மேடையில் பிரசன்னமாகும் ‘ராமானுஜர்’!

By வா.ரவிக்குமார்

ரு கமண்டலத்துக்குள் ஆற்றின் பிரவாகத்தை அடைக்க முடியுமா? சிற்றுளியால் பாறையைப் பிளக்க முடியுமா? `முடியும்’ என்பதைத் தங்கள் தவ வலிமையால் உலகுக்கு உணர்த்தியிருக்கிறார்கள் அருளாளர்கள். மாபெரும் அருளாளர்களின் வரிசையில் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீபெரும்புதூரில் அவதரித்து, 100 ஆண்டுகளுக்கு மேலாக அஞ்ஞான இருளைப் போக்க ஆன்மிக வெளிச்சம் பாய்ச்சியவர் ஸ்ரீராமானுஜர். ஆதி சேஷனின் அவதாரமாகப் போற்றப்படும் மகான் அவர்.

சமயப் பூசல்களும், சச்சரவுகளும் சாதாரணக் குடிமகனில் தொடங்கி அரசர்கள் வரை வேரூன்றியிருந்த காலத்தில் மதப் பற்றைவிட மனித நேயமே உயர்ந்தது என்று வாழ்ந்து காட்டியவர். வெறும் வார்த்தைகளால் மட்டுமல்லாமல் தனது அளப்பரிய செயல் களாலும் அதைச் சாத்தியப்படுத்தியவர். அவரது 1,000-வது ஆண்டில் ‘ஷ்ரத்தா’ நாடகக் குழுவின் தயாரிப்பில் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதியின் எழுத்தோவியத்தில் ‘ராமானுஜர்’ நாடகம் அரங்கேறவிருக்கிறது. சிறப்புமிக்க இந்த நாடகத்தை ஜி.கிருஷ்ணமூர்த்தி இயக்குகிறார்.

‘ஷ்ரத்தா’ நாடகக் குழு

வழக்கமான நாடக பாணியில் இருந்து முற்றிலும் வேறுபட்ட காட்சி அனுபவத்தை தருவதுதான் ‘ஷ்ரத்தா’ நாடகக் குழுவின் சிறப்பு. சமூகம், நகைச்சுவை, சரித்திரம் என பல வகையான நாடகங்களையும் மக்களின் ரசனைக்கேற்ப அரங்கேற்றுவதில் தனித்தன்மையைக் கொண்டுள்ள குழு ‘ஷ்ரத்தா’. அதன் நிறுவனர்களில் ஒருவரும் நாடக இயக்குநருமான கிருஷ்ணமூர்த்தியின் இயக்கத்தில் வாதவூரன், பாரதி, சதுரங்கம், அவுரங்கசீப் உள்ளிட்ட பல படைப்புகள் அரங்கேறியிருக்கின்றன. ‘ஷ்ரத்தா’-வின் நாடகங்கள் பலவற்றிலும் முதன்மையான பாத்திரத்தை ஏற்ற சுவாமிநாதனே இந்த நாடகத்தில் ராமானுஜராகத் தோன்றுகிறார்.

“நடிப்புத் திறமை, தூய தமிழ் உச்சரிப்பு, பாத்திரத்தின் தன்மை உணர்ந்து உடல்மொழியின் மூலம் வெளிப்படுத்தும் திறமை போன்றவற்றை நாங்கள் நடத்திய இரண்டு ஆடிஷன்களில் சிறப்பாக வெளிப்படுத்தினார் சுவாமிநாதன். அதனாலேயே ராமானுஜரின் பாத்திரத்தை அவர் ஏற்று நடிக்கிறார். நாடகத்துக்கான இசை ஒருங்கிணைப்பை கார்த்திகேய மூர்த்தி செய்கிறார். ஜனனி சில பிரபந்தப் பாடல்களுக்கு இசையமைத்து இனிமையாகப் பாடியிருக்கிறார்” என்றார் கிருஷ்ணமூர்த்தி.

இ.பா-வின் மேதைமை

“தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒருவர் எப்படி நமக்கு சம காலத்தவராய் இருக்கிறார் என்பதை உணர்த்துவதே இந்த நாடகத்தின் நோக்கம்’’ என்கிறார் இந்திரா பார்த்த சாரதி. ‘‘ஸ்ரீராமானுஜர் வரலாற்றை நாடகமாக்குவது சுலபமான காரியமல்ல என்பது எனக்குத் தெரிந்ததுதான். ராமானுஜர் ஓர் அற்புதமான சிந்தனையாளர் மட்டுமன்றி, மாபெரும் செயல்வீரர். அவரைப் பற்றி நாடகம் எழுதவேண்டும் என்ற உந்துதலை அதுதான் ஏற்படுத்தியது’’ என்கிறார் அவர்.

