நடைப்பயிற்சிக்குச் செல்லும் பூங்காவுக்கு தினமும் ஒரு கருவுற்றப் பெண் வருவதைக் கண்டேன். ஒருநாளும் அவருடன் துணைக்கு யாரும் வருவது இல்லை. வெளிறிய முகத்துடன் வீங்கிய கண்களுடனும் அவர் மிகமெதுவாக நடந்து வருவார். 30 வயதிருக்கக்கூடும். அவர் நடப்பதைப் பார்க்கும்போது நமக்கே சிரமமாக இருக்கும். ஏன் அவருடன் கணவரோ? வீட்டாரோ யாரும் வருவதில்லை? எப்படி அதை அவரிடம் கேட்பது?
ஒருநாள், அவர் சிரமத்துடன் பெஞ்சில் உட்கார முயன்றபோது ‘‘ஏதாவது உதவி வேண்டுமா?’’ எனக் கேட்டேன்.
‘‘இல்லை சார். கால் வலிக்குது...’’ எனச் சொல்லி சிரித்தார்.
அடுத்த இரண்டு நாட்களுக்கு அவரை அங்கு காணவில்லை. மூன்றாம் நாள் வந்தபோது மெல்லிய புன்னகையோடு ‘‘உடல்நலமில்லை சார்...’’ என்றார்.
‘‘உங்களுடன் யாரும் துணைக்கு வருவதில்லையா?’’ எனக் கேட்டேன்.
அவர் தலைகவிழ்ந்தபடியே ‘‘யாருமில்லை. திருமணமாகி இரண்டு ஆண்டுகளாகின்றன. தனியேதான் வசிக்கிறோம். கணவருக்கு ஐ.டி. வேலை. காலை ஆறரை மணிக்கே புறப்பட்டுவிடுவார். நான் விடுப்பில் இருக்கிறேன்’’ என்றார்.
தனிமைக்கு மருந்தில்லை...
இதுதான் சென்னை வாழ்வின் நிதர்சனம். ‘கால் வலிக்கிறது வெந்நீர் ஒத்தடம் வைத்து தர முடியுமா?’ எனக் கேட்க உதவி ஆள் கிடையாது. ‘வாய் கசக்கிறது. ஒரு துவையல் அரைத்து தர முடியுமா?’ எனக் கேட்க அறிந்த மனிதர்கள் அருகில் இல்லை. காலிங்பெல் சத்தம் கேட்டால் உடனடி யாக எழுந்து வந்து திறக்க முடியாது. உதவிக்கு ஆள் கிடையாது. இப்படி கருவுற்றப் பெண்ணின் தனிமை வலியும், வேதனையும் நிரம்பியது. மருத்துவ வசதிகள் நிறைய வந்துவிட்டன. உண்மைதான். ஆனால், தனிமையைத் தீர்த்துக் கொள்ள என்ன மருந்திருக்கிறது?
கிராமப்புறங்களில் கருவுற்றப் பெண்ணுக்கு விரும்பியதை சமைத்துக் கொடுப்பார்கள். அவள் வயிற்றில் வளரும் குழந்தைக்காகவே அவளை கவலையில்லாமல் வைத்துக் கொள்வார்கள். ஒரு சுடு சொல் பேச மாட்டார்கள். தாயோ, பாட்டியோ யாரோ அவளுடன் கோயிலுக்கு போய் வருவார்கள். பிரசவம் முடிந்து ஆறு மாதங்கள் வரை அவளை பூப்போலவே கவனித்துக் கொள்வார்கள்.
இன்று நிறை கருவுற்றப் பெண்ணுக்கு ஒரு நடைத் துணையில்லை. விதவிதமான மாத்திரை மருந்துகள் கிடைக்கின்றன. ஆனால், ஆறுதலான வார்த்தைகள் கிடைப்பதில்லை. ஸ்கேன் செய்து சிசுவின் வளர்ச்சியைத் தவறாமல் கண்காணித்துக் கொள்கிறார்கள். ஆனால், கருவை சுமக்கும் பெண்ணின் மனவேதனைகளைப் புரிந்துகொள்வதே இல்லை.
இப்படித்தான் இருக்கிறது சமூகம்
கருவுற்ற காலத்தில் பெண்களுக்கு ரத்த அழுத்தம் அதிகரிக்கக்கூடும். சாதாரண பெண்களுக்கு தேவைப்படும் இரும்புச்சத்து அளவைவிட கருவுற்றப் பெண்ணுக்கு 50 சதவீதம் அதிகளவு தேவைப்படும். மனச்சோர்வுடன் இருந்தால் உடலில் சுரக்கும் சுரப்பிகள் சரியாக செயல்படாமல் போய்விடும். இதனால், பிறக்கும் குழந்தை பாதிக்கப்படலாம். எனவே, எப்போதும் கலகலப்பாக இருக்க வேண்டும். இன்று அவர்களை மகிழ்ச்சிப்படுத்த தொலைக்காட்சி மற்றும் சினிமா தவிர, வேறு வழிகளே இல்லை.
இளம் தம்பதிகளில் பலர் வருமானம் போய்விடுமே என, குழந்தைப்பேற்றைத் தள்ளிப்போடுகிறார்கள். விரும்பியபோது சுற்றுப்பயணம் போகலாம். குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா என்ன? ஆனால், அப்படித்தான் இன்றைய சமூகம் இருக்கிறது.
மறுபக்கம் குழந்தையின்மைக்காக பல லட்ச ரூபாய் செலவு செய்யப்பட்டு மருத்துவ சோதனைகள், மாற்றுவழிகள் என பல பேர் போராடிக் கொண்டிருக்கிறார்கள். குழந்தைப்பேறு வாழ்க்கையின் பிடிமானம் என்பது உண்மைதான். ஆனால், அந்தக் குழந்தையை முறையாக நாம் வளர்க்கிறோமோ? அன்பு செலுத்துகிறோமா? அக்கறை காட்டுகிறோமா என்றால்... கேள்விக்குறியாகவே இருக்கிறது.
வெளியே செல்லும்போது ‘குழந்தையை நான் தூக்கிக் கொண்டு வர மாட்டேன். என் இமேஜ் போய்விடும்...’ என மறுக்கும் இளம்தாய்கள் உருவாகிவிட்டார்கள். தந்தைக்கோ கொஞ்சுவதற்கும் பாசத்துக்கும் மட்டுமே மகனோ, மகளோ வேண்டுமே தவிர, அவர்கள் நோயுற்றால் மருத்துவமனைக்குக் கொண்டுபோய் காத்திருக்க மனதில்லை. ‘‘நீ போ. நீ போய் காட்டு...’’ என மனைவியைத் துரத்துகிறார்கள். வீட்டில் குழந்தை அழுதால் கோபித்துக் கொள்ளும் ஆண்கள் அதிகம். இப்படி குழந்தைகளை சுமையாக நினைக்கும் போக்கு வளர்ந்துகொண்டே வருகிறது.
வண்ணநிலவனின் ‘பலாப்பழம்’
தமிழ் இலக்கியத்தின் மகத்தான எழுத்தாளரான வண்ணநிலவன் ‘பலாப்பழம்’ என்றொரு சிறுகதையை எழுதியிருக்கிறார். அக்கதையில் நிறைசூலியாக இருக்கிறாள் செல்லப்பாப்பா. கணவன் மாதச் சம்பளக்காரன்.
ஒருநாள் அடுத்த வீட்டில் யாரோ பலாப்பழம் சாப்பிடுகிறார்கள். அவளுக்கும் பலாப்பழம் சாப்பிட வேண்டும் என்ற ஆசை பிறக்கிறது. மரத் தடுப்புக்கு அப்பாலுள்ள பக்கத்து வீட்டுக் குழந்தைகள், ஆசையோடு பலாப்பழம் சாப்பிடும்போது அவள் ஏக்கத்துடன் வெறும் வாசனையை மட்டும் நுகர்கிறாள்.
திடீரென பக்கத்து வீட்டுச் சிறுமி வந்து கதவை தட்டுகிறாள். உடனே செல்லபாப்பா என எங்கே தனக்கு பலாப்பழம் கொண்டு வந்திருப்பாளோ என ஆசையாக அவளை ஏறிட்டு பார்க்கிறாள்.
‘‘கோவிலுக்கு வருகிறீர்களா?’’ என அம்மா கேட்கச் சொன்னதாக சொல்லும் அந்தச் சிறுமியின் கடைவாயில் மேல் உதட்டோரமாக பலாப்பழ நார் ஒட்டியிருந்ததை செல்லப்பாப்பா பார்க்கிறாள்.
‘‘நான் வரவில்லை...’’ என்கிறாள் ஏமாற்றத்துடன்.
வெளியே செல்லும் அவளது கணவன் இரவில் வீடு திரும்புகிறான். அவனாவது பலாச்சுளைகளை வாங்கி வருவான் என நினைக்கிறாள். அதுவும் நடக்கவில்லை. ஆசையை மனதில் புதைத்துக் கொண்டபடியே அவள் வெறும் நினைப்பிலே முடங்கிவிடுகிறாள் என அந்தக்் கதை முடிகிறது. வறுமை, குடும்பக் கஷ்டம் கருவுற்றப் பெண்ணின் சின்ன ஆசையை கூட நிறைவேற்றமுடியாமல் போய்விடுகிறது என்பதை வண்ணநிலவன் அழுத்தமாக கூறியிருக்கிறார்
வீட்டைத் துறந்து காதல் திருமணம் செய்து கொண்ட பலரும் தங்கள் முதற்குழந்தை பிறந்தபோது ஏற்பட்ட சங்கடங்களை, கசப்பான நிகழ்வுகளை மறக்காமல் மனதில் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். கர்ப்ப காலத்தில் தனக்கென யாருமில்லையே என அழுத பெண்களை நான் அறிவேன்.
பிறப்பிலே வருவது மட்டும் உறவில்லை. ஏற்படுத்திக் கொள்வதும் உறவுதான். நல்ல நண்பர்களை உருவாக்கி கொள்ளுங்கள். உங்கள் துணையாக, தோழமையாக யாராவது நிச்சயம் உடன் வருவார்கள். அந்த நம்பிக்கை போதும் சந்தோஷமாக வாழ்ந்துவிடலாம்.
- கதை பேசும்...
எண்ணங்களைப் பகிர: writerramki@gmail.com
முக்கிய செய்திகள்
இலக்கியம்
3 days ago
இலக்கியம்
3 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
11 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
20 days ago
இலக்கியம்
20 days ago
இலக்கியம்
20 days ago
இலக்கியம்
2 months ago