பெண்கள் 360: 17 வயதில் தாயாவது இயல்பா?

By பிருந்தா சீனிவாசன்

பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட தன் 17 வயது மகளது வயிற்றில் வளரும் ஏழு மாதக் கருவைக் கலைக்க அனுமதி வழங்குமாறு சிக்கந்தர் சயீத் என்பவர் குஜராத் உயர் நீதிமன்றத்தை நாடினார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி சமீர் தாவே, தாயும் சேயும் நலமாக இருக்கும்பட்சத்தில் கருக்கலைப்புக்கு உத்தரவிடுவது கடினம் எனத் தெரிவித்திருக்கிறார். தீர்ப்பின்போது அவர் சொன்ன கருத்துகள் விவாதத்தை எழுப்பியுள்ளன. “இது 21 ஆம் நூற்றாண்டு. உங்கள் அம்மாவிடமோ பாட்டியிடமோ கேட்டால் அவர்கள் காலத்தில் அதிகபட்ச திருமண வயது 14 – 15 என்று சொல்வார்கள். அதனால், 17 வயதுக்குள் குழந்தை பிறப்பது இயல்புதான். இது உங்களுக்குத் தெரியாது. மனுஸ்மிருதியை ஒரு முறை படித்தால் புரியும்” என்று பாதிப்புக்குள்ளான பெண்ணின் தந்தையிடம் நீதிபதி தெரிவித்திருக்கிறார். இந்த வழக்கின் உண்மைத் தன்மையை அறிந்துகொள்வதற்காக ராஜ்கோட் பொது மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் மருத்துவப் பரிசோதனையில் ஈடுபட்டு அந்த முடிவை ஜூன் 15 அன்று சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். ஆகஸ்ட் 16 அன்று குழந்தைப் பிறப்புக்கான நாள் என்பதால் வழக்கை விரைவாக முடிக்க வேண்டும் என்று தந்தை சார்பில் சொல்லப்பட்டது. அதற்கு, “குழந்தைக்கோ அதன் தாய்க்கோ ஏதேனும் சிக்கல் என்றால் மட்டுமே கருக்கலைப்புக்கு உத்தரவிட முடியும். குழந்தை ஆரோக்கியமாகப் பிறந்தால் என்ன செய்வது?” என நீதிபதி சமீர் தாவே கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியக் கருக்கலைப்புச் சட்டத்தின்படி இதுபோன்ற வழக்குகளில் 24 வாரக் கருவை இரண்டு மருத்துவர்களின் ஒப்புதலுக்குப் பிறகு கலைக்கலாம். விதிவிலக்காக இப்படிச் சில வழக்குகள் அமைவதுண்டு. அதுபோன்ற நிலையில் வழக்கை விரைந்து நடத்துவதும், பாதிக்கப்பட்டவர்களின் நலன் சார்ந்து செயல்படுவதும் அவசியம் என்பதையும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அறிவுக்கு விருது

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜோயிதா குப்தா, ‘டச்சு நோபல் பரிசு’ எனப்படும் ‘ஸ்பினோசா பரிசு’க்குத் தேர்வாகியிருக்கிறார். டச்சுக் கல்விப் புலத்தின் மிக உயரிய சர்வதேச விருதாக இது கருதப்படுகிறது. நெதர்லாந்தைச் சேர்ந்த ஆய்வாளர்களுக்கு இது வழங்கப்படுகிறது.
ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் - மேம்பாட்டுத் துறைப் பேராசிரியராகப் பணியாற்றிவரும் ஜோயிதா, புவி ஆணையத்தின் இணைத் தலைவராகவும் இருக்கிறார். சுற்றுச்சூழல் தொடர்பான ஆய்வுகளில் வல்லவரான இவர், வாழ்விடப் பகிர்வு குறித்த ஆய்வுக்காக இந்தப் பரிசைப் பெற்றிருக்கிறார். டெல்லிப் பல்கலைக்கழகம், ஹார்வர்டு பல்கலைக்கழகம் போன்றவற்றில் படித்த இவர், ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழகத்தில் ஆய்வுப் பட்டத்தை நிறைவு செய்திருக்கிறார். காலநிலை மாற்றம் குறித்த ஆய்வில் ஆர்வமுள்ள ஜோயிதா, புவிக்கும் மனிதனுக்கும் பாதகமில்லாத் தீர்வுகளைத் தன் ஆய்வில் முன்வைத்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE