இந்தி இலக்கியத்தின் தலைசிறந்த எழுத்தாளர்களுள் ஒருவரான கிருஷ்ணா ஸோப்திக்கு 2017-ம் ஆண்டுக்கான ‘ஞானபீட விருது’ வழங்கப்பட்டிருக்கிறது. ஞானபீட விருது பெறும் 53-வது எழுத்தாளர், எட்டாவது பெண் எழுத்தாளர் இவர். பிரிவினைக்கு முந்தைய பாகிஸ்தானில் பிறந்த கிருஷ்ணா ஸோப்தி, பிரிவினைக்குப் பிறகு இந்தியாவில் வாழ்ந்துவருகிறார். 92 வயதாகும் கிருஷ்ணா ஸோப்திக்கு இந்திய இலக்கியத்தின் உயரிய விருதான ‘ஞானபீடம்’ பெருமை சேர்க்கிறது.
‘ஞானபீடம்’ கிருஷ்ணா ஸோப்தியின் எழுத்துலக சாதனைகளை மீண்டும் வாசகர்களிடம் அடையாளப்படுத்துகிறது. ‘மித்ராவந்தி’யைப் போன்ற பெண் மனத்தைப் பேசும் துணிச்சலான பாத்திரங்களைப் படைத்த கிருஷ்ணா ஸோப்திக்குக் கிடைத்துள்ள இவ்விருது நிச்சயம் கொண்டாட்டத்திற்குரியது.
எழுத்தாளராக இருப்பதன் கம்பீரத்தை ஒருபோதும் விட்டுத்தராதவர் கிருஷ்ணா ஸோப்தி. எழுதியே தீர வேண்டும் என்ற கட்டாயத்தைக்கூட அவர் ஏற்படுத்திக்கொண்டதில்லை. “என்னை இடைவிடாமல் தொந்தரவு செய்துகொண்டிருக்கும் விஷயங்களைப் பற்றி மட்டுமே நான் எழுதுவேன். என் உள்மனத் தூண்டுதலிலிருந்து என்னை மீட்டுக்கொள்வதற்காகவே நான் என்னுடைய எழுதுகோலைத் திறக்கிறேன்” என்கிறார் கிருஷ்ணா ஸோப்தி. ‘ஸிந்தகிநாமா’ நாவலுக்காக 1980-ல் சாகித்திய அகாடமி விருது பெற்ற கிருஷ்ணா ஸோப்தி, 2010-ல் இந்திய அரசு ‘பத்மபூஷண்’ விருதை அறிவித்தபோது, அவ்விருதை வாங்க மறுத்துவிட்டார். “ஒரு எழுத்தாளராக நான் என்னை, நிறுவனங்களிடம் இருந்து தள்ளி வைத்துக்கொள்ளவே விரும்புகிறேன்” என்று பதிலளித்திருந்தார். அரசுடனும் அதிகாரத்துடனும் நெருக்கமாக இருக்கும்போது, எழுத்தாளர் தன்னுடைய எழுத்துக்கு முழு நியாயம் செய்ய முடியாது என்பதையே அவரின் வரிகள் உறுதிசெய்கின்றன.
கிருஷ்ணா ஸோப்தியின் ஏழு நாவல்களும் நான்கு சிறுகதைத் தொகுதிகளும் வெளியாகியுள்ளன. அவருடைய 20-வது வயதில் முதல் சிறுகதை ‘லாமா’ வெளியானது. கிருஷ்ணா ஸோப்தியின் ‘ஸிந்தகிநாமா’ நாவலை நவீன இலக்கியத்தின் பெருங்காவியமாக இந்தி இலக்கிய உலகம் கொண்டாடுகிறது.
கிருஷ்ணா ஸோப்தியின் முக்கியமான நாவல் ‘மித்ராவந்தி’. 20-ம் நூற்றாண்டின் மிகச் சிறந்த பத்து இந்தி நாவல்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறது. ருஷ்ய, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. இந்த நாவலின் ஆங்கிலம் வழி தமிழ் மொழிபெயர்ப்பை நேஷனல் புக் டிரஸ்ட் 1996-ல் வெளியிட்டது. (மொழிபெயர்ப்பாளரின் பெயர் அந்த நூலில் குறிப்பிடப்படவில்லை). 20 ஆண்டுகளுக்கு முன்னால் அந்த நாவலைப் படித்த போது உணர்ந்த அதே அதிர்ச்சியை மூன்று மாதங் களுக்கு முன் படித்தபோதும் உணர முடிந்தது.
மீறல்தான் மித்ராவந்தி. குடும்பத்தின் எல்லைக்கோடுகளை மித்ராவந்தி மீறிவிட்டாளா என்றால், ஒருபோதும் மீறவில்லை. மீறலைச் செய்துவிடுவாளோ என்று மித்ராவந்தி உண்டாக்கும் பதற்றம், மீறல் கொடுக்கும் பதற்றத்தைவிட அதிகம்.