திருக்குலத்தாருக்கு முதல் மரியாதை

சாதி வேறுபாட்டை ஒழிக்கும் வகை யில் ‘வைணவம் அனைவருக்கும் உரித்தானது’ என்று அறிவித்தார் ஸ்ரீராமானுஜர். சமூக விளிம்பில் இருந்த பஞ்சமர்களையும் வைணவர்களாக்கி, ‘திருக்குலத்தார்’ என்று அவர்களை அழைத்தார். மேல்கோட்டையில் திருமால் கோயில் கட்டுவதற்கும், ‘செல்லப்பிள்ளை’ என்று ராமானுஜரால் அழைக் கப்பட்ட உற்சவ மூர்த்தியை மீட்பதற்கும், திருக்குலத்தார் ராமானுஜருடன் தோளோடு தோள் நின்று உதவி செய் தது மகத்தானது. கர்நாடகாவின் மேல்கோட்டை, ஸ்ரீரங்கப்பட்டணம், பேலூர் ஆகிய நகரங்களில் இருக்கும் பெரு மாள் கோயில்களில் திருக்குலத்தாருக்குதான் சிறப்பு மரியாதை செய்ய வேண்டும் என்று ஆணை பிறப்பித்தார் அவர். இதுபோன்ற நிகழ்வுகள் நாடகத்தில் அரங் கேறுகின்றன.

முத்தமிழும் சங்கமம்

இயற்றமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ் என முக்கனிகளின் சங்கமத்தையும் இந்த நாடகத்தில் சுவைக்கலாம் என்கிறார் இயக்குநர் ஜி.கிருஷ்ணமூர்த்தி. “ராமானுஜரின் வாழ்க்கைக் கடலை ஒரு நாடக அகப்பையில் மொண்டுவிட முடியாது. இருந்தாலும் எங்களால் முடிந்தவரை, அதை 2 மணி நேரத்தில் சொல்ல முற்பட்டிருக்கிறோம். காட்சியின் சூழலுக்கு ஏற்ப, 20-க்கும் மேற்பட்ட பிரபந்தப் பாடல்கள், பாசுரங்களையும் நாடகாசிரியர் இந்திரா பார்த்தசாரதியே குறிப்பிட்டிருக்கிறார். அந்தப் பாடல்களை நேரடியாக கர்னாடக இசைக் கலைஞர்களே பாடுகிறார்கள்.

நாடகத்துக்கான இசையை ஒலிப்பதிவு செய்யாமல், அரங்கத்திலேயே நேரடியாகக் கலைஞர்களைக் கொண்டு இசைக்கவிருக்கிறோம்” என்கிறார் அவர்.

மேடையில் 30-க்கும் மேற்பட்ட கலைஞர்களும், நாடக உருவாக்கத்தில் 50-க்கும் மேற்பட்டகலைஞர்களும் ஈடுபட்டிருக்கின்றனர். ராமானுஜர் நாடகத்தின் தொடக்க விழா வரும் 6-ம் தேதி (வெள்ளிக் கிழமை) நாரத கான சபா அரங்கத்தில் நடக்கவுள்ளது. தொடர்ந்து அக்டோபர் 7, 8 (நாரத கான சபா), 20, 21 (அலியான்ஸ் பிரான்சைஸ்), 29 (பாரதிய வித்யா பவன், கெல்லீஸ்) நவம்பர் 4, 5 (வாணி மகால்) என பக்தர்களையும், நாடக ரசிகர்களையும் பரவசத்தில் ஆழ்த்த இருக்கிறது ‘ராமானுஜர்’ நாடகம்.

அனுமதிச் சீட்டுகளை அரங்கிலும், https://www.eventjini.com/ramanujar2017 என்ற இணையதளத்திலும்பெறலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

11 days ago

இலக்கியம்

12 days ago

இலக்கியம்

12 days ago

இலக்கியம்

12 days ago

இலக்கியம்

12 days ago

இலக்கியம்

16 days ago

இலக்கியம்

16 days ago

இலக்கியம்

19 days ago

இலக்கியம்

19 days ago

இலக்கியம்

19 days ago

இலக்கியம்

23 days ago

இலக்கியம்

23 days ago

மேலும்