோட் அணிந்தபடியே வீடு வீடாகப் போய் பால்பாக்கெட் விநியோகம் செய்பவரைக் கண்டேன். அந்த மழையிலும் அவர் முகத்தில் வெளிப்பட்ட உற்சாகம், சந்தோஷம் தருவதாக இருந்தது. ஆரோக்கியமான உடல்தான் அந்த சந்தோஷத்தின் முதல்காரணம்.
அவர் தன் உடலை உறுதியாக வைத்திருக்கிறார். ஆகவே, மழைக்கு அவர் பயம்கொள்வதில்லை. ஈரமோ, குளிரோ அவரை வாட்டுவதில்லை. ஆனால் கதகதப்பான வீடுகளுக்குள், அவசர உணவுக்குப் பழக்கப்பட்டுப் போன பலருக்கோ வெயிலும் சரிப்பட்டு வருவதில்லை; மழையும் சரிப்பட்டு வருவதில்லை. ஆரோக்கியமான உடல் கொண்டிருந்தால் எதையும் சாதிக்கலாம். அதுதான் உண்மையான செல்வம். பணம் தேடி அலையும் இன்றைய வாழ்க்கையில் பலரும் அதை உணர்வதே இல்லை. ஆனால், பறவைகளும், விலங்குகளும்கூட உணர்ந்திருக்கின்றன. நாள் முழுவதும் சாய்மானத்திலே கிடக்கும் மனிதர்களைக் கண்டிருக்கிறேன். அப்படி ஒரு விலங்கைக் கண்டதில்லை.
நவீன வாழ்க்கையில் மனிதனும், பறவைகளும் பசியால் துரத்தப்படுகிறார்கள். உணவுக்காக அல்லாடுகிறார்கள். பறவைகளுக்கான தானியங்களும், புழு புச்சிகளும் மாநகரில் அற்றுப்போய்விட்டன. ஆகவே, எதைச் சாப்பிடுவது எனத் தெரியாமல் பறவைகள் அல்லாடுகின்றன.
‘அந்திக்கருக்கலில்
இந்தத் திசை தவறிய
பெண் பறவை
தன் கூட்டுக்காய்
தன் குஞ்சுக்காய்
அலைமோதிக் கரைகிறது
எனக்கதன்
கூடும் தெரியும்
குஞ்சும் தெரியும்
இருந்தும்
எனக்கதன்
பாஷை புரியவில்லை’
என்று கவிஞர் கலாப்ரியா ஒரு கவிதை எழுதியிருக்கிறார். கண்ணாடியைக் கொத்தும் காகத்தைக் கண்டபோது எனக்கு இந்தக் கவிதையே நினைவுக்கு வந்தது. பறவைகளின் பாஷையை யார் அறிவார்கள்?
கற்கால மனிதன் முதல் இன்று வரை விலங்குகள், பறவைகளுடன் பேசுவதற்கான மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என மனிதர்கள் முயற்சித்தே வருகிறார்கள். அதைப் பற்றி நிறைய கதைகளும் இருக்கின்றன. ரஷ்யக் கதை ஒன்று இதைப்பற்றி பேசுகிறது.
ரஷ்யாவில் வணிகரின் மகன் ஒருவன் ஒருநாள் காட்டில் நான்கு வாத்துக் குஞ்சுகளை வேட்டைக்காரர்களிடம் இருந்து காப்பாற்றினான். இதற்கு நன்றிக்கடனாக அவனுக்கு பறவைகளின் மொழியை வாத்து கற்றுத் தந்தது. பறவைகளின் மொழியைக் கற்றுக்கொண்ட அவன் ஒருநாள் வீட்டில் பெற்றோருடன் பேசிக்கொண்டிருக்கும்போது ஆந்தை கத்துவதைக் கண்டான்.
‘‘ஆந்தை என்ன சொல்கிறது?’’ என்று அவனது தந்தை கேட்டார்.