மாமனார், மாமியார், நாத்தனார், ஓரகத்தி, கொழுந்தன், பிள்ளைகள் போன்ற உறவுகளுடன் சின்னஞ்சிறிய வீட்டில் வாழ நேர்கிற பெண்ணுக்குக் கட்டுப்பாடுதான் வாழ்க்கை. மாமனார் விழித்திருக்கிறார் என்றால் சத்தம் போட்டுச் சிரிக்க முடியாது, மாமியார் அறைக்குள் இருந்தாலும் உரத்துப் பேச முடியாது. பலருடைய மேலாண்மைக்கும் கட்டுப்பட்டு எப்போதும் ஓர் அடங்கின வாழ்க்கையை வாழ வேண்டிய நிர்ப்பந்தம். மித்ராவந்தியோ 60 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பெண். அவளுக்கான கட்டுப்பாடுகள் இன்னும் அதிகம்.
ஆனால், போகிற போக்கில் வீட்டின் ஒவ்வொருவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறாள் மித்ராவந்தி. குழந்தைக்கான ஏக்கத்துடன் இருக்கும் அவள், தன்னுடைய மாமியாரிடம், “அத்தே, என்னால் முடிஞ்சா நூறு கௌரவர்களைக்கூட பெத்துப் போட்டுடுவேனே? ஆனா உங்க அருமை மகன், போற போக்கை நீங்க கண்டுகிட்டாத்தானே? இதோ கற்சிலையா நிக்கி றேனே? இந்தக் கல்லுக்குள்ள எதனாச்சும் அசைவு ஏற்பட்டாத்தானே?” எனக் கேட்கிறாள். மித்ராவந்தியின் அதீத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த முனையும் மாமியாருக்கு, அதிக நெருக்கடியே கிடைக்கிறது.
மித்ராவந்தியின் மேல் வீட்டில் உள்ள இரண்டு மருமகள்களுக்கும் எப்போதும் ஒரு கண். இவளுடைய நடத்தை எங்கு கொண்டுபோய் நிறுத்துமோ என்று ஆர்வத்துடன் எதிர்பார்த்திருக்கிறார்கள். வீட்டின் மூத்த மருமகளின் முன்னால், மித்ராவந்தி கட்டிலில் போர்வையின்றிப் படுக்கிறாள். அவள் முகத்தைத் திருப்பிக்கொள்கிறாள்.
ஒரு கட்டுப்பெட்டியான குடும்பத்தில், தன்னுடைய நடவடிக்கையால் மீறலைச் செய்கிறாள் மித்ராவந்தி. அவள் நடந்துகொள்வதைப் பார்த்தால் மற்றவர்களுக்கு கோபமும் அருவருப்பும் வரும். ஒரு பெண்ணுக்கு எப்படி இவ்வளவு அடங்காத்தனம் வரும்? உடல் பசியினால் அலைந்து திரியும் காமப் பேயா இவள் என்று கோபம்கூட வரும்.
ஆனால், மனசுக்குள் பேசிக்கொள்ளும் ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான பெண்களின் வார்த்தைகளை மித்ராவந்தி ஒளிவுமறைவின்றி வெளிப்படையாகப் பேசுகிறாள். ஆழ்மனதுக்குள் புதைந்து கிடைக்கும் ஏக்கங்களை, துயரக் குரலில் இன்றி, வெடிப்புக் குரலில் பேசுகிறாள். போலித்தனம் அற்ற, பளிங்குபோன்ற கதாபாத்திரமே மித்ராவந்தி.
நாவலின் ஒவ்வொரு காட்சியும் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கும். மித்ராவந்தி என்ன பேசிவிடுவாளோ; எல்லோர் முன்னாலும் தேங்காய் உடைப்பதைப் போல் ஏதும் சொல்லிவிடுவாளோ என்ற பயம் இருந்துகொண்டே இருக்கிறது. இந்தப் பயம் என்பது மீறலை ஏற்றுக்கொள்ள முடியாத சராசரி மனம்தான். கிருஷ்ணா ஸோப்தி, இந்த நாவலைப் பற்றிச் சொல்லும்போது, “மித்ராவந்தி, எழுத்தாளரின் கதையல்ல. கதையின் ஒவ்வொரு திருப்பத்திலும் மித்ராவந்தி எனக்களித்த ஆச்சரியங்கள் வியப்படையச் செய்தன” என்கிறார்.
ஞானபீடம் விருதின் மூலம், கிருஷ்ணா ஸோப்தி யின் மித்ராவந்தி மீண்டும் வாசிக்கப்படுவாள், பேசப்படுவாள்.
ஞானபீட விருது பெற்ற 53 பேரில் இருவர் மட்டுமே இதுவரை தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்கள். கிருஷ்ணா ஸோப்தியைக் கொண்டாடும் நேரத்தில், தமிழுக்குப் போதிய அளவு ஞானபீட விருது கிடைக்காதது குறித்த ஏக்கம் மனதில் படர்கிறது.
- அ.வெண்ணிலா,
எழுத்தாளர், ஆசிரியர், ‘எரியத் துவங்கும் கடல்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.
தொடர்புக்கு: vandhainila@gmail.com
முக்கிய செய்திகள்
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
14 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
15 days ago