‘‘நீங்கள் பரம ஏழையாகப் போகிறீர்கள். நானோ ராஜாவாகப் போகிறேன் என்று ஆந்தை சொல்கிறது’’ என்றான். இதைக் கேட்டு கோபமடைந்த அப்பா, அவனை வீட்டைவிட்டுத் துரத்திவிட்டார்.
போகுமிடம் தெரியாமல் அவன் கடற்கரைக்கு வந்தான். ஒரு வணிகக் கப்பலில் அவனை வேலைக்கு சேர்த்துக்கொண்டார்கள். கடலில் செல்லும்போது, புயல் வரப்போவதாக பறவைகள் பேசிக்கொண்டு செல்வதைக் கேட்டான். உடனே இதை மாலுமியிடம் சொன்னான். ஆனால், மாலுமி அதைக் கேட்டுக்கொள்ளவில்லை. புயல் தாக்கி கப்பல் மோசமாக சேதமடைந்தது.
கடலில் மிதந்தபடியே உயிர்தப்பிய அவன் ஒரு நகரை அடைந்தான். அந்த நாட்டு அரசனின் மாளிகை ஜன்னலை மூன்று காகங்கள் தினமும் வந்து கொத்திக்கொண்டிருந்தன. எவ்வளவு தடுத்தும் அவற்றை நிறுத்தமுடியவில்லை. இதைத் தடுத்து நிறுத்துகிறவர்களுக்கு பரிசு அளிப்பதாக மன்னன் அறிவித்தான்.
இதைப் பற்றி கேள்விப்பட்ட இளைஞன், அந்தப் பறவைகளுடன் பேசினான். ‘‘அரண்மனை தோட்டத்தில் காகங்கள் குடியிருக்கும் மரத்தை வெட்டப்போவதாக மன்னர் அறிவித்துள்ளார். அதைத் தடுக்கவே அவரது ஜன்னலை தட்டுகிறோம்’’ என்றன.
இந்த உண்மையை மன்னரிடம் எடுத்துச் சொன்னான் இளைஞன். உடனே மன்னர் அந்த மரத்தை வெட்டக் கூடாது என ஆணையிட்டார். அதோடு, பறவைகளின் மொழி அறிந்த அவனை தனது ஆலோசகனாக வைத்துக்கொண்டார். அவனது அறிவும், ஆற்றலும் மன்னருக்கு வழிகாட்டின. பிறகு, அவனுக்கு தன் மகளைத் திருமணம் செய்துவைத்து மன்னனாக்கினார்.
அந்த முடிசூட்டு விழாவின்போது, வணிகம் நொடித்துப் போய் பிச்சைக்காரர்களில் ஒருவராக தனது தந்தை அரண்மனை வாசலில் நிற்பதைக் கண்டான்.
ஆந்தை சொன்னது முழுமையாக பலித்துவிட்டது என அறிந்துகொண்டான். தந்தையை அடையாளம் கண்டு, தன்னோடு அவரை வைத்துக்கொண்டான். அவனது ஆட்சிக்காலத்தில் இயற்கையைக் காத்து சிறப்பாக ஆட்சி செய்தான் என கதை முடிகிறது.
பறவைகள், விலங்குகள், மனிதர்கள் எல்லோரும் புரிந்துகொள்ளும் ஒரு மொழி இருக்கிறது. அதன் பெயர் அன்பு. அதை வெளிப்படுத்தும்போது எல்லா உயிர்களும் புரிந்துகொள்கின்றன. அதைத்தான் நாம் கற்றுக்கொள்ளவும், கற்றுத் தரவும் வேண்டும்.
கதைகள் பேசும்...
எண்ணங்களைப் பகிர: writerramki@gmailcom
முக்கிய செய்திகள்
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
7 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
16 days ago
இலக்கியம்
16 days ago
இலக்கியம்
16 days ago
இலக்கியம்
20 days ago
இலக்கியம்
20 days ago